- தரவறிவியல் – Data Science - November 27, 2023
- திருக்கார்த்திகை தீபம் - November 25, 2023
- 1984 (நாவல்) - November 14, 2023
நீங்கள் அதிகமாக சுயமுன்னேற்றம் சார்ந்த விடயங்களில் ஆர்வமுடைய ஒருவராக இருந்தால் Law of Attraction அல்லது ஈர்ப்பு விதி பற்றி பெரும்பாலும் அறிந்திருப்பீர்கள். ஈர்ப்பு விதி பிரபலமடைந்ததற்குக் காரணம் சுயமுன்னேற்றப் புத்தகங்களாலே ஆகும். குறிப்பாக The Secret (ரகசியம்) என்ற நூல் வெளியிடப்பட்டதன் பின்னர் Law of Attraction மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட ஆரம்பமானது. Think and grow rich எனும் பிரபலமான நூலிலும் ஈர்ப்பு விதி பற்றி பேசப்பட்டுள்ளது. இவ்வாறான பல நூல்களில் ஈர்ப்பு விதி பற்றி பல விதமாகப் பேசப்பட்டுள்ளது.
ஈர்ப்பு விதி என்றால் என்ன? என்பதை இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்காவிட்டால், விதி என்று சொல்லும் போது இந்த விதி விஞ்ஞானம் பற்றியது என்று நினைக்கக்கூடும். ஆனால் ஈர்ப்பு விதி என்பது முற்றிலும் நேரெதிரானது.
ஈர்ப்பு விதி என்றால் என்ன? நாம் அடைய நினைப்பவற்றை நம்மை நோக்கி ஈர்க்கும் விதிதான் ஈர்ப்பு விதி என்று சொல்லப்படுகின்றது. ஒருவர் தான் அடைய நினைக்கும் இலக்குகளை நேர்மறையான எண்ணங்கள் மூலமாக ஆழமாக கற்பனை செய்ய வேண்டும். உங்களுடைய இலக்குகளை ஆழமான எண்ணங்கள் மூலமாக நினைத்து பொறுமையுடன் காத்திருந்தால் இந்தப் பிரபஞ்சம் நீங்கள் நினைத்ததை உங்களுக்குத் தரும். அதாவது உங்களுக்குத் தேவையானதை பிரபஞ்சத்திடமிருந்து உங்களை நோக்கி ஈர்க்க முடியும் என்பதைத்தான் ஈர்ப்பு விதி (Law of Attraction) சொல்கின்றது.
இதைக் கேட்பதற்கு நடக்கமுடியாததொன்றாக அல்லது கட்டுக்கதை போன்று உங்களுக்குத் தோன்றலாம். சிலவேளை, நாம் கேட்டவுடன் கொடுக்கும் அலாவுதீனீன் அற்புத விளக்கு போன்ற கதைகளும் உங்களுடைய ஞாபகத்திற்கு வரலாம். ஆனாலும் அதுதான் ஈர்ப்பு விதி என்று அழைக்கப்படுகின்றது.
உண்மையில் ஈர்ப்பு விதி என்று சொல்லப்படும் விதியை இவ்வாறு சில வரிகளுக்குள் அடக்கிச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் ஈர்ப்பு விதி என்று சொல்லப்படுவது பரந்தளவான விடயங்களை உள்ளடக்கியுள்ளது. ஆனால் அடிப்படையில் நம் எண்ணங்கள் மூலமாக தேவையானதை பிரபஞ்சத்திடமிருந்து கேட்டுப்பெற்றுக்கொள்வதுதான் ஈர்ப்பு விதி என்பது.
பிரபஞ்ச ஈர்ப்பு விதி உண்மையா? பொய்யா? என்பது மிகப்பெரிய விவாதம். நிறையப்பேர் ஈர்ப்பு விதியை நம்புகிறார்கள். அதேநேரம் நிறையப் பேர் ஈர்ப்பு விதியை நம்புவதில்லை. எனக்கு ஈர்ப்பு விதி மேல் நிச்சயமாக நம்பிக்கை இல்லை. நான் அதனை ஒர் கற்பனை விதியாகவே பார்க்கின்றேன். ஏனெனில் ஈர்ப்பு விதி என்ற விடயத்தை தர்க்கரீதியாகப் பார்க்கும் போது அது சாத்தியமே இல்லாத விடயமாகத்தான் தோன்றுகின்றது.
உதாரணத்திற்கு நான் உலகிலேயே மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன் என்று வைத்துக்கொள்வோம். ஈர்ப்பு விதியைப் பயன்படுத்தி எல்லோரையும் விட அதிகமாக பணத்தை ஈர்க்கப் போகின்றேன் என்றால் அது நடப்பதற்கான சாத்தியம் இருக்கின்றதா? எந்த முயற்சியும், எந்த உழைப்பும் இல்லாமல் நம்முடைய மனதினதும் எண்ணங்களினதும் சக்தியை மட்டுமே கொண்டு பிரபஞ்சத்தின் உதவியுடன் பணம் சம்பாதிப்பது சாத்தியமானதா? என்று யோசிக்க வேண்டும்.
ஒருவேளை நம்முடைய ஆழமான எண்ணங்களை மட்டுமே கொண்டு வேண்டியதை அடைய முடியாது, நமக்கு வேண்டியதை அடைய முயற்சி எடுத்தால்தான் பிரபஞ்சம் நமக்கு தேவையானதை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும் என்று சொன்னால் நமக்குத் தேவையானது கிடைத்ததற்கு நம்முடைய முயற்சியே காரணமே தவிர பிரபஞ்சம் இல்லை. அந்த முயற்சியைத்தான் பிரபஞ்சம் நமக்கு உதவி செய்கின்றது என்று சொல்கிறார்கள் போல.
நாம் அடைய நினைக்கும் இலக்குகள் மேல் ஆழமான நம்பிக்கை வைக்கலாம். நம்முடைய இலக்குகளின் மேல் நம்பிக்கை இருந்தால் மட்டும்தான் அதனை அடைவதற்கான அடுத்த அடியை தைரியமாக எடுத்து வைத்து இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருப்போம். அதனால் நம்முடைய இலக்குகளின் மேல் நம்பிக்கை இருக்க வேண்டும்.
ஆனால் ஈர்ப்பு விதியில் சொல்லப்படும் ஆழமான நேர்மறை எண்ணங்கள், நம்பிக்கைகள் மூலமாக மட்டுமே நமக்கு வேண்டியவை கிடைக்கும் என்று சொல்லப்படுபவை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக உள்ளன. நம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள், கற்பனைகள் போன்றவைகள் நமக்கான உத்வேகத்தை வழங்கும் கருவிகளாக இருந்து நமது இலக்குகளை அடைவதற்கு உதவி செய்யுமே தவிர அவை நமக்கு வேண்டியதை பெற்றுத்தரும் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒன்று கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படியானால் நமது எண்ணங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் சக்தி கிடையாதா என்று கேட்டால் அப்படிச் சொல்ல முடியாது. எண்ணம் போல் வாழ்க்கை என்பது உண்மைதான். ஆனால் அதனை ஈர்ப்பு விதி எனும் கற்பனை விதியுடன் இணைத்துப் பார்க்கக்கூடாது. நமது எண்ணங்களும் நம்பிக்கைகளும் நம்மை மேம்படுத்துவதற்கான மிகச்சிறந்த கருவிகளாகவே நாம் பார்க்க வேண்டும்.
ஒர் இலக்கை அடைய நினைக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். என்னால் அந்த அந்த இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையும், நேர்மறை எண்ணங்களும் நமக்குள் இருக்க வேண்டும்.
அந்த நம்பிக்கையும், நேர்மறை எண்ணங்களும் நமக்கான உத்வேகத்தை ஏற்படுத்தும் ஊக்கிகளாகக் கொண்டு இலக்கை நோக்கிய முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். நம்மிடம் நேர்மறை சிந்தனை, நம்பிக்கை இருந்தால் அடுத்தடுத்த படிகளை எடுத்து வைப்பது கடினமான ஒன்றாக இருக்காது. நேர்மறை சிந்தனைகள் இல்லாத ஒருவனால் முதல் அடியை எடுத்து வைப்பதற்கான உத்வேகமே இருக்காது. நமது எண்ணங்கள்தான் நமது இலக்கை நோக்கிய பயணத்தில் பிரதிபலிக்கும். நமது எண்ணங்கள், நம்பிக்கைகள் இவ்வாறுதான் நாம் அடைய நினைப்பதை அடைய உதவி செய்யும்.
ஆனால் ஈர்ப்பு விதி நாம் அடைய நினைப்பதை ஆழமாக கற்பனை செய்வதால் ஆழமாக நம்புவதால் மட்டுமே நமக்குத் தேவையானதை பிரபஞ்சம் தந்துவிடும் என்று சொல்கின்றது. நாம் அடைய நினைப்பதை நோக்கி முயற்சிகள் எடுப்பது, அதை நோக்கிய உழைப்பை போடுவதைப் பற்றியெல்லாம் சொல்லித்தரவில்லை.
ஆரம்பத்தில் நான் கூறியது போலவே, ஒரு வேளை நாம் அடைய நினைப்பதை நோக்கி உழைப்பை போட வேண்டும், முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று ஈர்ப்பு விதியில் சொன்னால் அது நம்முடைய உழைப்பிற்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாக கருத முடியுமே தவிர ஈர்ப்பு விதியால் நடந்தது என்று எப்படிக் கருத முடியும்.
ஒரு வேளை அதுதான் ஈர்ப்பு விதி என்று சொன்னால் தனிமனிதனுடைய உழைப்பையும் முயற்சியையும் ஈர்ப்பு விதி என்ற பெயரால் மறைக்கப்படுகின்றது என்பதாக எடுத்துக்கொள்வதை விட்டு வேறெப்படி எடுத்துக்கொள்ள முடியும்.
ஒரு மனிதன் ஈர்ப்பு விதியை நம்புவது சில நேரங்களில் அவனுக்கு என்னால் முடியும், நான் நினைத்தது எனக்குக் கிடைக்கும் என்ற நேர்மறையான சிந்தனைகளை கொண்டுவருவதற்கு உதவி செய்யலாம். ஒரு மனிதன் தன்நம்பிக்கையை இழந்து வாழ்க்கையை வெறுத்து துவண்டு போயிருந்தால் ரகசியம் (The Secret ) போன்ற புத்தகங்களை படித்து தான் நினைப்பது நடக்கும் என்று நம்புவதன் மூலமாக தனக்குள் உத்வேகத்தை கொண்டுவருவதற்கு ஈர்ப்பு விதி உதவலாம்.
ஆனால் மன உறுதியோடு தன்னுடைய இலக்குகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு, தன்னுடைய இலக்குகளை அடைவதற்கு முயற்சியையும் உழைப்பையும் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு ஈர்ப்பு விதி எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். அந்த மனிதன் ஈர்ப்பு விதியை நம்பிவிட்டான் என்றால் தன்னுடைய முயற்சியின் மீது உழைப்பின் மீது வைக்கும் நம்பிக்கையை விட தன்னுடைய கற்பனையின் மீது வைக்கும் நம்பிக்கை அதிகமாக இருக்கும்.
கடினமான உழைப்பு இல்லாமல் தனது எண்ணங்கள், நம்பிக்கைகள், கற்பனைகள் மூலமாகவே நினைப்பதை அடைய முடியுமென்றால் தான் ஏன் இலக்குகளை அடைவதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி தன்னுடைய முயற்சிகளைக் கைவிடுவதற்கான சூழலை ஈர்ப்பு விதி உருவாக்கும்.
நிறைய மனிதர்கள் தன்னுடைய முயற்சியால் கிடைத்த வெற்றிகளைக் கூட ஈர்ப்பு விதியை பின்பற்றியதால் தான் கிடைத்தது என்று பரப்புரை செய்வது இன்னொரு மனிதன் தன்னுடைய உழைப்பின் மீது வைக்கும் நம்பிக்கையை குறைத்து ஈர்ப்பு விதி போன்ற கற்பனை விதிகள் மேலான நம்பிக்கையை அதிகரிக்கும். தன்னுடைய முயற்சிகள் மேல் கவனம் செலுத்தினால் அடைய வேண்டிய இலக்கில் குறைந்தபட்ச வெற்றியையேனும் அடையலாம். அதைவிடுத்து ஈர்ப்பு விதியை பின்பற்றி நினைத்ததை அடையப்போகின்றேன் என்பது நான் கழுகு போல வானில் பறக்கப்போகின்றேன் என்று நினைப்பதற்குச் சமனானது. அதாவது நடக்கவே முடியாத காரியம்.
ஈர்ப்பு விதி எனும் கற்பனை விதி மூலமாக நினைத்ததை அடைய முடியாது என்றால் நமக்கு வேண்டியதை அடைவதற்கான வழிதான் என்ன? இலக்குகளை அடைவதற்கு சரியான பொருத்தமான முயற்சிகளை எடுப்பது, சரியான முறையில் கடின உழைப்பையும், புத்திசாலித்தனமான உழைப்பையும் போடுவதைத்தவிர வேறு சிறந்த வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே ஈரப்பு விதி எனும் கற்பனையில் மிதப்பதற்குப் பதிலாக தன்னம்பிக்கையுடன் சிறிய முயற்சியையாவது எடுப்பது பயனுள்ளதாக அமையும்.
ஈர்ப்பு விதி என்ற தத்துவத்திலிருந்து நேர்மறை எண்ணங்களுடன் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற என்ற பாடத்தை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் ஈரப்புவிதியிலிருந்து எடுத்துக்கொள்வதற்கு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு மேல் இலக்குகளை அடைவதற்கு நம்முடைய முயற்சிகள் மட்டும்தான் கைகொடுக்கும் என்பதை புரிந்து கொண்டு வாழ்க்கையில் நாம் கொண்ட இலக்குகளை நோக்கிப் பயணிக்க வேண்டும்.