கூட்டு விளைவு

Last updated on January 13th, 2024 at 01:46 pm

மிகச்சிறந்த விஞ்ஞானியான அல்பேர்ட் ஐன்ஸ்டீன் உலகின் எட்டாவது அதிசயம் என Compound Effect-ஐ வர்ணிக்கிறார். Compound Effect என்பதை தமிழில் கூட்டு விளைவு என்று சொல்லலாம்.

சிறிதாக ஆரம்பிக்கின்ற ஒரு விடயம் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ச்சியாக மேம்பட்டுக்கொண்டு வந்தால் அவை எல்லாம் கூட்டாகச் சேர்ந்து ஒரு கட்டத்தில் நாம் எதிர்பார்க்காத பெரியளவிலான மாற்றங்களைக் கொண்டு வருவதுதான் கூட்டு விளைவு (Compound Effect) ஆகும்.

கூட்டு விளைவினை உதாரணம் ஒன்றுடன் கூறினால் இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.

ஒரு ரூபாயில் ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் பணத்தை இரண்டு மடங்காக மாற்றிக்கொண்டே போக வேண்டும். அதாவது, இன்று 1 ரூபாய் நாளை அதன் இருமடங்கு 2 ரூபாய் நாளை மறுதினம் அதன் இருமடங்கு 4 ரூபாய் இப்படியாக இருமடங்காக அதிகரித்துக்கொண்டு போகும் போது ஒரு மாதத்தின் பின்னர் நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கும்.

ஒரு ரூபாயிலிருந்து இரண்டு மடங்காக மாற்றிக்கொண்டே போனால் பெரிதாக எதுவும் கிடைக்க போவதில்லை என நீங்கள் நினைத்தால், அதுதான் மிகப்பெரிய முட்டாள்தனம்.

31 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் பணத்தை இரு மடங்காக்கி பாருங்கள். 01 வது நாள் = 1 ரூபாய், 02 வது நாள் = 2 ரூபாய், 03 வது நாள் = 4 ரூபாய், 04 வது நாள் = 8 ரூபாய், 05 வது நாள் = 16 ரூபாய், 10 வது நாள் = 1 024 ரூபாய், 15 வது நாள் = 16 384 ரூபாய், 20 வது நாள் = 5 24 288 ரூபாய், 25 வது நாள் = 16 777 216 ரூபாய், 30 வது நாள் = 536 870 912 ரூபாய், 31 வது நாள் = 1 073 741 824 ரூபாய் என்று பணம் பெருக்கமடையும்.

ஒரு மாதத்தின் முடிவில் அதாவது 31ம் நாள் உங்களிடம் 1 073 741 824 ரூபாய் இருக்கும். இந்த அதிசயம்தான் Compound Effect ஆகும். ஆரம்பத்தில் பார்க்கும் போது 1,2,4,8 என வளர்ச்சி சிறிதாக தெரிந்தாலும் இறுதியில் நாம் ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்சி இருக்கிறது.

Money

இந்த ஆச்சரியத்தையே அல்பேர்ட் ஐன்ஸ்டீன் உலகின் எட்டாவது அதிசயமென விபரிக்கின்றார். அவருடைய வர்ணனையும் உண்மைதான் என நமக்கு தோன்றுகிறது. கூட்டு விளைவு மூலமாக பணத்தை சரியாக முதலீடு செய்வதன் சக்தியை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

கூட்டு விளைவினுடைய சக்தியை வைத்து நாமும் முதலீடு செய்து பணத்தை பெருக்க முயற்சி செய்யலாம். நாம் நினைப்பதைப் போல ஒரே நாளில் பணத்தை மூதலீடு செய்து இரண்டு மடங்காக மாற்றுவது கடினமாக அல்லது முடியாத காரியம்.

ஆனால், சரியாக ஏதோவொரு வகையில் முதலீடு செய்து 2%, 3%, 4%, 5%, 10%, 15% என குறைவான இலாபத்தை பெற்றாலும் இலாபத்தையும் தொடர்ந்து முதலீடு செய்தால் சில வருடங்களிற்குப் பிறகு நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பணம் கிடைக்கும்.

கூட்டு விளைவு மூலமாக பணத்தை பெருக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும். பொறுமையாக இருப்பது மிகவும் அவசியம். “பொறுத்தார் பூமி ஆழ்வார்” என்ற பழமொழி கூட்டு விளைவின் மூலமாக பணத்தை பெருக்குவதற்கு 100% பொருந்தமானதாக அமைகிறது.

வாரென் பஃபெட் (Warren Buffet) உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். தொடர்ச்சியமாக பல வருடங்களாக உலக செல்வந்தர்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கின்றார். இவர் அவருடைய சிறுவயதிலிருந்தே பங்குச்சந்தையில் நிறைய முதலீடுகள் செய்திருக்கின்றார்.

சிறுவயதிலிருந்து அவர் செய்த முதலீடுகள்தான் கூட்டு விளைவு மூலமாக இன்று உலக செல்வந்தர்கள் வரிசையில் இடம்பெறக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றது. 

நாம் சிறு வயதிலிருந்தே முதலீடுகள் செய்ய ஆரம்பிப்பது சிறந்தது. காரணம் சிறியளவில் முதலீடு செய்தாலும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய முடிவதால் கூட்டு விளைவின் மூலமாக நம்மாலும் செல்வந்தராக மாற முடியும்.

Money

பணத்தை பெருக்கிக்கொள்வதற்காக மட்டுமல்லாது, நமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் கூட்டு விளைவை பயன்படுத்திக்கொள்ளலாம்.

உதாரணத்திற்கு உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்கள் என்றால், ஆரம்பத்தில் உடலில் எந்த மாற்றங்களையும் அவதானிக்க முடியாது. ஆனால் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட நாட்களுக்கு பயிற்சி செய்துகொண்டிருந்தால் உடலில் மாற்றங்களை அவதானிக்க முடியும்.

இதுவும் கூட்டு விளைவு வாழ்க்கையில் பிரயோகிக்கப்படுகின்றமைக்கான உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

இதே போன்று அறிவை வளர்ப்பதற்கு, திறமைகளை வளர்ப்பதற்கு, இலக்குகளை அடைவதற்கு, உடல் உள ஆரோக்கியத்தை பேணுவதற்கு என நிறைய விடயங்களில் வெற்றியடைவதற்கு கூட்டு விளைவு உங்களுக்கு உதவி செய்யும்.

ஆனால் ஒரு விடயத்தை மட்டும் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் தொடர்ச்சியாக செய்ய வேண்டும், பொறுமையாக இருக்க வேண்டும். இன்று இவை இரண்டுமே பெரும்பாலான மக்களிடம் இல்லை என்பதே உண்மை.

நாம் Compound Effect எனப்படும் கூட்டு விளைவினை சரியாகப் புரிந்துகொண்டால் நமது வாழ்க்கையை மாற்றும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.

ஆகவே, இப்போதிலிருந்தே முதலீடுகள் செய்ய ஆரம்பியுங்கள். பணத்துடன் சேர்த்து உங்களுடைய அறிவு, திறமை, இலக்குகள் எல்லாவற்றிலும் முதலீடு செய்யுங்கள். விடாமுயற்சியுடன் பொறுமையாக இருங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதை அடையலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading