ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை சமீபத்தில் வாசித்து முடித்தேன். எனக்கு புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று ஆர்வம் வருவதற்கு முன்னரே ஜெயகாந்தன் அவர்களின் பெயர் மட்டும் தெரிந்திருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் பள்ளிக்கூடத்தில் தமிழ் இலக்கிய பாடத்தில் படித்திருந்ததால் தமிழ் எழுத்தாளர் என்றாலே ஜெயகாந்தன் என்ற பெயர் மட்டுமே என் ஞாபகத்திற்கு வரும். அப்படித்தான் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஆகிய இரண்டு நாவல்களும் அறிமுகமாகி மனதிலேயே பதிந்துவிட்டது.

ஜெயகாந்தன் அவர்களைப் பற்றி நிறைய இடங்களில் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிச் சொல்லும் போது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை பலரும் பரிந்துரைப்பார்கள். நான் ஜெயகாந்தன் அவர்களின் அக்னிப் பிரவேசம் சிறுகதை பற்றி எழுதியிருந்த போது கூட ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை படிக்கும்படி ஒருவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார். ஜெயகாந்தன் அவர்கள் நிறைய நாவல்கள் எழுதியிருந்தாலும் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை மட்டுமே பெரும்பாலானோர் படிக்கச் சொல்கின்றார்கள் எனும் பொழுதே அந்நாவலின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகின்றது. ஜெயகாந்தன் அவர்கள் கூட தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று இந்நாவலைத்தான் சொல்கிறார்.

சிலநேரங்களில் சில மனிதர்கள் நான் வாசித்த முதல் நாவல். அந்நாவல் வாசித்த அனுபவம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நான் வாசித்த ஜெயகாந்தன் அவர்களின் இரண்டாவது நாவல்.

இந்நாவலில் கதையைப்பற்றிப் பார்த்தால், பிரதான கதாப்பாத்திரமான ஹென்றி தன்னுடைய தாய், தந்தை யார் என்று தெரியாத அடையாளமற்றவன். வளர்ப்புத் தந்தையாலும் வளர்ப்புத் தாயாலும் வளர்க்கப்படுகின்றான். அதனால் அவனுக்கென்று சாதி இல்லை. ஹென்றியை வளர்த்த அம்மா ஒர் கிறிஸ்தவர், அப்பா சைவத்தை சேர்ந்தவர். அவன் வளர்ந்தவுடன் தனக்கு தோன்றுகின்ற மதத்தை பின்பற்றட்டும் அவனை கட்டாயப்படுத்தக்கூடாது என்று ஹென்றியை வளர்த்த தாய், தந்தை விட்டுவிட்டார்கள். ஆனால் அவன் தனக்கென்று ஒர் மதத்தை பின்பற்றாததால் அவனுக்கென்று ஒர் மதம் இல்லை.

ஹென்றியின் வளர்த்த அம்மா இறந்த பின், சில காலத்திற்குப் பின் வளர்த்த தந்தையும் இறந்துவிட்ட பின் தன்னை வளர்த்த அப்பா மீது கொண்ட அன்பினால் அப்பா பிறந்து வளர்ந்த கிருஷ்ணராஜபுரம் கிராமத்திற்குச் சென்று தந்தை வாழ்ந்த வீட்டிலேயே தான் வாழவேண்டும் என்று ஆசைப்படுகின்றான் ஹென்றி.

ஹென்றி நகரத்தில் வாழ்கின்ற மனிதன். கிராமத்திற்கு முற்றிலும் அந்நியப்பட்டவன் ஹென்றி. இவ்வாறான பின்னணியைக் கொண்ட ஹென்றி  தன்னுடைய அப்பாவின் கிராமத்திற்குச் சென்று தேவராஜன் எனும் நண்பன் கிடைத்து அங்குள்ள மனிதர்களோடு பழகி தன் தந்தையின் தம்பியான துரைக்கண்ணுவிடமிருந்து அப்பாவின் பாழடைந்த வீட்டை வாங்கிக்கொண்டு துரைக்கண்ணுவுடன் சேர்ந்து வீட்டை புதுப்பித்து கிரகப்பிரவேசம் நடக்கின்ற நாள் வரைக்கும் கிருஷ்ணராஜபுரம் மற்றும் குமாரபுரம் ஆகிய கிராமங்களில் ஹென்றியைச் சுற்றி நடக்கும் கதைதான் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.

ஒரே வரியிற் சொன்னால் நகரிலிருந்து கிராமத்திற்கு வருகின்ற எந்தவொரு அடையாளமும் இல்லாத ஒரு மனிதனின் கதை என்று சொல்லலாம். இந்நாவல் மற்றைய நாவல்களிலிருந்து வேறுபட்டிருக்கின்றது என்பது பொதுவாக வாசகர்களால் சொல்லப்படுகின்ற கருத்து. அதற்கு ஹென்றி என்ற கதாப்பாத்திரத்தின் பங்கு மிக முக்கியமானது. இந்நாவல் பற்றித் தேடினால் ஹென்றி என்ற கதாப்பாத்திரம் பற்றியே பலரும் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். எல்லோருடைய கண்களுக்கும் அந்தக் கதாப்பாத்திரம் வித்தியாசமாகத்தான் தெரிகின்றது போல. எந்தவொரு அடையாளமும் இல்லாத குழந்தைத்தனத்துடன் கூடிய சராசரி மனிதனைப் போலல்லாத வித்தியாசமான குணங்களைக் கொண்ட வித்தியாசமான கதாப்பாத்திரம்தான் ஹென்றி.

ஹென்றி மாதிரியான ஒருவன் நிஜ உலகில் இருப்பாரா? என்று கேட்டால் அதற்கான பதிலை ஜெயகாந்தன் அவர்களே முன்னுரையில் சொல்லிவிட்டார். தேடுங்கள், கண்டடவீர்கள் என்று யேசுநாதர் கூறிய கருத்தையே இந்தக் கேள்விக்கான பதிலாக்கிவிட்டார் ஜெயகாந்தன் அவர்கள். உண்மைதான் போல, இன்றும் தேடினால் கூட ஹென்றியைப் போன்ற மனிதர்களைக் கண்டுபிடிக்கலாம் என்றுதான் நினைக்கின்றேன்.

ஹென்றியை விட நிறையக் கதைமாந்தர்கள் நாவலில் வருகிறார்கள். ஹென்றிக்கு நண்பனாகும் தேவராஜன், தேவராஜனின் அக்கா அக்கம்மாள், ஹென்றியின் அப்பாவின் தம்பியான துரைக்கண்ணு, மணியக்காரு, பாண்டுப்பையன் இப்படியாக பல கதைமாந்தர்கள் வருகிறார்கள். எல்லோருமே நிஜ உலக கிராமியச்சூழலில் அவதானிக்கக்கூடிய மனிதர்கள்தான். குறிப்பாக நாவலின் இறுதியில் பேபி என்ற பைத்தியக்காரப் பெண்மணி வருகிறாள். அவளும் பெயர், பெற்றோர், மதம், வயது, சாதி, ஊர் எதுவும் இல்லாத பைத்திரயக்காரப் பெண்மணி. இன்னும் சொன்னால் தனக்கே தன்னைப் பற்றித் தெரியாத பெண். ஹென்றியாவது பரவாயில்லை. தன்னைத் தனக்குத் தெரிகின்றது ஆனால் அந்தப் பெண்ணோ தனக்கே தன்னைத் தெரியாத பைத்தியக்கார நிலை என்று சொல்லலாம். அந்தப் பெண்மணிக்கு பேபி என்ற பெயர் வைத்ததே ஹென்றிதான். நாவலின் முடிவுப் பகுதியில் திடீரென வருவாள் இறுதியில் அவளும் இவர்களை விட்டுச் சென்றுவிடுவாள்.

நாவலில் கதைமாந்தர்களிற்கிடையே நடக்கின்ற உரையாடல்கள் கதையை நகர்திக்கொண்டு மட்டும் செல்லும் உரையாடல்களாக இல்லாமல் நிறைய இடங்களில் சிந்திக்க வேண்டிய கருத்துகள் உட்பொதிந்த உரையாடல்களாக அமைந்திருக்கின்றன. அவற்றை நீங்கள் எடுத்துக்கொண்டு ஆராய்ந்து பார்க்கலாம்.

என்னால் இந்நாவல் மூலமாக 1970-களில் இருந்த கிராமத்தைப் பார்க்க முடிந்தது. அன்றைய நாட்களின் கிராம வாழ்வியல் எப்படியிருந்தது என்பதை என்னால் காணமுடிந்தது. அன்று நாவல் எழுதப்பட்டிருந்தாலும் இன்று படிக்கும் போது பழைய நாவல் என்ற உணர்வைக் கொடுக்கவில்லை. நான் அவ்வளவு நிறைய நாவல்கள் வாசித்ததில்லை என்பதால் பொதுவாக எல்லா நாவல்களும் அப்படித்தான் இருக்குமோ என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்ற தலைப்பை ஒரு மனிதன் ஹென்றியாகவும், ஒரு வீடு என்பதை ஹென்றியின் பாழடைந்த வீட்டைச் சுற்றி கதை நகர்வதால் அதனை வீடாகவும், கதைக்களமான கிருஷ்ணராஜபுரம், குமாரபுரம் போன்றவற்றை ஒரு உலகமாகவும் நான் புரிந்துகொண்டேன்.

நாவலைப் படித்துமுடித்த பின்னர்தான் முன்னுரையை முழுமையாகவும் ஆழமாகவும் படித்தேன். அங்கே ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்ற தலைப்பைப் பற்றி ஜெயகாந்தன் அவர்கள் விளக்கியிருக்கின்றார்.  முதலில் நாவலின் பெயர் ஒரு மனிதன் என்று பெயரிட இருந்து பின்னர் ஒரு வீடு என்று பெயரிட நினைத்து பின்னர் ஒரு உலகம் என்று பெயரிட நினைத்து இறுதியில் மூன்றையும் இணைத்து ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்று பெயரிட்டுள்ளார்.

உண்மையில் தமிழ் இலக்கணத்தின் படி “ஒரு உலகம்” என்று வரவேண்டிய இடத்தில் “ஒர் உலகம்” என்றுதான் வர வேண்டும். ஆனால் ஒரு உலகம் என்று பெயரிட்டதற்கான விளக்கத்தைச் தந்துவிட்டு ஒரு கருத்தைச் சொல்கின்றார்.

அதாவது இலக்கணத்தில் சொல்லியிருக்கிறது என்பதற்காக வேறு பலமான காரணங்கள் இருந்தும்கூட அவசியம் கருதி ஒரு மாற்றத்தைச் செய்யவோ, ஏற்கவோ, பக்குவம் பெறாவிட்டால் ஒரு மொழியும் வளர்சியும் முடங்கிப்போகும். என்ற சிறந்த விடயத்தை கூறியுள்ளார். ஜெயகாந்தன் அவர்களின் இந்தக் கருத்து எனக்கு பிடித்திருக்கின்றது.

முன்னுரையிலே நிறையை விடயங்களை சொல்லியுள்ளார் ஜெயகாந்தன் அவர்கள். புத்தகங்களின் முன்னுரையை வாசிப்பதன் மூலமாகவே நிறைய விடயங்களை தெரிந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

நீங்கள் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை வாசித்திருக்காவிட்டால் இந்நாவலை வாசிக்கலாம். வாசிப்பதன் மூலமாக நிறையவே புதுமையான விடயங்களை தெரிந்துகொள்ளலாம். நாவலைப் படிப்பது நல்ல அனுபவமாகவும், பாடமாகவும் இருக்கும். ஜெயகாந்தன் அவர்களுடைய நாவல்கள் பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments