ஒரு புளியமரத்தின் கதை

ஒரு புளியமரத்தின் கதை சுந்தரராமசாமி அவர்களால் எழுதப்பட்டு 1966 இல் வெளிவந்த நாவல். இந்த நாவலும் தமிழில் கட்டயமாக வாசிக்க வேண்டிய நாவல்கள் வரிசையில் பலராலும் பரிந்துரை செய்யப்படுகின்ற நாவல். ஒரு புளியமரத்தின் கதை நிறைய மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலைப்பற்றி நல்ல விதமான விமர்சனங்களும் ஆகச்சிறந்த நாவல் என்பதைப் போன்ற கருத்துக்களையும் அதிகமாகப் பார்க்க முடிந்தது.

இந்நாவலுக்கு கொடுக்கப்படுகின்ற விமர்சனங்களே முக்கியமாக நாவலை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. சுந்தரராமசாமி அவர்களின் எந்தவொரு படைப்பையும் இதுவரை நான் படித்ததில்லை. ஒரு புளியமரத்தின் கதைதான் நான் படிக்கும் சுந்தரராமசாமியின் முதல் படைப்பாகும்.

ஒரு புளிய மரத்தின் கதை என்று பெயர் இருப்பதால் புளியமரம் ஒன்றின் கதையைச் சொல்கின்றதா என்று கேட்டால் அப்படிச் சொல்ல முடியாவிட்டாலும் அப்படியும் சொல்லலாம். புளியமரம் ஒன்றைச் சுற்றி நடக்கும் கதையாகவே ஒரு புளியமரத்தின் கதை கிட்டத்தட்ட உள்ளது.

நாவலின் ஆரம்பம் புளிமரம் ஒன்றைப் பற்றிய விபரிப்புடன் தாமோதர ஆசான் என்பவரை நாவலாசிரியர் அறிமுகம் செய்கின்றார். அதன் பிறகு புளியமரமும் அதனைச்சுற்றியுள்ள இடங்களும் காலவோட்டத்தில் எப்படி மாறுகின்றன என்பதை நாவலோட்டத்தில் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

ஆரம்பத்திலே குளம் ஒன்றின் நடுவிலே வளரும் புளியமரத்தின் வாழ்க்கை முடியும் போது சிறிய நகரத்தின் சந்தியில் நின்றுகொண்டிருக்கின்றது. புளிய மரத்தின் ஆரம்ப காலகட்டத்திற்கும் இறுதிக்காலத்திற்கும் இடையிலே நாவல் நகர்கின்றது. கதைப்படி இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னரும் சுதந்திரத்திற்குப் பின்னருக்குமான காலகட்டத்தில் கதை நகர்கின்றது.

கதையின் பிரதானமான கதை மாந்தர்களாக காதர், தாமு என்று இரண்டு பேர் வருகிறார்கள். அவர்கள் இருவரினதும் வாழ்க்கை நாவலில் விபரிக்கப்படுகின்றது. அவர்கள் இருவருக்குமிடையிலான பிரச்சினைதான் அந்தப் புளியமரம் அழிந்து போகக் காரணமாக அமைந்துள்ளது. எனக்கு நாவலின் பிடிச்ச பகுதியென்றால் காதரும் தாமுவும் எதிரெதிர் அணியமாக தேர்தலில் நிற்கும் போது அவர்களைச் சுற்றி நகரும் கதைக்களம்.

உண்மை என்னவென்றால் என்னால் தொடர்ச்சியாக நாவலை வாசிக்க முடியவில்லை. இந்த நாவல் என்று மட்டுமில்லை. இருவரை வாசித்ததில் பல நாவல்கள் அப்படித்தான். ஏனென்றால் நாவல்களில் வருகின்ற வட்டார வழக்கு பேச்சுமொழி எழுத்து வடிவில் வரும்போது புரிந்துகொள்வது கடினமாக இருக்கின்றது. அதுவே நாவலை தொடர்ச்சியாக வாசிக்க முடியாமல் செய்துவிடுகின்றது. அதனால் முழுமையாக ஆழமான வாசிப்பதாக எனக்கு இருக்கவில்லை.

ஒரு புளியமரத்தின் கதை மூலமாக மக்களின் வாழ்வியல், அரசியலைப் பற்றி, வெவ்வேறு விதமான மனிதர்கள், வணிகம் சார்ந்து நடக்கும் விடயங்கள், சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் என நிறைய விடயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது.

ஒரு புளியமரத்தின் கதை இன்னொரு தடவை ஆழமாக வாசிக்கும் போது நாவலிலிருந்து நிறைய புது விடயங்களை தெரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கின்றேன். ஒரு புளிய மரத்தின் கதை நாவலைப் பற்றியும் சுந்தர ராமசாமி அவர்களின் படைப்புகள் பற்றியும் உங்களுடைய கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading