செல்வந்தர் ஆவது எப்படி?

Last updated on November 22nd, 2023 at 07:59 pm

உலகில் செல்வத்தின் மேல் விரும்பம் இல்லாதவர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. பெரும்பாலான எல்லோருக்குமே பணத்தின் மீது அல்லது செல்வத்தின் மீது ஈர்ப்பு இருக்கும். செல்வம் அதிகமாக இருந்தால் நாம் விரும்பியது போன்றதொரு வாழ்க்கையை எம்மால் அமைத்துக்கொள்ள முடியும்.

பெரும்பாலான மனிதர்களுக்கு தாம் செல்வந்தராக மாறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் செல்வந்தராக மாற வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும். சராசரியான ஒரு மனிதரிடம் சென்று செல்வந்தர் ஆவது எப்படி? என்ற கேள்வியைக் கேட்டால் அவரிடம் பெரும்பாலும் அதற்கான பதில் இருக்காது.

பொதுவாக செல்வந்தர் ஆவது எப்படி? அதிகமாக பணம் சம்பாதிப்பது எப்படி? போன்றவை பற்றியெல்லாம் வீட்டிலோ, பாடசாலையிலோ கற்றுத்தந்திருக்க மாட்டார்கள். பொதுவாக சொல்லித்தருவது நன்றாகப் படித்து நல்ல வேலைக்கு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்பதாகவே இருக்கும்.

செல்வந்தர் ஆவது எப்படியென்று சொல்லித்தருவதற்கு நீ செல்வந்தனாக இருக்கின்றாயா? என்றெல்லாம் கேட்காதீர்கள். எனக்கும் வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிப்பதற்கு விருப்பம் இருக்கின்றது. செல்வத்தை உருவாக்குவது பற்றி செல்வந்தர்கள் நிறையவே சொல்லியிருக்கின்றார்கள். அவ்வாறே ஏற்கனவே செல்வத்தை உருவாக்கியவர்கள் கூறுகின்ற விடயங்களாகவே இந்தப் பதிவு இருக்கும்.

முதலில் ஏழையாக அல்லது நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒருவர் செல்வந்தராக மாற முடியுமா? என்ற கேள்வி நிறையப்பேரிடம் இருக்கும். உலகில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர்களில் நிறையப்பேர் சுயமாக சம்பாதித்து (Self made billionaires) செல்ந்தர் ஆனவர்களே.

செல்வந்தராக மாறுவதற்கு நாமும் முயற்சி செய்தால் நாம் நினைக்கிற அளவிற்கு செல்வத்தைச் சேர்க்க முடியும்.

ஏழைகளின் மனநிலையுடன் இருக்கக்கூடாது

செல்வந்தராவதற்கு முதலில் சரியான மனநிலை அவசியம். ஏழைகளின் மனநிலை வேறு செல்வந்தர்களின் மனநிலை வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஏழைகளாக இருப்பவர்கள் நம்மிடம் இருப்பதை வைத்து வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம் நம்மால் செல்வந்தராக முடியாது என்ற எண்ணத்தில் இருப்பார்கள். இந்த மனநிலையுடன் இருந்தால் ஒரு போதும் செல்வந்தராக முடியாது.

நம்மிடம் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு செல்வந்தர் எப்படி சிந்திப்பார். அவருடைய மனநிலை எப்படி இருக்கும். என்பதை அறிந்து நாமும் நமது மனநிலையை மாற்றிக்கொண்டு ஒரு செல்வந்தரைப் போல சிந்திக்க வேண்டும்.

பணத்தை சேமிக்க வேண்டும்

நிறைய செல்வம் சேர்க்க வேண்டும் என்றால் முதலில் சேமிப்பு மிகவும் முக்கியம். ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் தன்னுடைய வருமானத்தில் 30% சேமிக்க வேண்டும் என பொதுவாக பொருளாதார நிபுணர்களால் கூறப்படுகின்ற கருத்து. திருமணம் செய்வதற்கு முன்பென்றால் அதை விட அதிகமாகவே சேமிக்க முடியும். காரணம் தனி மனிதனாக இருப்பதால் செலவுகள் குறைவாகவே இருக்கும்.

இந்தக் காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்தினால் குறைந்த வயதிலேயே நம்மால் அதிகமான உயரத்தை தொடமுடியும்.

வருமானத்தில் முதலில் சேமித்துவிட்டு மிகுதியை செலவு செய்ய வேண்டும். தேவைகள் எப்போதும் வருமானத்திற்கு குறைவாகவே இருக்க வேண்டும்.

சம்பாதிக்கின்ற பணத்தை சேமிக்கிற அளவிற்கு வருமானம் கிடையாது என்று பலரும் சொல்கிறார்கள். பத்தாயிரம் சம்பாதிக்கிறவரும் இதைதான் சொல்வார் ஒரு இலட்சம் சம்பாதிப்பவரும் இதைதான் சொல்வார். காரணம் அதிகமாக சம்பாதிக்க சம்பாதிக்க தேவைகளும் அதிகரிக்கின்றன.

நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் பரவாயில்லை. சேமிப்பை கைவிடக்கூடாது. ஆரம்பத்தில் சேமிக்கிற பழக்கம் இல்லாமல் நம்மால் செல்வத்தைச் சேர்க்க முடியாது.

சேமித்த பணத்தை முதலீடு செய்ய வேண்டும்

பணத்தைச் சேமிப்பதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. பணக்காரராக வேண்டும் என்றால் பணத்தை பெருக்க வேண்டும். பணத்தை பெருக்குவதற்காக முதலீடு செய்ய வேண்டும்.

பணத்தை சேமிப்பதன் நோக்கம் பணத்தை முதலீடு செய்வதற்காகவே இருக்க வேண்டும். காலம் செல்லச் செல்ல பணவீக்கம் காரணமாக பணத்தின் பெறுமதி குறைந்துகொண்டே வரும். ஆகவே இலாபம் வருகின்ற வகையில் பணத்தை முதலீடு செய்வது அவசியமாகும். முதலீடுகள் இல்லாமல் பணத்தை சேமிப்பதால் எந்த பயனும் இல்லை.

செல்வந்தராக வேண்டுமென்று எண்ணுபவர்கள் தமது செல்வத்தை பெருக்குவதற்கு நிறைய யோசனைகள் வைத்திருக்க வேண்டும். சேமிக்கும் பணத்தை வைத்து அந்த யோசணைகளில் முதலீடு செய்வதன் மூலமாக செல்வத்தை பெருக்கிக்கொள்ள முடியும்.

பொதுவாக நிறையப்பேர் பணத்தை முதலீடு செய்வதற்கு Mutual Funds, Stocks, Bonds, Gold போன்ற வழிகளை நாடுவார்கள். நீண்ட காலத்திற்கு முதலீடுகள் செய்யும் போது அதில் வருகின்ற இலாபம் மிகப்பெரியதாக இருக்கும்.

ஆனால் இவை மட்டும் முதலீடு இல்லை. இலாபம் தரக்கூடிய வணிகத்தில் முதலீடு செய்யலாம். உங்களுடைய அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும் உங்கள் மேல் முதலீடு செய்யலாம்.

நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும்

உலகில் மிகப்பெரும் செல்வந்தர்களைப் பார்த்தால் அவர்கள் எல்லோருமே ஏதோவொன்றை கற்றுக்கொண்டேயிருப்பார்கள். கற்றுக்கொள்வதற்கு புத்தகங்கள் வாசிப்பதை பழக்கமாக பலரும் கொண்டிருக்கின்றார்கள். புத்தகங்கள் வாசிப்பதன் மூலமாக நிறையவே கற்றுக்கொள்ளலாம்.

செல்வந்தராக நினைக்கிற நபர்கள் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். புத்தங்கள் வாசிப்பது மட்டுமல்லாது அனுபவரீதியாகவும், வேறு வேறு நபர்களிடமிருந்தும், இணையம் போன்ற வழிகளிலும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

உங்களுடைய துறையில் மேலே உயர்ந்து செல்வதற்கான வழிகளை கற்கலாம். நிதி, பணம், பொருளாதாரம், முதலீடுகள் பற்றி கற்கலாம். உங்களுடைய அறிவு வளரும்போது செல்வத்தைப் பெருக்குவதற்கான வழிகள் அதிகமாகும்.

குறிக்கோளுடன் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்

செல்வந்தராக வேண்டும் என்றால் உங்களுக்கென்று குறிக்கோள் இருக்க வேண்டும். குறிக்கோள் இல்லாமல் பணக்காரராக முடியாது. உங்களுக்கென குறிக்கோள்களை நீங்கள் உருவாக்க வேண்டும்.

நான் இந்த நிலையை அடைய வேண்டும், வருடம் முடியும் போது இவ்வளவு பணத்தை சம்பாதித்திருக்க வேண்டும், என்னுடைய வணிகத்தில் இந்த நிலையை அடைந்திருக்க வேண்டும் போன்ற மாதிரியான ஏதோவொரு குறிக்கோளை உருவாக்க வேண்டும்.

குறிக்கோளை தீர்மானித்த பின்னர் அதனை அடைவதற்கான திட்டத்தை உருவாக்கி செயற்படுத்த வேண்டும். நாம் செல்வத்தைச் சம்பாதித்துத் தருகிற இலக்கை உருவாக்கி உழைத்தால் நிச்சயம் வெற்றியடையலாம்.

நீங்கள் புதிதாக ஒன்றைச் செய்யலாம்

மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு புதிதாக ஒன்றை செய்ய வேண்டும். பொதுவாக நம்மை சுற்றி இருக்கின்ற மக்களில் 90 வீதமானவர்கள் நடுத்தர மற்றும் ஏழையாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஒரே மாதிரியாகவே செயல்படுகிறார்கள்.

புதிதாக எதையும் செய்வதில்லை. நல்ல வேலைக்கு சென்று பணக்காரரை போல மற்றவர்களிடம் காட்டிக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறார்கள். இப்படி நீங்களும் இருந்தால் கடைசிவரை உண்மையான செல்வந்தராக மாறமுடியாது.

ஆகவே மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு புதிதாக ஏதாவது செய்யலாம். ஏதாவதொன்றை கண்டுபிடிக்கலாம். இன்றைக்கு உலகின் முன்னணி செல்வந்தர்களின் பட்டியலில் இருப்பர்கள் புதிதாக ஏதாவதொன்றை உருவாக்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஏழையாக பிறந்ததால் ஏழையாகவே இறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லோராலுமே நிறைய பணம் சம்பாதித்து நல்ல வாழ்க்கையை வாழ முடியும். ஆகவே நாமும் செல்வந்தராக மாறுவதற்கு முயற்சிக்கலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading