காலப்பயணம் – Time Travel

பயணங்கள் வாழ்க்கையின் முக்கியமான ஒர் அங்கம். நமது வாழ்க்கையில் நிறைய பயணங்களை மேற்கொண்டிருப்போம். பயணங்கள் மிகவும் சுவாரஷ்யமானவை. ஒரு மனிதனுக்கு புதுமையான அனுபவங்களை பயணங்கள் வழங்குகின்றன.

நிறைய நேரங்களில் பயணங்கள் உலகையே மாற்றியிருக்கின்றன. ஒரு காலத்தில் கப்பலில் உலகைச் சுற்றி பயணம் செய்ய புறப்பட்ட பின்புதான் உலகில் பல நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இன்றைய நவீன உலகின் ஆரம்பமாக அமைந்தது. பூமியில் பயணம் செய்வதை தாண்டி விண்வெளிக்கு மனிதர்கள் பயணம் செய்ய ஆரம்பித்து அதிலும் வெற்றியடைந்தார்கள்.

பயணங்கள் பற்றி சொல்ல வேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த பதிவும் பயணம் பற்றியதுதான். ஆனால் இது ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்வது பற்றியது இல்லை. இந்தப் பதிவு காலப்பயணம் (Time Travel) பற்றியது. காலப்பயணம் என்ற சுவாரஷ்யமான விடயத்தை அறிவியல் புனைவுக்கதைகளிலும், அறிவியல் புனைவுத் திரைப்படங்களிலும் அதிகமாக காணலாம்.

காலப்பயணம் (Time Travel) என்பது ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்திற்கு பயணம் செய்வதாகும். அதாவது நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு அல்லது நிகழ்காலத்திலிருந்து இறந்தகாலத்திற்கு பயணம் செய்வதை காலப்பயணம் குறிக்கின்றது.

காலப்பயணம் பற்றி புதிதாக கேள்விப்படுபவர்களிற்கு காலப்பயணம் என்பது புனைவுக்கதை போன்றுதான் தோன்றும். ஆனால் அறிவியல்ரீதியில் காலப்பயணம் தொடர்பாக பல கோட்பாடுகள் உள்ளன.

காலப்பயணம் இதுவரை நிஜவுலகில் சாத்தியப்படவில்லை. ஆனால் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றால் காலத்தைத் தாண்டி பயணம் செய்வது சாத்தியம் என்று கோட்பாடுகள் (Theories) சொல்கின்றன.

காலப்பயணம் தொடர்பான திரைப்படங்களை எடுத்துப் பார்த்தால் அங்கே, மனிதர்கள் காலத்தை தாண்டி பயணம் செய்து நடைபெறும் சம்பவங்களை மாற்றியமைப்பார்கள், ஒருவர் தன்னுடைய இறந்தகாலத்திற்கு சென்று தன்னை சிறுவயதாக இருக்கும் போது சந்திப்பார், சிறுவயத்திற்கு சென்று திரும்பவும் ஆரம்பத்திலிருந்து வாழ்க்கையை வாழ்வார்கள். பார்ப்பதற்கு மிகவும் சுவாரஷ்யத்தை தரக்கூடிய வகையில் அமைந்திருக்கும்.

ஆனால் இவற்றை மட்டும் காலப்பயணம் என்று சொல்லவிட முடியாது.

ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டில் பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் நேரம் ஒரே மாதிரியான வேகத்தில் நகர்வதில்லை என குறிப்பிடுகின்றார். நமது பூமியில் ஒரு மணிநேரமும் பிரபஞ்சத்தின் இன்னொரு மூலையில் வேறொரு கிரகத்தில் உள்ள ஒரு மணிநேரும் சமனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது கிரகத்தின் 1 மணிநேரம் அங்கே 30 நிமிடங்களாக இருக்கலாம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் உங்கள் வயதுடைய நண்பர் ஒருவர் விண்கலத்தின் மூலமாக அந்த கிரகத்திற்கு சென்றுவிடுகிறார். சில வருடங்கள் கழித்து மீண்டும் பூமிக்கு வந்தால் அவருடைய வயது உங்களுடைய வயதைவிட குறைவாக இருக்கும்.

உதாரணமாக, இருவருக்கும் 20 வயது இருக்கும் போது உங்கள் நண்பர் அந்த கிரகத்திற்கு செல்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். 10வருடங்கள் கழித்து திரும்பும் போது உங்கள் வயது 30 ஆக இருக்கும் ஆனால் நண்பரின் வயது 25 ஆகவே இருக்கும். காரணம், பூமியின் நேரத்தின் வேகத்தின் அரைவாசி வேகத்திலேயே அங்கு நேரம் நகர்கின்றது. நேரத்தின் தாக்கம் அந்த கிரத்தில் உள்ள அனைத்திலும் செல்வாக்குச் செலுத்தும்.

இருவரும் ஒரே வருடத்தில் பிறந்திருந்தாலும் உங்கள் நண்பர் 5-வருடங்கள் காலத்தை தாண்டி பின்னோக்கி இருக்கின்றார். இங்கே காலத்தை கடந்திருப்பதால் இதுவும் ஒருவிதமான காலப்பயணம் ஆகும். மனிதனால் அதிவேகமாக செல்லமுடியுமானால் இந்த வகையான காலப்பயணம் சாத்தியப்படலாம்.

முதலில் கூறியது போன்ற திரைப்படங்களில் காட்டப்படுகின்ற காலப்பயணமான ஒரு கால இயந்திரத்தில் (Time Machine) ஏறி எதிர்காலத்திற்குச் சென்று நம்மை நாமே சந்திப்பது, இறந்தகாலத்திற்குச் சென்று நடந்த சம்பவங்களை மாற்றியமைப்பது போன்றவற்றிற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளது.

அவ்வாறு சாத்தியம் இருக்குமானால் எதிர்காலத்தில் இருக்கின்ற மனிதர்கள் நிகழ்காலத்திற்கு வந்து இங்குள்ள மனிதர்களை சந்தித்திருப்பார்கள் என்ற அர்தமுள்ள கேள்விகள் பொதுவாக பலராலும் கேட்கப்படுபவை.

மிகச்சிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) அவர்கள் காலப்பயணம் செய்வது சாத்தியமா என்பதை பரீசோதனை செய்து பார்ப்பதற்காக ஒரு சிறப்பான சம்பவத்தை செய்தார்.

2009 June 28 இல் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் Welcome Time travelers என்று விருந்து (Party) ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டு அங்கே தனியாக காத்திருந்தார். ஆனால் அன்று எந்தவொரு காலப்பயணியும் ஸ்டீபன் ஹாக்கிங்-ஐ சந்திக்கவில்லை. சில காலங்கள் கழித்து அந்த விருந்தினுடைய அழைப்பிதழை வெளியிடுகிறார்.

அந்த நிகழ்விலிருந்து காலப்பயணம் சாத்தியமில்லை என்பதை நிரூபிக்கின்றார்.

ஒரு வேளை காலப்பயணம் சாத்தியம் என்றால் எதிர்காலத்தில் அவருடைய அழைப்பிதழைப் பார்த்த யாரேனும் இறந்த காலத்திற்கு பயணம் செய்து விருந்திற்கு சென்றிருக்க வேண்டும் ஆனால் யாரும் வரவில்லை. இதிலிருந்து காலப்பயணம் சாத்தியமில்லை என்பது ஸ்டீபன் ஹாக்கிங்-இனுடைய கருத்து.

உண்மையில் மிகவும் சுவாரஷ்யமான சம்பவம்தான் ஸ்டீபன் ஹாக்கிங் ஏற்பாடு செய்த விருந்து.

நாம் நிஜ வாழ்க்கையில் காலப்பயணம் மாதிரியான சில சம்பவங்களை அவதானிக்கலாம். தொலைவில் உள்ள நட்சத்திரங்களின் ஒளி நம்மை வந்தடைய பல ஒளி ஆண்டுகள் எடுக்கும். அப்படியானால் மனிதர்கள் அவதானிக்கும் நட்சத்திரங்களின் காட்சி பல வருடங்களிற்கு முன்னர் இருந்த நட்சத்திரங்களின் காட்சிதான்.

ஒளியை விட மிக வேகமாக சென்று பிரபஞ்சத்தின் வேறொரு இடத்திலிருந்து பூமியை அவதானித்தால் பூமியின் கடந்தகால நிலையை அவதானிக்க முடியும். காரணம் தற்போதைய ஒளி அங்கு சேர்வதற்கு முன்னரே நாம் சென்றடைவதால் ஒளி அதன் பின்னரே சென்றடையும்.

ஒளியை விட வேகமாக சென்றால் காலப்பயணம் செய்ய முடியும் என்ற கோட்பாட்டை போலவே கருந்துளை (Black hole) ஊடாக செல்ல முடிந்தால் காலத்தை கடக்க முடியும் என்ற கூற்றும் சொல்லப்படுகின்றது.

ஆராய்ந்து பார்த்தால் காலப்பயணம் தொடர்பாக ஏராளமான கோட்பாடுகள் மற்றும் கருத்துக்களை தெரிந்துகொள்ள முடியும். காலப்பயணம் சாத்தியமில்லை என்பதற்கும் நிறைய காரணங்கள் பலரால் முன்வைக்கப்படுகின்றன.

காலப்பயணம் தொடர்பாக கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் நடைமுறையில் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இன்றைய தொழினுட்பங்களின் மூலமாக காலப்பயணம் சாத்தியப்படாது. எதிர்காலத்தில் சிலவேளைகளில் காலப்பயணம் சாத்தியம் என நிரூபிக்கப்படலாம்.

எவ்வாறாயினும் காலப்பயணம் தொடர்பாக கோட்பாடுகளையும் கதைகளையும் கேட்பதற்கு மிகவும் சுவாரஷ்யமாக உள்ளது. நீங்கள் காலப்பயணம் தொடர்பாக என்ன நினைக்கின்றீர்கள் என்பதை கருத்துக்களாக பதிவு செய்யுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading