பணவீக்கம் என்றால் என்ன?

Last updated on December 21st, 2023 at 05:04 pm

பொருட்கள் (Products) மற்றும் சேவைகளிற்கான (Services) விலைவாசி உயர்வடைந்து பணத்தினுடைய பெறுமதி குறைவடைதல் பணவீக்கம் (Inflation) ஆகும்.

நீங்கள் கடந்த வருடம் ஒரு பொருளை 100 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே பொருளை இந்த வருடம் 130 ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால் இங்கே பொருளினுடைய விலை 30 ரூபாயால் அதிகரித்திருக்கிறது. அப்படியானால் பணவீக்கம் 30 சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

நாம் சிறுவர்களாக இருக்கும் போது 20 ரூபாயுடன் கடைக்குச் சென்றிருந்தால் நமக்கு வேண்டிய சில உணவுகளை வாங்கி சாப்பிட்டிருப்போம். இன்று அதே 20 ரூபாயுடன் கடைக்குச் சென்று அதே உணவுகளை வாங்க முடியுமா? என்று பார்த்தால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை.

நாம் வாங்கியிருந்த உணவுப்பொருட்களினுடைய விலைகள் அதிகரித்திருக்கும். இதற்கான காரணம் பணவீக்கம். இங்கே பொருளிற்கான விலை அதிகரித்திருக்கிறது. அதே போல அந்த பணத்தை வைத்து வாங்ககூடிய பொருட்களினுடைய அளவு குறைவடைந்து பணத்திற்கான பெறுமதியும் குறைவடைந்திருக்கிறது.

பணவீக்கம் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஒரு பொருளினுடைய விலை அதிகரிக்கும் போது பணவீக்கம் அதிகரிக்கும். உதாரணமாக ஏரிபொருள் விலை அதிகரித்தால் எரிபொருள் செல்வாக்கு செலுத்துகின்ற எல்லா பொருட்களினுடைய விலையும் அதிகரித்து பணவீக்கம் ஏற்படும்.

பொருட்களை கொண்டுவருகின்ற வாகனங்களிற்கு எரிபொருள் தேவைப்படும், உணவுப்பொருள்களை உற்பத்தி செய்ய எரிபொருள் தேவைப்படும், மின்சாரம் உற்பத்தி செய்ய எரிபொருள் தேவைப்படும், விவசாயத்திற்கு எரிபொருள் தேவைப்படும்.

ஆகவே, மறைமுகமாக எல்லா பொருட்களினதும் விலைகளும் அதிகரித்து பணவீக்கம் அதிகரிக்கும்.

அதே போல, பொருட்களின் தேவை அதிகரிக்கும் போது பணவீக்கம் அதிகரிக்கும். ஒரு பொருளிற்கான தேவை அதிகமாக இருக்கிறது அல்லது பொருளினுடைய உற்பத்தியை உள்நாட்டில் நிறுத்திவிட்டார்கள் அல்லது இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அதாவது தேவை அதிகமாக இருக்கிறது. உற்பத்தி குறைவாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பொருளை வாங்குவதற்கு மக்கள் அதிகமான பணத்தை செலவு செய்தாவது எப்படியாவது பொருளை வாங்க வேண்டுமென்று நினைப்பார்கள். இந்த நேரத்தில் பொருளினுடைய விலை அதிகரித்து பணவீக்கம் உருவாகும்.

ஒரு நாட்டின் பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்து நாடு மோசமான நிலைக்குச் செல்வதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. அதுதான் அளவுக்கதிகமாக பணம் அச்சிடுதல். ஒரு நாடு அளவுக்கதிகமாக பணம் அச்சிட்டால் அந்த நாட்டில் பணம் அதிகமாக இருக்கும். அதே நேரம் பொருட்களின் விலையும் அதிகமாகவே இருக்கும்.

இந்தப் பிரச்சினை நிறைய நாடுகளிற்கு ஏற்பட்டிருக்கிறது. அதில் சிம்பாவே நாட்டிற்கு ஏற்பட்ட நிலைமைதான் மோசமானதாக இருக்கிறது.

சிம்பாவே அரசாங்கம் அளவுக்கதிகமான பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது. 2008 ஆம் ஆண்டு அந்த நாட்டின் பணவீக்கம் மாதத்திற்கு 79,600,000,000% ஆக இருந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளின் பணவீக்கம் வருடத்திற்கு 2%, 3%, 4%, 5% போன்ற அளவுகளில்தான் இருக்கும். அப்படியானால் நீங்களே சிப்பாவேயில் பணவீக்கம் எப்படியிருந்திருக்கும் என்பதை யோசித்துகொள்ளுங்கள்.

இதனை தவிர வரி அதிகரிப்பு, அரசின் நிதி பற்றாக்குறை, கறுப்புப்பணம் அதிகரித்தல், பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும் போது பொருட்களை பதுக்குதல் போன்ற காரணங்களால் பணவீக்கம் அதிகரிக்கலாம்.

ஒரு நாட்டின் பணவீக்கத்தை சராசரியான தனிஒருமனிதனால் கட்டுப்படுத்த முடியாது. பணவீக்கம் ஏற்படுவதை அந்த நாட்டு அரசாங்கத்தினால்தான் கட்டுப்படுத்த முடியும். சிறந்த நிதி பொருளாதார கொள்கைகள் மூலம் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

ஒரு விடயத்தை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பணத்தை தொடர்ச்சியாக வருடக்கணக்கில் சேமித்து வைத்திருக்கும் போது அவதானம் தேவை. அதற்கான காரணம் வருடத்திற்கு வருடம் பணவீக்கம் அதிகரிப்பதால் பணத்தை சேமித்து வைத்திருந்தால் பணத்தினுடைய பெறுமதி குறைந்துவிடும்.

அதனாலே பணவீக்கத்தை கணக்கீடு செய்து சேமித்த பணத்தை சரியாக முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading