பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

Last updated on August 1st, 2023 at 10:26 pm

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் என்பது, ஆங்கிலத்தில் வெளியான “Confessions of a British Spy” என்ற நூலின் சுருக்கப்பட்ட சிறிய தமிழ் மொழிபெயர்ப்பு நூல். ஆனால் இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது கிடையாது. “முஜக்கத்ராதுல் மிஸ்டர் ஹம்பர்” எனும் துருக்கி மொழியில் வெளியான நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பே Confessions of a British Spy ஆகும். தமிழ் மொழியில் “நாஞ்சிலான்” மொழிபெயர்ப்பில் சுருக்கமாக வெளியிடப்பட்டிருக்கின்றது.

துருக்கி மொழியில் இந்நூலை எழுதியவர் ஆலிவர் ஹம்பர் எனும் பிரிட்டிஷ் உளவாளி. ஆலிவர் ஹம்பர் இஸ்லாமிய நாடுகளில் உளவாளியாக இருந்து தான் மேற்கொண்ட செயற்திட்டங்கள் பற்றி இந்நூலில் விபரித்திருக்கின்றார்.

அமெரிக்கா எனும் ஏகாதிபத்திய நாடு உலக நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் எப்படி நாடுகளை அடிமைப்படுத்துகின்றது என்பதை விபரித்த தமிழ் மொழிபெயர்ப்பு நூல் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம். கிட்டத்தட்ட அதே போன்றதொரு கருத்துடைய நூல்தான் பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்.

இன்றைக்கு அமெரிக்கா உலகின் சக்தி வாய்ந்த ஏகாதிபத்தியமாக இருப்பதைப் போலவே பலமடங்கு சக்திவாய்ந்த பேரராசாக ஒரு காலத்தில் அதாவது உலகப்போர்களுக்கு முற்பட்ட காலத்தில் உலகத்தின் பெரும்பகுதி நிலத்தை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து பிரிட்டன். பிரிட்டனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று சொல்வதன் மூலம் பிரிட்டனின் ஆதிக்கம் உலகில் பரவியுள்ள நிலப்பரப்பு எவ்வவளவு பெரியது என்பதைச் சொன்னார்கள்.

என்னதான் பிரிட்டன் உலகின் நிறையப் பிரதேசங்களை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தாலும் பல பிரதேசங்களில் அவர்களுடைய ஆதிக்கம் பலவீனமாக இருந்தது. சில அரசுகளை அவர்களால் வீழ்த்த முடியவில்லை.

அவ்வாறுதான் பிரட்டனால் இஸ்லாமிய நாடுகளை தகர்த்து அவர்களுடைய காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முடியவில்லை. இஸ்லாமிய நாடுகளை தகர்ப்பதற்காக முஸ்லீம்களிடைய குழப்பத்தை ஏற்படுத்தி, இஸ்லாம் சமயத்தை பல பிரிவுகளாக உடைத்து, இஸ்லாமிய நாடுகளை பல வகைகளிலும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய நாடுகளை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் செயற்திட்டத்தை பிரிட்டன் வகுத்திருந்தது.

இஸ்லாமிய நாடுகளில் தங்களுடைய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக உளவாளிகள் பயன்படுத்தப்பட்டனர். பலாயிரக்கணக்கான உளவாளிகள் பயிற்சியளிக்கப்பட்டு இஸ்லாமிய நாடுகளிற்கு அனுப்பப்பட்டனர். அவர்களுள் ஒருவர்தான் ஆலிவர் ஹம்பர் எனும் பிரிட்டிஷ் உளவாளி.

இந்நூல் சரியாக எப்போது எழுதப்பட்டது என்ற தரவு இல்லை. நாடுகளை தன்னுடைய நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர உதவி செய்த ஒர் உளவாளி தான் செய்த செயற்பாடுகள் பற்றி எழுதும் போது இந் நூல் எழுவது கூட குழப்பங்களை விளைவிப்பதற்கான சூழ்ச்சியாக இருக்கலாம் என்ன எண்ணம் பொதுவாகவே பலருக்கும் எழுவதுதான்.

ஆனால், உலக நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போதும் முஸ்லீம் நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போதும் இந்நூலில் கூறப்படும் தகவல்களின் உண்மைத்தன்மை அதிகமாகின்றது. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் உலக நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க உலக நாடுகளில் செய்த செயற்திட்டங்களை வரலாற்றையும், அரசியலையும் தெளிவாக ஆராய்ந்து பார்த்தாலே புரிந்துவிடும்.

இந்நூல் மூலமாக பிரிட்டிஸாரின் இரகசிய ஆவணங்கள் என்று சொல்லப்படுபவற்றையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

முதலாவது ரகசிய ஆவணத்தில் முஸ்லீம்களினுடைய பலங்கள், முஸ்லீம்களினுடைய பலவீனங்கள், முஸ்லீம்களுடைய ஆட்சி அதிகாரத்தை தகர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?, முஸ்லீம்களின் வலிமையை பாழ்படுத்த பலவீனங்களைப் பரவலாக்குவதற்கான வழிமுறைகள் பற்றி சொல்லப்பட்டிப்பதாக ஆலிவர் ஹம்பர் கூறியிருக்கின்றார்.

இரண்டாவது இரகசிய ஆவணம் 14 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த நூற்றாண்டிற்குள் எப்படி முஸ்லீம் நாடுகளை கைப்பற்றுவது என்பது பற்றி அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆலிவர் ஹம்பர் கூறியிருக்கின்றார்.

பிரிட்டிஸார் முஸ்லீம் நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அவர்களின் யுக்திகளாக நாட்டிற்குள் மதம்/இனங்களிடைய முரண்பாடுகளை தோற்றிவித்தல், மதங்கள் மற்றும் மதப் பிரவுகளை ஏற்படுத்துதல், முஸ்லீம்களிடைய விபச்சாரம், மது, சூதாட்டம் போன்ற தீய பழங்கங்களைப் பரப்புதல், அவர்களுடைய புனித நூலில் சொல்லப்பட்ட விடயங்களை திரித்தல், அவர்களின் மொழி, நூல், பள்ளிக்கூடம் மூலமாக தமது கருத்துக்களை பரப்புதல், பொருளாதாரத்தை அழித்தல், ஒப்பந்தங்கள் செய்வது போன்ற பல்வேறு யுக்திகளை பின்பற்றியிருக்கின்றார்கள்.

இவையெல்லாம் சில மாதங்களிலோ, வருடங்களிலோ செய்வதற்கான திட்டம் இல்லை. அவை ஒரு நூற்றாண்டில் செய்ய வேண்டிய திட்டங்கள். அவர்கள் ஆரம்பிப்பதை அவர்களின் தலைமுறையினர் முடித்து வைப்பார்கள் என்ற செய்தியும் நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது. இதன் மூலமாக எப்படி நேரடியாக போர் செய்யாமல் நாட்டை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுகின்றது என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது.

நூலின் பின்னிணைப்பாக இந்தியாவில் பிரிட்டிஸாரின் ஆதிக்கம் பற்றி பல விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒரு விடயத்தை நாம் யோசிக்க வேண்டும். ஆலிவர் ஹம்பர் சொல்லகின்ற நிகழ்வுகள் 1700-களில் நடந்தவை. அன்றைக்கு போர் செய்யாமல் ஒரு நாட்டைக் கைப்பற்ற இவ்வாறான செயற்திட்டங்களை செய்தார்கள் என்றால் இன்றைக்கும் இதே போன்று பல நூற்றாண்டுகளில் செய்யும் செயற்திட்டங்களை செய்யலாம். உலக நாடுகளில் நடக்கின்ற நிகழ்வுகள் சில வேளைகளில் இவ்வாறான திட்டங்களாகவும் இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூலை நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும். இந்நூலிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய, கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading