நேரத்தை வீணடிப்பது எப்படி?

நேரத்தின் பெறுமதிக்கு எதனையும் ஈடாகக் கொடுக்க முடியாது. பணத்தை விடவும் பொன்னை விடவும் நேரம் பெறுமதியானது. நேரம் பொன்னானது என்று சொல்வார்கள். ஆனால் பொன்னை விட நேரம்தான் பெறுமதியானது. உங்களால் பணத்தைப்போல செலவழிக்காமல் நேரத்தை சேமித்து வைத்திருக்க முடியாது.

உலகிலே வெற்றியாளர்களிற்கும், தோல்வியடைந்தவர்களிற்கும், செல்வந்தர்களிற்கும், ஏழைகளிற்கும், அறிவாளிகளிற்கும், முட்டாள்களிற்கும் எல்லோருக்குமே சம அளவான நேரம்தான் கிடைக்கின்றது. உலகில் உள்ள எல்லோருக்குமே சம அளவாக கிடைப்பது நேரம் மட்டுந்தான். 

தனக்குக் கிடைக்கின்ற நேரத்தை சில மனிதர்கள் வீணடிக்காமல் சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். நிறைய மனிதர்கள் பொன்னான நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளில் கிடைக்கின்ற நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள். நேரத்தை சரியாக பயன்படுத்தத் தெரியாதவர்கள் தோல்வியடைகிறார்கள்.

வெற்றிகரமான பல மனிதர்கள் நேரத்தின் முக்கியத்துவத்தையும், நேர முகாமைத்துவம் பற்றியும் அறிந்து வைத்திருக்கின்றார்கள். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த விரும்பினால் முதற்படியாக எடுத்து வைக்க வேண்டியது நேரத்தை வீணாக செலவழிப்பதைக் குறைப்பதே ஆகும். நேரத்தை சரியாகத் திட்டமிட்டு கிடைக்கின்ற நேரத்தை சரியாகப் பயன்படுத்தி உங்களுடைய இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும்.

நேரத்தின் பெறுமதியை உணராமல் தேவையில்லாமல் வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் என்றோவொருநாள் வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் போது அந்த நேரமே அதை செய்திருக்கலாமோ என்று பல யோசணைகள் மனதில் தோன்றும். ஆனால் உயிரை பெறுமதியாகக் கொடுத்தால் கூட கடந்த காலம் திரும்ப வராது. நிறையப் பேர் ஒரு வயதிற்கு பின்னர்தான் இந்த உண்மையைத் தெரிந்துகொள்கின்றார்கள்.

நாம் இப்போதே நேரத்தின் அருமையை புரிந்து கொண்டு சரியாக நேரத்தை பயன்படுத்தினால் எங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தி எமக்குப் பிடித்தது போல வாழலாம்.

பொதுவாக நாம் சில செயற்பாடுகளை தினமும் செய்வோம். ஆனால் அதில் எந்தவொரு பயனும் இருக்காது. அது எங்களுடைய நேரத்தை வீணடிக்கின்ற செயற்பாடுகளாக இருக்கும். அவற்றை குறைத்துக்கொண்டாலே நேரத்தை பயனுள்ள செயற்பாடுகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அவ்வாறான தினமும் நேரத்தை வீணாக்குகின்ற சில செயற்பாடுகளைப் பற்றிப் பார்க்கலாம். அல்லாவிட்டால் உங்களிடம் அளவுக்கதிகமாக நேரம் இருக்கின்றது எவ்வாறு வீணடிப்பது என்று தெரியவில்லை என்றாலும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு.

இந்தப் பதிவை படித்துக்கொண்டிருக்கின்றவர்களில் பெரும்பாலானோர் பல்வேறு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். இன்றைய காலசூழ்நிலையில் சமூக வலைத்தளங்களை நமக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள நிறைய இருக்கின்றன. நமது தேவைக்காக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் நிறைய மனிதர்கள் ஒரு நாளில் ஏன் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றோம், எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றோம் என்றெல்லாம் தெரியாமல் தொடர்ச்சியாக பயன்படுத்துவார்கள். பல பேர் காலையில் கண்விழித்தவுடன் செய்கின்ற முதல் வேலை மொபைலில் சமூகவலைத்தளங்களைப் பார்ப்பதுதான். பலர் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தலாம் ஆனால் அடிமையாக இருக்கக்கூடாது. அளவுக்கதிகமாக சமூகவலைத்தளங்களுக்குள் மூழ்குவதனால் அதிகமான நேரம் தேவையில்லாமல் வீணாகின்றது.

மொபைல் பயன்பாடு.

சமூகவலைத்தளங்களை பயன்படுத்தாதவர்கள் கூட மொபைல் அளவுக்கதிகமாக பயன்படுத்துவார்கள். மொபைலைத் தவறானது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால் நாம் தவறாகப் பயன்படுத்தினால் அது நம்மை அடிமைப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதனை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

நிறையப் பேரால் ஒரு நாள் கூட மொபைலைத் தொடாமல் இருக்க முடியாது. காரணமே இல்லாமல் மொபைலை அடிக்கடி எடுத்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். எதற்கென்றே தெரியாமல் அடிக்கடி மொபைலை எடுக்கத் தோன்றும்.

மொபைலை அருகில் வைத்துவிட்டு ஏதேனும் செயற்பாட்டில் ஈடுபடுகிறீர்கள் என்றால் ஒரு அறிவிப்பு (Notification) வந்தாலும் என்ன காரணத்திற்காக வந்திருக்கின்றது என்று பார்க்காமல் செய்கின்ற வேலையில் கவனம் செலுத்த முடியாது. மொபைல் அளவுக்கதிகமாக பயன்படுத்துவதும் ஆபத்தானது. உங்களுடைய நேரத்தை வீணக்குவதில் மொபைல் போன் முக்கியமான இடத்தை வகிக்கின்றது.

தொலைக்காட்சி

இன்றைக்கு தொலைக்காட்சி யாரும் பார்ப்பதில்லை, தொலைக்காட்சியின் இடத்தை மொபைலும் சமூகவலைத்தளங்களும் பிடித்துவிட்டன என்று கூறினால் ஒரு வகையில் அது உண்மையானாலும் நிறைய நேரங்களில் அது பொய்யாகின்றது.

நிறைய பிரபல்யமான தொலைக்காட்சி நிகழ்வுகள், தொடர்கள், கிரிக்கெட் போன்ற விளையாட்டு நிகழ்வுகளை ஏராளமான மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றுள் பல எதற்குமே பயனற்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளாகவே இருக்கின்றன.

இணையமாவது பரவாயில்லை நாம் விரும்புவதைத் தேடி பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தொலைக்காட்சி என்பது அவர்கள் காட்டுவதை மட்டும்தான் நம்மால் பார்க்க முடியும். உண்மை எது பொய் எது என்பதைக்கூட அறிந்துகொள்ள முடியாது.

தற்போதைய காலத்தில் அனைவரையும் பார்க்கச் செய்வதற்காகவே புதுமையான நிறைய நிகழ்ச்சிகள் ஒவ்வொரு சேனல்களிலும் வந்துகொண்டிருக்கின்றன. கிரிக்கெட் மாதிரியானவற்றை பல மணிநேரமாக தொடர்ச்சியாகப் பார்ப்பவர்கள் பலர். தொலைக்காட்சி பார்ப்பது தவறு கிடையாது. ஆனால் தினமும் நேரத்தை அதிலேயே வீணடித்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் புதிதாக எதையும் செய்ய முடியாது.

கேமிங் (Gaming)

கேமிங் என்பது நல்லதுதான். நானே இதற்கு முன்னர் கேமிங் தவறானது கிடையாது என்று எழுதியிருக்கின்றேன. ஆனால் வீடியோ கேம்ஸை விளையாட வேண்டுமே தவிர கேம்ஸிற்கு அடிமையாக இருக்கக்கூடாது. குறிப்பாக ஆன்லைன் கேம்களின் ஆதிக்கம் அளவுக்கதிகமாக இருப்பதை காணமுடிகின்றது. Google Play-store ஐ திறந்து Battle Royal Game-களின் தரவிறக்கங்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். 1Billion, 500Million என சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைக்கு சமனாக இருக்கும்.

என்னுடைய அனுபவத்தைச் சொன்னால் நானும் ஒரு காலத்தில் இந்த Battle Royale கேம்களை ஒரு நாளில் 10 மணித்தியாலம் இருந்து விளையாடியிருக்கின்றேன். அதை விளையாடுவதால் எனக்கு எந்தப் பயனும் இல்லை என்பது புரிகின்றது. அனுபவத்திற்காக, மகிழ்ச்சிக்காக என்று கூறினாலும் ஒரு நாளில் அதற்காக பல மணிநேரங்கள் செலவிடுவதெல்லாம் பயனற்றது.

அன்று தேவையில்லாமல் வீடியோ கேம்ஸ் விளையாடிய நேரத்தில் வலைப்பதிவு எழுதியிருந்தாலும் கூட இன்று பயன்பட்டிருக்கும் என்று தோன்றுகின்றது. 

தினமும் பல மணிநேரமாக கேம்ஸ் விளையாடுகின்றீர்கள் என்றால் மகிழ்ச்சி கிடைக்கின்றது என்று அர்த்தம் இல்லை. அது நீங்கள் கேமிற்கு அடிமையாக இருக்கின்றீர்கள் என்பதை குறிக்கின்றது. கேம்ஸை நீங்கள் ஒய்வாக இருக்கும் நேரங்களில் மட்டும் விளையாடுங்கள். அதனையே முழு நேர வேலையாக செய்யாதீர்கள்.

அதிக நேரம் தூங்குதல்.

ஒரு நபர் உடல், உள அளவில் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும் என்றால் போதியளவு தூக்கம் மிக மிக அவசியம். ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு மணித்தியாலங்கள் வரை தூங்கலாம்.

ஒரு சில பேரை பார்த்தால் இரவும் தூங்குவார்கள் பகலும் தூங்குவார்கள். அதாவது அளவுக்கதிகமாக 12மணித்தியாலம் 13மணித்தியாலம் என தூங்குவார்கள். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பிரச்சினையில்லை அதே பழக்கமாகிவிட்டால் சோம்பேறித்தனமும் அதிகமாகிவிடும்.

அதிக நேரம் தூங்குவது என்று மட்டும் சொல்லாமல் இரவிரவாக விழித்திருப்பது, அதிகாலையில் எழுந்துகொள்ளாதது போன்ற அனைத்துமே நமக்கான நேரத்தை சரியாகத் திட்டமிட்டுக்கொள்ள முடியாமல் போவதற்கு காரணமாக அமையும்.

இரவில் நேரத்துடன் நித்திரைக்குச் சென்று அதிகாலை எழுந்து பழகுவது நல்லது. விருப்பம் இருந்தால் பகல் குட்டித்தூக்கம் போடலாம். அதிகாலை நேரத்தின் அருமை அதிகாலை எழுந்து பழகினால் தெரியும். அளவுக்கதிகமாக தூங்குவது சோம்பேறித்தனத்தை உருவாக்கி நீங்கள் செய்கின்ற வேலைகளையும் ஒழுங்காக செய்ய முடியாமல் போய்விடும்.

அரட்டை அடித்தல்.

நீங்கள் உங்கள் நண்பர்களுடனும், வீட்டில் உள்ளவர்களினுடன், உறவுகளுடன் கதைப்பது நல்லது. இது உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் கதைக்கின்ற பழக்கம் இல்லாவிட்டால் அவர்களுடன் கதைக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். நண்பர்களுடனும் நிறையவே கதையுங்கள்.

ஆனால் நிறைய பேர் ஆன்லைனில் பல மணித்தியாலங்களாக பிரயோசனமே இல்லாமல் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள். பல குழுக்களாக தினமும் நேரத்தை ஆன்லைன் அரட்டையில் செலவிடுவார்கள். செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தாலும் ஆன்லைனில் பல மணித்தியாலங்கள் செலவழிப்பார்கள். இதுதான் தவறு. ஒரு சில பேர் பொழுது போகவில்லை என்றால் ஆன்லைனில் யாருடனாவது எப்போதும் அரட்டை அடித்துக்கொண்டே இருப்பார்கள். இவ்வாறான பல பேரை பார்த்திருக்கின்றேன். இவை எதற்கும் பயன்படாது.


இப்படியே சொல்லிக்கொண்டே போனால் நிறையவே சொல்லலாம். நிறையப் பேர் யோசிப்பீர்கள் எல்லாவற்றையும் நேரத்தை வீணடிக்கின்ற செயற்பாடுகள் என்று சொன்னால் எதுதான் பயனுள்ள செயற்பாடுகள், அனைத்தையும் தவிர்த்துவிட்டால் வாழ்க்கை வெறுமையாகிவிடுமே என்றெல்லாம் தோன்றும்.

உண்மை என்னவென்றால் எல்லாமே பயனுள்ளவைதான் ஆனால் எல்லாவற்றிலும் நாம் கட்டுப்பாடாக இருந்து நாம் சரியாக இருக்க வேண்டும். ஒரு செயல் நேரத்தை வீணடிக்கின்றதா? சரியானதாக இருக்கின்றதா? என்பதெல்லாம் நம்மைப் பொறுத்துத்தான் இருக்கின்றது.

எது எப்படியோ நேரத்தின் பெறுமதியை உணர்ந்து அதனை வீணடிக்காமல் நமக்காக சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் நாம் எதிர்பார்க்கும் நிலையை அடையலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading