Last updated on September 30th, 2023 at 10:21 pm
- தரவறிவியல் – Data Science - November 27, 2023
- திருக்கார்த்திகை தீபம் - November 25, 2023
- 1984 (நாவல்) - November 14, 2023
அதிகாலையில் எழுவது வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்களிடம் காணப்படுகின்ற பொதுவான பழக்கம் என்பது பரவலாக மக்கள் மத்தியில் உள்ள கருத்து.
அதிகாலையில் எழுவது நாம் வெற்றியடைவதற்கு பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான பழக்கம் என்று சொல்வதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. அதிகாலை வேளையில் உலகமே நித்திரையில் இருக்கும் போது நீங்கள் மட்டும் விழித்துக் கொண்டால் காலையில் உங்கள் இலக்குகளிற்காக உழைப்பதற்கு மேலதிகமாக நேரம் கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் பகலில் நான்கு மணிநேரத்தில் செய்கின்ற வேலையை அதிகாலையில் இரண்டு மணிநேரத்தில் செய்து முடிக்கலாம். அதற்குக் காரணம் அதிகாலை மிக அமைதியுடன் உற்சாகத்துடன் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை இயற்கையாகவே அமைந்துவிடும் என்பதுதான்.
நிறைய நேரங்களில் அதிகாலை எழுந்துகொள்பவர்களிடம் சுய ஒழுக்கத்தையும் சுய கட்டுப்பாட்டையும் அவதானிக்கலாம். காரணம் தூக்கம் என்பது போதை போன்றது. காலையில் எழும்போது தூக்கத்திலிருந்து உங்களை விழிக்கவிடாமல் உங்கள் மனம் தடுக்கும். உங்கள் மனம் சொல்கின்றபடி கேட்காமல் தூக்கம் எனும் போதையிலிருந்து எழுந்து கொள்ளுமளவிற்கு சுயகட்டுப்பாடு இருக்கின்றதென்றால் மற்ற வேலைகளை பிற்போடாமல் சரியாகச் செய்வது அவ்வளவு கடினமாக இருக்காது. அதிகாலையில் எழுந்துகொள்ளும் பழக்கம் உங்களிடம் சுய ஒழுக்கத்தையும் சுய கட்டுப்பாட்டையும் வளர்க்கும்.
எந்த வகையில் பார்த்தாலும் அதிகாலையில் எழுந்துகொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நமது வாழ்வில் ஒரு படி முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என்பதை உறுதியாகக் கூறமுடியும். ஆனால் ஒரு விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகாலையில் எழுந்து குறைந்தபட்ச பயனுள்ள செயற்பாடுகளையேனும் செய்ய வேண்டும். எதுவுமில்லாமல் அதிகாலையிலும் சமூகவலைத்தளங்கள், கேமிங், பொழுதுபோக்கு என்று நேரத்தை வீணடித்துக்கொண்டிருந்தால் எந்தப் பயனுமில்லை.
நிறையப்பேருக்கு அதிகாலையில் எழுந்து என்ன செய்வது என்ற தீர்மானம் இருக்காது. நமது இலக்குகளிற்கான வேலைகளைச் செய்வதைத் தாண்டி நிறைய விடயங்களை பின்பற்றி அவற்றை பழக்கங்களாக மாற்றலாம். என் வாழ்க்கையை மாற்றப்போகின்றேன் என்ற எண்ணத்துடன் அதிகாலையில் எழுந்துவிட்டேன். ஆனால் என்ன செய்வது என்ற தீர்மானமில்லாமல் இருந்தால் இந்தப் பதிவில் கூறுகின்ற பழக்கங்களை பின்பற்றலாம்.
சில பழக்கங்கள் நமது வாழ்வை முன்னேற்றக்கூடியவையாக இருக்கும். அவற்றை அதிகாலையில் பின்பற்றினால் சிறந்த பயனைத் தரக்கூடியவையாக இருக்கும். அவ்வாறான சில பழக்கங்களே இவை.
- டிஜிற்றல் உலகைத் தவிர்த்தல்

இன்றைய காலகட்டத்தில் கட்டாயமாக பின்பற்றியே ஆக வேண்டும் என்று இதனைச் சொல்ல வேண்டும். ஏனெனில், எங்கும் டிஜிற்றல் மயமாகிவிட்டது. மனிதர்கள் டிஜிற்றல் சாதனங்களை பயன்படுத்துகிறார்கள் என்று சொல்வதை விட டிஜிற்றல் உலகிற்கு அடிமையாக இருக்கின்றார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும்.
அதிகாலை நமது முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டிய நேரத்தில் மொபைல் போனையும் சமூகஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டிருப்பது எந்தப் பயனையும் தராது. மாறாக எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். ஆகவே அதிகாலையில் தேவையில்லாமல் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்த்து டிஜிற்றல் உலகிலிருந்து விலகி நிஜ உலகில் வாழ்வதை பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
- உடற்பயிற்சி செய்தல்

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உற்சாகத்துடன் இயங்குவதற்கு உடற்பயிற்சி அவசியம். அதிகாலையிலேயே அன்றைய நாள் இயக்கத்திற்குத் தேவையான சக்தியை உடலிற்கு கொண்டுவருவது உடற்பயிற்சி ஆகும்.
முன்னொரு காலகட்டத்தில் மனிதர்கள் வேலைகளைச் செய்வதற்கு பெரும்பாலும் உடலுழைப்பைப் போடவேண்டியிருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் உடலுழைப்பிற்கான வேலைகளை விட ஒரேயிடத்திலிருந்து வேலைகளைச் செய்வதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. வேலையைத் தாண்டிய அன்றாடம் செய்கின்ற சின்னச் சின்னக் காரியங்களைக் கூட இயந்திரங்கள் செய்து முடித்துவிடுவதால் உடலிற்கான பயிற்சி இல்லாமற் போய்விடுகின்றது. அதனால் உடலிற்கான ஆரோக்கியத்திற்கும் மனவுறுதியைப் பேணவும் உடற்பயிற்சி அவசியமாகின்றது.
ஆகவே, நாளின் ஆரம்பத்திலிலேயே நமது இலக்குகளிற்காக எவ்வித சோர்வுமின்றி மனவுறுதியோடு உழைப்பதற்காக உடலினைத் தயார் செய்வது நல்லது. அன்றைய நாள் என்று மட்டுமில்லாமல் நீண்டகால நோக்கில் பார்க்கும் போதும் ஆரோக்கியமான உறுதியான உடலோடும், உளத்தோடும் வாழ்வதற்கு தினமும் அதிகாலையில் செய்யும் உடற்பயிற்சி உதவும்.
- நேரத்திட்டம் தயாரித்தல்

நாளிற்கான நேரத்திட்டத்தை தயாரிப்பது பல விதத்திலும் நமக்கு உதவிகரமாக இருக்கும். எந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருக்காது, செய்ய வேண்டிய வேலைகள் விடுபட்டுப் போகாது, முன்கூட்டியே திட்டமிடுவதால் சரியான நேரத்தில் எல்லா வேலைகளையும் முடித்துவிட முடியும்.
ஒரு நாளில் உள்ள நேரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்த அந்நாளிற்கான நேர அட்டவணையை முன்கூட்டியே தயாரித்து வைக்க வேண்டியது அவசியம். அதற்காக அதிகாலை நேரத்தைப் பயன்படுத்தலாம்.
நாம் அதிகாலையில் எழுந்தவுடன் அன்றைய தினத்திற்கான திட்டமிடலை மேற்கொண்டு அன்றைய நாளிற்கான நேர அட்டவணையை தயாரிப்பதை பழக்கமாக மாற்றிக்கொள்ளலாம்.
- தியானம் செய்தல்

உடலை உறுதியாக வைத்திருக்க உடற்பயிற்சி உதவுவது போல மனதை ஆரோக்கியத்துடனும் உறுதியுடனும் வைத்திருக்க தியானம் நமக்கு உதவி செய்யும். நிறையப் பேர் தியானத்தை ஆன்மீகத்துடன் சம்பந்தப்படுத்தி அதனை கடந்து சென்றுவிடுகின்றார்கள். ஆனால் தியானம் என்பது ஆன்மீகத்திற்கானதாகப் பார்க்காமல் உளத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சியாகப் பார்க்கலாம்.
தியானம் செய்வதற்கு மற்றைய பொழுதுகளை விட காலை வேளை சிறந்ததாக இருக்கும். இயற்கையாகவே காலைப்பொழுது அமைதியான சூழலாக அமைந்திருப்பதால் அந்நேரத்தில் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்வது நன்று. நம்மை மேம்படுத்திக்கொள்ள அதிகாலையில் எழுந்து தியானம் செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளலாம்.
- வாசித்தல்

அதிகாலையில் கடைப்பிடிக்க வேண்டிய இன்னொரு மிகச்சிறந்த பழக்கமாக வாசிப்புப் பழக்கத்தைச் சொல்லலாம். செய்தி வாசிப்பதாக இருந்தாலும் சரி புத்தகங்கள் வாசிப்பதாக இருந்தாலும் சரி இரண்டுமே ஒவ்வொரு விதத்தில் பயனுள்ளவையாக அமையும்.
வாசிப்பு உலகைப் புரிந்துகொள்வதற்கான வழி என்பதோடு நம்மை நாமே புரிந்துகொள்வதற்கான வழியும் ஆகும். சமகாலத்தில் உலகில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ள வாசிப்பு நமக்கு உதவி செய்யும். இன்றைய காலகட்டத்தில் செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகளைகள் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. இணையத்தின் உதவியுடன் செய்திகளைத் தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளது.
புத்தகங்கள் வாசிப்பது நம்முடைய அறிவை மேம்படுத்திக்கொள்ள உதவும். சமகாலத்தைத் தெரிந்துகொள்ள செய்திகள் மேல் ஆர்வம் காட்டுபவர்களுடன் ஒப்பிடுகையில் புத்தகங்கள் மேல் ஆர்வம் காட்டுபவர்கள் மிகவும் குறைவு. ஆனால் புத்தக வாசிப்பு ஒவ்வொருவருக்கும் அவசியமானதொன்று. ஆகவே வாசிப்புப் பழக்கத்தை அதிகாலையில் பின்பற்றுவது வாழ்வை மேம்படுத்த வழிவகை செய்யும்.
- இயற்கையுடன் ஒன்றிணைதல்

அதிகாலை வேளையின் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் அனுபவித்ததில்லையென்றால் நீங்கள் காலையின் இயற்கையை நாடிச்சென்று அந்த அனுபவத்தை நிச்சயமாகப்பெற வேண்டும். அது ஒரு விதமான புதுமையான அனுபவத்தை உங்களுக்குத் தரும்.
ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கும் இயற்கைக்குமே நெருங்கிய தொடர்பு உண்டு. நீங்கள் அதிகமாக இயற்கையுடன் ஒன்றிணையும் போது உடல் உள ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக செயற்கையான டிஜிற்றல் உலகைத் தவிர்த்து இயற்கையை நாடிச்சென்று அந்தச் சூழலை அனுபவிப்பது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
ஆகவே அதிகாலை வேளையின் புத்துணர்வான சூழலில் இயற்கையை அனுபவிப்பதை பழக்கமாக மாற்றிக்கொள்வது சிறந்தது.
- எழுதுதல்

எழுத்தும் ஒரு சிறந்த கருவி. வாசிப்புப் பழக்கத்தைப் பின்பற்றுவது நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள உதவுவது போன்றுதான் எழுத்தும் நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள உதவி செய்யும்.
நமது இலக்குகளை நோக்கி நாம் என்ன செய்யப்போகின்றோம், என்ன செய்தோம் என்பதை பகுப்பாய்வு செய்து Journal வடிவில் எழுதலாம். அதே போல நமது வாழ்க்கையையும் எழுத்து வடிவில் பதிவு செய்து வைக்கலாம். நமது எண்ணங்கள், கருத்துக்களை எழுதி வைக்கலாம்.
நாம் ஒவ்வொரு நாளையும் பகுப்பாய்வு செய்து எழுதிவரும்போது அல்லது நமது எண்ணங்களை, கருத்துக்களை, செயற்பாடுகளை தொடர்ச்சியாக பதிவு செய்துவரும் போது அவை எல்லாமே நாம் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்ற தெளிவான பாதையை வகுப்பதற்கு உதவி செய்யும். அத்துடன் நாம் கடந்துவந்த பாதையின் பதிவுகளாகவும் அவை அமையும்.
எழுத்து, வாசிப்பு போன்றவை ஒரு நாளின் எவ்வேளையிலும் செய்யக்கூடியவைதான் ஆனால் அவற்றை காலையில் பின்பற்ற வேண்டும் என்று கூறுவதற்கான காரணம் அதிகாலை வேளை அமைதியான சூழலைக் கொண்டு ஒவ்வொருவரும் புத்துணர்வுடன் இருக்கும் வேளை எழுத்து, வாசிப்பை நம்முடைய மனதுடன் ஆழமாகத் தொடர்புபடுத்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
- அதிகாலை எழுதல்

சிறந்த அதிகாலைப் பழக்கங்கள் என்று தலைப்பை வைத்துவிட்டு அதிகாலை எழுதல் சிறந்த பழக்கம் என குறிப்பிடுவது ஏனென்று தோன்றலாம். உண்மையில் பலரும் அதிகாலையில் எழுந்துகொண்டாலும் அதிகாலை விழித்துக்கொள்வதில்லை என்றே சொல்ல வேண்டும்.
உதாரணமாக, நடுநிசிக்குப் பின் ஒரு மணிக்கு நித்திரைக்குச் செல்லும் ஒருவர் அதிகாலை எழுந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அதிகாலை நான்கு மணிக்கு எழுந்துவிடுவார்கள். ஆனால் எழுந்த பின்னர் அவர்களுக்கு முழுமையான விழிப்பு ஏற்பட்டிருக்காது. வெறுமனே மூன்று மணித்தியாலம் நித்திரை கொண்டிருப்பதால் அவர்கள் விழித்துக்கொண்டாலும் எந்த வேலையையும் செய்ய முடியாதளவிற்கு தூக்கம் தூக்கமாக வந்துகொண்டிருக்கும். இவ்வாறான சூழ்நிலையில் அதிகாலையில் நித்திரைவிட்டெழுவதால் எந்தப் பயனுமில்லை.
அதிகாலையில் எழுதல் என்பது சரியான மணிநேரம் நித்திரை செய்து முழுமையாக விழித்து உற்சாகத்துடன் செயற்பாடுகளை செய்யக்கூடிய நிலையாகவே இருக்க வேண்டும். அதனால்தான் அதிகாலையில் எழுவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுமென கூறினேன். அதனாலே, நீங்கள் அதிகாலையில் எழுந்துகொள்ள விரும்பினால் சரியான நேரம் உறக்கத்திற்குச் சென்று முழுமையான உற்சாகத்துடன் புத்துணர்வுடன் விழித்துக்கொள்வதுதான் சரியானதாக இருக்கும்.