ஏன் புத்தகங்கள் வாசிக்க வேண்டும்

Last updated on February 16th, 2024 at 01:14 pm

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இன்றைய தலைமுறையினரிடம் குறைவடைந்து வருகின்றது. இன்றைக்கும் வாசிப்புப் பழக்கம் நிறையப்பேரிடம் இருக்கிறது ஆனால் அது சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் வாசிப்பதுடன் முடிவடைந்துவிடுகிறதே தவிர புத்தகங்கள் வாசிப்பது மிகவும் குறைந்துவிட்டது.

இன்றைக்கு குறைந்தளவான மக்களே புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய காலகட்டத்தில் பல பேர் புத்தகங்கள் வாசிக்காததற்கு மிக முக்கியமான காரணமாக மொபைல், இணையம் போன்ற தொழினுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து செல்வதன் விளைவு என்பதை எல்லோராலும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

எல்லோரும் புத்தகங்கள் வாசிப்பதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். உலகில் வெற்றியாளர்களாக, சாதனையாளர்களாக உள்ள பல பேரும் பொதுவாக சொல்கின்ற கருத்து புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்பதாகும்.

கல்வி என்பது கல்லூரி வரை மட்டுமே என்று நிறையப்பேர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படியில்லை. படிப்பதற்கு வயது என்ற ஒன்று கிடையாது. படிப்பானது நாம் உயிருடன் இருக்கும் வரைக்கும் இருந்து கொண்டிருக்க வேண்டும். அதிகமாக புத்தகங்கள் படிக்கின்றவர்களது வாழ்க்கை முன்னேற்றமடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக வாசித்த புத்தகங்கள் இருக்கும்.

புத்தகங்கள் நமது வாழ்க்கையில் மாஐாயாலங்களை செய்யக்கூடியது என்று சொன்னால் அது மிகையானதாகத் தோன்றவில்லை. நாம் ஏன் புத்தகங்கள் வாசிக்க வேண்டும், இந்த உலகில் நாம் அறிந்த விடயங்கள் மிக மிக சொற்ப அளவே தெரியாத விடயங்களே மிக மிக அதிகமாக இருக்கின்றன. நீங்கள் புத்தகங்கள் வாசிக்க வாசிக்க நிறைய புதிய விடயங்களை தெரிந்து கொண்டே இருப்பீர்கள்.

ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகத்தை எழுதி முடிப்பதற்கு நிறைய காலம் செலவு செய்திருப்பார். சில புத்தகளை எழுதி முடிப்பதற்கு பல வருடங்களை செலவு செய்திருப்பார். அப்படியானால் அந்த எழுத்தாளரின் முழு அனுபவத்தையும் நம்மால் சில நாட்களிலேயே வாசித்து தெரிந்து கொள்ள முடிகின்றது.

நமது அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள நிறைய காலம் எடுக்கும். இன்னொருவருடைய அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம். புத்தகங்களை வாசிப்பது அதற்கான சிறந்த வழியாக அமையும்.

புத்தகங்கள் வாசிப்பது இன்னொருவருடைய அனுபவத்திலிருந்து நாம் பாடங்களை கற்றுக்கொள்வதற்கு உதவுகிறது. இது நாம் வாழ்வில் பல சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு உதவி செய்கின்றது.

இணையத்தை பயன்படுத்தி வாசித்து அறிவை வளர்த்துக்கொள்ளலாம் என்பது பலருடைய யோசனையாக இருக்கலாம். உண்மையை சொல்லப்போனால் எந்தவொரு விடயத்தையும் புத்தகம் சொல்வது போல இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியாது. புத்தகத்தில் அவ்வளவு விடயங்கள் இருக்கின்றன.

மொபைலில் படிக்கின்ற விடயங்களை விட புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்கின்ற விடயங்கள் நமது மனதில் ஏதோவொரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இது என்னுடைய அனுபவத்திலிருந்து நான் தெரிந்துகொண்டது.

புத்தகம் வாசிப்பவர்களில் சிலர் புத்தகங்களில் மூழ்கி விடுவார்கள். ஒரு தடவை வாசிப்பது அப்படியே மனதில் நிற்கும். சிலவேளைகளில் திரைப்படங்கள் பார்க்கும் போது அதில் படத்திற்குள்ளே நீங்கள் சென்று விடுவீர்கள். அதே போன்றுதான் புத்தகங்கள் வாசிக்கும் போதும் பலரும் வாசிப்பில் மூழ்கிவிடுவதுண்டு. அவ்வாறனவர்களிற்கு புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் மனதில் பதிந்து விடுகின்றது. படித்து மனதில் பதியப்பட்ட விடயங்கள் என்றோ ஒரு நாள் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பயன்படும்.

எனக்கு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு புத்தகங்கள் வாசிப்பதற்கு ஆரம்பித்ததற்கு முன்னர் புத்தகம் பற்றிய பார்வை எனக்கு வேறு மாதிரியாக இருந்தது. புத்தகங்கள் வாசித்து நேரத்தை வீணடிக்கக்கூடாது, புத்தகம் ஒன்றால் என்ன பெரிய மாற்றம் நமக்குள் வந்துவிடப்போகின்றது என்ற எண்ணம் எனக்கு இருந்தது. 

புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்ததன் பின்னர்தான் புத்தகங்கள் பற்றிய புரிதலை அனுபவபூர்வமாக உணர்ந்துகொண்டேன். புத்தகங்கள் மூலமாக ஏராளமான விடயங்களை தெரிந்து கொண்டேன். அவ்வளவு விடயங்கள் இருக்கின்றன என்பதே அப்போதுதான் புரிந்தது.

புத்தகங்கள் வாசிப்பது என்பது நேர விரயம் கிடையாது. புத்தகங்களை வாழ்க்கைக்கான முதலீடு என்றுதான் சொல்ல வேண்டும். புத்தக வாசிப்பில் மூழ்குவது என்பது ஒருவிதமான நல்ல உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தும்.

நம்மில் பல பேரும் ஒரு நாளில் நிறைய நேரத்தை மொபைல் பயன்பாட்டில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்திலும், ஆன்லைன் கேம்களை விளையாடுவதிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் வீணடித்துக்கொண்டிருக்கின்றோம். அந்த நேரத்தில் தினமும் குறைந்தது ஒரு 30 நிமிடங்களாவது புத்தகங்களை வாசிப்பதற்கு ஒதுக்குவோம்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டுமானால் புத்தகங்களை வாசிக்க ஆரம்பியுங்கள். தொடக்கத்தில் நீங்கள் புத்தகங்கள் வாசிப்பதை விரும்பாவிட்டாலும் அதனை ஒரு பழக்கமாக மாற்றி தினமும் புத்தங்களை வாசிக்கும் போது ஒரு கட்டத்தில் உங்களுக்கு புத்தகங்கள் மீது ஆர்வம் ஏற்படும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading