Last updated on August 31st, 2023 at 12:01 am
- தரவறிவியல் – Data Science - November 27, 2023
- திருக்கார்த்திகை தீபம் - November 25, 2023
- 1984 (நாவல்) - November 14, 2023
கடந்த சில ஆண்டுகளாக புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் பற்றிய எச்சரிக்கை செய்திகளை நம்மால் அடிக்கடி கேட்கக்கூடியதாக உள்ளது. தற்போது பூமியில் நடக்கின்ற இயற்கை சீற்றங்களையும், நிகழ்வுகளையும் தொடர்ச்சியாக அவதானித்தால் அந்த உண்மையை நம்மால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இருபத்தோராம் நூற்றாண்டில் நமது பூமி சந்திக்கப்போகும் சவால்களில் புவி வெப்பமடைதல் பிரச்சினை மிக முக்கியமானதொன்றாக இருக்கப்போகின்றது.
புவி வெப்பமடைதல் என்பது பூமியின் மேற்பரப்பின் வளிமண்டலத்தின் வெப்பம் அதிகரிப்பதைக் குறிக்கின்றது. காபனீரொட்சைட் போன்ற வெப்பத்தை உறிஞ்சக்கூடிய வாயுக்கள் அதிகமாக வளிமண்டலத்தில் சேர்வதன் விளைவாகவே பூமியின் வெப்பநிலை அளவுக்கதிகமாக அதிகரிக்கின்றது.
புவி வெப்பமடைவதன் காரணமாக பூமியின் காலநிலையில் மாற்றங்கள் ஏற்படுதல் காலநிலை மாற்றம் ஆகும்.

புவி வெப்பமடைவதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. புவி வெப்பமடைவதில் பெரும்பங்கு வகிப்பது மனிதர்களின் செயற்பாடுகள்தான். ஒர் உண்மை என்னவென்றால் புவி வெப்பமடைவதில் இயற்கைக்கும் சிறிதளவு பங்கு இருக்கின்றது.
உதாரணமாக எரிமலை வெடிப்புக்கள், சூரிய கதிர்வீச்சுகள், சூரியப்புயல் போன்ற இயற்கை நிகழ்வுகள் புவி வெப்பநிலையில் மாறுதல்களை ஏற்படுகின்றன. ஆனால் மனிதனின் இயற்கைக்கு எதிரான செயற்பாடுகளுடன் ஒப்படும் போது அவை மிக மிக சிறிய பங்கையே வகிக்கின்றன.
புவி வெப்பமடைதல் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதைத் தெரிந்துகொள்ள பச்சைவீட்டு விளைவு பற்றி தெரிந்துகொண்டாலே போதுமானது.
காபனீரொட்சைட் (CO2), மீதேன் (Methane), நைட்ரோக்சைட் (Nitrous Oxide) போன்ற வாயுக்கள் பச்சைவீட்டு வாயுக்கள் (Greenhouse gases) என்று அழைக்கப்படுகின்றன. பச்சை வீட்டு வாயுக்கள், சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பத்தை மீண்டும் வளிமண்டலத்தை விட்டு திரும்பிச்செல்ல விடாது உறிஞ்சி வைத்திருக்கும். இதன் விளைவாக புவியினுடைய வெப்பம் அதிகரிக்கிறது. அதுவே பச்சைவீட்டு விளைவு என்று அழைக்கப்படுகின்றது.
பூமியின் வெப்பம் அதிகரிப்பதற்குக் காரணம் பச்சை வீட்டு வாயுக்களின் (Greenhouse gases) அதிகரிப்பு என்று சொல்லலாம். பச்சைவீட்டு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகமாக சேர்வதற்குக் காரணம் மனிதர்களின் செயற்பாடுகள்தான்.
குறிப்பாக காபனீரொட்சைட் பற்றிச் சொல்ல வேண்டும். உலகில் அளவுக்கதிகமாக வெளியேற்றப்படும் புவி வெப்பமடைதலிற்கு காரணமான வாயு காபனீரொட்சைட் ஆகும்.
பெற்றோல், டீசல், நிலக்கரி போன்ற புதை படிம எரிபொருட்களை (Fossil fuel) எரிப்பதன் விளைவாகவே காபனீரொட்சைட் வளிமண்டலத்திற்கு அதிகமாக விடுவிக்கப்படுகிறது.
தொழிற்சாலைகள், வாகனங்கள், வீட்டு தேவைகள் என எல்லா இடங்களிலும் புதை படிம எரிபொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. புதைபடிம எரிபொருட்கள் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதன் விளைவாக காபனீரொட்சைட் போன்ற வாயுக்கள் வளிமண்டலத்தில் சேர்வதும் தவிர்க்கமுடியாமல் இருக்கின்றது.

காபனீரொட்சைட் வாயுவை அதிகமாக வெளிவேற்றுவது மட்டும்தான் மனிதன் செய்கின்ற தவறு இல்லை. சூழலில் காபனீரொட்சைட்டை உறிஞ்சி பூமியை செழிப்பாக வைத்திருக்க உதவுகின்ற மரங்களும் அளவுக்கதிகமாக வெட்டப்படுகின்றன. இதுவும் புவி வெப்பமடைவதற்கு மனிதர்களால் செய்யப்படுகின்ற மிகப்பெரிய தவறாகும்.
மரங்கள் பூமியில் உள்ள காபனீரொட்சைட் வாயுவை உறிஞ்சி ஒட்சிசனை சூழலுக்கு வெறியேற்றுகின்றது. பூமியினுடைய வெப்பத்தை குறைப்பதிலும் சூழலை குளிர்ச்சியாக வைத்திருப்பதிலும் மரங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் மனிதன் தன்னுடைய தேவைக்காக காடுகளையும் மரங்களையும் அழிக்கின்றான்.
புவி வெப்பமடைதலின் காரணமாக ஏற்படுகின்ற விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கும். புவி வெப்பமடைவதன் விளைவாகவே காலநிலை மாற்றம் ஏற்படுகின்றது. தற்போதைய நாட்களிலேயே அதனை நம்மால் உணரக்கூடியதாக இருக்கிறது. காலநிலை மாற்றம் ஏற்படுவதன் காரணமாக வழமைக்கு மாறான கனமழை, வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ போன்ற இயற்கை பேரனர்தங்களை முகங்கொடுக்க நேரிடுகின்றது.
புவி வெப்பமடைவதன் அடுத்த முக்கியமான பிரச்சினை பனிப்பாறைகள் உருகுவதைச் சொல்லலாம். பனிப்பாறைகள் உருகின்ற நிகழ்வும் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு தற்போதைய காலகட்டத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. பனிப்பாறைகள் உருகுவதன் விளைவினால் கடல்நீர்மட்டம் உயர்வடைகின்றது. இதனால் பூமியின் முக்கிய பல நகரங்களும் தீவுகளும் கடலுக்குள் மூழ்கிப்போகலாம். இது இன்னும் சில வருடங்களில் நடக்கும் என்பதுதான் பொதுவான ஆய்வுகளில் கூறப்படுகின்ற கருத்து.
மனிதன் உயிர்வாழ்வதற்கு உணவின் முக்கியத்துவம் எந்தளவிற்கு உள்ளது என்பது எல்லோருக்குமே தெரியும். புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் போன்றவற்றின் விளைவாக வரட்சி ஏற்படும். வரட்சி விவசாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயம் பாதிக்கப்படுவதால் பூமியில் வாழ்கின்ற எல்லா மனிதர்களுக்கும் தேவையான உணவு கிடைக்காமல் போகின்ற நிலை உருவாகலாம்.
புவி வெப்பமடைதால் ஏற்படும் விளைவுகள் மனிதனுக்கும் மற்றைய உயிரினங்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் போன்றவை கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்தால் நாம் வசிக்கும் பூமிக்கிரமானது திரைப்படங்களில் காட்டப்படும் வேற்றுக்கிரகங்களைப் போலவும் மாறலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.
நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். வளி மாசடைந்திருப்பதால் வளியை தூய்மையாக்கி சுவாசிப்பதற்காக முகத்தில் கருவி ஒன்றை பொருத்தியிருப்பார்கள், வரட்சியினால் உணவு இல்லாமல் பல மக்கள் உயிரிழப்பார்கள், பெரும் அனர்தங்களால் பெரும் இழப்புக்கள் ஏற்படும், பூமியை விட்டு வேறு கிரகங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்து செல்வார்கள். இப்படி உண்மையில் எதிர்காலத்தில் நடந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புடனும் எண்ணத்துடனும் செயற்பட வேண்டும். ஆகவே ஒவ்வொரு மனிதனும் புவி வெப்பமடைவதை தடுத்து பூமியை பாதுகாப்பதற்கு தன்னால் முடிந்த செயற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மனிதன் நினைத்தால் புவி வெப்பமடைதல் கட்டுப்படுத்தப்பட முடியாதது இல்லை. ஆனால் பூமியுடன் மனிதன் கட்டமைப்புடன் வாழ்ந்துகொண்டிருப்பதால் திடீரென எதனையும் மாற்ற முடியாது என்பதுதான் உண்மை.
ஆனால் எல்லா மனிதர்களும் மனது வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக புவி வெப்பமடைதலை தடுத்து நிறுத்தலாம். பூமியில் வாழ்கிற மனிதர்கள் சில விடயங்களை செய்தால் நிச்சயமாக நமது பூமியை காப்பற்ற முடியும்.
அவற்றுள் முக்கியமாக இரண்டு விடயங்கள் இருக்கின்றன. முதலில் காபனீரொட்சைட் போன்ற புவி வெப்பமடைதலை ஏற்படுத்தக்கூடிய வாயுக்கள் வளிமண்டலத்தில் சேர்வதை தடுக்க வேண்டும்.
அதற்கு பெற்றோல், டீசல் போன்ற புதைபடிம எரிபொருட்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க சக்தி முதல்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரலாம். மனிதனால் நிறைய மாற்று வழிகளை உருவாக்க முடியும்.
இரண்டாவது காடழிப்பு, மரங்களை வெட்டுவதை தடுத்து மரங்களை பாதுகாக்க வேண்டும். புதிதாக மரங்களை நட்டு மீளவும் காடுகளை உருவாக்கி பூமியை பசுமையாக மாற்றலாம்.

முதலில் கூறியதைப் போலவே ஒரே நாளில் அல்லது ஒரே வருடத்தில் பூமியை சரி செய்வது எல்லாம் நடக்காத காரியம். இருந்தாலும் பூமியை பாதுகாக்க வேண்டும் என்று முயற்சி செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக பூமியை நல்ல நிலைக்கு கொண்டுவரலாம்.
நாம் வாழ்கிற பூமி நமக்கு தேவையான எல்லாவற்றையும் தந்து நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கிறது. ஆகவே நாமும் பூமியை பாதுகாக்க வேண்டும். நாம் பூமியை பாதுகாக்க மறந்தால் பூமியும் நம்மை ஒரு போதும் பாதுகாப்பாக வைத்திருக்காது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.