அரோரா எனும் அழகிய துருவ ஒளி

Last updated on January 13th, 2024 at 01:36 pm

இயற்கை தன்னிடத்தில் ஏராளமான அழகிய அதிசயங்களை வைத்திருக்கின்றது. ஆனால் இன்றைய நாட்களில் மனிதர்களாகிய நாம் இயற்கையின் பேரழகினை இரசிக்கத் தவறிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

உலகில் இயற்கை தினம் தினம் பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இயற்கை கொண்டுள்ள பிரமிக்கதக்க அம்சங்களில் ஒன்றுதான் அரோரா ஒளி (Aurora Lights) ஆகும். இது தமிழில் துருவ ஒளி என்று அழைக்கப்படுகிறது.

வானத்தில் வண்ணமயமாக ஒளி நடனம் ஆடினால் எப்படி இருக்கும்? என்பதை நினைத்துப்பாருங்கள். அப்படியான வானில் ஒளி நடனமாடுகிற அழகிய நிகழ்வுதான் அரோரா ஒளி ஆகும்.

அரோரா ஒளி என்றால் என்ன?

நமது நாடுகளிலிருந்து வானில் அரோரா ஒளியை அவதானிக்க முடியாது. பூமியின் துருவப் பிரதேசங்களில் வானில் பல்வேறு வண்ணமயமான நிறங்களில் ஒளி அசைந்தாடிக்கொண்டிருக்கும். இவ்வாறு காட்சியளிக்கும் ஒளி அரோரா ஒளி என்று அழைக்கப்படுகிறது.

துருவப்பிரதேசங்களில் இரவு நேரங்களில் அரோரா ஒளியை தெளிவாக அவதானிக்க முடியும். அரோரா ஒளி துருவப் பிரதேசங்களில் வானில் காட்சியளிக்கும் ஒளி என்பதால் தமிழில் துருவ ஒளி என்று அழைக்கப்படுகிறது.

அரோரா ஒளி தோன்றுகின்ற பிரதேசத்தை அடிப்படையாக வைத்து இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

  1. அரோரா போரியாலிஸ் (Aurora Borealis)
  2. அரோரா அவுஸ்ராலிஸ் (Aurora Australis)
அரோரா போரியாலிஸ் (Aurora Borealis)

பூமியின் வட துருவப்பகுதிகளில் அரோரா ஒளி காட்சியளிக்குமானால் அது அரோரா போரியாலிஸ் என்று அழைக்கப்படும். இது வட துருவ பகுதிகளில் (North) காட்சியளிப்பதனால் ஆங்கிலத்தில் Northern Lights என்று அழைக்கப்படுகின்றது.

அரோரா அவுஸ்ராலிஸ் (Aurora Australis)

பூமியின் தென் துருவப்பகுதிகளில் அரோரா ஒளி காட்சியளிக்குமானால் அது அரோரா அவுஸ்ராலிஸ் என்று அழைக்கப்படும். இது தென் துருவ பகுதிகளில் (South) காட்சியளிப்பதனால் ஆங்கிலத்தில் Southern Lights என்று அழைக்கப்படுகின்றது.

அரோரா ஒளி எப்படி உருவாகின்றது

அரோரா ஒளி பூமியின் துருவப்பிரதேசங்களில் வானில் தோன்றுவதற்கான காரணம் சூரியன் மற்றும் பூமியினுடைய காந்தப்புலம் ஆகும்.

சூரியனில் உருவாகும் சூரியக்காற்று (Solar Wind) பூமியை வந்தடையும். பூமியினுடைய காந்தப்புலம் சூரியக்காற்றினை பூமிக்குள் வர அனுமதிக்காது. அதனால் சூரியக்காற்று பூமியினுடைய இரண்டு துருவங்களையும் நோக்கி இழுக்கப்படும்.

பூமியின் துருவங்களை நோக்கி இழுக்கப்படும் சூரியக்காற்றானது துருவங்களில் உள்ள வளிமண்டலத்துடன் தாக்கமடைந்து வண்ணமயமான ஒளிச்சிதறல்களாய் வானில் காட்சியளிக்கின்றது. இந்த ஒளிச்சிதறல்கள்தான் வானில் நடனமாடுவதை போன்று அழகாகக் காட்சியளிக்கும் அரோரா ஒளி ஆகும்.

இந்த ஒளிச்சிதறல்கள் தோன்றுகிற துருவப்பிரதேசங்களை பொறுத்து அரோரா போரியாலிஸ், அரோரா அவுஸ்ராலிஸ் என வகைப்படுத்தி அழைக்கின்றோம்.

வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களை பொறுத்து அரோராவின் வெளிச்சங்களின் நிறங்களில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

Aurora Lights

அரோரா ஒளியின் அழகினை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பார்க்கும் போது ஒரு தடவையாவது துருவப்பகுதிக்கு சென்று ஆரோராவை நேரடியாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது.

எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே அரோராவின் அழகை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக தோன்றும். இயற்கையின் அழகு அப்படிப்பட்டது.

இப்படிப்படிப்பட்ட ஏராளமான பிரமிப்பான சம்பவங்களை இயற்கை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றது. ஆனால் நாம் அவற்றை இரசிப்பதற்கு நேரத்தை செலவிட தவறவிட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மை.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading