ஏழு தலைமுறைகள் – Roots in Tamil

Last updated on August 1st, 2023 at 10:41 pm

Roots என்ற நாவல் அலெக்ஸ் ஹேலியால் (Alex Haley) எழுதப்பட்டு ஆங்கிலத்தில் வெளியான மிகவும் பிரபலமான நாவல். Roots நாவல் “வேர்கள்” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

“ஏழு தலைமுறைகள்” Roots நாவலின் சுருக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு நூல் ஆகும். ஏழு தலைமுறைகள் நாவல் ஏ.ஜி. எத்திராஜூலு-வினால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வரலாற்றைப் பற்றி கூறும் போது அங்கே அடிமைகளாக்கப்பட்ட கறுப்பினத்தவர்கள் பற்றி பேசுவதை தவிர்த்துவிட முடியாது. கறுப்பினத்தவர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டு அவர்கள் மேல் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் நிறையவே இருக்கின்றன. கறுப்பினத்தவர்களுக்கு எதிரான நிறவெறி, அடிமைத்தனம் என்பது அமெரிக்க வரலாற்றின் மற்றொரு பக்கம்.

ஆபிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு அடிமையாக கொண்டு செல்லப்பட்ட ஒருவரின் ஏழு தலைமுறைகளினுடைய கதையைக் கூறுகின்ற நாவல் ஏழு தலைமுறைகள்.

அலெக்ஸ் ஹேலி தன்னுடைய பாட்டி சொன்ன கதைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு தனது தலைமுறையின் வேர்களைத் தேடி கண்டுபிடிக்கின்றார். தனது தலைமுறையின் வேராக உள்ள மூதாதையர் ஆபிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு எப்படி அடிமையாக கொண்டு வரப்பட்டார், பின்னர் அமெரிக்காவில் அவருடைய தலைமுறையினர் எப்படி அடிமையாக வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றை தேடிக் கண்டுபிடிக்கின்றார்.

அலெக்ஸ் ஹேலியின் ஏழு தலைமுறைகளின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது எழுதப்பட்டதுதான் ஏழு தலைமுறைகள் நாவல்.

நூலின் இறுதியில் தனது தலைமுறையினரைக் கண்டுபிடிப்பதற்காக அலெக்ஸ் ஹேலி மேற்கொண்ட ஆய்வுகள், பயணங்கள், அவருடைய உழைப்பு, அவருடைய அனுபவங்கள் பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

ஆபிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு அடிமையாக கொண்டுவரப்பட்ட அலெக்ஸ் ஹேலியின் முதல் தலைமுறை தாத்தாவிற்குத் தாத்தாவின் பெயர் குண்ட்டா. மேற்கு ஆபிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டின் ஜப்பூர் என்ற சிற்றூரில் 1750 ஆம் ஆண்டு குண்ட்டா பிறப்பதிலிருந்து நாவல் ஆரம்பிக்கின்றது.

நாவலின் ஆரம்பம் குண்ட்டாவை மையமாகக் கொண்டு ஜப்பூர் மக்களின் வாழ்க்கை முறை எப்படியிருக்கும் என்பது சொல்லப்பட்டிருக்கின்றது. அப்போதைய காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வியல் எப்படியிருந்தது என்பதை நூலின் ஆரம்பத்திலே தெரிந்துகொள்ளலாம்.

குண்ட்டா இளமைப்பருவத்தின் தொடக்கத்தில் வெள்ளையர்களால் கடத்தப்பட்டு கப்பலில் அடைக்கப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்படுகின்றார். குண்ட்டாவுடன் சேர்த்து மொத்தமாக 92 கறுப்பினத்தவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள்.

அவர்கள் கப்பலில் கொண்டு செல்லப்படுகின்ற பகுதி நாவலின் முக்கியமான பகுதி. கப்பலில் எப்படியாக துயரங்களை அனுபவித்தார்கள் என்ற விபரிப்புக்களை ஆழமாக உணர்ந்து வாசித்தால் நமக்கு மனதில் வேதனையை உணரக்கூடியதாக இருக்கும்.

அலெக்ஸ் ஹேலி கப்பல் பயணத்தை நம் கண்முன்னே கொண்டுவருவதற்காக அவரே ஆபிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு சரக்கு கப்பலில் அடித்தளத்தில் இருட்டறையில் பயணித்து அந்த அனுபவத்தை வைத்து எழுதியிருப்பதாக நூலில் இறுதிப்பகுதியில் சொல்லியிருக்கின்றார்.

அமெரிக்காவிற்கு கொண்டுவரப்படும் அடிமைகளை அங்குள்ள முதலாளிகள் விலைகொடுத்து வாங்குவார்கள். அவர்களை வைத்து வேலை வாங்குவார்கள். அடிமைகளாக இருப்பவர்களிற்கென சிறிய குடிசைகள் இருக்கும். அதில்தான் அவர்கள் காலம் முழுவதும் வாழ்வார்கள்.

அடிமைகளாக்கப்படுவோரால் திருமணம் செய்துகொள்ள முடியும். அவர்களுடைய குழந்தைகளும் முதலாளிகளின் அடிமைகளாகவே இருப்பார்கள். அடிமைகளிற்கு முதலாளிகள் சிலவேளைகளில் கூலி குடுப்பார்கள். அவற்றை சம்பாதிக்கலாம். குறிப்பிட்ட தொகையை முதலாளிகளிடம் கொடுத்து தன்னைத்தானே விடுவித்துக்கொண்டு சுதந்திரமாக வாழமுடியும்.

அமெரிக்காவிற்கு அடிமைகளாக கொண்டுவரப்பட்டோரின் தலைமுறைகளின் வாழ்வியல் இவ்வாறான பல விடயங்களை கொண்டுள்ளது. நாவலை படிப்பதன் மூலமாக விரிவாக தெரிந்துகொள்ள முடியும்.

குண்ட்டா பெல் எனும் பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றார். அவர்களுக்கு பெண்குழந்தை ஒன்று பிறக்கின்றது. ஆனால் அவள் இளமைப்பருவ ஆரம்பத்திலேயே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறொரு முதலாளிக்கு விற்கப்படுகின்ற நிலை உருவாக்கின்றது.

இவ்வாறுதான் அவருடைய தலைமுறை பிள்ளைகள் பலரும் பல காரணங்களுக்காக அடிமைகளாக விற்கப்படுகின்றார்கள். ஆனால் பெற்றோராக மாறும் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே தமது தலைமுறையினரின் கதைகளை சொல்லியே வளர்க்கின்றார்கள்.

தலைமுறை தலைமுறைகளாக சொல்லப்படும் கதைகள் மூலமாகத்தான் 200 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மூதாதையரான குண்ட்டா பற்றி அலெக்ஸ் ஹேலிக்கு நிறைய தெரிந்திருக்கின்றது.

ஆப்ரகாம் லிங்கன் ஜனாதிபதியான பிறகு 1865-இல் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. அதன்பின்னர் அடிமைகளாக இருந்தவர்களிற்கெல்லாம் விடுதலை கிடைத்தது. அவர்களிற்கு விடுதலை கிடைத்த பின்னர் அடுத்ததற்கு அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்தான் அலெக்ஸ் ஹேலி.

கறுப்பினத்தவர்கள் அடிமைகளாக இருந்த கதைகள், சம்பவங்களை படித்திருக்கின்றேன். ஆனால் அடிமைகளாக உள்ள கறுப்பினத்தவர்களின் வாழ்வியல் எப்படியிருக்கும், அவர்களின் துயரங்களை நான் படித்தில்லை. அவற்றை தெரிந்துகொள்வதற்கு ஏழு தலைமுறைகள் நாவல் சிறப்பாக உதவி செய்தது.

இன்றைக்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாலும் கூட பல்வேறு இடங்களிலும் நிறவெறி என்பது இருந்துகொண்டிருக்கின்றது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

எல்லோரும் கட்டாயமாக படிக்கவேண்டிய நூல்களில் Roots முக்கியமானது. ஆங்கிலத்தில் இல்லாவிட்டால் Roots-இனுடைய தமிழ்பெயர்ப்பான வேர்கள் நாவலை படிக்கலாம். ஆனால் அவை அதிக பக்கங்கள் கொண்டவை. அவ்வளவு பக்கங்களை பொறுமையாக இருந்து படிக்க முடியாது என்று எண்ணுபவர்கள் ஏழு தலைமுறைகள் நாவலை படிக்கலாம்.

அடிமைகளாக வாழ்ந்த ஏழு தலை முறைகளின் கதையை, 200 வருட கால அடிமைகளின் வாழ்வை, அடிமைப்படுத்தப்பட்டோரின் துயரங்களையும் வலிகளையும், அவர்களின் வாழ்வியலையும், ஆபிரிக்க மக்களின் வாழ்வியலையும் 300 பக்கங்களிற்குள்ளேயே நம்மால் தெரிந்துகொண்டுவிட முடியும். அதனால்தான் ஏழு தலைமுறைகள் எல்லோரும் வாசிக்க வேண்டும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading