நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது எப்படி?

Last updated on February 12th, 2024 at 07:54 pm

நாம் வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கப்போகின்றோம் என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளில் நேரத்தை எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்பது மிகவும் முக்கியமானது.

நேரத்தை சரியாகப் பயன்படுத்தி நமது இலக்குகளிற்காக முதலீடு செய்தால் நாம் எதிர்பார்க்கும் நிலையை அடைந்து வெற்றியாளராக மாறலாம். நேரத்தை பயனற்ற தேவையில்லாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வீணடித்துக்கொண்டிருந்தால் நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதே முடியாதவொன்றாக இருக்கும்.

அதனாலே நீங்கள் உங்களுடைய இலக்குகளில் வெற்றியடைய விரும்பினால் உங்களுக்கான நேரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உங்களால் மட்டும்தான் உங்களுடைய நேரத்தை எந்தெந்த செயற்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும், எதற்குப் பயன்படுத்தக்கூடாது என்பதனை முடிவு செய்துகொள்ள முடியும். ஆனால் சில விடயங்களைப் பின்பற்றுவதால் எல்லோராலும் நேரத்தை சரியாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். அவ்வாறான சில செயற்பாடுகளை இந்தப் பதிவின் மூலமாகப் பார்க்கலாம்.

நேரத்தை வீணடிக்கும் செயல்களை தவிர்த்தல்

நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்றால் முதலில் செய்ய வேண்டியது நேரத்தை வீணடிக்கின்ற செயற்பாடுகளை தவிர்ப்பதாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் பின்பற்றுகின்ற பழக்கங்கள்தான் உங்கள் வாழ்க்கையிலிருந்து நேரத்தை நிறையவே எடுத்துக்கொள்கின்றன.

சராசரி மனிதனுடைய ஒரு நாளில் தேவையில்லாத செயற்பாடுகள் அதிகமாகவே இருக்கும். ஒரு நாளில் செய்கின்ற செயற்பாடுகளையெல்லாம் பட்டியற்படுத்தி அவற்றை பகுப்பாய்வு செய்து எந்தெந்த செயற்பாடுகள் தேவையில்லாதவை, தேவையானவை என்பதை முடிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.

உங்களுக்கென இலக்குகளை உருவாக்குங்கள்

வாழ்க்கையில் உங்களுக்கென இலக்குகள் இல்லாவிட்டால் இலக்குகளை உருவாக்கிக்கொள்ளுங்கள். இலக்கு இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். இலக்கு இருந்தால் மட்டும்தான் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் இலக்குக்காக உழைப்பதற்காக நேரத்தை ஒதுக்குவீர்கள்.

நிறைய பேர் இலட்சியமே இல்லாமல் தினமும் ஒடிக்கொண்டிருப்பார்கள். வாழ்க்கை எப்படி போகின்றதோ அப்படியே போகட்டும் என்று இருப்பார்கள். இப்படி இருப்பவர்களால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போக முடியாது. இலக்குகளை உருவாக்கி அதற்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே நேரத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகாது. நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்தினால்தான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும்.

மொபைல் பயன்பாட்டைக் குறைத்தல்

Mobile

இன்றைய காலத்தில் ஒவ்வொருவருடைய நேரத்தையும் திருடுவதில் பிரதானமான பங்கு மொபைலிற்கு இருக்கின்றது. நிறைய மனிதர்களை அவர்கள் அறியாமலே அடிமைப்படுத்தி கவனத்தை சிதறடித்து அவர்களுடைய நேரத்தை தனக்கானதாக மாற்றிக்கொள்கின்றது மொபைல்.

நமக்கமான நேரம் நமது கைகளில் இருக்க வேண்டுமென்றால் நமது கைகளில் மொபைல் இருக்கக்கூடாது. குறிப்பாக நாம் ஏதேனுமொரு குறிக்கோளை நோக்கி வேலை செய்துகொண்டிருக்கும் போது மொபைலை தூரமாக வைத்துவிடுவதுதான் சிறந்த யோசனையாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் மொபைல் பயன்படுத்துவதற்கும் சமூகவலைத்தளங்கள் பயன்படுத்துவதற்கும் குறிப்பிட்ட நேரத்தை தெரிவு செய்துகொள்ளலாம். மற்றைய நேரங்களில் மொபைல் பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது.

நேரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்ற ஒவ்வொரு மனிதனும் மொபைலுடன் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

நேர அட்டவணை தயாரித்து நேரத்தை திட்டமிடுதல்

சராசரியான ஒரு மனிதனிடம் சென்று இன்றைய நாளிற்கான உங்களுடைய திட்டங்கள் என்ன? இன்று என்னென்ன வேலைகள் எந்தெந்த நேரத்தில் செய்யப்போகிறீர்கள்? போன்ற மாதிரியான கேள்விகளைக் கேட்டால் பெரும்பாலான மனிதர்களிடம் எந்த யோசனையும் இருக்காது. அதனால்தான் பெரும்பாலானோர் சராசரி மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

நீங்கள் நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்றால் நேரத்திட்டமிடல் அவசியம். இன்றைக்கு என்ன நேரம் என்ன செயற்பாட்டைச் செய்யப்போகின்றேன் என்ற திட்டம் இருக்க வேண்டும்.

உங்களுடைய வேலைக்கும், படிப்பிற்கும், இலக்குகளிற்காக உழைப்பதற்கு, மற்ற செயற்பாடுகளிற்கும் நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் நாளை செய்ய வேண்டிய வேலைகளை அட்டைவனைப்படுத்தி ஒழுங்குபடுத்தி வைத்தாலே நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

அதிகாலை எழுதல்

அதிகாலை எழுவதற்கும் நேரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கும் நேரடியாகத் தொடர்பு இல்லாதது போன்று தோன்றினாலும் அதிகாலை எழுந்து கொள்ளும் பழக்கம் உங்களுடைய நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு பெரிதும் உதவி செய்கின்றது.

அதிகாலையில் எழுந்தால் காலை வேளையில் அதிக நேரம் கிடைக்கும். அதிகாலையில் எழுவதற்குப் பதிலாக இரவில் வேலைகளை முடித்து விட்டு நித்திரைக்கு சென்று காலையில் நேரம் சென்று எழுந்துகொள்ளலாம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் மற்ற நேரங்களை விட காலை நேரம் மாஜாயாலமானது என்று சொல்லலாம்.

மற்றைய நேரங்களில் ஒரு வேலையைச் செய்வதற்கு எடுக்கும் நேரத்தை விட காலையில் உற்சாகமாக ஒரு வேலையை செய்ய முடிவதால் குறைந்த நேரமே எடுக்கும் என்று சொல்வதில் தவறு இருக்க முடியாது. அதனால்தான் காலையில் எழுந்து செயற்பாடுகளைச் செய்வது வினைத்திறனானது. கட்டாயமாகச் செய்யவேண்டிய முக்கியமான வேலைகளை காலையிலே முடித்துவிடுவது நல்லது.

எந்த வேலைகளையும் பிற்போடுதல் கூடாது

நிறையப் பேரிடம் எந்த செயலையும் பிற்போடுகின்ற பழக்கம் இருக்கின்றது. நம்மால் இப்போதே ஒரு வேலையை செய்ய முடியாவிட்டால் பிறகு எப்படிச் செய்ய முடியும். நிறைய வேலைகளை பிற்போட்டுக்கொண்டே போனால் எல்லாம் ஒரு நேரத்தில் பிரச்சினையாக வந்து நிற்கும்.

பிற்போடுவதால் வருகின்ற பிரச்சினைகளை சமாளிக்கவே நிறைய நேரத்தை செலவிடவேண்டிய நிலை வரலாம். எந்த வேலையாக இருந்தாலும் இப்போதே செய்து முடித்துவிடவேண்டும் என்ற மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நம்மில் பலரும் நேரத்தினுடைய மதிப்பு தெரியாமலேயே அதனை வீணடித்துக்கொண்டிருக்கின்றோம். இதனை எல்லோருமே உணர வேண்டும். நேரத்தின் மதிப்பு புரிந்தவர்களால் மட்டுமே வாழ்க்கையில் மிகப்பெரிய உயரங்களை தொடமுடியும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading