வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே நூல் Reasons to Stay Alive என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்த நூல் மேட் ஹெயிக்கினால் (Matt Haig) எழுதப்பட்டு 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. PSV குமாரசாமி தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.

நான் இந்த நூலை வாங்கியதே சுவாரஷ்யமான கதை. இணையத்தில் நூலை அவதானித்தேன். நூலை வாங்குவதற்கு முதற்காரணங்களாக இருந்தவை நூலின் தலைப்பும் முன்பக்க அட்டையில் உள்ள படமும்தான். எனக்கு இப்போது சிரிப்பாக இருந்தாலும் அது உண்மை. இந்நூல் எதைப்பற்றியது என்று பார்த்தது எல்லாம் பின்னர்தான்.

நீங்கள் ஏதேனும் தலைப்பைப் பார்த்து முன்பக்க வடிவமைப்பைப் பார்த்து புத்தகங்கள் வாங்கியிருக்கிறீர்களா? என்று சொல்லுங்கள். தெரிந்துகொள்கின்றேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தலைப்பே ஒருவிதமான ஈர்ப்பைத் தந்தது. நூலின் முன்பக்கத்தில் உள்ள படமும் வித்தியாசமாகத் தெரிந்தது. அதுவொரு சாதாரண புகைப்படம்தான். மரம் ஒன்று முகத்தின் வடிவத்தைப்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வெள்ளை அட்டையில் முன்பக்க வடிவமைப்பு என்னுடைய மனதிற்கு ஒர் ஈர்ப்பைத் தந்தது. ஒரு புத்தகத்தின் முன்பக்க அட்டையின் வடிவமைப்புக் கூட வாங்குவதற்கான எண்ணத்தைத் தூண்டும் என்று நினைக்கின்றேன்.

“வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற தலைப்பைப் பார்க்கும் போது புத்தகம் எதைப்பற்றியது என்று உங்களுக்குத் தோன்றுகின்றது? வாழ்க்கை வாழ்வதைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டிருக்கும் அல்லது வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லப் போகின்றது என்று நினைத்தால் முற்றுமுழுதாக அப்படியில்லை.

இந்நூல் மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ள நூல் என்று சொல்லலாம். நூலாசிரியரான மேட் ஹெயிக் இளவயதிலே மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு சாவின் எல்லைக்குச் சென்று அதிலிருந்து மீண்டு வந்தவர்.

மேட் ஹெயிக் மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் தன்னுடைய வாழ்க்கை எப்படியிருந்தது என்ற அனுபவங்கள், எப்படியான எண்ணங்கள், உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டார் போன்றவற்றை நினைவுக்குறிப்பு மாதிரியே சொல்லியிருக்கின்றார்.

மனத்தளர்ச்சியால் பாதிப்படைந்திருந்த தன்னுடைய அனுபவங்களுடன் அதிலிருந்து வெளியே வருவதற்கு மேட் ஹெயிக் மேற்கொண்ட முயற்சிகள், மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எந்த மாதிரியான வழிகளைப் பின்பற்றலாம் என்று நிறைய நூல்கள் மற்றும் மனிதர்களின் எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கியிருக்கின்றார்.

மேட் ஹெயிக் மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த போது உறுதுணையாக இருந்து பார்த்துக்கொண்டது அவருடைய காதலியான ஆன்ட்ரியா. அவருடைய வாழ்வில் ஆன்ட்ரியா முக்கியமான நபர். நூல் முழுவதுமே ஆன்ட்ரியா பற்றி நிறைய இடங்களில் சொல்லிக்கொண்டே போகின்றார். மேட் ஹெயிக் ஆன்ட்ரியாவை அளவுக்கதிகமாக காதலிக்கின்றார் போல.

மேட் ஹெயிக்கினுடைய கருத்துக்களும் கண்ணோட்டங்களும் படிப்பவர்களுக்கு மனத்தளர்ச்சி பற்றிய புரிதலை எற்படுத்தும். மேட் ஹயிக் மனத்தளர்ச்சிக்குள் சென்ற அனுபவங்களும் அதிலிருந்து வெளியே வந்த அனுபவங்களும் மனத்தளர்ச்சி ஆட்கொண்டிருப்பவர்களுக்கு அதிலிருந்து வெளியே வருவதற்கான ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும்.

நீங்கள் மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால் மட்டும்தான் “வாழ்க்கை வாழ்வதற்கு” என்ற மொழிபெயர்ப்பு நூலை படிக்க வேண்டும் என்றில்லை. மனத்தளர்ச்சி, மனநோய் பற்றிய புரிதலை பாதிப்படைந்த ஒருவரிடமிருந்தே சுவாரஷ்யமான அனுபவங்களாகத் தெரிந்து கொள்வதற்கு இந்நூலை நீங்கள் படிக்கலாம். மனத்தளர்ச்சி உங்களை ஆட்கொள்ளாமல் இருப்பதற்கும் இந்நூல் உதவியாக இருக்கலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading