செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence

Last updated on July 2nd, 2023 at 08:49 am

Artificial Intelligence பற்றிய செய்திகள் சமீப காலமாக அதிகமாக கேள்விப்பட முடிகின்றது. இணையத்தில் எங்கு பார்த்தாலும் Artificial Intelligence என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமல் இருக்காது. இன்னும் சில வருடங்களில் Artificial Intelligence-தான் உலகை ஆளப்போகின்றது என்ற அளவிற்கு Artificial Intelligence பற்றி பேசப்படுகின்றது.

Artificial Intelligence என்ற வார்த்தை சுருக்கமாக AI என்று அழைக்கப்படுகின்றது. Artificial Intelligence என்பதன் தமிழ் அர்த்தம் (Meaning) செயற்கை நுண்ணறிவு ஆகும். செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? என்பது பற்றி இந்த பதிவினூடாக பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு என்ற வார்த்தையிலிருந்தே விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். ஒரே வரியில் கூறினால் கணணிக்கு செயற்கையாக நுண்ணறிவை (Intelligence) அதாவது சிந்திக்கும் ஆற்றலை, முடிவெடுக்கும் திறனை வழங்குவதை செயற்கை நுண்ணறிவு என்று சொல்லலாம்.

மனிதனுக்கு இயற்கையாகவே அறிவாற்றல் மற்றும் சுயமாக சிந்தித்து பகுத்தறிந்து செயற்படக்கூடிய ஆற்றல் அமைந்திருக்கின்றது. அதனை பயன்படுத்தியதால்தான் மனிதனால் இன்றைய நவீன தொழினுட்ப உலகை கட்டமைக்க முடிந்தது.

மனிதன் உருவாக்கிய மிகச்சிறந்த சாதனம் கணணி. கணணி தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மனிதனால் கொடுக்கப்படும் கட்டளைகளை நிறைவேற்றுக்கின்ற ஒரு சாதனம்.

மனிதனால் கொடுக்கப்படுகின்ற கட்டளைகளை மட்டுமே வைத்து செயற்படாமல் தன்னிடம் உள்ள தரவுகளை அடிப்படையாக வைத்து தானே சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுத்து ஒரு கணணி செயற்படுமானால் அதுதான் செயற்கை நுண்ணறிவு ஆகும்.

பொதுவாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்றால் பெரும்பாலானோருக்கு ஞாபகத்திற்கு வருவது திரைப்படங்களில் காட்டப்படும் ரோபோக்கள். அவைதான் மனிதனினுடைய கட்டளைகளிற்கு ஏற்ப மட்டுமே செயற்படாமல் தானாகவும் சிந்தித்து முடிவெடுத்து செயற்படுபவையாக இருக்கும்.

அவற்றை நாம் செயற்கை நுண்ணறிவுக்கான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மனிதனைப் போன்ற உருவம் கொண்ட ரோபோக்கள் உருவாக்கப்பட்டாலும் பயன்படுத்தப்பட்டாலும் மனிதனைப் போன்ற உருவத்தில், எல்லா வேலைகளையும் செய்யக்கூடிய, உலகை ஆளக்கூடிய, முழுமையாக மனிதனைப் போன்று சிந்தித்து முடிவெடுக்ககூடிய அளவிற்கு பிரம்மாண்டமாக காட்டப்படுபவை இன்றளவும் நிஜ உலகில் சாத்தியப்படவில்லை. எதிர்காலத்தில் சாத்தியப்படலாம்.

திரைப்படங்களில் காட்டப்படுகின்ற அவற்றை மட்டுமே செயற்கை நுண்ணறிவு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.

திரைப்படங்களில் காட்டப்படுவதை வைத்து செயற்கை நுண்ணறிவு என்றால் மனிதனைப் போன்று உருவம் இருக்க வேண்டும் என்று யோசிக்ககூடாது. நாம் கேள்விகளை கேட்கும் போது தானாக சிந்தித்து பதில் சொல்கின்ற ChatGPT ஒர் செயற்கை நுண்ணறிவுத் தொழினுட்பம். ஆனால் அதற்கு உருவம் இல்லை.

நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும், வேலைகளை செய்கின்ற Google Assistance, Alexa போன்ற Virtual Assistance தொழினுட்பங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அவற்றிற்கு குரல் மட்டுமே உள்ளது. மனிதனைப் போன்ற உருவம் இல்லை.

அதே நேரம் நாம் பயன்படுத்துகின்ற பொருட்களிலும், இயந்திரங்களிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழினுட்பங்கள் புகுத்தப்பட்டு அவை தன்னிச்சியாக முடிவுகளை எடுத்து இயங்குகின்ற வகையிலும் உள்ளன.

உதாரணமாக சொல்லவேண்டுமானால்,

செயற்கை நுண்ணறிவுத் தொழினுட்பங்கள் புகுத்தப்பட்ட காரை சொல்லலாம். வீதியால் கார் சென்றுகொண்டிருக்கையில் குறுக்காக மனிதன் வந்துவிட்டால் தானாக முடிவெடுத்து காரை மெதுவாக இயக்கும். வலதுபக்கமாக திரும்பும் போது தானாக முடிவெடுத்து வலது பக்க சமிஞ்ஞையை ஒளிர வைக்கும். வேகமாக செல்வதா மெதுவாக செல்வதா என தானகவே முடிவெடுக்கும்.

இப்போதெல்லாம் தொழிற்சாலைகளில், விவசாய நடவடிக்கைகள், வீடுகள் போன்று எல்லா இடங்களிலும் இயந்திரங்கள் மற்றும் பொருட்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழினுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.

இயந்திரங்களுக்கு செயற்கை நுண்ணறிவு புகுத்தப்பட்டிருந்தால் திரைப்படங்களில் காட்டப்படுவது போல் பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் ஒரளவு தானகவே முடிவெடுத்து வேலைகளை செய்கின்ற அளவுக்கு இருக்கின்றது.

Artificial Intelligence புகுத்தப்பட்டுள்ள தொழினுட்பங்களை அன்றாட வாழ்க்கையில் நிறையவே அவதானிக்க முடியும்.

செயற்கை நுண்ணறிவு மொபைல் போன், சமூகவலைத்தளங்கள் பயன்படுத்த ஆரம்பித்த காலத்திலிருந்தே இருக்கின்றது. ஆனால் அப்போது பெரியளவில் வளரவில்லை.

காலம் செல்லச் செல்ல செயற்கை நுண்ணறிவு மிகப்பெரியளவில் மேம்பட்டுக்கொண்டே வருகின்றது. செயற்கை நுண்ணறிவினுடைய ஆதிக்கம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது அதிகமாகிக்கொண்டே வருகின்றது.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி நல்லதா கெட்டதா என்று கேட்டால் இரண்டுமே என்பதுதான் பதிலாக இருக்க முடியும். மனிதன் அடுத்த கட்டத்தை வளர்ச்சியை நோக்கி நகரவேண்டுமென்றால் தொழினுட்பம் வளர வேண்டும். அந்த வகையில் பார்த்தால் செயற்கை நுண்ணறிவு வளரும் போது மனிதன் எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைவான். நிறைய பிரச்சினைகளுக்கான தீர்வாக செயற்கை நுண்ணறிவு அமையலாம்.

அதே நேரம் செயற்கை நுண்ணறிவு வளரும் போது மனிதனுக்கு வேலைகள் இல்லாமல் போகும் நிலை உருவாகும். சம காலத்திலேயே செயற்கை நுண்ணறிவு மனிதன் செய்கின்ற நிறைய வேலைகளைச் செய்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

உதாரணமாக, எல்லோரும் கணணியில் செய்கின்ற வேலைகளான Designing, Editing, Writing போன்ற வேலைகள் Artificial Intelligence தொழினுட்பங்களால் ஆன Tools-ஐ பயன்படுத்தி செய்யும் போது தரமானதாகவும், விரைவாகவும், இலகுவாகவும் செய்ய முடிகின்றது.

மனிதன் பல மணிநேரமாக செய்கின்ற நிறைய வேலைகளை சில விநாடிகளில் அல்லது சில நிமிடங்களில் செயற்கை நுண்ணறிவு செய்துவிடுகின்றது. சமகாலத்தில் நாம் கணணில் செய்கின்ற வேலைகள் பெரும்பாலான வேலைகள் எல்லாவற்றிற்கும் AI Tools இணையத்தில் கிடைக்கின்றன. அவை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

இன்று மனிதனால் செய்யப்படுகின்ற வேலைகள் எல்லாவற்றிற்கும் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவை கொண்டுவந்தால் மனிதர்களின் நிலை என்னவாகும் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.

ஒரு பக்கம் மனிதனுடைய வேலைகளை செயற்கை நுண்ணறிவு பறித்துவிடும் என்ற பிரச்சினை இருக்கின்றது. ஆனால் அதைவிடவும் பெரிய பிரச்சினை ஒன்று செயற்கை நுண்ணறிவால் ஏற்படலாம்.

இன்று செயற்கை நுண்ணறிவு என்னதான் முடிவெடுக்கும் திறனை கொண்டிருந்தாலும் மனிதனைப் போல சிந்திக்கின்ற, உணர்ச்சிகளை உடைய, சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு கிடையாது. ஆனால் அந்த மாதிரியான செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் உருவாகலாம்.

இப்போதெல்லாம் செயற்கை நுண்ணறிவிடம் தரவுகளை கொடுக்கும் போது தானே படித்து தெரிந்துகொண்டு தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும் திறன் கொண்டவையாக வளர்ச்சியடைந்திருக்கின்றது.

செயற்கை நுண்ணறிவிற்கு கொடுக்கப்படும் தரவுகள் மூலமாக நிறைய விடயங்களை கற்றுக்கொண்டு அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கும் போது எவ்வாறு அந்த முடிவை எடுத்தது?, எதனடிப்படையில் அந்த முடிவை எடுத்தது? என்று மனிதனால் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சிக்கலானதாக செயற்கை நுண்ணறிவு மாறிக்கொண்டிருக்கின்றது.

அதன் அடுத்தகட்டமாக தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளும், மனிதனைப் போன்றே சிந்திக்கும், மனிதனைப் போன்றே செயற்படுகின்ற செயற்கை நுண்ணறிவு உருவாகலாம்.

அதன் பிறகு, திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போன்று மனித உருவில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் மனிதர்களை அடிமைப்படுத்தலாம், உலகை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரலாம். யாருக்குத் தெரியும் நடந்தாலும் நடக்கலாம்.

ஆனால் செயற்கை நுண்ணறிவு பற்றி இன்னொரு பார்வையும் இருக்கின்றது. என்னதான் தொழினுட்பம் வளர்ந்தாலும் செயற்கை நுண்ணறிவிற்கு முடிவெடுக்கும் திறன் இருந்தாலும் மனிதனை போல் சிந்திக்க முடியாது, செயற்கை நுண்ணறிவு மனிதனின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்க முடியும், செயற்கை நுண்ணறிவிற்கு உணர்ச்சிகளை கொண்டுவருவது சாத்தியமற்றது போன்ற கருத்துக்களும் பலரால் முன்வைக்கப்படுகின்றன.

நாம் அந்தளவிற்கு பிரம்மாண்டமாக செயற்கை நுண்ணறிவை யோசிக்காவிட்டாலும் வரப்போகும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்து ஏதோவொரு வகையில் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செயற்கை நுண்ணறிவு தொழினுட்பம் வளர்ந்துகொண்டேதான் இருக்கப்போகின்றது. இன்று இருப்பதை விடவும் பல மடங்கு மேம்பட்ட ஒன்றாக எதிர்காலத்தில் இருக்கலாம். மனிதனை விடவும் எல்லா வகையிலும் மேம்பட்ட ஒன்றாக வளர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆகவே ஒவ்வொருவரும் தொழினுட்பத்திற்கேற்ப நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தொழினுட்பத்தின் வளர்ச்சியின் வேகத்திற்கேற்ப நம்மை நாம் மேம்படுத்திக்கொண்டே சென்றால், தொழினுட்பம் பற்றிய புரிதலோடு செயற்பட்டால் தொழினுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளிலிருந்து விலகி இருக்கலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading