100வது பதிவு

இந்தப் பதிவு நம்முடைய வலைத்தளத்தின் (Tamil Blog) நூறாவது பதிவு. பதிவு எழுதத் தொடங்கும் போதே ஒருவித சந்தோஷம். பொதுவாக நூறு என்ற எண் ஒர் இலக்காக இருக்கும். அப்படிப் பார்க்கும் போது நூறாவது பதிவை வெளியிடுகிறேன் என்றால் ஒர் இலக்கை அடைந்துவிட்ட மகிழ்ச்சி உருவாகும்தானே!

தமிழ் வலைத்தளம் ஆரம்பித்த போது வருடம் 2021. இப்போது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கின்றோம். இரண்டு வருடங்களைக் கடந்து இரண்டரை வருடங்களை நெருங்கிவிட்டது. இரண்டரை வருடத்தில் ஒன்றிலிருந்து நூறாவது பதிவு.

நான் ஆரம்பித்த முதல் வலைத்தளம் இதுவில்லையென்றாலும் நூறு என்ற இலக்கை அடைந்ததும் வெற்றிகரமானதுமான வலைத்தளம் இதுவே. அதனாலே நூறாவது பதிவை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் முதலாவது வலைத்தளத்தை 2019 ஆம் ஆண்டில் தொடங்கியிருந்தேன். அப்போது AL படித்துக்கொண்டிருந்தேன். 2019 ஆண்டின் நடுப்பகுதியில் அந்த வலைத்தளத்திற்காக பிளாஸ்டிக் பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அதுதான் முதலாவதாக வலைத்தளத்திற்கு எழுதிய கட்டுரை என்று நினைக்கின்றேன். அந்தக் கட்டுரையை மேம்படுத்தி “பிளாஸ்டிக் மாசுபாடு” என்ற தலைப்பில் இந்தத் தளத்தில் வெளியிட்டுள்ளேன்.

ஆனால் சோகமான விடயம் என்னவென்றால் அந்த வலைத்தளத்தில் எழுதிய பதிவுகளை யாரும் படிக்கவில்லை. அதிலே நான் எழுதியது 15 பதிவுகள் இருக்கும். அதுவும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத சின்னச் சின்னப் பதிவுகள். சில காலத்திலேயே அந்த வலைத்தளத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். அது கைவிடப்பட்டது.

திரும்பவும் 2021 ஆம் ஆண்டில் ஏதாவது எழுத வேணும் என்று புதுசா ஒரு டொமைன் வாங்கி வலைத்தளம் ஒன்றைத் தொடங்கினேன். அந்த வலைத்தளத்தில்தான் நிறையக் கற்றுக்கொண்டேன். அதிலே 30 பதிவுகள் வெளியிட்டிருப்பேன் என்று நினைக்கின்றேன். அவற்றுள் சில அதற்கு முன்னர் ஆரம்பித்த வலைத்தளத்திற்கு எழுதிய பதிவுகள். அந்தத் தளத்திலும் என்ன எழுதுவதென்று தெரியாமல் எழுதிய சின்னச் சின்னதான 30 பதிவுகளிற்குள்ளேதான் இருக்கும்.

ஆனால் முதற்தடவை ஆரம்பித்த வலைத்தளத்தோடு ஒப்பிடுகையில் இரண்டாவது வலைத்தளம் கொஞ்சம் பரவாயில்லை. ஒருசில பார்வையாளர்கள் கூகுள் தேடல் மூலமாக வந்தனர். எல்லாவற்றையும் விட Blogging பற்றிய புரிதல் வந்ததே அந்த வலைத்தளத்திலேதான்.

அதன் பின்னர் ஆரம்பித்ததுதான் Tamil Blog எனும் இந்த வலைத்தளம். Tamil Blog என்ற பெயர் தமிழ் வலைத்தளத்திற்கு ஏற்ற பெயராகவும் உள்ளது. மூன்றாவதாக ஆரம்பித்த இந்த வலைத்தளம் வெற்றிகரமாகச் சென்றுகொண்டிருக்கின்றது. அதனாலேதான் நூறாவது பதிவையும் போட முடிந்திருக்கின்றது.

இந்த வலைத்தளம் நிரந்தரமானதுதான். இந்தத் தளத்தில் வெளியாகின்ற இந்த நூறாவது பதிவைப் போல ஆயிரமாவது பதிவைத்தொடும் போது “ஆயிரமாவது பதிவு” என்றொரு பதிவு எழுதுவதற்காகவும் காத்துக்கொண்டிருக்கின்றேன்.

இந்த வலைத்தளம் ஆரம்பித்த போது எழுதியதற்கும் தற்போதைக்குமே நிறைய வித்தியாசங்களை என்னால் பார்க்க முடிகிறது. அப்போது சிறிதாக பதிவுகள் (Posts) போன்று எழுதுவேன், கட்டுரைகள் எதுவும் பெரிதாக எழுதவில்லை. தற்போதுதான் கட்டுரைகள் எழுத ஆரம்பித்துள்ளேன். மேலும் நான் படிக்கின்ற புத்தகங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தது 2023 ஆம் ஆண்டில்தான். ஏனென்றால் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது 2022 ஆம் ஆண்டின் இறுதியில்தான்.

ஆரம்பத்தில் ஏதோவொரு விடயத்தைப் பற்றி எழுத நினைத்தால் ஒழுங்கமைப்பு இல்லாமல் நினைப்பதை கொஞ்சமாக எழுதுவேன். இப்போது ஆரம்பத்தை விட அதிகமாகவும் விளக்கமாகவும் ஒழுங்கமைப்புடனும் எழுதுகிறேன். அதே போல புதிதாக நிறைய விடயங்களை எழுதுவதற்கு முயற்சி செய்கிறேன்.

இனிமேல் வரப்போகும் பதிவுகளிலும் புதிதாக நிறைய விடயங்களை எழுதுவதற்கு ஆர்வமாக இருக்கின்றேன். நிறையவே புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால் அது பற்றிய பதிவுகளையும் எதிர்பார்க்கலாம்.

சமகால உலகில் நடக்கின்ற நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே எனக்கு உள்ளது. இனிவரும் காலத்தில் அதனைச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடலாம். எழுத வேண்டுமென்றால் நிறைய விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கு முயற்சிக்க வேண்டும்.

இதுவரை காலமுமே தமிழ் வலைத்தளத்தில் எழுதுவது நான் மட்டும்தான். அதனால்தான் என்னுடைய இஷ்டத்துக்கு அதை எழுதப்போகிறேன், இதை எழுதப்போகிறேன் என்ற மனநிலையில் சொல்லிக்கொண்டிருக்கின்றேன். நூறாவது பதிவு என்பதாலும் எதனை பதிவு செய்வதென்று தெரியாமல் கிறுக்கிக்கொண்டிருக்கின்றேன் என்றுதான் தோன்றுகின்றது.

இனிமேல் என்னுடைய பதிவுகள் மட்டும்தான் இந்த வலைத்தளத்தில் வெளியிடப்படும் என்று சொல்லவும் முடியாது. இதுவரைக்குமே வலைத்தளத்தை என்னுடைய தனிப்பட்ட வலைப்பதிவாக கொண்டுபோகவும் இல்லை. சிறந்த வகையில் ஏதேனுமொரு விடயத்தை உங்களிடம் கொண்டுசேர்க்க விரும்புவர்களுடைய பதிவுகளைக்கூட பிரசுரிக்கலாம் என்றுதான் நினைக்கின்றேன்.

அதிகமான விடயங்களை உள்ளடக்கிய, அதிகமான வாசகர்களைக் கொண்ட தரமான ஒர் இணையத்தளமாக மாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. ஒன்றில் ஆரம்பித்து நூறு என்ற இலக்கைத் தொட்டது வலைத்தளத்தை ஒருபடி உயர்த்திவிட்டது என்று நினைக்கின்றேன். எனக்கும் நூறாவது பதிவு வெளியிடுவது பெரும் உற்சாகத்தைக் கொடுக்கின்றது.

புதிதாக பதிவுகள் எழுதுவதையெல்லாம் தாண்டி வலைத்தளத்தின் வடிவமைப்பும் தொடர்ச்சியாக சின்னச் சின்ன மாற்றங்களிற்கும் உள்ளாகலாம். புதிய பதிவுகள் எழுதுகின்ற அளவிற்கு பழைய பதிவுகளையும் மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். ஒரு வரியில் சொன்னால் தமிழ் வலைத்தளம் எப்போதும் மேம்பட்டுக்கொண்டேயிருக்கும்.

இந்தப் பதிவை படித்துக்கொண்டிருப்பவர்கள் கட்டாயமாக உங்களுடைய கருத்துக்களைச் சொல்லியேயாக வேண்டும். நீங்கள் ஏதாவது கூறினால் மட்டுமே வலைத்தளத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். வலைத்தளத்தில் அல்லது பதிவுகளில் தேவையான மாற்றங்களையும் கொண்டுவர முடியும்.

இறுதியாக நான் உங்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இந்தப் பதிவை யார் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் இவ்வளவும் வாசித்திருக்கிறீர்களே உங்களுக்கு நன்றி. நிறைய நேரங்களில் கூகுள் மூலமாக ஒரு தடவை மட்டும் வலைத்தளத்திற்கு வருபவர்கள் அதிகம். ஆனாலும் உங்களில் சிலர் திரும்பத் திரும்ப வந்து வலைத்தளத்தின் பதிவுகளை படிக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் நன்றிகள்!

Share
Subscribe
Notify of
guest

2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading