புயலிலே ஒரு தோணி (நாவல்)

Last updated on August 1st, 2023 at 10:29 pm

புயலிலே ஒரு தோணி நாவல் ப.சிங்காரம் அவர்களால் 1962 இல் எழுதப்பட்டு 1972 இல் முதலாம் பதிப்பு வெளியானது. புயலிலே ஒரு தோணி வெளியான நாட்களில் பெரிதாக கவனிக்கப்படாவிட்டாலும் பிற்பட்ட காலங்களில் கட்டாயம் வாசிக்க வேண்டிய தமிழ் நாவல்களின் பட்டியலில் புயலிலே ஒரு தோணியும் ஒன்றாக நிறைய வாசகர்களால் பரிந்துரை செய்யப்பட்டது.

ப.சிங்காரம் அவர்கள் கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி எனும் இரண்டு நாவல்களை மட்டுமே எழுதியிருக்கின்றார். அவருடைய நாவல்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் கடந்து சென்று தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் தமிழர்களைப் பற்றியும், இரண்டாம் உலகப்போர் கால போர்ச்சூழலையும், அந்தக் காலப்பகுதியில் அங்கே வாழ்ந்த பன்நாட்டு மக்களின் வாழ்க்கை பற்றியும் இரண்டு நாவல்களும் மிக ஆழமாக பேசுகின்றது.

ப.சிங்காரம் முதலில் எழுதியது கடலுக்கு அப்பால். அதற்கு அடுத்த நாவல்தான் புயலிலே ஒரு தோணி. இரண்டு நாவல்களும் இரண்டாம் உலகப்போர்ச்சூழல், இந்திய தேசிய இராணுவம் போன்ற ஒரே பரப்பினை கதையாகக் கொண்டிருந்தாலும் இரண்டும் வேறு வேறு கதைகள் இரண்டுக்கும் தொடர்புகள் இல்லாததால் கடலுக்கு அப்பால் வாசித்து முடித்த பின்புதான் புயலிலே ஒரு தோணி வாசிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் கடலுக்கு அப்பால் நாவலில் வரும் கதாநாயகனும் இன்னொரு பிரதான கதாப்பாத்திரமும் புயலிலே ஒரு தோணி நாவலில் வருக்கின்றார்கள்.

புயலிலே ஒரு தோணி நாவலின் கதை 1930-1945 காலகட்டத்தில் நகர்கின்றது. கதைக்களம் பினாங், மலேசியா, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய நாடுகளையும் நாவலின் கதாநாயகன் பாண்டியன் பிறந்த தழிழ்நாட்டின் சின்னமங்கலம், மதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் போன்ற பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இந் நாவல் நுனை, அரும்பு, முகை, மலர் என நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாவல் ஆரம்பிக்கும் போது சுமத்திராவின் மெடான் நகரிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது. முதல் இரண்டு பாகங்களிலும் நிறைய இடங்களில் வாசிப்பது கடினமாக இருப்பதால் தொடர்ந்து வாசிப்பது தடைப்படுகின்றது. சில சொற்களுக்கான அர்த்தங்களும் தெரியவில்லை. நாவல் முழுவதிலுமே தென்கிழக்காசிய நாடுகளின் மொழிகளில் உரையாடும் சிறிய வசனங்கள் வருகின்றன.

சில வேளைகளில் உங்களுடைய வாசிப்பிற்கு நாவலின் மொழிநடை சவாலானதாக இருக்கலாம்.

நாவலின் இறுதிப் பகுதிகளிற்கும் ஆரம்பத்திற்கும் பெரிதாக தொடர்புகள் இல்லை. நாவலின் இறுதிப் பகுதிகளில் உள்ள சுவாரஷ்யத்தை ஆரம்பத்தில் உணர முடியவில்லை. ஆனால் பாண்டியன் தன் நண்பர்களுடன் நடத்துகின்ற சிந்திக்க வேண்டிய சிறந்த உரையாடல்கள் முதல் இரண்டு பகுதிகளிலும் நிறையவே இருக்கின்றன. அது நாவல் முழுவதுவே தொடர்கின்றது.

தமிழரின் பெருமைகளைப் பற்றிய விமர்சனங்கள், தமிழ் இலக்கியங்கள் பற்றி, அரசியல் பற்றி, பாண்டியன் பிறந்த வாழ்ந்த ஊர்களைப் பற்றிய கதைகள், உலகத்தைப் பற்றிய கதைகள் என நிறையவே உரையாடல்கள், விவாதங்கள் நண்பர்களுக்கிடையே நடக்கின்றன.

தமிழ் இலக்கியங்களில் வருகின்ற பாடல்கள், கதாப்பாத்திரங்களைப் பற்றிய விடயங்கள் நாவல் முழுவதிலுமே நிறைய இடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதை குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும்.

மூன்றாம், நான்காம் பாகங்கள் இந்திய தேசிய இராணுவத்தில் சேரும் பாண்டியனின் கதையாக நகர்கின்றது. இந்திய தேசிய இராணுவத்தில் பாண்டியனின் பங்களிப்பு, நண்பர்களுடன் இணைந்து அவன் செய்யும் சாகசங்கள், அவன் செய்கின்ற இராணு செயற்திட்டங்கள் என கதை சுவாரஷ்யத்துடன் நகர்கின்றது.

நீங்கள் கடலுக்கு அப்பால் வாசித்திருந்தால், அந் நாவலின் காதாநாயன் செல்லையாவையும் நண்பணான மாணிக்கத்தையும் மீண்டும் ஒருமுறை புயலிலே ஒரு தோணியில் பாண்டியனுடன் நீங்கள் சந்திக்கலாம். இறுதிவரை பல இடங்களில் செல்லையா வருகின்றான்.

நாவலில் நேதாஜி வருகின்றார். நீங்கள் தேதாஜியை நேரில் சந்திருக்காவிட்டாலும் பாண்டியனுடன் இணைந்து நேதாஜியை புயலிலே ஒரு தோணியில் சந்திக்கலாம். நேதாஜி விதிக்கின்ற கடமையை செய்து முடிக்கும் செயல்வீரனாக பாண்டியன் இருக்கின்றான். இரண்டாம் உலகப்போர் முடிந்த காலகட்டதில்தான் நாவலும் நிறைவடைகின்றது.

புயலிலே ஒரு தோணி நாவல் எல்லோருமே வாசிக்க வேண்டும். நாவலின் ஆரம்பத்திலேயே மொழிநடை கடினமாக இருந்து வாசிப்பு தடைப்படலாம். ஆனால் பொறுமையாக வாசித்து முடித்தால் இரண்டாம் உலகப்போர்க்கால சூழல் அனுபவங்களுடன் உரையாடல் வடிவிலான பல கருத்துக்களையும் உள்வாங்கிக்கொள்ளலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading