Web 3.0 என்றால் என்ன?

Last updated on November 8th, 2023 at 04:52 pm

எழில்(-ற்-)பிரகாஷ்
Follow me
Latest posts by எழில்(-ற்-)பிரகாஷ் (see all)

எந்தவொரு தொழினுட்பமும் தொடர்ச்சியாக நிலைத்திருக்க வேண்டும் என்றால் குறித்த தொழினுட்பம் காலத்திற்கு காலம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும்.

இன்று உலகம் இயங்குவதற்கு அவசியமாகிவிட்டதும் உலகையே இணைத்து வைத்திருப்பதுமான இணையம் அதனுடைய அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இணையத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது WEB 3.0 இணையமாக இருக்கும். WEB 3.0 என்பதை இணையத்தின் அடுத்த பரிமாணம் என்று சொல்லலாம்.

Web என்ற வார்த்தை தமிழில் இணையம் என்பதைக் குறிக்கின்றது. இணையம் இதுவரை இரண்டு கட்டங்களாக பரிணமித்திருக்கின்றது. இப்போது மூன்றாவது கட்ட பரிமாணத்தில் இருக்கின்றது. இணையம் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து Web 1.0, Web 2.0, Web 3.0 என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றது.

Web 3.0 பற்றி பார்ப்பதற்கு முன் Web 1.0, Web 2.0 பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். இவற்றை தெரிந்துகொண்டால் இணையத்தினுடைய வளர்ச்சி எப்படி இருக்கின்றது என்பதை பற்றியும் Web 3.0 பற்றியும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.

WEB 1.0

இணையம் உருவான ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட இணையம் Web 1.0 என்று அழைக்கப்படுகின்றது. 1990 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இணையத்தளங்கள் Web 1.0 இற்குள் அடங்குகின்றன.

Web 1.0 இணையத்தளங்கள் அடிப்படையான கட்டமைப்பைக் கொண்டவை. இந்த வலைத்தளங்களில் நம்மால் தகவல்களை படிக்க மட்டுமே முடியும். பயனர் ஒருவரால் தகவல்களை படிப்பதைத் தவிர வேறு செயற்பாடுகளை செய்ய முடியாது.

தற்போது சமூகவலைத்தளங்களைப் போல கருத்துக்கள் தெரிவிப்பது அல்லது பகிர்வது போன்றவற்றைச் செய்ய முடியாது, நிகழ்நிலையில் பொருட்கள் வாங்குவது, பணப்பரிமாற்றம் செய்வது, பதிவேற்றம்/பதிவிறக்கம் செய்வது போன்ற இன்றைய இணையத்தில் உள்ள அம்சங்கள் அன்றைய WEB 1.0 இணையத்தில் இருக்கவில்லை.

அதே போல நிறுவனங்களும் WEB 1.0 இணையத்தை பெரிதாக வணிக நோக்கங்களிற்காக பயன்படுத்தவில்லை. இன்றைய சமூகவலைத்தளங்கள், மொபைல் செயலிகள், இணையத்தளங்கள் பயனர்களினுடைய தகவல்களை சேகரித்து அவற்றை வணிக நோக்கிற்காக பயன்படுத்துகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் WEB 1.0 இல் நடைபெறவில்லை.

ஒரு வரியில் சொல்லப்போனால் Web 1.0 இணையத்தளத்தின் வலைப்பக்கம் ஒரு புத்தகத்தின் பக்கத்தை போன்றது என்று சொல்லிவிடலாம்.

WEB 2.0

Web 2.0

இரண்டாயிரமாம் ஆண்டுகளில் ஆரம்பித்து தற்போது வரை இருப்பது Web 2.0 இணையம் ஆகும். Web 1.0 வலைத்தளங்களில் இல்லாத விடயங்கள் Web 2.0 இணையத்தில் இருக்கின்றன.

இன்றைய சமூகவலைத்தளங்கள், இணையத்தளங்கள் Web 2.0 இணையத்தில் உருவாக்கப்பட்டவை. உதாரணமாக கூகுள், பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற தளங்களை குறிப்பிடலாம்.

WEB 2.0 தளங்களில் யார் வேண்டுமானாலும் பதிவுகள், காணொளிகளை பகிரலாம், கருத்துக்கள் சொல்லலாம், தேடல்களை மேற்கொள்ளலாம், நிகழ்நிலையில் பணப்பரிமாற்றம் செய்யலாம். இன்று நாம் பயன்படுத்துகின்ற இணையம் WEB 2.0 ஆகும்.

இன்று இணையத்தைப் பயன்படுத்தி செய்கின்ற செயற்பாடுகள் எல்லாமே Web 2.0 விற்குள் வருகின்றது. இணைய உலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது Web 2.0 என்று சொல்லலாம்.

WEB 2.0 இணையத்தில் உள்ள பிரச்சினைகள்

Web 2.0 இணையம்தான் இன்றைய நவீன தொழினுட்ப உலகை வடிவமைப்பதற்கு உதவியாக இருந்திருக்கின்றது. Web 2.0 உலகத்தை மாற்றியிருந்தாலும் அதில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.

இன்றைய இணையம் கூகுள், மெட்டா போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் கீழ் தான் இருக்கின்றது என்று சொல்லலாம். உலகில் உள்ள பெரும்பாலான நபர்களுடைய தரவுகள் அனைத்துமே மிகப்பெரிய தொழினுட்ப நிறுவனங்களிடம் இருக்கின்றன. அவர்கள் மக்களுடைய தனிப்பட்பட்ட தரவுகளை சேகரித்து வணிக நோக்கங்களிற்காக பயன்படுத்துகின்றார்கள்.

தனி நபர்களினுடைய தரவுகளிற்கேற்ப விளம்பரங்கள் செய்கிறார்கள். இணையம் ஒரு வணிகத்தளமாகவே மாறிவிட்டது. இணையத்தில் தனிநபர்களுடைய தரவுகளிற்கு பாதுகாப்பு என்பது இல்லை. நீங்கள் இணையம் பயன்படுத்தும் நபராக இருந்தால் Privacy என்ற விடயத்தை மறந்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

மக்களுடைய Privacy-ஐ பாதுகாப்பது என்ற விடயமும் Web 3.0-விற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்று.

WEB 3.0

Web3

ஆரம்பத்தில் கூறியது போலவே Web 3.0 இணையத்தின் புதிய பரிமாணம் என்று சொல்லலாம். Blockchain தொழினுட்பத்தின் மூலமாக Decentralize செய்யப்படுவதன் மூலமாக WEB 3.0  தொழிற்படுகின்றது. 

Web 3.0 இணையத்தில் உங்களுடைய Privacy பாதுகாக்கப்படும். Web 2.0 இணையத்தைப் போல உங்களுடைய தரவுகளை எந்த நிறுவனமும் சேகரித்து வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த முடியாது. உங்களுடைய தரவுகள் உங்கள் கைகளில்தான் இருக்கும்.

Web 3.0-வில் பணப்பரிமாற்றம் என்பது கிரிப்டோகரன்சி மூலமானதாக இருக்கும். WEB 3.0 ஆனது Blockchain மூலமாக தொழிற்படுவதால் WEB 3.0 தளங்களில் உங்களுடைய பதிவுகள், வீடியோக்களை, கருத்துக்களை பகிர்ந்துகொள்வதன் மூலமாக கிரிப்டோகரண்சி வடிவில் பணம் சம்பாதித்துக்கொள்ளவும் முடியும்.

தற்போது Web 3.0 இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தளங்கள் இணையத்தில் நிறையவே காணப்படுகின்றன. NFT என்பதும் Blockchain தொழினுட்பத்தின் மூலமாக இயங்குபவை ஆகும். NFT-யினுடைய பயன்பாடு Web 3.0-வை அடிப்படையாகக்கொண்ட தளங்களில் அதிகமாக காணப்படும்.

எதிர்காலத் தொழினுட்பங்களான மெட்டாவேர்ஸ் போன்ற Virtual Reality, Augmented Reality தொழினுட்பங்களும் Web 3.0 இற்குள் வருகின்றது. இன்றைய தொழினுட்பத்தின் வளர்ச்சியைப் பார்த்தால் Web 3.0 வில் மெய்நிகரான உலகத்தில் மெய்நிகரான வாழ்க்கையை வாழ முடியும் என நினைக்கின்றேன்.

தற்போதைய காலகட்டம்தான் WEB 3.0-வினுடைய ஆரம்ப கட்டமாகும். இப்படித்தான் WEB 3.0 இருக்கிறது என்று சொல்வதை கேட்கும் போது நன்றாக இருக்கும். உண்மையில் Web 3.0 எப்படி இருக்கும் என்பது நடைமுறையில் பரவலாக எல்லோரும் பயன்படுத்தினால் மட்டுமே தெரியும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

5 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
%d bloggers like this: