இணையத்தின் பயன்பாடு

Last updated on August 30th, 2023 at 12:45 pm

எழில்(-ற்-)பிரகாஷ்
Follow me
Latest posts by எழில்(-ற்-)பிரகாஷ் (see all)

இணையம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறிவிட்டது. உலகை இணையத்திற்கு முன், இணையத்திற்குப் பின் என வேறுபடுத்தக்கூடிய அளவிற்கு இணையத்தினால் உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் அமைந்திருக்கின்றன.

முந்தைய தசாப்தங்களில் வெகு சிலரால் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நிறையில் இருந்த இணையம் இன்று தொழினுட்பத்தின் வேகமான வளர்ச்சியினால் உலகளவில் பெரும்பாலான மக்களின் கைகளிற்குச் சென்றடைந்ததோடு அத்தியாவசியமான ஒன்றாகவும் மாறிவிட்டது.

சொல்லப்போனால் இணையம் இல்லாமல் உலகத்தின் இயக்கம் தடைப்படுகின்ற நிலையை அடைந்துவிட்டோம். வணிகம், கல்வி, அரசாங்கம், வங்கி போன்ற அனைத்து அத்தியாவசிய துறைகளும் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு இணையத்தின் பயன்பாடு அத்தியாவசியமான தொன்றாக இருந்தாலும் மக்கள் இணையத்தை வினைதிறனாக பயன்படுத்துகிறார்களா? என்று யோசித்துப்பார்த்தால் பெரும்பாலானோர் நிச்சயமாக வினைத்திறனாகப் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலானோர் இணையத்தை பயன்படுத்துவதன் நோக்கம் சமூகவலைத்தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு தேவைகளாகவே இருக்கின்றது. அவற்றைத் தாண்டி வாழ்க்கைக்கு தேவையான பயன்பாடுகள் இணையத்தில் அதிகம். ஆனால் அவற்றைப் பயன்படுத்துபவர்கள் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது குறைவாக உள்ளனர்.

மொபைல்போன் ஒவ்வொருவருடைய கைகளுக்கும் வருவதற்கு முன்னர் செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கம் பரவலாக இருந்தது. உலகில் என்ன நடந்திருக்கின்றது என்பதை பத்திரிகைகளைப் படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருந்தார்கள். இன்றைக்கு உலகில் என்ன நடக்கின்றது என்பதை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பினை இணையம் அளித்திருக்கின்றது. ஆனால் பெரும்பாலானோர் அதனைச் சரியாக பயன்படுத்துவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. சமூகவலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற போலியான செய்திகளை நம்புபவர்கள் பலர். நம்பகத்தன்மையான செய்திகளை வழங்குகின்ற ஊடகங்களிலிருந்து செய்திகளைத் தெரிந்துகொண்டு அதனை ஆராய்ந்து உலகில் என்ன நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ள இணையத்தை பயன்படுத்துவர்கள் மிக குறைவாகவே உள்ளார்கள்.

உலகில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது, என்ன நடக்கப்போகின்றதென்பதை தெரிந்துகொள்வதற்காக இணையத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு நமது கைகளிலேயே இருக்கின்றது.

ஒரு காலத்தில் ஏதேனும் தகவல்கள் தேவைப்படின் அவற்றைத் தெரிந்துகொள்வதற்கு நூலகம் உதவியது. நூலகத்திற்குச் சென்று தேவையான புத்தகங்களை தேடி எடுத்து அவற்றிலிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இன்றைக்கு நாம் இருந்த இடத்திலிருந்து நகராமல் நமக்கு தேவையான எந்தத் தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை இணையம் நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் நாம் எவ்வளவோ தெரியாத விடயங்களை தெரிந்துகொண்டு புரிதலை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

நூல்கள் வாசிப்பதோடு இணையம் பயன்படுத்துவதை ஒப்பிட முடியாவிட்டாலும் ஒரு காலத்தில் நூலகம் எதற்கு பயன்பட்டதோ அதே வேலையை இன்று இணையம் செய்துகொண்டிருக்கின்றது. நூலகங்கள் மனிதனுடைய கல்விக்கு உதவின. அதே போன்று இணையமும் கல்விக்கு உதவிகின்றது.

இணையத்தில் தேடல்கள் மூலம் கற்றுக்கொள்வது, புத்தகங்களை மின் நூல்களாக படிப்பதைத் தாண்டி ஒர் வகுப்பறையையும், ஆசிரியரையும், ஆய்வுகூடத்தையும், நூலகத்தையும் நாம் இருக்கின்ற இடத்திலே கொண்டுவந்து சேர்க்கின்றது இணையம். இன்று இணையத்தைச் சரியாக வினைத்திறனாய் ஒரு மாணவன் பயன்படுத்துவானாயின் அவனுக்கு ஆசிரியர் தேவைப்படமாட்டார். இணையத்தை மட்டுமே பயன்படுத்தி தமக்குத் தேவையானதை பலர் கற்றுக்கொள்கிறார்கள்.

இணையம் தகவல்கள், செய்திகளை பெற்றுக்கொள்வதற்கும், கல்வி கற்பது என்பதையெல்லாம் தாண்டி உலகின் பல மூலைகளிலும் உள்ள மனிதர்களை இணைத்து தொடர்பாடலை மேற்கொள்ள வைக்கின்றது. அதற்கு அவசியமானது சமூகவலைத்தளங்கள் உதவுகின்றன. சமூகவலைத்தளங்கள் உலகின் மனிதர்களை இணைத்து வைத்திருப்பதற்கு இணையம் இல்லாவிட்டால் சாத்தியமில்லை. இன்றைக்கு உலகளாவிய பிரச்சினைகள், சமூகப்பிரச்சினைகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றது என்றால் காரணம் இணையம். இணையத்திற்கு முற்பட்ட காலத்தில் குறிப்பாக சமூக வலைத்தளங்களிள் பரவலாக பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் சமூகப்பிரச்சினைகள் உலகில் மக்களிடம் போய்ச்சேர்வதற்கு பல நாட்கள் ஆகும். நிறையப்பிரச்சினைகள் குறிப்பிட்ட வட்டத்துடன் வெளியே தெரியாமலே போய்விடுகின்றன.

இணையம் ஆரம்பநாட்களில் ஒர் நூலகம் போல நமக்குத் தேவையான விடயங்களை தெரிந்துகொள்வதற்கான, மக்கள் தொடர்பாடலை மேற்கொள்வதற்கான ஒர் தொழினுட்பமாக ஆரம்பமாகி இன்றைக்கு உலகின் மிகப்பெரிய வணிகப்பரப்பாக மாறிவிட்டது. உலகின் பெருமளவான மக்கள் ஒன்று சேர்கின்ற இடம் எதுவென்று கேட்டால் சந்தேகமே இல்லாமல் இணையம் என்று சொல்லிவிட முடியும். இன்றைக்கு மனிதன் நிஜ உலகில் வாழ்வதை விட இணைய உலகில் அதிகமாக வாழ்கின்றான்.

உலகின் முண்ணணி நிறுவனங்களை எடுத்துப் பார்த்தால் அவற்றுள் பல இணையத்தை அடிப்படையாகக் கொண்ட வணிகத்தின் மூலம் இயங்குகின்ற நிறுவனங்களாக இருக்கும். இணையத்தில் வணிகம் சார்ந்த பயன்பாடுகள் நிறையவே இருக்கின்றன.

நமது வணிகத்தை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்க இணையத்தைத் தவிர வேறு சிறந்த வழி இன்றைய காலகட்டத்தில் இருக்க முடியாது. இணையம் நமது வணிகத்திற்கு உதவுகின்றது. இன்று வணிகம் ஒன்று ஆரம்பிப்பதாயின் இணையத்தை அடிப்படையாகக் கொண்டு வணிகம் ஆரம்பிப்பது சிறந்த தெரிவாக இருக்கும். நமது வணிகத்திற்கான மார்க்கெட்டிங் செய்வதானாலும் இணையத்தை அடிப்படையாகக் கொண்டு டிஜிற்றல் மார்க்கெட்டிங் செய்வதுதான் புத்திசாலித்தனமாக தெரிவாக இருக்கும்.

இன்று மக்கள் உணவு வாங்குவது முதல் பயணம் செய்வது வரை எல்லாவற்றையும் இணையத்தின் உதவியுடன் செய்துகொள்கின்றார்கள். நமக்கான சேவைகளையும், பொருட்களையும் பெற்றுக்கொள்வதற்காக இணையத்தை பயன்படுத்தலாம். அத்தோடு நம்முடைய சேவைகளையும் பொருட்களையும் மக்களிடம் கொண்டுசேர்த்து வணிகத்தை வளர்ப்பதற்காகவும் இணையத்தை பயன்படுத்தலாம். தற்போது இணையத்தின் உதவியுடன் பெற்றுக்கொள்ள முடியாதது எதுவுமில்லை.

அத்தோடு நம்மிடம் உள்ளவற்றை இணையத்தின் உதவியுடன் வணிகமாக மாற்றிக்கொள்ளலாம். இணையத்தை பயன்படுத்தி நமது வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் இணைய வணிகம், பணம் சம்பாதிப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவது இணையத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி பயனடைவதாக இருக்கும்.

எல்லாவற்றையும் தாண்டி இணையம் உலகை ஒர் மாயாஜால உலகம் போன்று மாற்றிவருகின்றது என்று சொல்லலாம். நூறு வருடத்திற்கு முன்பு இருந்த உலகிற்கும் இன்றைய உலகிற்கும் எவ்வளவு வேறுபாடுகள்.

வீதியில் சென்று கொண்டிருக்கும் போது சாரதியே இல்லாமல் மனிதர்களை கார் ஏற்றிச் செல்கின்றது, மனிதனை போன்ற உருவம் (Robot) மனிதர்களைப் போல வேலை செய்துகொண்டிருக்கின்றது. வீட்டிற்குச் சென்று கதவருகில் நின்றால் கதவு தானாக திறக்கின்றது, உணவு Order செய்யச் சொல்லும் போது நீங்கள் சொல்வதை உணர்ந்து தானாக உணவு Order செய்கின்றது மொபைல். இப்படியெல்லாம் நவீன உலகில் நடந்துகொண்டிருக்கின்றது. IOT, Artificial Intelligence, Web 3.0, Block Chain போன்ற பல்வேறு நவீன தொழினுட்பங்கள். இந்த மாதிரியான தொழினுட்பங்களின் பயன்பாட்டிற்கு இணையம் உலகத்தின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைந்தது முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

எதிர்காலத்தில் இணையம் எல்லா இடங்களிலும், எல்லா பொருட்களிலும் இருக்கப் போகின்றது. ஒரு காலத்தில் மொபைல், கணணியில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருந்த இணையம் எல்லா பொருட்களிலும் புகுவதற்கு ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவாக உலகம் Smart ஆக மாறி வருகின்றது. நம்முடைய உலகை நவீனமயப்படுத்தி மாயாஜால உலகம் போல கட்டமைப்பதற்கு இணையம் பயன்படுகின்றது.

இணையம் நிறைய வழிகளில் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்றது என பலரும் கருதுகின்றனர். எந்தவொரு தொழினுட்பமும் எந்த தீங்குமில்லாமல் நன்மை மட்டுமே செய்யும் என்று சொல்லிவிட முடியாது. அந்தவகையில் இணையம் மனிதனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றதென்பதை உறுதியாக சொல்ல முடியும்.

நமக்கு பயன்தரக்கூடிய இணையத்தை சரியாகப் பயன்படுத்தினால் நமது வாழ்வையும், சமூகத்தையும், உலகையும் மேம்படுத்தலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

8 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
%d bloggers like this: