வருவாயில் ஒரு பங்கை சேமிக்க வேண்டும்

Last updated on October 1st, 2023 at 10:28 pm

பாபிலோனின் மாபெரும் செல்வந்தன் (The Richest man in Babylon) நூலின் முதலாவது கதையிலிருந்து நமது செல்வத்தை பெருக்கிக்கொள்வதற்கான படிப்பினை (Lesson) பற்றி இந்த பதிவிலே பார்க்கலாம்.

நமது செல்வத்தை பெருக்கிக்கொள்ள முதலில் நமது வருவாயிலிருந்து குறிப்பிட்ட பங்கை எடுத்து நமக்கு நாமே செலுத்திக்கொள்ள வேண்டும் (Pay Yourself First). அதாவது வருவாயின் சிறு பகுதியை சேமிப்புக்காக எடுத்து வைக்க வேண்டும். இந்த நூலில் கூறப்பட்டுள்ளதாவது, வருவாயில் பத்தில் ஒரு பங்கை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. சேமித்த பிறகு வருகின்ற மிகுதி செல்வத்தையே நமது செலவுகளுக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் நமது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை சேமித்துக்கொண்டு வந்தால் சில வருடங்களில் நமது கைகளில் குறிப்பிடத்தக்களவு செல்வம் இருக்கும். அதே நேரம் நாம் சேமித்து வைக்கின்ற பணமும் நமக்காக வேலை செய்து வருமானம் ஈட்டித்தர வேண்டும். அந்த வருமானமும் நமக்காக வேலை செய்தால் அதுவும் நமக்கு சம்பாதித்துத் தரும். இவ்வாறாக வருமானத்தில் ஒரு பங்கை சேமிக்க ஆரம்பித்தால் சில வருடங்களில் நம்மிடம் அதிகமான செல்வம் சேர்ந்திருக்கும்.

சுருக்கமாகச் சொன்னால் செல்வத்தை பெருக்குவதற்குரிய முதல் வழியே வருவாயிலிருந்து ஒரு பங்கை சேமிக்க ஆரம்பிப்பதே ஆகும்.

எல்லோரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். மனிதனுடைய மனம் நிறைய நேரங்களில் சேமிக்கும் செல்வத்தை எடுத்து வீண் செலவுகளை ஏற்படுத்தத் தூண்டும். நாம் சம்பாதிக்கும் செல்வத்தில் ஒரு பங்கை கட்டாயமாக சேமிக்க வேண்டுமா? என்ற கேள்வி மனதில் தோன்றலாம். இவை மனிதனுடைய இயல்புதான். ஆனால் மனம் போன போக்கில் விட்டுவிடாமல் மனவுறுதியோடு இருக்க வேண்டியது அவசியம். எவ்வளவு குறைவாக சம்பாதித்தாலும் பத்தில் ஒரு பங்கை அல்லது அதற்கு அதிகமாக எனக்காக சேமித்தே ஆக வேண்டும் என்ற மனவுறிதியோடு இருப்பது அவசியம்.

ஒரு மரம் சிறிய முளையிலிருந்து விருட்சமாக வளர்கின்றது. அதே போன்றுதான் உங்கள் வருவாயின் சிறு பகுதி நாளை விருட்சம் போன்று வளர்ந்து நிற்கும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

நமது வருமானத்திலிருந்து செல்வத்தைச் சேமிக்கலாம் ஆனால் அதற்குப் பிறகு அந்த செல்வத்தை எவ்வாறு பெருக்க வேண்டும் அல்லது சேமிப்பை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அனுபவம் மூலம் அறிவை வளர்த்துக்கொண்டவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தையும் நூலின் முதல் பகுதியில் ஆசிரியர் சொல்லியிருக்கின்றார்.

செல்வத்தை பெருக்கி செல்வந்தர் ஆனவர்கள்தான் எப்படி செல்வத்தை பெருக்க வேண்டும் என்ற வழிகள், யுக்திகளை அனுபவத்தின் மூலமாக தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் செல்வம் பற்றிய விடயங்களை அவ்வாறானர்களிடமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்குப் பதிலாக செல்வத்தை பெருக்குவது எப்படி என்று ஒவியரிடம் கேட்டால் எப்படியிருக்கும்? வீடு கட்டுவது எப்படி என்று சமையற்காரனிடம் கேட்பது எவ்வாறான முட்டாள்த்தனமோ அதே போன்ற முட்டாள்தனம்தான். செல்வம் பற்றி அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டறிந்துகொள்ள வேண்டும். அனுபவம் இல்லாதவர்களிடம் சம்பந்தமே இல்லாத விடயங்களை கேட்கக்கூடாது.

அறிவுரைகளை மட்டும்தான் யாரலும் இலவசமாக வழங்க முடியும். அறிவுரைகளை யார் வேண்டுமானாலும் தமது வசதிற்கேற்றாற் போல் வழங்க முடியும். அதனால் வழங்கப்படும் செல்வம் பற்றிய அறிவுரைகளில் எவை பெறுமதியானவை என்பதைக் கண்டறிந்து அவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமது வருமானத்திலிருந்து செல்வத்தை சேமித்து செல்வத்தை பற்றிய அறிவை பெற்றுக்கொண்டு சேமித்த செல்வத்தை நமது அடிமையாக மாற்றி நமக்காக உழைக்க வைக்க கற்றுக்கொள்ள வேண்டும். நாம் சேமித்து வைத்த செல்வம் நமக்காக உழைத்து அதுவும் செல்வத்தை சம்பாதித்துத் தரும். இவ்வாறாக தொடர்ந்தால் சில வருடங்களில் நாம் நினைக்கின்ற அளவிற்கு செல்வத்தை பெருக்கிக்கொள்ள முடியும்.

அதன் பிறகு நமது சேமிப்பு சம்பாதித்துத் தந்த செல்வத்தை எடுத்து நாம் செலவு செய்யலாம். நாம் செல்வத்தை பெருக்க முயற்சிப்பதே நமது வாழ்க்கையை விருப்பம் போல் மாற்றியமைப்பதற்கும் வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் சுதந்திரமான மகிழ்ச்சியமான வாழ்க்கை வாழ்வதற்கும்தான். நாம் வளர்த்த செல்வத்தை எடுத்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு செலவு செய்யாமல் மேலும் மேலும் வளர்ப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஆகவே நாம் வளர்த்த செல்வத்தைக்கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவசியமாகும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading