தீபாவளிப் பண்டிகை

எழில்(-ற்-)பிரகாஷ்
Follow me
Latest posts by எழில்(-ற்-)பிரகாஷ் (see all)

பண்டிகைகள் உலகின் எல்லா இனங்களிலும் எல்லா மதங்களிலும் காணப்படுகின்ற கலாசாரம் சார்ந்த அம்சமாகும். பண்டிகைகள் வெறுமனே கடவுள், நம்பிக்கைகள், கலாசாரம் போன்றவற்றைத் தாண்டி ஒவ்வொருவரும் தங்களுடைய மகிழ்வை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்ற மகிழ்ச்சியான நாட்களே பண்டிகைகள்.

தமிழர்களுடைய பண்பாட்டிலும் பண்டிகைகள் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன. ஒவ்வொரு பண்டிகைக் கொண்டாட்டத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கின்றது. அதே போல ஒவ்வொரு பண்டிகைக் கொண்டாட்டத்திற்குப் பின்னாலும் வரலாறு உள்ளது. ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு மாதிரி கொண்டாடப்படுகின்றது.

தமிழர்களால் கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளில் தீபாவளிப் பண்டிகை முக்கியமானது. தமிழர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு இனத்தவர்களால், பல்வேறு மதத்தவர்களால், பல்வேறு நாட்டவர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

தீபாவளிப் பண்டிகை தீபத்திருநாள், தீபாவளித் திருநாள் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. தீபாவளி என்ற பெயர் தீபம் மற்றும் ஆவளி ஆகிய இரண்டையும் இணைத்துக் குறிப்பதாகும். தீபம் என்பது விளக்கினையும் ஆவளி என்பது வரிசையையும் குறிக்கின்றது. விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து அந்த ஒளியினால் கடவுளை வழிபாடு செய்வதைத்தான் தீபாவளி விளக்குகின்றது.

தீபாவளிப் பண்டிகை தமிழர்களினுடைய நாட்காட்டியின் படி ஜப்பசி மாதத்தில் வருகின்ற அமாவாசை தினத்தன்று அல்லது அமாவாசை தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படுகின்றது.

தீபாவளிப் பண்டிகைக்கென்று வரலாறு உண்டு. தீபாவளித் திருநாள் உருவானதற்கு பல கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் மிகவும் பிரபலமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற கதை நரகாசுரனுடன் தொடர்புடைய கதை ஆகும்.

இக்கதையின் படி, நரகாசுரன் எனும் அசுரன் தவம் செய்கின்றான். தன்னுடைய தவத்தின் மூலமாக பல வரங்களைப் பெற்று யாராலும் அழிக்கமுடியாதவனாக உருவெடுக்கின்றான். நரகாசுரன் மக்களை துன்பப்படுத்துகின்றான், பல கொடுமைகளைச் செய்கின்றான். நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்கமுடியாத மக்கள் கிருஷ்ணணிடம் முறையிடுகின்றனர். நரகாசுரன் இறக்கும் போது தன்னுடைய இறந்த நாளை மக்கள் எல்லோரும் சந்தோஷமாக கொண்டாட வேண்டுமென வேண்டிக்கொள்கின்றான். அப்போதிலிருந்து நரகாசுரன் இறந்தநாள் தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது.

ஆனால் நரகாசுரன் கதை தொடர்பாக பலரிடம் நிறைய விவாதங்கள் உள்ளன. நரகாசுரன் என்று அசுரனாக சொல்லப்படுபவன் ஒரு தமிழ் அரசன் எனவும் அந்த அரசனை கெட்டவனாக சித்தரித்தே தீபாவளிப் பண்டிகையின் வரலாறு உள்ளது எனவும் தமிழ் அரசனை அழித்த தினத்தையே தமிழர்கள் கொண்டாடும்படி திணிக்கப்பட்டுள்ளது என்பது பலருடைய கருத்து.

தீபாவளி பற்றிய இன்னொரு விதமான கருத்தும் உண்டு. தமிழர்களால் தீபங்களை வரிசையாக அடுக்கி வைத்து கொண்டாடப்படுகின்ற கார்த்திகை தீபம்தான் வடஇந்தியாவிற்குச் சென்று திரும்ப தீபாவளியாக தமிழர்களிடத்தில் வந்தது என்றும் கூறப்படுகின்றது.

பண்டைய தமிழர்கள் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடியதில்லை. பழமையான தமிழ் இலக்கியங்களிலும் தமிழ் நூல்களிலும் எந்தவொரு இடத்திலும் தீபாவளி பற்றிய குறிப்புக்கள் இல்லை. அதனால் தீபாவளிப் பண்டிகை தமிழர்களிடத்தில் பிற்காலத்தில் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இவ்வாறான பல்வேறுபட்ட விவாதங்கள் தீபாவளி தமிழர்களின் பண்டிகையா? என்ற வினாவை மையப்படுத்தி உள்ளன.

நாம் அனைவரும் தீபாவளிப் பண்டிகையை சிறுவயதிலிருந்தே கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறிருக்கையில் தீபாவளி நம்முடைய பண்டிகை இல்லையென்று சொல்வதால் யாரும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்பதால் தீபாவளிப் பண்டிகை தமிழர்களுடைய பண்டிகையா இல்லையா என்ற விவாதத்திற்கு அப்பால் தீபாவளியைக் கொண்டாடுவோம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். தீபாவளி தினத்தில் பின்பற்றப்படும் பாரம்பரியங்களும் நிறையவே உள்ளன. தீபாவளி தினத்தில் எண்ணெய் வைத்து நீராடுவது இந்தியாவில் வழமையாக உள்ளது. அதே போல புதிதாக திருமணமான தம்பதியர்கள் முதற் தீபாவளியை “தல தீபாவளி” என்ற பெயரில் கொண்டாடுவதும் வழமையான விடயம்.

எனக்கு தீபாவளி என்று சொன்னவுடன் முதலில் ஞாபகம் வருகின்ற விடயம் பட்டாசுகள். தீபாவளிக்கு பட்டாசு கொளுத்துவது வழமையானதும் பிரபல்யமானதுமான விடயம். தீபாவளி தினத்தில் வகை வகையாக பட்டாசுகள் வாங்கி அவற்றை வெடிக்க வைப்பதில் ஒரு விதமான மகிழ்ச்சி உள்ளது.

பொதுவாக பண்டிகைகளில் செய்கின்ற எல்லா விடயங்களுமே தீபாவளிப் பண்டிகையிலும் இடம்பெறுகின்றன. புத்தாடை அணிவது, உணவு மற்றும் பலகாரங்கள் சுவைப்பது, நண்பர்கள் மற்றும் உறவுகளின் வீடுகளிற்குச் சென்று அவர்களுடன் தீபாவளியை கொண்டாடுவது போன்றவை பாரம்பரியமாக பின்பற்றப்படுகின்ற கொண்டாட்டங்கள்.

இப்போதெல்லாம் பண்டிகையென்றால் பண்டிகையை முன்னிட்டு திரைப்படங்கள் வெளியிடுவார்கள். பண்டிகை தினத்தில் திரையரங்குகளிற்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் பலர் உள்ளார்கள். பண்டிகை தினத்தில் நண்பர்களுடன் பயணங்கள் செல்வது, விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வது அதில் கலந்து கொள்வது, பண்டிகை தினத்திற்காகவே சிறப்பான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்குமானால் அவற்றுள் கலந்து கொள்வதென பல்வேறு விதமாக தீபாவளித் திருநாளை மக்கள் கொண்டாடுவார்கள்.

தீபாவளிப் பண்டிகை வெறுமனே கொண்டாட்டமாக மட்டுமில்லாமல் அதுவொரு வணிகத்திற்கான வாய்ப்பாகவும் அமைந்துவிடுகின்றது. தீபாவளி நெருங்கும் போது தீபாவளிக்காக சிறப்பு விற்பனைகள் நடைபெறுவதுண்டு. பல்வேறுவிதமான சேவைகளிற்கும் பொருட்களிற்கும் சலுகைகள் கிடைக்கும். இவை மக்களுக்கும் வணிகத்தை மேற்கொள்பவர்களுக்கும் பயனுள்ளதாகவும் அமையலாம்.

பண்டிகை என்று எடுத்துக்கொண்டால் அதில் ஏராளமான விடயங்கள் அடங்கியிருக்கும். கலை, கலாசாரம், பாரம்பரியம், நம்பிக்கைகள், சமயம், உணவு, உடை, கழியாட்டங்கள், நிகழ்வுகள், வணிகம் போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கியதாக உள்ளது. ஆகவே ஒவ்வொரு பண்டிகையையும் ஏன் கொண்டாடுகின்றோம் என்ற அர்த்தத்தை புரிந்து மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

பண்டிகைகள் வருடத்தில் சில நாட்கள் வருகின்றன. குறிப்பிட்ட சில நாட்கள் வருவதாலேயே அந்நாட்கள் எல்லோருக்கும் சிறப்பான நாட்களாக இருக்கின்றன. ஆகவே அந்நாட்களில் நமக்குப் பிடித்த மாதிரியான காரியங்களைச் செய்து கொண்டாடி பண்டிகை என்ற நாளுக்கான அர்த்தத்தை உருவாக்குவோம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
%d bloggers like this: