புத்தகம் வாசிப்பதற்கான குறிப்புகள்

Last updated on August 1st, 2023 at 10:16 pm

1. சிறிய புத்தகங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.


புதிதாக புத்தகம் வாசிக்க ஆரம்பிப்பவராக இருந்தால் பெரிய புத்தகங்களிருந்து வாசிக்க ஆரம்பிப்பதை தவிர்ப்பது நல்லது. பெரிய புத்தகங்களை வாசித்து முடிப்பதற்கு நிறைய நாட்கள் தேவைப்படும். சில வேளைகளில் நீண்ட நாட்கள் செல்வதே புத்தக வாசிப்பின் மீதான ஆர்வத்தை குறைத்துவிடும்.

இலகுவாக வாசித்து முடிக்கக்கூடிய அதிலும் குறிப்பாக உங்களுக்கு பிடித்த தலைப்பில்(Topic) உள்ள புத்தகங்களிலிருந்து வாசிப்பை ஆரம்பிக்கலாம். ஆர்வத்துடன் இலகுவாக படித்து முடித்துவிடலாம். அதுவே அடுத்த புத்தகத்தை வாசிப்பதற்கு உத்வேகத்தை ஏற்படுத்தும்.

2. கவனச்சிதறலிருந்து விடுபட்டிருக்க வேண்டும்.


இன்று கவனச்சிதறலை ஏற்படுத்துவதற்கு நம்மைச்சுற்றி நிறைய விடயங்கள் இருக்கின்றன. வாசிக்க ஆரம்பிக்கும் போது அவற்றிலிருந்த விலகி முழுமையாக புத்தகத்திற்குள் மூழ்கிவிட வேண்டும்.

பெரும்பாலான நேரங்களில் வாசிப்பு தடைப்படுவதற்கு முக்கியமான காரணமாக மொபைல், சமூகவலைத்தளங்கள், இணையம் போன்றவை இருக்கும். எப்போதும் புத்தகம் வாசிக்கத் தொடங்கும் போதும் மொபைல் போனை தூரமாக வைத்துவிடுவதே நல்லது.

3. வாசிக்க வேண்டியவற்றை அட்டவணைப்படுத்தல்.


நாம் வேலைகளைச் செய்து முடித்துவிட வேண்டும் என்பதற்காக வேலைகளிற்கான அட்டவணை தயாரிப்போம். அதே போன்று புத்தக வாசிப்பிற்கும் அட்டவணை ஒன்றை உருவாக்கலாம். இந்த மாதத்தில் இந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும், இன்று இந்த இந்தப் பகுதிகளை வாசிக்க வேண்டும், இந்த கிழமையில் இவற்றை வாசிக்க வேண்டும் என வாசிப்பு அட்டைவனையை உருவாக்கலாம்.

அட்டவணைப்படுத்துவது எதனை வாசிக்க வேண்டும் என்ற இலக்கை உருவாக்கும். இலக்கை உருவாக்கினால் வாசித்து முடிக்க வேண்டும் எண்ணம் மனதில் உருவாகி நினைப்பதை முழுமையாக வாசித்து முடித்துவிட முடியும்.

4. குறிப்புகள் எடுத்தல்.


புத்தக வாசிப்பின் போது குறிப்பு எடுத்துக்கொள்வது அவசியமா? ஒர் உண்மை என்னவென்றால் புத்தகம் வாசிப்பிற்கு புதியவராக இருந்தால் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும் போது அடிக்கடி குறிப்புகள் எடுத்துக்கொண்டிருப்பது சலிப்பை உருவாக்குவதோடு வாசிப்பின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்.

வாசிக்கும் எல்லா நூல்களுக்கும் குறிப்புக்கள் எடுப்பது அவசியம் இல்லை. ஏனென்றால் எல்லா நூல்களிலும் உள்ள தரவுகளை நூறு சதவீதம் பயன்படுத்தப் போவதில்லை. நமக்கு நூலில் உள்ள தரவுகள் தேவை எனும் சந்தர்ப்பத்தில் குறிப்புகள் எடுக்கலாம். மற்றப்படி நூல்களில் எழுத்தாளர் சொல்லவருகின்ற விடயங்களை புரிந்துகொண்டாலே போதுமானது.

ஆனாலும் எப்போதும் ஒரு குறிப்பேடு வைத்துக்கொள்ள வேண்டும். நூல்களில் சில வேளைகளில் இதுவரைகாலமும் தேடிக்கொண்டிருந்த/சிந்தித்துக்கொண்டிருந்த விடயங்களுக்கு பதில்கள் கிடைத்தால் அவற்றை குறித்துவைக்கலாம். நிறைய நேரங்களில் நூலாசிரியர் வேறு நூல்களையும் விடயங்களையும் பரிந்துரைக்கலாம். அவற்றை குறித்துவைத்துக்கொள்வதற்கும் குறிப்பேடு தேவைப்படும்.

5. வாசிப்புச் சூழலை உருவாக்க வேண்டும்.


புத்தகம் வாசிப்பதற்கு சரியான சூழல் அமைத்துக்கொள்வது அவசியமானது. நாம் வாசித்துக் கொண்டிருக்கும் போது கவனம் முழுவதும் வாசிப்பில் இருக்கக்கூடிய அமைதியான சூழல் இருக்க வேண்டும். வாசிப்புச்சூழல் சரியாக அமைந்தால் வாசிப்பின் மீதான ஈடுபாடு அதிகரிப்பதோடு படிக்கும் நூல்களை நம்மால் உள்வாங்கிக்கொள்ள கூடிய மாதிரியும் இருக்கும்.

வாசிப்பதற்கு ஒர் இடத்தை தயார்செய்து அங்கே வாசிப்பு மேசை ஒன்றை வைக்கலாம். அந்த மேசையில் குறிப்பேடு, எழுதுகருவிகள், புத்தகம் போன்றவற்றை வைக்கலாம். நீங்கள் வாசிக்கும் இடத்திலே புத்தகங்களை அடுக்கி வைக்க புத்தக அலுமாரி வைக்கலாம். பல்வேறு விதமாக உங்களுக்குப் பிடித்த வகையில் வாசிப்பதற்கான சூழல் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

6. இலத்திரனியல் நூல்களை வாசிக்கலாம்.


ஒரு காலத்தில் காகிதங்களாக மட்டும் இருந்த நூல்கள் தொழினுட்ப வளர்ச்சியுடன் இணைந்தே இலத்திரனியல் நூல்களாகவும் மாறியிருக்கின்றது.

வழமையான காதிதநூல்களைத் தாண்டி மொபைல், கின்டில் போன்ற சாதனங்களிலும் புத்தகங்களை வாசித்துப் பார்க்கலாம். ஒரே ஒரு சாதனத்தில் குறைந்த செலவில் ஏராளமான நூல்களை படிக்கலாம்.

சில பேருக்கு என்னதான் இலத்திரனியலில் நூல்களை வாசிக்கும் வாய்ப்பு இருந்தாலும் புத்தகத்தின் காகிதங்களை புரட்டி புத்தகத்தை தொட்டு உணர்ந்து படிப்பதற்கு விருப்பமாக இருக்கின்றது. ஆனால் வேறு சிலருக்கு இலத்திரனியலில் நூல்களை வாசிப்பது பிடித்திருக்கின்றது. நீங்கள் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவகையில் தெரிவு செய்து வாசிக்கலாம்.

7. வாசிப்புச் சவால்களில் ஈடுபடலாம்.


வாசிப்புச் சவால்கள் என்று சொல்வது Reading Challenges. நமக்கு நாமே புத்தகம் வாசிப்பதில் Challenges செய்யலாம். இந்த மாதத்தில் இத்தனை புத்தகங்களை வாசித்து முடிப்பேன், ஒரு நாளைக்கு இத்தனை பக்கங்களை வாசித்து முடிப்பேன், இந்த வருடத்தில் இந்த நூல்களை படித்து முடிப்பேன் போன்ற பல்வேறு Challenges செய்யலாம்.

நீங்களாக மட்டும் அல்லாமல் புத்தகம் படிக்கும் நண்பர்கள் இருந்தால் அவர்களுடனும் புத்தகம் தொடர்பான Challenges செய்யலாம். Challenges செய்வது உத்வேகத்தை ஏற்படுத்துவதோடு வாசிக்க வேண்டியவற்றை வேகமாக முடிப்பதற்கான வழியாகவும் இருக்கும்.

8. புத்தகத்தில் உள்ள தரவுகள், பரிந்துரைகளை ஆராயலாம்.


ஒரு நூல் ஏராளமான தரவுகளை உள்ளடக்கியிருக்கும். நூலாசிரியர் தன்னுடைய கருத்துக்களைத் தாண்டி பல ஆதாரங்களை இணைத்திருப்பார், பரிந்துரைகள் செய்திருப்பார்.

ஒரு நூலை வாசித்து முடித்தவுடன் நூலில் உள்ள முக்கியமான தரவுகளை பற்றி, நூலாசிரியரின் பரிந்துரைகள், ஆதாரங்கள் போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கலாம். இன்று எல்லோருடைய கையிலும் இணையம் இருப்பதால் இலகுவாகவே தேடுதல் வேலைகளைச் செய்ய முடியும்.

நூல் வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குவதோடு சேர்த்து இதற்காகவும் நேரம் ஒதுக்குவது பயனுள்ளதாக அமையும்.

9. உங்களுடைய வாசிப்பனுபவங்களை பகிரலாம்.


ஒரு நூலை வாசித்து முடித்த பின்பு நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலை நீங்கள் வாசித்த நூலைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை பகிர வேண்டும்.

உங்களுடைய கருத்துக்களை பகிர்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. சமூகவலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் எழுதலாம் அல்லது உங்களுடைய நண்பர்களுடன் பகிரலாம்.

நூலைப் பற்றிய கருத்துக்களை பகிர்வது புத்தகத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதை சுயமதிப்பீடு செய்துகொள்வதாக அமைவதோடு நீங்கள் புத்கத்தை பற்றி பகிர்வது மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் அமையும்.

10. வாசிக்க ஆரம்பியுங்கள்.


எல்லா குறிப்புக்களையும் பின்பற்றுவதற்கு முன் பின்பற்றவேண்டிய குறிப்பு வாசிக்க ஆரம்பிப்பதுதான். பெரும்பாலானோர் எப்படி வாசிப்பது, Reading Tips என நிறையவே இணையத்தில் தேடுவார்கள். தேடிவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிடுவார்களே தவிர வாசிக்க மாட்டார்கள்.

வாசிப்பதற்கான சிறந்த Tip எதுவென்றால், இப்போதே புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிப்பதுதான் என்று சொல்வேன். எந்த வேலையாக இருந்தாலும் ஆரம்பித்தால் மட்டும்தான் அடுத்தகட்டத்தை நோக்கி நகரலாம். ஆரம்பிக்காமல் எப்படி? என யோசித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஆகவே முதலில் புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பியுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading