ஒருவர் மேல் வைக்கும் பாசம்

Last updated on January 30th, 2024 at 07:59 pm

எல்லா உயிர்களுக்குமே அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் இருக்கும். மனிதனுக்கும் அப்படித்தான். ஆனால் மனிதனுக்கு மற்றைய உயிர்களை விடவும் அதிகமாக இருக்கும் போல. அதனால்தான் ஒருவர் மேல் அளவுக்கதிகமாக பாசம் வைத்துவிட்டு அதிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றான்.

அன்பு, பாசம் போன்றவை இன்னொருவருக்கு கொடுப்பதற்குத்தானே தவிர கொடுத்துவிட்டு திரும்ப அவர்களிடமும் பாசத்தை எதிர்பார்ப்பது கிடையாது என்ற உண்மை புரிந்துவிட்டால் யாரும் மனதளவில் தவித்துக்கொண்டிருக்கமாட்டார்கள்.

ஒருவர் மேல்/ஒரு உயிரின் மேல் அல்லது ஒரு பொருளின் மேல் உடலால், மனதால் கொண்ட பற்றானது பாசம் என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் பாசம் என்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் உருவாகின்றது. உதாரணத்திற்குச் சொன்னால் பெற்றோர் தன்னுடைய குழந்தைகள் மேல் காட்டுகின்ற பாசத்தை சொல்லலாம். பெற்றோருக்கு தன்னுடைய குழந்தைகளிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் பாசம் என்ற உணர்வு உருவாகின்றது. இயற்கையின் வடிவமைப்பு அப்படித்தான் உள்ளது.

ஆனாலும் அந்தக் கருத்தை நூறு சதவீதம் உண்மை என்றும் கூறிவிட முடியாது. குழந்தையாக இருக்கும் போது தன்னுடைய குழந்தை மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாவிட்டாலும் வளர்ந்த பின்னர் தன்னுடைய பிள்ளை தான் விரும்புவது போன்று இருக்க வேண்டும் என்பதால் பெற்றோருக்கு பிள்ளைகள் மேல் எதிர்பார்ப்புகள் உருவாகின்றன. பெற்றோர் பிள்ளைகள் என்ற உறவுவில் மட்டுமல்லாமல் எல்லாவிதமான உறவுகளிலும் இந்த நிலை உள்ளது.

ஒருவர் மேல் அல்லது ஒரு பொருளின் மேல் பாசம் வைப்பது தவறு கிடையாது. அன்பு, பாசம்தான் ஒவ்வொரு மனிதனையும் பண்புள்ள மனிதனாக்கி பிணைத்து வைத்திருக்கின்றது. ஆனால் நிறைய மனிதர்களிடம் இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால் ஒட்டுமொத்தமாக பாசத்தை இன்னொருவர் மேல் வைத்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய சந்தோஷமே இன்னொருவரை நம்பித்தான் இருக்கும். அதுதான் நிறைய நேரங்களில் தவறாகிப் போகின்றது.

தாம் ஒருவர் மேல் பாசம் வைத்தால் அவர் திரும்பி பாசம் வைக்காவிட்டால், அவருடன் இருந்த உறவு துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டால், அவர் மேல் கொண்ட எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால் மனமுடைந்து போய்விடுவார்கள். அவர்களால் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கமுடியாத நிலை உருவாகின்றது.

அதனால்தான் தன்னுடைய பிள்ளை மீது அதிகமாக பாசம் வைத்துவிட்டு பிள்ளைகள் பெற்றோரின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்வது, பெற்றோருடன் சண்டையிட்டு பிரிந்து செல்வது போன்ற நிலைகளில் பல பெற்றோரால் நீண்ட காலத்திற்கு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கமுடிவதில்லை. காதல், கணவன்/மனைவி, நட்பு போன்ற எல்லா உறவுகளிலும் அப்படித்தான்.

அதனால்தான் நீங்கள் யாரேனும் ஒருவர் மேல் வைத்திருக்கின்ற பாசம் உங்களை பாதிக்கும் அளவுக்கு இருந்துவிடக்கூடாது. உண்மையைச் சொன்னால் அன்பு, பாசம் போன்றவை மனதளவில் தாக்கத்தை செலுத்தாமல் இருக்காது. ஆனால் அவற்றால் உங்களுக்கு ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

எல்லோருக்குமே ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அந்த வாழ்க்கையை இறுதி வரை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். உங்களுடைய செயற்பாடுகள் மூலம்தான் உங்களுடைய மகிழ்ச்சி தீர்மானிக்கப்பட வேண்டும். பாசம் என்று எடுத்துக்கொண்டாலும் நீங்கள் உங்கள் காதலர் மீது, நட்பு மீது, பிள்ளை மீது பாசத்தையும் அன்பையும் அதிகமாக கொடுப்பதன் மூலம் மகிழ்ச்சியடையலாம்.

அதே நேரம் அவர்களிடம் திரும்ப ஏதேனும் எதிர்பார்த்தால் அது கிடைக்காவிட்டாலும் நான் கவலைப்பட மாட்டேன் என்ற நிலையில் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான மகிழ்ச்சியைத் தரும்.

அதை விடுத்து ஒட்டுமொத்தமாக என்னுடைய சந்தோஷமே இன்னொருவர் மேல்தான் உள்ளது, அவர்தான் என்னுடைய உலகம் என்று ஒட்டுமொத்த பாசத்தையும் அவர்மேல் வைத்தால் நமக்கான வாழ்க்கையின் சந்தோஷம், மகிழ்ச்சி, நிம்மதி இன்னொருவரின் கையில்தான் உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading