போதை இல்லாத உலகம்

எழில்(-ற்-)பிரகாஷ்
Follow me
Latest posts by எழில்(-ற்-)பிரகாஷ் (see all)

நமது சமூகத்தைச் சீரழித்து படுமோசமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு காரணமான விடயங்கள் நிறையவே இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானதொன்று போதைப்பொருள் பயன்பாடு. நீங்கள் நமது சமூகத்தை ஏதேனுமொன்று கெடுக்கின்றது என்று கூறுகிறீர்கள் என்றால் அவை எல்லாவற்றையும் விட பல மடங்கு ஆபத்தானதுதான் போதைப்பொருள் பாவனை.

இன்றைக்கு மனிதன் மிகவும் முன்னேற்றமடைந்துவிட்டான். ஆதிகால மனிதனைப் போலல்லாமல் பண்பட்ட மனிதனாக நாகரிகமுடையவனாக வளர்ந்திருக்கின்றான். ஆனால் போதைப்பொருள் மனிதை சிதைத்து பண்பட்ட இனம் மனிதன் என்ற நிலையிலிருந்து பின்னோக்கி இழுத்துச் செல்லும். அதனால்தான் போதை இல்லா உலகம் ஒன்றை உருவாக்குவது அவசியமாகிறது.

போதைப்பொருள் என்பது உடலில் எடுத்துக்கொண்டவுடன் மனிதனை முழுமையாக அடிமைப்படுத்திவிடும். போதைப்பொருள் எடுத்த ஒருவரால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது. போதை உடலளவிலும் உளவியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். போதைப்பொருள் பயன்படுத்த ஆரம்பித்த ஒருவரால் திடீரென பயன்பாட்டை நிறுத்த முடியாது. ஏனெனில் போதைப்பொருளை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு போதைப்பொருளை பயன்படுத்தியவர் தள்ளப்படுவார். போதைப்பொருள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் நிறுத்துவது கடினம் என்ற காரணத்தினால்தான் அறியாமல் கூட போதைப்பொருளை பயன்படுத்திவிடக்கூடாது.

போதைப்பொருள் என்றால் நிறைய வகைகள் உள்ளன. நீங்கள் செய்தி வாசிப்பவராக இருந்தால் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செய்திகளை படிக்கும்போது பல்வேறு விதமான போதைப்பொருட்களின் பெயர்களை கேள்விப்படுவீர்கள். உதாரணமாக ஹெரோயின், ஹொக்கெயின், கஞ்சா போன்றவை அடிக்கடி கேள்விப்படக்கூடிய போதைப்பொருட்களின் வகைகள். போதைப்பொருள் தூள், மாத்திரை, திரவம், ஊசி போன்ற பல்வேறு வடிவங்களிலும் காணப்படுகின்றது.

நிறையப்பேர் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்றவற்றை போதை என்ற வகைக்குள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அவை கூட போதையை உண்டாக்குகின்ற பொருட்கள்தான். ஏனெனில் அளவுக்கதிகமாக மது எடுத்துக்கொள்பவர்கள் சுயகட்டுப்பாட்டை இழந்துவிடுவார்கள். மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களிற்குள் சென்றவர்களாலும் அவற்றிலிருந்து விடுபடுவது கடினமாக இருக்கும் என்றளவிற்கு அடிமையாகி விடுவார்கள். அப்படிப் பார்க்கும் போது இவைகூட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் போதையை ஏற்படுத்தும் பொருட்களாகவே கருதமுடியும்.

போதைப்பொருள் பாவனை பல்வேறுபட்ட சமூகப் பிரச்சினைகளை உண்டாக்கி சமூகத்தை பின்னடையச் செய்கின்றது. போதைக்கு அடிமையானவர்கள் பலர் நினைக்கின்றார்கள் தான் போதைப்பொருட்களை எடுத்துக்கொள்வதால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை என்று. ஆனால் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களைத் தாண்டி எல்லோருக்குமே பிரச்சினைதான். புகைப்பிடிப்பதைக் கூட தான் தனியே சென்று புகைப்பிடிப்பது தனக்கு மட்டும் பாதிப்போடு முடிந்துவிடுகின்றது என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் போதைப்பொருள் பயன்பாடு அவ்வாறு தனிநபரின் பாதிப்போடு மட்டும் நின்றுவிடுவதில்லை.

போதைக்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீள முடிவதில்லை. அதனால் அவர்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதும் போதைப்பொருளிற்கே சென்றுவிடும். அதுகூட இல்லையென்றால் போதைப்பொருளிற்காக திருட்டுக்களில் ஈடுபடுவார்கள். தன்னுடைய வீட்டிலேயே திருடுகின்ற செய்திகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். போதைப்பொருளை பயன்படுத்திய பிறகு அவர்கள் சுயகட்டுப்பாட்டில் இருக்கமாட்டார்கள். அதனாலே சரியான முடிவுகள் ஏதும் எடுக்கத்தெரியாமல் கொலை செய்கின்ற அளவிற்கே செல்வார்கள். ஒரு மனிதன் நல்லவனாக இருந்தாலும் கூட போதைப்பொருள் பயன்படுத்தினால் அவனை படுமோசமான மனிதனாக மாற்றிவிடும் என்பதே நிதர்சனமான உண்மை.

சமூகத்தில் பலர் போதைப்பொருளிற்கு அடிமையாக இருக்கின்றார்கள் என்றால் சமூகத்தின் சமநிலை பாதிப்படையும். இப்போதெல்லாம் பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் செய்திகளை சர்வசாதாரணமாக கேள்விப்பட முடிகின்றது. சமூகத்தில் மாணவர்களும், இளைஞர்களும், யுவதிகளும் போதைப்பொருள் பாவனையால் தடம்மாறிச் செல்கின்றார்கள் என்றால் அந்த சமூகம் அறிவார்ந்த முன்னேற்றமடைந்த சமூகமாக வளர்ச்சியடையாது.

இவ்வாறு மனித சமூகத்தை சீர்கெடுப்பதில் முதலிடம் வகிக்கின்ற போதைப்பொருள் எவ்வாறு சமூகத்தை ஆட்கொள்கின்றது என்ற கேள்வி உள்ளது. போதைப்பொருள் உலகளவில் பரவலாக இருப்பதற்கும் முழுமையாக தடுக்கப்படாமல் இருப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன. போதைப்பொருள் என்பது உலகளவில் நடைபெறுகின்ற பாரிய வர்தகமாக உள்ளது. போதைப்பொருள் வணிகத்தை நடத்துவதற்காகவே பாரிய வலையமைப்புக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் வணிகத்தில் பெருந்தொகையான பணம் புரள்கிறது. பணம் என்ற ஒன்றிற்காக போதைப்பொருளை சந்தைப்படுத்த வேண்டும். போதைப்பொருளை விற்க வேண்டும் என்ற நோக்கிற்காக மக்களை குறிப்பாக இளைஞர், யுவதிகள், மாணவர்களை போதைப்பொருள் வர்த்தகர்கள் குறிவைப்பார்கள். யார் சிக்குகிறார்களோ அவர்களை போதைப்பொருளிற்கு அடிமைப்படுத்தி அவர்களிடம் போதைப்பொருளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக்கொள்வார்கள்.

போதைப்பொருள் என்பது வெறுமனே பணத்திற்காக நடாத்தப்படும் வணிகம் என்று மட்டும் நினைத்துவிடக்கூடாது. போதைப்பொருள் தனிநபரையோ அல்லது தேசத்தையோ சீரழிப்பதற்கான சக்தி வாய்ந்த ஆயுதம் என்று கூட சொல்லலாம். ஒரு மனிதனின் வளர்ச்சி பிடிக்கவில்லையென்றால் அவரை எப்படியாவது போதைப்பொருளை பயன்படுத்த வைத்துவிட்டால் போதும். அதன் பின்னர் அந்த மனிதருடைய மதிப்பு, ஆரோக்கியம், செல்வம் போன்ற எல்லாம் அவரை விட்டு தூரச் சென்றுவிடும். அவருடைய உயிர் கூட அவரை விட்டுச் செல்லும் நிலைகூட உருவாகலாம்.

அதே போன்றுதான் ஒரு தேசத்தை சீரழிக்க வேண்டுமென்றாலும் போதைப்பொருள் பாவனையை அங்கே பரவலாக்கி விட்டாலே போதும். அந்த தேசத்தில் உள்ள மாணவர்கள் அறிவார்ந்த பிரஜைகளாக உருவாக வேண்டிய நிலையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாக மாற்றப்படுவார்கள். தேசத்தின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டிய தமது உரிமைகளுக்காக போரடவேண்டிய இளைஞர், யுவதிகள் போதைப்பொருளிற்காக உழைப்பார்கள் போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்காக போராடுவார்கள். போதைப்பொருள் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி எந்த மாதிரியான மோசமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும்.

அதனால்தான் போதையினால் ஏற்படுகின்ற அல்லது ஏற்படுத்தப்படுகின்ற மோசமான விளைவுகளை உணர்ந்துகொள்ளக்கூடிய, போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு கொண்ட மனிதர்களையும், சமூகத்தையும் உருவாக்க வேண்டியது அவசியம்.

இப்போதெல்லாம் போதைப்பொருள் தொடர்பான செய்திகளை அடிக்கடி கேள்விப்படக்கூடியதாக இருப்பதால் போதைப்பொருள் என்ற விடயமே சர்வசாதாரணமாக மாறிவிட்டது. போதைப்பொருள் பாவனையும் சர்வசாதரணமான ஒன்றுதான் என்பது போன்ற சூழ்நிலை உருவாகிவிடும்.

சமகாலத்திலேயே பரவலாக போதைப்பொருள் பாவனையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றதென்றால் போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்தப்படாமல் தொடருமாயின் அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமானதாக இருக்கும். சோகம், காதல் தோல்வி என்றால் மது மற்றும் புகைப்பிடிப்பதற்கு அடிமையாவதைப் போல சின்னச் சின்ன விடயங்களிற்கு போதையைத் தேடிப்போகும் மனிதர்கள் உருவாகினாலும் உருவாகலாம். எதிர்மறையான தாக்கங்கள், விளைவுகளை தவிர்த்து சிறந்த சமூகத்தை உருவாக்கவே போதைப்பொருட்கள் இல்லாத உலகம் ஒன்றை உருவாக்குவது அவசியமாகின்றது.

போதை இல்லா உலகம் என்று சொல்வதற்கு நன்றாக இருக்கும். ஆனால் போதைப்பொருளை ஒழிப்பது அவ்வளவு இலகுவான காரியம் இல்லை. நான் முதலில் கூறியது போலவே போதைப்பொருள் என்பது மிகப்பெரிய வணிகம். அவ் வணிகத்தை செய்பவர்கள் யாரும் உலகை சீரழித்துவிடக்கூடாது என்று நினைத்து அவர்களுடைய போதைப்பொருள் வணிகத்தை கைவிடப்போவதில்லை. போதைப்பொருள் வணிகத்தை ஒழிப்பதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கங்களால்தான் முடியும். தமது நாட்டிற்குள் போதைப்பொருள் வர்த்தகம், பயன்பாட்டிற்கு சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசாங்கங்கள் நினைத்தால் மட்டும்தான் போதைப்பொருள் வர்தகத்தை ஒழித்துக்கட்ட முடியும்.

சமூகத்தில் உள்ள தனிநபர்களாலும் போதைப்பொருள் பாவனையை குறைக்க பல விடயங்களைச் செய்ய முடியும். போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்லாம். நிறையப் பேர் போதைப்பொருளிற்கு அவர்களாக விரும்பிச் சென்று அடிமையாவது கிடையாது. அவர்களையே போதைப்பொருள் தேடிவருகின்றது. ஆகவே மக்களிடம் குறிப்பாக சிறுவர்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது அவர்களால் அவதானமாக இருக்க முடியும்.

ஏற்கனவே போதைப்பொருளிற்கு அடிமையாக இருப்பவர்களிற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் பயனற்றவை. விழிப்புணர்வு என்பது போதைப்பொருளிலிருந்து விழிப்பாக இருங்கள் என்று சொல்வதுதான். போதைக்கு அடிமையானவர்கள் என்றால் ஏற்கனவே போதைக்குள் மூழ்கித்தான் இருப்பார்கள் எனவே அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாது. ஆனால் போதைக்கு அடிமையானவர்களிற்கு அதிலிருந்து வெளியே வருவதற்கான ஆலோசனைகளை வழங்கி போதைப்பொருள் பாவனையிலிருந்து வெளியே வருவதற்கு உதவி செய்யலாம்.

போதைக்கு அடிமையாக இருப்பவர்கள் அதிலிருந்து வெளியே வரமுடியாது என்றில்லை. போதைப்பொருளிற்கு அடிமையாகி அதிலிருந்து வெளியே வந்தவர்கள் ஏராளமானோர் உள்ளார்கள். போதைக்கு அடிமையாக இருப்பவர்கள் அதிலிருந்து வெளியே வர போதைப்பொருள் தொடர்பான மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். போதைப்பொருள் பாவனையிலிருந்து வெளியே வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் நிச்சயமாக முடியும். உங்களுடைய உறவுகள், நண்பர்கள் போதைக்கு அடிமையாக இருந்தால் அவர்களை அதிலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு நீங்கள் முயற்சி செய்யலாம்.

போதைப்பொருள் பாவனைக்கு அப்பால் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் இருந்தால் அவற்றலிருந்தும் வெளியே வருவது நல்லது. அவை கூட பயன்படுத்துபவர்களிற்கு தீங்கு விளைவிப்பதோடு அடிமைப்படுத்தியும் வைத்திருக்கும். நிறையப்பேர் மது அருந்துவதற்கும், புகைப்பிடிப்பதற்கும் பல காரணங்களைச் சொல்வார்கள். ஆனால் அவை வெறும் காரணங்களே என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

போதை என்பது மிகக்கொடிய ஆயுதம். போதைப்பொருட்கள் பயன்படுத்துவோரை அழிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் நமது சமூகத்தையும் சேர்த்து சீரழிக்கின்றது. ஆகவே போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு எல்லோரிடத்திலும் இருக்க வேண்டும். போதைப்பொருளினால் ஏற்படும் தாக்கத்திலிருந்து நம்மையும் நமது சமூகத்தையும் காப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். எல்லாரும் ஒன்றுபட்டால் போதை இல்லாத உலகம் ஒன்றை உருவாக்க முடியும்.

Share
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
%d bloggers like this: