Last updated on August 30th, 2023 at 12:48 pm
- தரவறிவியல் – Data Science - November 27, 2023
- திருக்கார்த்திகை தீபம் - November 25, 2023
- 1984 (நாவல்) - November 14, 2023
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்பது நன்னூல் பாடல். இந்தவொரு பாடல் வரி நாம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான ஒர் விடயத்தைப் பற்றி சொல்கின்றது. பழையவற்றைக் கைவிட்டு புதியவற்றிற்கு இடமளிக்க வேண்டும் என்பது அந்தப் பாடலின் பொருள்.
இந்நன்னூல் பாடல் சொல்ல வருகின்ற கருத்து ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. நிறைய நேரங்களில் மனிதன் காலத்திற்குப் பொருந்தாத பழமையிலேயே ஊறிப்போய் அவற்றையே தொடர்ச்சியாக பின்பற்றி வாழ விரும்புகின்றான். அவ்வாறான சூழலில் கால மாற்றத்திற்குப் பொருந்திப் போகின்ற புதியவற்றிற்கு இடமளிக்க வேண்டும் என்ற மிகச்சிறந்த கருத்தை அப்பாடல் சொல்கின்றது.
ஆனால் இன்னோர் விடயத்தையும் மனதில் வைத்திருப்பது அவசியம். பழையன எல்லாம் பழையன அல்ல, புதியன எல்லாம் புதியன அல்ல. அதாவது பழமையான எல்லாம் பயனற்றவை புதியன எல்லாமே காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. நிறைய சந்தர்ப்பங்களில் பழமையானவை கூட எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகவும் புதுமையானவை சமகால உலகிற்குப் பொருந்தாமல் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதையும் கருத்திற்கொள்ள வேண்டும்.
ஊதாரணமாக “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்பது தமிழ்மொழியில் உள்ள மிகவும் பழமையான பாடல் வரி. ஆனால் இப்பாடல் வரி சொல்கின்ற கருத்து என்றைக்கும் பழையதாகாது. எல்லாக் காலத்திற்கும் ஏற்புடையதாக இருக்கின்றது.
பழமையானவற்றைக் கைவிட்டு புதியவற்றிற்கு இடமளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்று உலகம் இவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்திருப்பதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துப் பாருங்கள். வரலாற்றை அவதானித்துப் பார்த்தால் மனிதன் ஒரிடத்திலேயே தேங்கி நின்றுவிடாமல் அடுத்து அடுத்து என புதிய கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்து தன்னை மேம்படுத்திக்கொண்டு சென்றதால்தான் இன்றைக்கு நாகரிகத்தில் மேம்பட்ட அறிவியலில் வளர்ச்சியடைந்த சமூகமாக மனிதனால் பரிணமிக்க முடிந்திருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.
ஒரு வேளை மனிதன் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லையென்றால், புதிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லையென்றால் இவ்வளவு தூரம் முன்னேறியிருக்க முடியாது. பழமையை மேம்படுத்த வேண்டிய இடத்தில் மேம்படுத்தி தேவையற்றவற்றைக் கைவிட்டு புதியவற்றிற்கு இடமளிப்பதுதான் வளர்ச்சிக்கான முதற்படி என்பதை வரலாற்றை திரும்பிப் பார்த்தாலே புரிந்துவிடும். அதுதான் இயற்கையின் நியதியும் கூட.
மனித சமுதாயம் பழையனவற்றைக் கைவிட்டு புதியவற்றிற்கு இடமளித்து அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாலும் நிறைய மனிதர்கள் அதனை ஏற்றுக்கொள்வதற்குத் தயாரில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதே நிதர்சனம். தேவைப்படும் சந்தர்ப்பங்களில் பழையவற்றை மேம்படுத்தலாம். தேவைப்பட்டால் பழையதொன்றை முழுமையாக கைவிட்டு புதியதொன்றை பின்பற்றுவதில் எந்தத் தவறும் இல்லை.
உதாரணம் என்று சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். மக்களால் பின்பற்றப்படும் மூடநம்பிக்கைகளைச் சொல்லலாம். நிறைய மனிதர்கள் இன்றைய உலகிற்கு சம்பந்தமே இல்லாத நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்கள். மதம், நம்பிக்கைகள், கலாசாரம், கடவுள் போன்றவற்றின் பெயரால் காலத்திற்குப் பொருந்தாத நிறைய விடயங்களை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமது சிந்தனைகளில் புதிய மாற்றங்களுக்கு இடமளிக்காமல் பழையவற்றிலேயே உழன்றுகொண்டிருக்கின்ற நிறைய மனிதர்களை உங்களால் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
“மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற பொன்மொழி கூறுகின்றது போல் மாற்றங்கள் எப்போதும் வந்துகொண்டேதான் இருக்கப்போகின்றது. அந்த மாற்றங்களோடு பழமையானவற்றை தவிர்த்துவிட்டு வளர்ச்சிக்கு உதவுகின்ற புதியவற்றை எடுத்துக்கொண்டு மாற்றங்களோடு மனிதனும் மாறவேண்டியது அவசியம்.
பழமையானவற்றை கைவிட வேண்டும் என்று சொல்கின்றோம். ஏன் நாம் பழைமையானவற்றை கைவிட வேண்டும் என்ற கேள்வி ஒன்று உள்ளதல்லவா? ஒர் உண்மையைச் சொன்னால் நவீனம் என்று சொல்கின்ற எதுவுமே திடீரென இன்றைக்குத் தோன்றியதல்ல. இன்றைய நவீனமான கலை, கலாசாரம், அறிவியல், தொழினுட்பம், சிந்தனை, பண்பாடு போன்ற எல்லாமே ஆயிரக்கணக்கான ஆண்டுகளிற்கு முன்பு ஒரு புள்ளியில் தோன்றியவைதான். ஆனால் அவை காலத்திற்கேற்றாற் போல தன்னைத்தானே மேம்படுத்திக்கொண்டு இன்றைய நவீன நிலையை அடைந்திருக்கின்றது.
உதாரணமாக அறிவியலை எடுத்துக் கொள்ளலாம். நவீனம், மேம்பாடு, வளர்ச்சி என்று சொன்னாலே அறிவியல்தான் முன்னிறுத்தப்படுக்கின்றது. அறிவியல் ஆதி மனிதன் நெருப்பு கண்டுபிடித்த காலத்திலேயே உருவாகிவிட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டுக்கொண்டு வந்து இன்றைய நவீன அறிவியலாக வளர்ச்சியடைந்து இன்றைய நிலையை அடைந்திருக்கின்றது. அறிவியல் பழைய விடயங்களில் புதுமையை புகுத்தி மேம்படுத்தியிருக்கின்றது. புதிய சிந்தனைகளிற்கு இடமளித்திருக்கின்றது. புதியதை முன்வைக்கும் போது அறிவியல் அவற்றிற்கு இடமளிக்காமல் பழையதே சரியானது என்று விடாப்பிடியாய் நிற்காது. புதியன ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய மிகச்சரியான விடயமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்கின்றது. அதனால்தான் இன்றைக்கு அறிவியல் என்பது வளர்ச்சியின் அடையாளமாகவும் அறிவின் அடையாளமாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
எல்லாமே பழமையானவைதான் ஆனால் அவை மேம்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது முதலில் கேட்ட அதே கேள்விக்கு வருவோம். ஏன் பழமையானவற்றைக் கைவிட வேண்டும்? காலத்திற்குப் பொருந்தாத பழமை ஒரு மனிதனை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்லாது. புதியன தேவைப்படின் அவற்றிற்கு இடமளித்தால் மட்டும்தான் மனிதனால் அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியும். பழமையான கருத்துக்களும், சிந்தனைகளும், நம்பிக்கைகளும் எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாகாமல் புதுமையான எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் இடம்கொடுக்காமல் அப்படியே இருக்குமானால் மனித சமூகத்திற்கு அவசியமான எவ்வித மாற்றங்களும் நிகழாது. எவ்வித மாற்றங்களும் நிகழாத ஒரு சமூகம் எப்படியிருக்கும். பிற்போக்குத்தனமாக இருக்கும் என்று ஒரே வரியில் சொல்லிவிடலாம்.
ஒரு காலத்தில் சமூகம் இருந்த நிலையைக்காட்டிலும் இன்றைக்கு எவ்வளவோ முன்னேற்றமடைந்துள்ளது. ஒரு காலத்தில் உலகில் பொதுவாக அடிமைத்தனம் இருந்தது, ஆதிக்க மனநிலை இருந்தது, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் இருந்தன, சாதிய ஒடுக்குமுறைகள் இருந்தன, மூடநம்பிக்கைகள் அதிகமாக இருந்தன. இதே போன்ற பிற்போக்குத்தனங்கள் கொட்டிக்கிடந்தன். தற்போது இல்லையா என்று கேட்டால் இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் பெரியளவில் குறைந்து பகுத்தறிவும் சமத்துவமும் வளர்ந்திருக்கின்றது என்று சொல்லலாம்.
இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்றால் பழைமையானவற்றை கைவிட்டு புதியவற்றிற்கு இடமளித்ததுதான். பழமையான சிந்தனைகளை விட்டு புதிய வழியில் சிந்திக்கத் தொடங்கியதுதான். சட்டம், அரசு, கல்வி, சிந்தனை, கலை போன்ற எல்லாவற்றிலும் புதுமை புகுந்ததன் விளைவினால்தான் ஆதிகாலத்தில் இருந்ததைவிட மேம்பட்ட சமூகமாக இன்றைய மனிதன் உருவாகியிருக்கின்றான்.
மனித சமூதாயத்தின் வளர்ச்சி மட்டுமல்லாமல், இன்று பூமியை விட்டு வெளியே சென்று இன்னொரு கிரகத்தை ஆய்வு செய்யக்கூடிய அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கின்றதென்றால் புதுமையை புகுத்தியதுதான் காரணம். ஆரம்பத்தில் கூறியது போன்றுதான் விஞ்ஞானம் புதியது அல்ல. அது பல நூற்றாண்டுகளாகவே இருந்துகொண்டிருக்கின்றது. ஆனால் அன்றைக்கு இருந்த விஞ்ஞானத்தை விட இன்றைய விஞ்ஞானத்தால் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை அடைய முடிந்தமைக்காண காரணம் தேவையான இடத்தில் புதியதை புகுத்தி பழையதை தவிர்த்ததும்தான். இவ்வாறு நிறைய உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
தனிமனித சிந்தனையின் மேம்பாடு, மனித சமூகத்தின் மேம்பாடு, அறிவியல் தொழினுட்பத்தின் மேம்பாடு போன்ற அனைத்தும் சாத்தியப்படக்காரணம் தேவையான இடத்தில் புதியனவிற்கு இடமளித்து பழமையை தவிர்த்ததால் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால் எல்லா நேரங்களிலும் பழையன எல்லாம் தேவையற்றது என்றும் புதியன எல்லாம் தேவையானது என்றும் கருத்திற் கொள்ளக்கூடாது. இன்றைய சமகால சூழலை அவதானித்துப் பாருங்கள். நவீனம் என்ற பெயரால் சமூகத்தை சீரழிக்கின்ற செயற்பாடுகள் நிறையவே நடந்துகொண்டிருக்கின்றன. அதேநேரம் சமூகத்திற்கு தேவையான நன்மையான விடயங்களை கூட பழமை என்ற பெயரால் அழித்துக்கொண்டிருக்கும் செயற்பாடுகளும் நிறையவே நடந்துகொண்டிருக்கின்றன.
உதாரணமாக ஒன்றைச் சொல்லப்போனால் மிகப்பெரும் வணிக நிறுவனங்கள் தமது வணிக நோக்கத்திற்காக குறிப்பிட்ட கருத்தை மக்கள் மத்தியில் விதைப்பார்கள். சமூகத்திற்கு தீங்கான விஷயங்களைக் கூட அதுதான் சரியானது, நவீனமானது போன்று மக்கள் மனதில் பதியுமளவிற்கு சந்தைப்படுத்தலை மேற்கொள்வார்கள். அதே நேரம் நல்ல விஷயங்களைக் கூட தவறானது என்பது போல சித்தரிப்பார்கள். வணிக நோக்கத்திற்காக அவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. நீங்கள் சமூகத்தை உண்ணிப்பாக கவனித்துப்பார்த்தால் உங்களால் இவ்வாறான நிறைய செயற்பாடுகளை அவதானிக்ககூடியதாக இருக்கும்.
அவற்றையெல்லாம் தாண்டி நிறைய நேரங்களில் தனிமனிதனே புதுமை, நவீனம் என்று நினைத்துக்கொண்டு பொருத்தமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பான். அவை அவனை மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிப்படையச் செய்வதாக இருக்கும்.
ஆகவே நாம் தனிமனிதனாக சரியானது எது? தவறானது எது? என்ற புரிதலோடு செயற்படுவது அவசியமாகின்றது. மனிதன் பகுத்தறிவு என்ற விடயத்தில் மற்றைய விலங்குகளிலிருந்து வேறுபடுகின்றான். அந்தப் பகுத்தறிவை மிகச் சரியாக பயன்படுத்த வேண்டும். தேவையான சந்தர்ப்பங்களில் பழமையை தவிர்த்து புதுமையை புகுத்த வேண்டும். அதைவிடுத்து பழமை, புதுமை எதையும் புரிந்துகொள்ளாமல் செயற்பட்டால் என்ன மாற்றத்தை, வளர்ச்சியை நீங்கள் அடைய நினைக்கின்றீர்களோ அதனை அடையமுடியாது என்பதை மனதில் புகுத்திக்கொண்டு “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற நெறியை பின்பற்றுவோம்.