பணத்தை சேமிக்க சிறந்த வழிகள்

Last updated on February 16th, 2024 at 03:07 pm

பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கின்ற பொதுவான ஆசை. சம்பாதித்த பணத்தைச் சேமித்து நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதும் ஆசையாக இருக்கும். ஆனால் எல்லோராலும் நினைப்பதைப் போல பணத்தை சேமிக்க முடிவதில்லை.

நீங்கள் சம்பாதித்த பணத்தை உங்களால் சேமிக்க முடியாமைக்கான காரணங்கள் பல இருக்கலாம். அவற்றைக் கண்டறிந்து நிவர்த்தி செய்து சரியான திட்டமிடலை மேற்கொண்டால் உங்களால் பணத்தை சேமிக்க முடியுமாக இருக்கும்.

பொதுவாகவே சில வழிகளைப் பின்பற்றினால் எல்லோராலும் நினைப்பதைப் போல பணத்தை சேமிக்க முடியும். இந்த பதிவில் அவ்வாறான பணத்தை சேமிப்பதற்கு உதவியாக இருக்கும் சில வழிகளை பார்க்கப்போகிறோம்.

செலவுகளை கண்காணிக்க வேண்டும்

ஒரு மாதத்தில் எந்தெந்த வழிகளில் எவ்வளவு வருமானம் வருகின்றது என்பதை அறிந்து வைத்திருப்போம் ஆனால் ஒரு மாத்தில் எந்தெந்த வழிகளில் எவ்வளவு செலவு ஏற்படுகிறது என்பதை பெரும்பாலானோர் கண்காணிப்பதில்லை.

சேமிப்பதற்கு பணம் வேண்டும் என்றால் முதலில் செய்ய வேண்டியது ஒரு மாதத்தில் எவ்வாறான செலவுகள் ஏற்படுகின்றன, எதற்கு அதிகமாக செலவு செய்கிறோம், எந்த செலவுகள் தேவையற்றவை, எந்த செலவுகளை நம்மால் குறைக்க முடியும் போன்ற விடயங்களை கவனத்திற்கொள்ள வேண்டும்.

இதன் மூலமாக நம்மால் தேவையற்ற செலவுகளை குறைப்பதற்கான வழிகளை கண்டுபிடிக்கலாம். அத்தோடு ஒரு மாதத்திற்கான செலவுகளை திட்டமிடுவதற்கும் உதவியாக இருக்கும்.

வரவு செலவுப் பட்டியல் தயாரித்தல்

நமது வரவு செலவுகளை கண்காணித்த பின்னர் வரவு செலவுப் பட்டியலை தயார் செய்ய வேண்டும். நமக்கான செலவுகளைச் சரியாகப் பேணி பணத்தை சேமிப்பதற்கு வரவு செலவுப் பட்டியல் உதவி செய்யும்.

வரவு செலவுப் பட்டியலை பின்பற்றினால் தேவையற்ற செலவுகள் ஏற்படுவது பெரியளவில் குறையும். அந்த பணத்தை நம்மால் சேமிக்க முடியும்.

வரவு செலவுப் பட்டியல் இல்லாமல் பணத்தை செலவு செய்வது வாய்க்கால் இல்லாமல் செடிகளிற்கு நீர் இறைப்பது போன்றது. பெரும்பாாலான நீர் வீணாகவே செல்லும். வரவு செலவுப் பட்டியலை தயாரித்து அதற்கேற்ப செலவு செய்வது வாய்க்கால் சரியாக அமைத்து செடிகளிற்கு நீர் இறைப்பது போன்றது நீர் வீணாக செல்லாது.

சேமித்த பின்னரே செலவு செய்ய வேண்டும்

என்னிடம் சேமிப்பதற்கு எந்தத் திட்டங்களும் இல்லை ஆனாலும் சேமித்தே ஆக வேண்டும் என்றால் இலகுவான ஒரு வழியை பின்பற்றினால் பணத்தை சேமிக்க முடியும்.

ஒரு மாதத்திற்கு உங்களிடம் வருகின்ற வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சேமிப்பதற்கென தனியாக எடுத்து வைத்துவிடுங்கள். அதன் பின்பு மிகுதிப் பணத்தை வைத்து அந்த மாதத்திற்கான செலவுகளைத் திட்டமிடலாம்.

எந்தவொரு காரணத்தைக் கொண்டும் சேமிக்கின்ற பணத்தை எடுக்கவே கூடாது. சேமித்த பின் வருகிற மிகுதி பணத்தை உங்களுடைய வருமானம் என நினைத்துகொண்டு செலவு செய்யலாம்.

கடனை தவிர்க்க வேண்டும்

ஏழ்மையில் இருப்பதை விட கடன் வாங்குவது மோசமானதென சொல்வேன். நாம் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கடன் என்பது வேறுவழியே இல்லை என்ற சூழ்நிலையில் வாங்கலாம் ஆனால் இன்று வீடு வாங்குவதற்கு, வாகனம் வாங்குவதற்கு என எல்லாவற்றிற்குமே கடன் வாங்குகிறார்கள். இது நமது வாழ்க்கையை பாதிப்படையச் செய்யும்.

தேவையில்லாமல் கடன் வாங்கினால் சம்பாதிக்கும் பணத்தில் கடனையும் வட்டியையும் செலுவதிலேயே பணம் கரைந்துவிடும். பின்னர் எப்படி நம்மால் சேமிக்க முடியும்? கடன் பணத்தை சேமிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆகவே, கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே கடன் வாங்கியிருந்தால் முடிந்தவரை விரைவில் அதனை கொடுத்து முடிக்க முயற்சி செய்ய வேண்டும். அதன் பின் பணம் சேமிப்பது இலகுவாக இருக்கும்.

சேமிப்பதற்கான குறிக்கோள்களை உருவாக்கலாம்

வாழ்க்கைக்கான குறிக்கோள்கள் உருவாக்குவது போல சேமிப்பதற்காகவும் குறிக்கோள்களை உருவாக்கலாம். எதற்காக பணம் சேமிக்கிறோம் என்பதுதான் பணத்தை சேமிப்பதற்கான குறிக்கோள் ஆகும்.

குறிக்கோள் எதுவாக வேண்டுமாகவும் இருக்கலாம். ஒரு பொருள் வாங்குவதற்காக, வணிகம் ஒன்றை தொடங்குவதற்காக, முதலீடுகள் செய்வதற்காக, படிப்பதற்காகவென எதுவாகவும் இருக்கலாம். ஆனால் உங்களுக்கான பணம் சேமிக்கும் குறிக்கோள் இருந்தால் மட்டுமே தேவையற்ற செலவுகள் செய்வதை தவிர்த்து பணத்தை சேமிக்க முடியும்.

கடனட்டை, நிகழ்நிலை பரிவர்தணைகளை தவிர்த்தல்

இன்றைய காலகட்டத்தில் தம்மை அறியாமல் தேவையில்லாத செலவுகளை ஏற்படுத்துவதில் கடனட்டைகள் (Credit Card) பெரும்பங்கு வகிக்கின்றன.

பணத்தை கையில் பணமாக வைத்திருந்தால் நமக்கு செலவு செய்ய மனம் வராது. ஆனால் கடனட்டை, நிகழ்நிலைப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போது பணம் பெரிதாக தெரியாது. அதனாலேயே இவற்றில் தேவையில்லாத செலவுகள் அதிகம் ஏற்படுகிறன.

ஆகவே, முடிந்தவரை அவற்றைத் தவிர்ப்பதால் நமது பணம் பாதுகாக்கப்படுகிறது. அதன் மூலமாக நம்மால் பணத்தை சேமிக்க முடியும்.

எல்லோராலுமே பணத்தை சேமிக்க முடியும். சேமித்த பணத்தை முதலீடு செய்யவும் முடியும். இந்த பதிவிலே பணத்தை சேமிப்பதற்கு உதவியாக இருக்கக்கூடிய சில வழிகளை பார்த்திருக்கின்றோம். இவை உங்களுக்குப் பயன்படலாம்.

நாம் எல்லோருமே நமக்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்து, சேமிப்புகளை மேற்கொண்டு நமக்கான இலக்குகளை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading