Last updated on November 9th, 2023 at 04:12 pm
- தரவறிவியல் – Data Science - November 27, 2023
- திருக்கார்த்திகை தீபம் - November 25, 2023
- 1984 (நாவல்) - November 14, 2023
கிழவனும் கடலும் என்ற நாவல் The Old Man and the Sea எனும் புகழ்பெற்ற ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்த நாவல் எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) என்ற அமெரிக்க எழுத்தாளரால் எழுதப்பட்டு 1952-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
கிழவனும் கடலும் நாவலுக்காக 1954-ம் ஆண்டு எர்னெஸ்ட் ஹெமிங்வேயிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நாவல் வெளிவந்து அரை நூற்றாண்டு காலத்தை கடந்துவிட்டாலும் இன்றைக்கும் பலராலும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கட்டாயம் வாசிக்க வேண்டிய உலகளாவிய நாவல்களின் பட்டியலில் கிழவனும் கடலும் நாவல் பல்வேறுபட்ட மனிதர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்நாவலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்றவுடனேயே இந்நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. நோபல் பரிசு என்பது ஆகச்சிறந்தவற்றிற்கு வழங்கப்படும் விருது. அதனாலேயே இந்நாவல் மற்ற இலக்கியங்களை விட எவ்வாறு ஆகச்சிறந்ததாக உள்ளது என்ற எண்ணம் இந்த நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது.
நான் கிழவனும் கடலும் நாவலை தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்து முடித்துவிட்டேன். மற்றைய பெரும்பாலான நாவல்களுடன் ஒப்பிடும் போது இதுவொரு சிறிய நாவல்தான். என்னதான் நாவல் சிறியது என்றாலும் நாவலில் சொல்லப்பட்ட விடயங்கள் பெரிது.
நாவலில் முக்கிய கதை மாந்தர்கள் இரண்டு பேர். ஒன்று கதையின் பிரதான கதாப்பாத்திரம் மீனவரான பெரியவர் சாண்டியாகோ. இரண்டாவது மீன்பிடிக்கும் பெரியவருக்கு உதவியாக வரும் மீன்பிடிக்க கற்றுக்கொள்ளும் சிறுவன் மனோலின். இவர்கள் இருவரையும் விட வேறு ஒரு சில கதாப்பாத்திரங்கள் நாவலில் உள்ளன. கதையின் பிரதானமாக பங்குவகிக்கின்ற மீன்களை கதாப்பாத்திரங்களாகவே நான் பார்க்கின்றேன்.
நாவலின் கதையைப் பற்றி சொன்னால் கியூபாவின் ஹவானா தீவில் சாண்டியாகோ என்ற வயதான மீன்பிடிப்பவர் இருக்கின்றார். அவருக்கு உதவியாக மனோலின் என்ற சிறுவனும் இருக்கின்றான். எண்பத்து நான்கு நாட்களாக கடலுக்குச் சென்றும் மீன் எதுவும் சாண்டியாகோவிற்குச் சிக்கவில்லை. அதனாலேயே சாண்டியாகோ அதிஷ்டம் இல்லாதவர் என்ற எண்ணத்தில் சாண்டியாகோவிற்கு உதவியாகவிருந்த சிறுவனை வேறு மீனவர்களின் படகிற்கு சிறுவனின் பெற்றோர்கள் மாற்றிவிட்டார்கள்.
எண்பத்து நான்கு நாட்களுக்குப் பிறகு சாண்டியாகோ தனியாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றார். அவரது அதிஷ்டத்தின் காரணமாக இருக்கலாம். அவருடைய தூண்டிலில் மிகப்பெரிய மீன் சிக்குகின்றது.
தூண்டிலில் மாட்டிய மீனுடன் படகு இழுத்துச் செல்லப்படுகின்றது. இறுதியில் சாண்டியாகோ மீனுடன் போராடி மீனை கொன்றுவிடுகிறார். மீனை படகுடன் கட்டி கரைக்கு கொண்டுவருகையில் அந்த மீன் சுறாக்களுக்கு இரையாகின்றது. முதலில் உணவாகப்போகும் மீனுடன் போராடினால் பின்னர் உணவுக்காக வரும் மீன்களுடன் போராடுகின்ற நிலைமை சாண்டியாகோவிற்கு ஏற்பட்டுவிட்டது. சாண்டியாகோ கரைக்கு வந்து சேரும்போது பிடிபட்ட மீனின் எலும்புக்கூடுடன்தான் கரைக்கு வந்து சேர்கின்றார்.
மிகப்பெரிய கதை, நிறைய கதாப்பாத்திரங்கள் கொண்ட நாவல் கிடையாது. இந்நாவலின் கதையை சுருக்கமாக நீதிக்கதை போன்று சிலவரிகளில் அழகாய் எழுதி முடித்துவிடலாம். அந்தளவிற்கு எளிமையான நாவலாகவே கிழவனும் கடலும் அமைந்துள்ளது. ஆனால் நான் ஆரம்பத்தில் கூறியது போலவே கிழவனும் கடலும் நாவலை படித்தால் நிறைய விடயங்களை எடுத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
சாண்டியாகோ வயதில் மிகவும் பெரியவர்தான் ஆனால் தன் வாழ்க்கையின் கஷ்டங்களை எதிர்த்துப் போராடுவதற்கான மனவுறுதி அவரிடம் உள்ளது. அதன் வெளிப்பாடுதான் கடலில் தன்னந்தனியாக நின்றுகொண்டு அவ்வளவு பெரிய மீன் சிக்கிய பின் பொறுமையாக இருந்து மீனை எதிர்த்துப் போராடி தன்னுடைய இலக்கான மீனை அடைகின்றார்.
நாம் கூட வாழ்க்கையில் இப்படிப்பட்ட மனிதனாக இருக்க வேண்டும். எத்தனை வயதாக இருந்தாலும் பரவாயில்லை, எப்படிப்பட்ட தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலையாக இருந்தாலும் பரவாயில்லை நமது இலக்குகளை குறிவைக்கும் போது வாழ்க்கையின் தடைகளை எதிர்த்துப் போராட வேண்டும். அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக சாண்டியாகோவை எடுத்துக்கொள்ளலாம்.
சாண்டியாகோ அந்த பெரிய மீனை கரைக்கு கொண்டுவரும் போது ஏற்படும் சம்பவத்தை என்னால் பலவிதமாக புரிந்துகொள்ள முடிகிறது. சாண்டியாகோவின் உழைப்பிற்கு கிடைத்த வெகுமதிதான் அந்த மீன். ஆனால் அந்த மீனை சுறாக்கள் எடுத்துக்கொள்கின்றன.
நிறைய நேரங்களில் மனிதர்களுடைய வாழ்க்கையில் இப்படித்தான் தனிமனிதன் போராடிப் பெற்றுக்கொண்ட வெற்றியை எந்த வேலையும் செய்யாமல் பங்குபோட்டுக்கொள்வதற்கு நிறையப்பேர் காத்திருக்கின்றார்கள். அல்லது தனி மனிதனின் உழைப்பை சுரண்டி தமக்கானதாக்கிக் கொள்வதற்காக நிறைய மனிதர்கள் இருக்கின்றார்கள் அந்த சுறாக்களைப் போலவே.
நாவலில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நீங்கள் வாசிக்கும் போது சொல்லப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு விடயங்களையும் கருத்துக்களையும் ஒவ்வொருமாதிரி விளங்கிக்கொள்வீர்கள்.
நாவலை வாசிக்கும் போது நமக்கு வருகின்ற கற்பனை அனுபவம் மிகமுக்கியமானது. அதுதான் நாவல் ஒன்றை திரைப்படம் போன்ற இனிமையான அனுபவத்தைக் கொடுக்கின்றது. நான் கிழவனும் கடலும் நாவலை வாசிக்கும் போது சாண்டியாகோவுடன் நடுக்கடலுக்கு பயணித்து அங்கே மீன்பிடிப்பதையும் இறுதியில் மீனை சுறாக்களுக்கு பறிகொடுப்பதையும் பார்த்தேன்.
சொல்லப்போனால் சாண்டியாகோ தனியாக கடலுக்குச் செல்லவில்லை. சாண்டியாகோவுடன் சேர்ந்து நானும் கடலுக்குச் சென்றேன். ஆனால் என்னால் சாண்டியாகோவிற்கு உதவி செய்ய முடியவில்லை. நான் நாவலின் வழியாக சாண்டியாகோவின் போராட்டத்தையும், விடாமுயற்சியையும், இழப்பையும் அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
கிழவனும் கடலும் ஒர் சிறந்த நாவல். பல்வேறுபட்ட மனிதர்களால் கட்டாயமாக வாசிக்க வேண்டுமென பரிந்துரை செய்யப்படுகின்ற நாவல். உங்களுக்கு உலக இலக்கியங்களில் ஆர்வம் இருந்தால் நாவல்கள் வாசிக்க எண்ணினால் கிழவனும் கடலும் வாசியுங்கள்.
நீங்கள் இந்த நாவலை வாசித்திருந்தால் அல்லது இந்நாவல் பற்றி கேள்விப்பட்டிருந்தால் உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள். வேறு எந்த நாவல்கள் வாசிக்கலாம் என்பது பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் கூறுங்கள்.