பரேட்டோவின் 80/20 விதி

பரேட்டோ கொள்கை (Pareto Principle) என்பது வில்பிரட் பரேட்டோ என்ற இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவரால் 1906 இல் அறிமுகப்படுத்தப்பட்ட விதி ஆகும். பரேட்டோவின் இந்த விதி 80 – 20 விதி என்றும் அழைக்கப்படுகின்றது.

பரேட்டோ விதி கூறுவது 80 சதவீதமான விளைவுகள் 20 சதவீதமான காரணிகளாலேயே ஏற்படுகின்றது என்பதாகும். இந்த விதியை எல்லாத்துறைகளிலும் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் அவதானிக்க முடியும். பல்வேறுபட்ட தேவைகளுக்கும் பரேட்டோவின் 80 – 20 விதி பயன்படுத்தப்படுகின்றது.

இத்தாலி நாட்டில் 80 சதவீதமான நிலங்கள் 20 சதவீதமான மனிதர்களிடம் இருப்பதை வில்பரட் பரேட்டோ அவதானித்தார். மேலும் தன்னுடைய தோட்டத்தில் உள்ள 20 சதவீதமான தாவரங்களே 80 சதவீதமான பழங்களைத் தருவதையும் அவதானித்தார். இந்த மாதிரியான அவதானிப்புகளின் பின்னரே பரேட்டோ விதியை உருவாக்கினார்.

நம்முடைய வாழ்க்கையின் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் பரேட்டோவின் விதியை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். அவற்றின் மூலமாக பரேட்டோவின் 80 – 20 விதியை இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

பரேட்டோ விதியை அவதானிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்

  • சமூகவலைத்தளங்களில் 20% பதிவுகளே 80% பகிரப்படுகின்றன.
  • உங்களுடைய மாதாந்தச் செலவுகளில் 20% செலவுகளிற்கு 80% வருமானத்தை பயன்படுத்துவீர்கள்.
  • உலகில் 80% செல்வம் 20% மக்களிடமே உள்ளது.
  • வணிகம் ஒன்றை எடுத்துக்கொண்டால் 80% வருமானம் 20% பொருட்களிலிருந்து கிடைக்கும். 80% விற்பனை 20% வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும்.
  • நீங்கள் உங்களிடமுள்ள 20% ஆடைகளையே 80% பயன்படுத்துவீர்கள்.
  • நமது வலைத்தளத்தை உதாரணமாக எடுத்துப் பார்த்தாலும் 20 சதவீதமான பதிவுகளிற்கு 80 சதவீதமான பார்வைகள் கிடைக்கின்றன.
  • நீங்கள் செய்யும் வேலையில் 80% வேலை முடிந்ததற்கு 20% உழைப்பு காரணமாக இருக்கும். மிகுதி 80% உழைப்பில் 20% வேலையை முடித்திருப்பீர்கள்.

இந்த உதாரணங்களைப் போலவே பரேட்டோவின் 80-20 விதிக்கு நமது அனுபவங்களிலிருந்தே நிறைய உதாரணங்களைக் கூறலாம்.

வணிகம், பொருளாதாரம், விளையாட்டு, நேர முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் போன்ற எல்லாவிதமான துறைகளிலும் பரேட்டோவின் 80-20 விதியின் சந்தர்ப்பங்களை அவதானிக்க முடியும்.

நமது முன்னேற்றத்திற்கு பரேட்டோவின் விதியைப் பயன்படுத்தலாம்.

பரேட்டோவின் 80/20 விதி நிறைய சந்தர்ப்பங்களில் தன்னிச்சையாக அமைகின்றது. இவ்வாறமையும் பரேட்டோவின் விதியை எமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம். 80/20 விதியை சுய முன்னேற்றத்திற்காகவும் வணிக இலக்குகளிற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நமக்கு 80 சதவீதமான வெற்றியைத் தருகின்ற 20% செயற்பாடுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவை எப்படி 80% வெற்றியை பெற்றுத்தருகிறது என்பதை தெரிந்துகொண்டு அவற்றின் மேல் கவனம் செலுத்தி நமது இலக்குகளுக்கு கிடைக்கும் வெற்றியை வினைதிறனாக்கலாம்.

நமது வேலையில் 20% ஆன நேரமே 80% வேலையை முடிக்கப் பயன்படுகிறது. வேலையின் வினைதிறனை அதிகரிக்க 20% நேரம் என்ன செய்கிறோம், 80% நேரம் என்ன செய்கிறோம், 80% ஆன நேரம் என்னவாகின்றது என்பதை பகுப்பாய்வு செய்து பார்க்கலாம்.

நமது உழைப்பை சரியான திசையில் கொண்டு செல்ல மேலே சொன்னது போல 20% என்ன செய்கிறோம் என்பதை பகுப்பாய்வு செய்து பார்க்கலாம்.

அன்றாட வாழ்வில் 100% உடைகளில் 20% ஐ அடிக்கடி அணிந்தால் அந்த 20% உடைகள் நமக்கு பிடித்திருக்கின்றன என்று அர்த்தம். அவை ஏன் நமக்கு பிடித்திருக்கின்றன என்பதை தெரிந்துகொண்டு அதே போன்ற உடைகளை எதிர்காலத்தில் தேர்வு செய்யலாம். நமக்கு விரும்பிய உடை அணிவது தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிப்பதால் நம்மை ஒரு படி உயர்த்தும். 80/20 விதி ஆடையை தேரந்தெடுப்பது போன்ற அன்றாட சின்னச் சின்ன வேலைகளுக்கும் உதவி செய்கின்றது.

பரேட்டோவின் விதியை வணிகத்தில் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தலாம். வணிகம் ஒன்றில் 20% வாடிக்கையாளர்கள் 80% பொருட்களை வாங்குவதால் நமக்கான 20 சதவீத வாடிக்கையாளர்கள் யார் என்பதில் கவனம் செலுத்தி வணிகத்தை விரிபுபடுத்திச் செல்லலாம்.

வணிகத்தில் 100 சதவீதமான பொருட்களில் 20% ஆனவை 80%  வருமானத்தை பெற்றுத்தரும். இச்சந்தர்ப்பத்தில் 80 சதவீத வருமானத்தை பெற்றுத்தரும் பொருட்களை கண்டறிவதன் மூலமாக நம்முடைய வருமானத்தை பெருக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

சமூகவலைத்தளங்களில் 20% பதிவுகள் 80% பகிரப்படும் எனின் குறித்த 20 வீதமான பதிவுகளில் வணிகத்திற்கான விளம்பரப்படுத்தல்களை மேற்கொள்வது வணிகத்திற்கு வினைதிறனாக அமையும்.

அதே போன்று ஒரு வலைத்தளத்தில் 20 சதவீதமான பதிவுகளுக்கு 80 சதவீதமான பார்வைகள் வருகின்றன என்றால் எந்த வகையான 20% பதிவுகளுக்கு 80% பார்வைகள் வருகின்றன என்பதை அறிந்து அங்கு பயன்படுத்திய நுட்பங்களை மற்றைய பதிவுகளுக்கும் பயன்படுத்தினால் வலைத்தளத்திற்கு வரும் பார்வைகளை அதிகரிக்கலாம்.

பரேட்டோவின் 80/20 விதியை சரியாகப் பயன்படுத்துவதன் மூலமாக இலக்குகளை அடைவதற்கான உழைப்பை வினைதிறனாக்க உதவியாக இருக்கும்.

நாம் 20 வீதத்தை மேம்படுத்தும் நிறைய சந்தர்ப்பங்களில் மேம்படுத்தப்பட்ட விடயமே 100 வீதமாகி அதுவே 80/20 ஆக மாற்றமடையலாம். இதனை ஒர் சிறந்த விடயமாக கருத வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் 20% என்பது வினைதிறன் கூடிய மேம்படுத்தப்பட்டதாக இருக்கும். இது ஒரு படி உயரத்திற்கு கொண்டு செல்லும். எல்லா விடயங்களிலுமே காரணமான 20 சதவீதத்தை கவனிப்பதன் மூலமாக எதிர்பார்க்கும் வளர்ச்சியைக் கொண்டுவரலாம்.

பரேட்டோ விதியின் நன்மைகள்

பரேட்டோவின் 80/20 விதியை அவதானிக்கக்கூடிய சந்தர்ப்பங்களை விளங்கிக்கொண்டு அதனை நமது வளர்ச்சிக்குப் பயன்படுத்த முயற்சி செய்யும் போதே பரேட்டோவின் விதி எவ்வாறு வளர்ச்சிக்கு அனுகூலமாக அமைகின்றது என்பதை புரிந்துகொள்ளலாம்.

பரேட்டோவின் விதி நிறைய விதங்களில் நன்மைகளைச் செய்கின்றது. 80/20 விதியை ஒர் கருவியாக எடுத்துக்கொள்ளலாம். தேவையானதை 80/20 என்ற வகையில் பகுப்பாய்வு செய்வதன் மூலம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தீர்மானங்களை எடுக்கக்கூடியதாக இருக்கும்.

இவ்விதியின் முக்கிய அனுகூலம் என்னவென்றால் ஒரு விளைவுக்கு காரணமான காரணிகளை கண்டறிய முடியும். காரணியைக் கண்டறிந்தால் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இலகுவாக கண்டறிய முடியும். பிரச்சினைகளை சரிசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

நாம் செய்ய வேண்டிய செயற்பாடுகளை வரிசைப்படுத்திக் கொள்வதற்கு 80/20 விதி உதவி செய்யும். செய்ய வேண்டிய செயற்பாடுகள் நிறைய இருக்கும் ஆனால் எல்லாவற்றையும் செயற்படுத்த முடியாது. ஆகவே 80% விளைவைத் தரக்கூடிய 20% செயற்பாடுகளை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி செயற்படுத்த முடியும்.

செயற்பாடுகளை 80/20  விதியைப் பயன்படுத்தி செய்வதால் வளங்களையும் நேரத்தையும் பணத்தையும் அதியுச்ச அளவில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இதன் விளைவாக உங்களுடைய நேரமும், வளங்களும் விரயமாக்கப்படுவது குறைக்கப்படும்.

பரேட்டோவின் 80/20 விதியை சரியாகப் பயன்படுத்தினால் இலக்குகளிற்காக செய்யும் வேலையில் வேலைச்சுமை குறைவதோடு வினைத்திறனையும் அதிகப்படுத்த முடியும்.

உங்களுடைய வாழ்க்கையை அவதானித்துப்பாருங்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் 80/20 விதியை அவதானிக்க முடியும். அவற்றை விளங்கிக்கொண்டு உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

நமது இலக்குகளின் மேலான உழைப்பினை வினைதிறனாக்கி குறிக்கோள்களை அடைவதற்கு பரேட்டோவின் விதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading