- தரவறிவியல் – Data Science - November 27, 2023
- திருக்கார்த்திகை தீபம் - November 25, 2023
- 1984 (நாவல்) - November 14, 2023
பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் என்பது The Richest Man in Babylon என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன் (1926 இல் எழுதப்பட்டது) ஜோர்ஜ் எஸ்.கிளேசனால் எழுதப்பட்ட நிதியியல் சார்ந்த நூலாகும். இந்நூல் எழுதப்பட்டு ஒரு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்தாலும் நூலிற்கான மதிப்பு குறையாமல் இன்றுவரை பலரால் வாசிக்கப்படுகிறது.
பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் எனும் நூலின் பெயரைக் கேட்கும் போது பாபிலோனியாவின் மிகப்பெரும் செல்வந்தர் ஒருவரைப் பற்றிய கதை என்றுதான் நினைக்கக் தோன்றுகிறது. ஆனால் இந்நூல் பண்டைய பாபிலோன் நாகரிகத்தில் வாழ்ந்த செல்வந்தர்கள் எப்படியெல்லாம் தங்களுடைய செல்வத்தைப் பெருக்கினார்கள் என்பதை கதைகளினூடாக சொல்கின்றது.
செல்வத்தைப் பெருக்குவது பற்றிய அடிப்படையான விடயங்களை தெரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவியாக இருக்கும். அதனால்தான் தன்னுடைய செல்வத்தைப் பெருக்கி செல்வந்தராக எண்ணுபவர்களுக்கு பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் நூல் பல்வேறுபட்ட நபர்களால் பரிந்துரை செய்யப்படுகின்றது.
பாபிலோன் என்பது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்ட நகரம். பாபிலோன் நகரம் செல்வச் செழிப்புள்ள மனிதர்களையும் பெருமளவான செல்வத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தது. பாபிலோனியர்கள் செல்வச் செழிப்புடனிருந்தனர் என்பது மட்டுமல்லாமல் எல்லாத் துறைகளிலும் மேம்பட்டு சிறந்து விளங்கினார்கள். இன்றைய நவீனகால நகரிற்கு ஒப்பாக அன்றைக்கு நகரை வடிவமைத்து பாதுகாப்பிற்காக நகரைச் சுற்றி மதிற்சுவர்கள் எழுப்பி பாபிலோனை உருவாக்கியிருக்கின்றார்கள்.
பாபிலோனியர்கள் தமது ஆவணங்களை களிமண் பலகைகளில் ஆவணப்படுத்தி வைத்துள்ளனர். ஆயிரக்கணக்கான களிமண் பலகைகள் சிதைந்துபோன பாபிலோன் நகரிலிருந்து தொல்லியல் ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வரலாறு, கதைகள், சட்ட விதிகள், அரசாணைகள், கடிதங்கள் போன்றவை களிமண் பலகைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பாபிலோனியர்களின் களிமண் பலகைகளை ஆராயும் போது அன்றைய பாபிலோன் நகர மக்களின் வாழ்வியலை விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறான சிறப்புமிக்க பாபிலோன் நகரை பின்புலமாக வைத்து செல்வத்தைப் பெருக்குவது பற்றி உருவாக்கப்பட்ட கதைகளைக் கொண்ட நூல்தான் பாபிலோனின் மாபெரும் செல்வந்தர்.
பாபிலோனியாவின் செல்வந்தர்கள் செல்வத்தைப் பெருக்குவதற்குக் கையாண்ட விதிகளின் அடிப்படைதான் இன்று செல்வத்தைப் பெருக்குவதற்கானதாக உள்ளது. இனிவரும் காலங்களிலும் இருக்கப்போகின்றது.
1926 ஆம் ஆண்டு பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் நூல் வெளியிடப்பட்டிருந்தாலும் நூற்றாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் பழமையானதாக மாறாமல் இருப்பதற்குக் காரணம் அதுதான். அதாவது பணத்தைப் பெருக்குவதற்கான அடிப்படை விதிகள் மாற்றமடையாமல் இருப்பதுதான்.
இந்நூல் செல்வத்தை பெருக்குவதற்கான வழிகளைப் பற்றி சொல்கின்றது என்று கூறியவுடன் நிறையப்பேர் எண்ணுகின்ற விடயம் இந்நூல் பொருளாதாரம், நிதியியல் போன்ற விளங்கிக்கொள்வதற்கு கடினமான விடயங்களைக் கொண்டிருக்கும் என்பதாகவே இருக்கும்.
நீங்கள் சிறுகதைகள், நீதிக்கதைகள் படித்திருக்கிறீர்களா? அவை எவ்வளவு எளிமையாக படித்து விளங்கிக் கொள்ளக் கூடியவையாக இருக்கும். அதே போன்ற பாணியில்தான் பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் நூலும் அமைந்திருக்கின்றது என்று சொல்லலாம்.
பாபிலோன் நகரில் வசித்த மக்கள், செல்வந்தர்கள், வியாபாரிகள், கடன் கொடுப்பவர்கள், அடிமைகள் போன்ற கதைமாந்தர்களை அடிப்படையாக வைத்து கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கதைமாந்தர்களின் உரையாடல்கள் மூலமாகவும் செயல்கள் மூலமாகவும் செல்வத்தை குவிப்பது பற்றிய பாடங்களை நூலாசிரியர் நமக்கு சொல்லித்தருகின்றார்.
பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் கதைகளினூடாக சொல்வது செல்வத்தை பெருக்குவதற்கு அடிப்படையாகப் பின்பற்ற வேண்டிய பாடங்கள்தான். ஆனால் செல்வத்தை பெருக்க விரும்புகின்ற ஒவ்வொரு மனிதனும் பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிகளாக இருக்கின்றன.
நான் இந்நூலில் கூறப்பட்ட விடயங்களை ஒவ்வொரு பகுதிகளாக எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பகுதி பகுதிகளாக எழுதுவதில் உள்ள சில பிரச்சினைகளால் எழுதவில்லை. என்றாலும் “வருவாயில் ஒரு பங்கை சேமிக்க வேண்டும்” என்ற தலைப்பில் பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் நூலில் சொல்லப்பட்ட பாடத்தைப் பற்றி ஒர் பதிவாக எழுதியிருந்தேன்.
செல்வத்தைப் பெருக்குவதற்கான அடிப்படைகளை தெரிந்துகொள்ள விரும்பினால் அல்லது பணத்தை கையாள்வதைப் பற்றி கற்றுக்கொள்ள விரும்பினால் பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் நூலை நீங்கள் படிக்கலாம்.
ஒர் விடயத்தை உங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். ஒர் புத்தகத்தை படிப்பதால் மட்டும் நீங்கள் எண்ணுமளவிற்கு செல்வத்தை குவித்துவிட முடியாது. இந்த நூலாக இருந்தாலும் சரி எந்த நூலாக இருந்தாலும் சரி படிப்பதை வாழ்க்கையில் பிரயோகித்தால் மட்டும்தான் பயன் கிடைக்கும்.
பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் நூலின் முன்பக்க அட்டையில் “இருபது இலட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்துள்ள நூல்!” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக நூலை கொள்வனவு செய்த இருபது இலட்சம் மக்களும் செல்வத்தை குவித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக அவ்வாறிருக்க முடியாது.
நூலைப் படித்தவர்களில் குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் நூலை வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் படித்தவற்றை வாழ்க்கையில் செயற்படுத்தியிருப்பார்கள். அவர்களால் மட்டும்தான் நூலிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டதற்கான பயனைப்பெற முடியும்.
ஆகவே வாழ்க்கையில் செல்வத்தைக் கையாண்டு செல்வத்தை பெருக்குவதற்கான வழிகளைத் தேடுகின்றீர்கள் என்றால் பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் நூலை படியுங்கள். அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை வாழ்க்கையில் செயற்படுத்துங்கள். அவ்வாறு செய்தால் பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் என்ற நூல் உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு உதவியாக இருக்கும்.