சில நேரங்களில் சில மனிதர்கள்

Last updated on January 22nd, 2024 at 08:01 pm

சில நேரங்களில் சில மனிதர்கள் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களால் எழுதப்பட்டு 1970-ம் ஆண்டு வெளிவந்த நாவல் ஆகும். ஜெயகாந்தன் அவர்களின் படைப்புக்களில் சில நேரங்களில் சில மனிதர்கள் சிறந்ததொன்று என்பது பல வாசகர்களினுடைய கருத்து.

தமிழில் கட்டாயம் படிக்கவேண்டிய நாவல்கள்/புத்தகங்களை தேடும் போது பரிந்துரைக்கப்படுகின்ற பட்டியல்களில் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் முக்கியமாக இடம்பெற்றிருந்தது.

ஜெயகாந்தன் அவர்கள் 1968-ல் ஆனந்த விகடனில் அக்னிப்பிரவேசம் என்ற சிறுகதையை எழுதினார். இச்சிறுகதை மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அச்சிறுகதையின் முடிவு மாற்றப்பட்டு தொடர்ச்சியாக நாவலாக எழுதப்பட்டதுதான் சில நேரங்களில் சில மனிதர்கள்.

அந்தச் சிறுகதை பற்றிய எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலையும் வாசித்து முடித்துவிட்டேன்.

அக்னிப்பிரவேசம் சிறுகதையில் கதாப்பாத்திரங்களில் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதன் தொடர்சியான சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலில் அவளது பெயர் கங்கா, அவனது பெயர் பிரபு, கங்காவின் அம்மாவினுடைய பெயர் கனகம் போன்றவற்றை கதாப்பாத்திரங்களின் பெயர்களாக ஜெயகாந்தன் அவர்கள் வடிவமைத்திருப்பார்.

அக்னிப்பிரவேசம் சிறுகதையில், கல்லூரியில் படிக்கும் பெண்ணிற்கு காரில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவத்திற்கு பின்னர் அவளது அம்மா அவளை புனிதப்படுத்தி அந்த சம்பவத்தை மறப்பதற்கு அறிவுரைகள் கூறி அக்கறையுள்ள அம்மாவாக சித்தரிக்கப்பட்டு சிறுகதை முடிவுறுகிறது.

ஒருவேளை அவளது அம்மா அக்னிப்பிரவேசம் சிறுகதையில் வருபவள் போன்றல்லாமல் அவள் கெட்டுப்போய்விட்டாள் என முத்திரை குத்தி அவளை திருமணம் செய்ய தகுதியில்லாதவள் என ஒதுக்குகிறவளாக இருந்திருந்தால் அவளது வாழ்க்கை எப்படியிருக்கும்? என்பதை கங்காவின் பார்வையில் காட்டுகின்ற நாவல் சில நேரங்களில் சில மனிதர்கள்.

பெண் கெட்டுப்போய்விட்டாள் என இந்த சமூகத்திடம் வெளிச்சமாக போட்டுடைத்திருப்பார் அவளுடைய அம்மா கனகம். அவளுடைய அண்ணணே வீட்டை விட்டு விரட்டிவிடுகிறான்.

இப்படியான சூழ்நிலையில் சமூகத்தின் பார்வை கங்கா மீது எப்படியிருக்கும், அவளுடைய வாழ்க்கை இப்படியாவதற்கு காரணமான பிரபு, குடும்பம், சமூகம் மீதான அவளுடைய பார்வை மனநிலை எப்படியிருக்கும், எப்படியான சிக்கல்களை எதிர்நோக்க நேரிடுகிறது என்பதையெல்லாம் அவளுடைய பார்வையிலிருந்தே நம்மால் பார்க்க முடிகிறது.

அண்ணண் வீட்டை விட்டு விரட்டிய பிறகு அவளுடைய மாமா வெங்கு மாமாதான் அவளை படிக்க வைத்து ஆளாக்குகிறார். ஆனால் வெங்கு மாமா கூட அவள் மீது தவறான நோக்கம் கொண்டுதான் இவ்வளவும் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் மாமாவின் பேச்சு ஒன்றுக்கு சவால்விடும் வகையில் இவ்வளவுக்கும் காரணமான பிரபுவை தேடிக்கண்டுபிடிக்க முடிவு செய்கிறாள்.

நாவல் படிக்கும் போது கங்கா பிரபு சந்திப்பு 12 வருடங்களுக்கு பின்னர் எப்படியிருக்கப்போகின்றது? என்ற ஆவல் கங்காவை விட எனக்கு அதிகமாக இருந்திருக்கும் போல.

கங்காவும் பிரபுவும் சந்தித்துக்கொள்கிறார்கள். பிரபுவுக்கு 17 வயதில் மஞ்சு என்ற மகள் கூட இருக்கிறாள். மஞ்சு கதாப்பாத்திரமும் நாவலில் மிக முக்கியமான கதாப்பாத்திரம்.

12 வருடங்களில் பிரபுவில் மனநிலையில் மிகப்பெரிய மாற்றம். நமக்கே பிரபு இவ்வளவு நல்லவனா? என்ற எண்ணம் தோன்றுகிறது.

பிரபு மீது கங்காவிற்கு ஒருவிதமான காதல் ஏற்படுகிறது. கங்கா பிரபுவை தவிர வேறு யாரையும் மனதில் நினைப்பதாக இல்லை. வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளும் நோக்கமும் இல்லை.

இந்த நாவலின் முடிவு மகிழ்சிகரமானதாக இருக்காது என்பதே சோகமான உண்மை.

50 வருடங்களுக்கு முன்பு சமூகத்தில் இப்படியான சூழ்நிலைதான் இருந்தது என நினைக்கின்றேன்.

அக்னிப்பிரவேசம் சிறுகதை வெளியானபோது அச்சிறுகதையின் முடிவிற்கு எதிர்ப்புக்கள் வந்திருக்கின்றன என்றால் கனகம் கதாபாத்திரத்தை போன்று, கங்காவின் அண்ணாவின் காதாப்பாத்திரம் போன்று சமூகத்தில் பலர் இருந்திருக்கலாம்.

ஒரு வேளை காரில் ஏற்பட்ட சம்பவம் போன்று இன்றைக்கு ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டால் அந்தப்பெண்ணின் அம்மா, அண்ணா சில நேரங்களில் சில மனிதர்களில் வருகிற காதாப்பாத்திரங்கள் போன்று இருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கின்றேன்.

அப்போதே இந்தமாதிரியான கோணத்தில் யோசித்து சிறுகதை எழுதி, அதற்கு முடிவை மாற்றி நாவலாக எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன் அவர்கள்.

நான் வாசித்த முதல் நாவலும் முதல் ஜெயகாந்தன் அவர்களின் நூலும் இதுவே. சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading