illusory Truth Effect

Last updated on January 23rd, 2024 at 05:43 pm

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் அது உண்மையாக மாறிவிடாது என்ற வசனங்களை நிறையவே கேட்டிருப்பீர்கள். பொய்யை உண்மையாக மாற்ற முடியாவிட்டாலும் பொய்யொன்றை திரும்ப திரும்ப சொல்வதால் உண்மை என நம்ப வைக்க முடியும்.

பிழையான தகவல் அல்லது பொய் திரும்ப திரும்ப சொல்லப்படும் போது அவற்றை நாம் மீண்டும் மீண்டும் கேட்பதற்கு நேரிட்டால் அது உண்மை என நம்புவதற்கு நாம் தூண்டப்படுவோம். இது illusory Truth Effect என்று அழைக்கப்படுகிறது.

அது எப்படி? ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லும் போது அது பொய் என்பதை புரிந்துகொள்ளாமல் உண்மை என நம்புவோமா? என்ற கேள்வி உருவாகும்.

ஒரு விடயம் உண்மையா? இல்லையா? என்பதை பகுத்தறிவை பயன்படுத்தி ஆராய்ந்து உண்மையை அறிந்துகொள்பவன் மனிதன். ஆனால், நீங்களே யோசித்துப்பாருங்கள் உலகில் உள்ள மனிதர்கள் பகுத்தறிவு மூலமாக ஒரு விடயத்தை ஆராய்ந்து உண்மை எது என்பதை தெரிந்துகொள்கிற அளவுக்கு இருக்கிறார்களா?

நம்மையே நாம் எடுத்துக்கொள்வோம். சில பொதுவான விடயங்களை நீண்ட காலமாக உண்மை என மனதில் எண்ணிக்கொண்டிருந்திருப்போம். ஒரு கட்டத்தில் அது பொய் என்பதை தெரிந்துகொள்கிற நாட்கள் வந்திருக்கும்.

நன்றாக யோசித்துப் பார்த்தால் தெரியும். எல்லோருடைய வாழ்கையிலும் நீண்டகாலமாக நம்பிக்கொண்டிருந்த பொய்கள் நிச்சயமாக இருக்கும். மனிதன் எல்லாவிடயங்களையும் பகுத்தறிவு மூலமாக தெரிந்துகொண்டு 100% உண்மையை மட்டுமே நம்புவான் என்று சொல்லிவிடமுடியாது. ஒரு மனிதன் தவறான தகவல்களை நம்புவதற்கு நிறைய வழிகளில் தூண்ட முடியும்.

இன்றைய இணைய உலகில் பொய்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது இன்னும் இலகுவாகிறது. சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி தவறான தகவல் ஒன்றை திரும்ப திரும்ப மக்களிடம் சொல்வதன் மூலம் அதுதான் சரி என மக்களை இலகுவாக நம்ப வைக்க முடியும்.

இன்றைக்கு சமூகவலைத்தளங்களில் மற்றும் நமது சமூகத்தில் இந்த மாதிரியான விடயங்களை நம்மால் அவதானிக்க முடியும்.

நம் எல்லோருக்கும் தெரிந்த உதாரணமாக அரசியல் பிரச்சாரங்களைக் கூறலாம். ஒரு கருத்தை மக்களிடம் திணிப்பதற்கு ஒரே விடயத்தை திரும்ப திரும்ப சொல்லி மக்களை நம்பவைத்து தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.

வாட்ஸ் அப் செயலியில் பகிர்வதன் மூலமாக வருகிற வதந்திகளை நம்பக்கூடியவர்கள் ஏராளம்.

ஒரு பொருளிற்கான விளம்பரத்தை திரும்பத் திரும்ப தொலைக்காட்சியில் பார்க்கிறீர்கள். நாம் விரும்பியோ விரும்பாமலோ அந்த பொருள் நமது மனதில் பதிந்துவிடும். நாம் பொருட்கள் வாங்க கடைக்கு செல்லும் போது விளம்பரத்தில் காட்டப்பட்ட பொருள் தென்பட்டால் அதன் பக்கம் மனம் போகும்.

பொருளிற்கான விளம்பரம் போன்றுதான், தவறான தகவல்களும் திரும்பத் திரும்ப சொல்லப்படும் போது நமது மனதில் உண்மை என நம்புவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

தவறான தகவல்களை அல்லது பொய்யை மக்கள் உண்மை என நம்புவதால் ஏற்படுகின்ற விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

அரசியலை எடுத்துக்கொண்டால், மக்கள் மனதில் தவறாக விதைக்கப்படும் கருத்துக்களால் அரசியலில் மாற்றங்கள் ஏற்படலாம், ஜயநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவே அமையலாம்.

சமூகத்தை எடுத்துக்கொண்டால் கட்டுக்கதைகள், பொய்யான தகவல்களை மக்கள் அதிகமாக நம்பினால் சமூகம் அறிவார்ந்த சமூகமாக இல்லாமல் முட்டாள்தனமான, மூடநம்பிக்கைகளை பின்பற்றுகின்ற சமூகமாக மாறலாம்.

தவறான தகவல்களை சொல்லி மக்களை நம்ப வைப்பது இந்த மாதிரியான எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

நாம் நம் மீது திணிக்கப்படும் கருத்துக்களை, சமூகத்தில் அதிகம் பரவுகிற கருத்துக்களை நம்புவதற்கு முன்னர் பல முறை யோசிக்க வேண்டும். ஒரு கருத்து உண்மையா? இல்லையா? என்பதை சரியான ஆதாரங்களை வைத்து தெரிந்துகொள்ள வேண்டும்.

நம் மீது திணிக்கப்படும் தவறான கருத்துக்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தெரிந்துகொள்கிற மனிதனாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும். அப்படியிருக்கும் போது அறிவார்ந்த சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading