இருபத்தோராம் நூற்றாண்டின் சவால்கள்

இருபத்தோராம் நூற்றாண்டின் இருபத்தைந்து வருடங்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். கடந்த இருபத்தைந்து வருடங்களை அவதானித்துப் பார்த்தாலும் உலகம் எவ்வளவோ மாற்றங்களை கடந்து வந்திருக்கின்றது. இந்த நூற்றாண்டு முடிவடையும் போது இன்றைய உலகத்தைப் போன்று அன்றைக்கு இருக்காது. நிறைய மாற்றங்களை உலகம் கடந்து சென்றிருக்கும். உலகம் சந்திக்கப்போகும் வளர்ச்சியைப் போலவே ஏராளமான சவால்களும் இருக்கின்றன.

இந்தப்பதிவில் இருபத்தோராம் நூற்றாண்டில் இனிவரும் ஆண்டுகளில் உலகம் எதிர்நோக்கப்போகின்ற சவால்களைப்பற்றி பார்க்கப்போகின்றோம். ஆனால் இங்கு குறிப்பிடப்படும் சவால்கள் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நூறு சதவீதம் கூறமுடியாது. இன்றைய சூழ்நிலையை அடிப்படையாகக்கொண்டு எதிர்காலத்தில் இந்த மாதிரியான சவால்கள் ஏற்படலாம் என்ற எதிர்வுகூறல்களாகவே இவை இருக்கின்றன.

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொழினுட்பம் வளர்ந்துகொண்டேதான் இருக்கப்போகின்றது. தொழினுட்பம் வளர்ந்து செல்வது சிறந்த விடயம்தான். அதனுடன் இணைந்த பல சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு செயற்கை நுண்ணறிவு தொழினுட்பத்தை எடுத்துக் கொள்வோம். எதிர்வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழினுட்பத்தின் வளர்ச்சி பெரியளவில் இருக்கப்போகின்றது.

இருபத்தோராம் நூற்றாண்டின் பிற்பகுதிகளிலெல்லாம் எந்த மூலைக்குத் திரும்பினாலும் அங்கே செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் இருக்கும். எல்லாத்துறைகளையும் செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமித்திருக்கும். இது மனிதனால் ஏற்படுத்தப்படும் அறிவியல் தொழினுட்ப வளர்ச்சியாக இருந்தாலும் செயற்கை நுண்ணறிவு மனிதனுக்கு சவாலாகவும் அமையலாம்.

செயற்கை நுண்ணறிவு மனிதனுடைய வேலை வாய்ப்புகளை பறிக்கலாம். அதேநேரம் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகலாம். செயற்கை நுண்ணறிவினால் உருவாகும் வேலைவாய்ப்புகளை விட அவற்றினால் பறிபோகும் வேலைகள் அதிகமாகலாம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

இன்றைய தொழினுட்பம் என்று எடுத்துக்கொண்டாலும் பல நிறுவனங்கள் தனிநபர்களின் தரவுகளை திருடுவது, சமூகத்தின் மத்தியில் குறிப்பிட்ட கருத்துக்களை விதைப்பது, மனிதர்களை கண்காணிப்பது என்று பல வேலைகலைச் செய்கிறார்கள். அதே போன்று Deepfake மாதிரியான விடயங்கள், இணைய ஊடுருவல்கள் போன்ற விடயங்களும் பிரச்சினைக்குள்ளானதாகவே இருக்கின்றது.

இன்றைய தொழினுட்பத்திலேயே பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. அப்படிப் பார்க்கும் போது எதிர்காலத்தில் தொழினுட்பம் மேம்பட்ட நிலையில் இருக்கும் போது, செயற்கை நுண்ணறிவுத் தொழினுட்பங்கள் உச்சகட்டத்தில் இருக்கும் போது நிறையவே சவால்களை சந்திக்க நேரிடும்.

சனத்தொகை அதிகரிப்பு

உலக மக்கள் தொகை வேகமாக அதிகரித்துச் செல்கின்றது. 1950 இல் 2.5 பில்லியனாக இருந்த மக்கள் தொகை 2022 இல் 8 பில்லியனைத் தொட்டது. 2050 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 பில்லியனை நெருங்கிச் சென்றுவிடும்.

மனித இனம் உருவானதிலிருந்து கடந்த 75 வருடங்களுக்கு முன்னர்வரை 2.5 பில்லியனாக இருந்த மக்கள் தொகை வெறும் 100 வருடங்களில் 10 பில்லியனை நெருங்குகின்றது என்றால் சனத்தொகைப் பெருக்கம் எந்தளவுக்கு இருக்கின்றது என்பதைப்பாருங்கள்.

மக்கள் தொகை அதிகரிப்பு என்பது உலகிற்கே சவாலானதொரு விடயம்தான். உலக சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க மக்களுக்கு வளங்கள் அதிகமாகத் தேவைப்படும். நமது பூமியினால் அவ்வளவு மக்களை கையாள்வது கடினமாக இருக்கலாம். மக்கள் தொகை அதிகரிக்கும் போது பிரச்சினைகளும் அதிகமாகும். சனத்தொகை அதிகரிப்பு என்பது இருபத்தோராம் நூற்றாண்டிலே ஒரு சவாலான விடயமாகும்.

பருவநிலை மாற்றம்

காலநிலை மாற்றம் எதிர்காலத்தில்தான் ஏற்பட வேண்டும் என்றில்லை. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தினை ஏற்கனவே நம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கான பிரதான காரணமாக அமைவது புவி வெப்பமடைதல்.

புவி வெப்பமடைவதற்கு காரணம் மனிதனுடைய செயற்பாடுகள்தான். மனிதன் பூமியை பாதிக்கும் அளவுக்கு கட்டமைப்பை ஏற்படுத்திவிட்டான். இனிமேல் உடனடியாக பூமியை சரி செய்வது முடியாத காரியமாக இருக்குமென்பதால் புவி வெப்பமடைவது பூமிக்கு சவாலான விடயமாக இருக்கும். பூமி வெப்பமடைவதன் விளைவினால் பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்வடைந்து பூமியின் பல நிலப்பகுதிகள் நீரில் மூழ்கலாம்.

காலநிலை மாற்றமானது இயற்கை அனர்த்தங்கள், காட்டுத்தீ, வளி மாசுபாடு, வறட்சி போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறான விளைவுகளில் பல நேரடியாகவே மனிதனை பாதிப்படையச் செய்பவை.

ஆகவே பூமி இவ்வாறான கடினமான சவால்களை சந்திக்கப்போகின்றது என்பதை உணர்ந்து ஒவ்வொரு மனிதனும் பூமியை பாதுகாப்போம் என்ற எண்ணத்துடன் சின்னச் சின்ன முயற்சிகளைச் செய்யலாம். குறைந்தபட்சம் மரம் ஒன்றையேனும் நடலாம்.

சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுபாடு

Pollution

காலநிலை மாற்றத்தைப் போலவே புவி மாசடைவதும் ஒர் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினை. பூமி மாசடைந்துகொண்டு போவதற்கும் மனிதனே காரணம். புவி மாசடைதல் எனும் போது வளி மாசடைவது, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் மாசுபாடு, காடழிப்பு போன்ற பல விடயங்கள் உள்ளடங்குகின்றன.

புவி மாசடைவதால் நிறையவே பிரச்சினைகள் உருவாகும். உதாரணமாக வளி மாசுபாட்டால் நம்மால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை உருவாகும், பிளாஸ்டிக் அதிகமாக சூழலில் சேரும் போது குடிநீர் மூலமாக மைக்ரோ பிளாஸ்டிக் நமது உடலிற் சேரும், நிலம் மாசடையும் போது விவசாயம் பாதிப்படையலாம். சுற்றுச்சூழல் மாசடையும் போது இவ்வாறான பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

சுற்றுச்சூழல் மாசடைவதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் தேடிக்கண்டுபிடித்து ஒரே நாளில் சரிசெய்ய முடியாது என்பது கவலைக்குரிய விடயம். காடுகள் அழிக்கப்படுவது, தொழிற்சாலைகள் அதிகரிப்பது போன்ற காரணிகளால் மாசுபாடு அதிகரிக்கும். இதுவும் இருபத்தோராம் நூற்றாண்டில் சவாலானதோர் விடயமாக இருக்கும்.

வேலைவாய்ப்பின்மை

வேலைவாய்புகள் எப்போதும் உருவாகிக்கொண்டேதான் இருக்கும். தொழினுட்பம் வளர வளர அதனுடன் தொடர்புடைய புதிய வேலைகள் உருவாகும் அதேநேரம் ஏற்கனவே இருந்துகொண்டிருக்கின்ற பல வேலைகள் இல்லாமல் போகும்.

என்னதான் வேலைவாய்ப்புகள் உருவானாலும் வேலைவாய்ப்பின்மையும் அதிகரிக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நவீன தொழினுட்பத்துடன் இணைந்து இயங்குவதற்கான திறன்கள் நிறைய மனிதர்களிடம் இருக்காது. முக்கியமாக மக்கள் தொகை அதிகரிப்பாலும் மனிதர்கள் செய்யும் வேலையை இயந்திரங்கள் பறித்துக்கொள்வதாலும் நிறைய மக்களுக்கு வேலைவாய்ப்பில்லாத நிலை உருவாகும்.

நீங்கள் வேலையின்மை என்ற சவாலை வெற்றிகொள்ள விரும்பினால் வளர்ந்துவரும் தொழினுட்ப அறிவுடன் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்தந்த காலத்திற்கேற்ப மாற்றங்களிற்கேற்ப தகவமைந்து கொள்பவர்கள் வெற்றிகரமாக வாழ முடியும்.

போர் மற்றும் மோதல்கள்

மனிதனுடைய வரலாறு ஆரம்பிக்கின்ற காலம் முதலே மக்கள் குழுக்களிடையே, நாடுகளிடையே போர்கள் தவிர்க்கமுடியாதவையாக இருக்கின்றன. நீங்கள் இந்தப்பதிவை படித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலும் ஏதேனுமொரு பிரதேசத்தில் மோதல் நிலைமை அல்லது போர் சூழல் நிலவிக்கொண்டிருக்கும்.

இனிவரும் காலங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. நாடுகள் தன்னுடைய ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்வதற்கோ, வளங்களை கையகப்படுத்தும் போட்டியிலோ, மக்கள் குழுக்கள் தங்களுடைய சுதந்திரத்திற்காகவோ போரிட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.

இங்கு பிரச்சினையான விடயம் என்னவென்றால் இப்போது நிறைய நாடுகள் சக்தி வாய்ந்தவையாக மாறிவிட்டன. பல நாடுகளிடம் சக்திவாய்ந்த அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களும் தொழினுட்பங்களும் இருக்கின்றன. முக்கியமாக அணுவாயுதங்கள் உள்ளன. எதிர்காலத்தில் எல்லாமே இன்னும் அதிகரிக்கும். இவ்வாறான சூழ்நிலையில் போர் ஏற்படும் போது சக்திவாய்ந்த அழிவுகளை ஏற்படுத்தும். இதனால்தான் போர் மற்றும் மோதல்கள் பூமிக்கிரகத்திற்கும், மக்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும் சவாலானதாக அமைகின்றன.

வளங்களின் தேவை

மக்கள் தொகை அதிகரிக்கும் போது ஒவ்வொருவருக்குமான வளங்களின் தேவை அதிகரித்துச்செல்லும். தொழினுட்பம் வளரும் போது, கட்டமைப்புகள் பெருகிச்செல்லும் போது, நகரங்கள் உருவாகி வளர்ச்சியடைந்து செல்லும் போது அவற்றுக்கான வளங்கள் அதிகமாகவே தேவைப்படும்.

இன்றைய உலகின் இயக்கத்திற்குத் தேவையான பெரும்பாலான சக்தி செயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகின்றது. அதில் எண்ணெய் வளம் முக்கிய பங்கு வகிக்கின்றது. எதிர்காலத்தில் உலகின் இயக்கமும் அதிகரிக்கும் போது சக்தியும் அதிகமாகத் தேவைப்படும்.

வளங்களின் தேவை அதிகமாகும் போது பூமியிலிருந்து இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதும் அதிகமாகும். இந்த நூற்றாண்டில் இல்லாவிட்டாலும் எதிர்வரும் நூற்றாண்டுகளில் பூமியிலிருந்து பல வளங்கள் தீர்ந்து போவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எவ்வாறாயினும் இருபத்தோராம் நூற்றாண்டில் வளங்களுக்கான தேவை அதிகமாவது சவாலாகவே அமையும்.


இருபத்தோராம் நூற்றாண்டின் சவால்கள் என்று நோக்கும் போது ஏராளமான சவால்கள் இருக்கின்றன. அவற்றிலே பிரதானமான சவால்களை பற்றியே இந்தப் பதிவில் பார்த்திருக்கின்றோம். உங்களுக்குத் தெரிந்த இருப்பத்தோராம் நூற்றாண்டில் பூமி எதிர்நோக்கும் சவால்களையும் கூறுங்கள்.

தனியொரு மனிதனாக பூமி எதிர்நோக்கும் சவால்களை தடுக்கமுடியாது. ஆனாலும் ஒவ்வொருவரும் நமது பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு ஏற்படுகின்ற பிரச்சினைகளை குறைப்பதற்கு சின்னச் சின்ன பங்களிப்புக்களைச் செய்யலாம்.

Share
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments