1984 (நாவல்)

1984 ஜோர்ஜ் ஆர்வெல்லினால் எழுதப்பட்டு 1949 ஆம் ஆண்டு வெளிவந்த ஒர் ஆங்கில நாவல். 1984 என்பது வருடத்தைக் குறிக்கின்றது. 1984 ஆம் ஆண்டில் இப்படி நடக்கலாம் என்ற கருத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதே இந்நாவல்.

1984 நாவலை நான் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்தேன். நாவலை வாசிப்பதற்கு முன் நாவலின் விமர்சனங்களைப் படிக்கும் போது கட்டாயமாக படிக்க வேண்டிய நாவல் என்று சொல்வதைப் போல் எழுதியிருந்தார்கள். அதே நேரம் சிலர் கடுமையாகவும் எதிர்மறையாக விமர்சித்திருந்தார்கள். நாவலை முழுமையாக வாசித்து முடித்த பின்னர் நாவலைப் பற்றிய எல்லோருடைய பார்வையையும், எண்ணங்களையும் விளங்கிக்கொள்ள முடிந்தது.

நாவலின் கதை 1984 ஆம் ஆண்டில் நடைபெறுவதாக அமைகின்றது. கதைக்களம் ஒஷானியா எனும் நாட்டில் லண்டன் நகரில் நடைபெறுவதாக கற்பனையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஒஷானியாவின் ஆட்சி கொடுங்கோலான ஆட்சி. ஒஷானிய அரசு மக்களை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. எல்லா இடத்திலும் தொலைத்திரை எனும் கருவி சுவரில் பொருத்தப்பட்டிருக்கின்றது. தொலைத்திரையினூடாக மக்களுடைய செயற்பாடுகளையும், எண்ணங்களையும் அரசு பார்த்துக்கொண்டிருக்கின்றது.

ஒஷானியாவில் சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்தளவிற்கு சுதந்திரம் இல்லையென்றால் சிந்திப்பது ஒர் குற்றமாக கருதப்படுகின்றது. மக்களால் சிந்திக்க முடியாத அளவிற்கு அரசு பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. அதையும் தாண்டி சிந்தித்தால் அந்தக் குற்றத்திற்காக சிந்தனைப் பொலிஸாஸ் கைதுசெய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

ஒஷானியாவில் காதலிப்பதற்குத் தடை. திருமணம் செய்வது, உடலுறவில் ஈடுபடுவது குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே இருக்குமே தவிர அவர்களால் உணர்வுபூர்வமாக எதனையும் அனுபவிக்க முடியாத நிலையில் மக்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

ஒஷானியாவை ஆட்சி செய்யும் கட்சியின் ஆட்சியாளரை பெரியண்ணா (Big brother) என்று அழைப்பார்கள். பெரியண்ணாதான் நாட்டிலுள்ள எல்லோருடைய வாழ்க்கையையும் கட்டுப்படுத்திக்கொண்டிருப்பவர். ஒஷானியாவில் அவர் நினைப்பதுதான் நடக்கும். நாவலில் பெரியண்னாவைப் பற்றி நிறையவே விபரிக்கப்பட்டாலும் கதாப்பாத்திரமாக நாவலில் எங்கேயும் வரவில்லை.

இப்படிப்பட்ட கொடுங்கோலான ஆட்சியில் விஸ்டன் ஸ்மித் எனும் பெரியண்ணாவின் ஆட்சிக்கு எதிரான எண்ணத்தைக் கொண்ட மனிதனின் வாழ்க்கையை விபரிக்கின்றது 1984 நாவல். அல்லது விஷ்டனின் மூலமாக ஒஷானியாவின் ஆட்சியையும் ஒஷானியா நாட்டின் வாழ்வியலையும் விபரிக்கின்றது என்று சொல்லலாம்.

விஷ்டன் ஸ்மித் சத்திய அமைச்சகத்தில் (Ministry of Truth) வேலை செய்கின்றார். விஷ்டனின் வேலை பழையவற்றை திருத்தி எழுதுவது. அதாவது கடந்த காலத்தில் பெரியண்ணா நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்திருப்பார், எதிர்வுகூறல்களை கூறியிருப்பார். அவை செய்தித்தாள்கள், புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்கள், பருவ இதழ்கள் போன்றவற்றில் வெளியாகியிருக்கும். பெரியண்ணாவின் எதிர்வுகூறல்கள், வாக்குறுதிகள் பொய்த்துப்போகும் நேரங்களில் தற்போதைய நிலவரத்திற்கு ஏற்றபடி கடந்த காலத்தில் வெளியான எல்லாவற்றிலும் மாற்றங்களைச் செய்து திரும்ப வெளியிட வேண்டும். இப்படிச் செய்யும் போது பெரியண்ணா கடந்த காலத்தில் கூறியது எல்லாமே உண்மையில் நடப்பதாக மாறிவிடும்.

கடந்த காலத்தில் நாடு எப்படி இருந்தது என்பது மக்களுக்கு ஞாபகமில்லாத அளவிற்கு கடந்த காலத்தை விட தற்போது நாடு சிறந்த நிலையில் இருப்பதாக மக்கள் நம்புகின்ற அளவிற்கு மக்கள் கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் விஷ்டனுக்கு உண்மையான நிலவரம் தெரியுமென்பதால் ஒஷானியாவின் ஆட்சிக்கெதிரான எண்ணங்களைக் கொண்டிருக்கின்றார். கட்சிக்கெதிரான எண்ணங்களைக் கொண்ட டயரி ஒன்றைக்கூட விஷ்டன் பேணுகின்றார். இவையெல்லாம் மிகப்பெரிய சிந்தனைக்குற்றம்.

இந்நிலையிலே விஷ்டனுக்கு ஜீலியாவுடன் காதல் ஏற்படுகின்றது. விஷ்டனும் ஜீலியாவும் தொலைத்திரை இல்லாத இடங்களாகத் திரிந்தும் கூட்டங்களுக்கு மத்தியிலும் சந்தித்துக்கொள்கின்றார்கள், காதலிக்கிறார்கள், உடலுறவு கொள்கிறார்கள். இவையெல்லாம் மிகப்பெரிய சிந்தனைக்குற்றங்கள்.

விஷ்டன் மற்றும் ஜூலியா இருவருக்குமிடையிலான ரகசிய சந்திப்புகள், காதலிப்பது போன்றவை வருகின்ற பகுதியிலிருந்து நாவல் சுவாரஷ்யமாகவே இருந்தது.

ஒரு கட்டத்தில் விஷ்டனும் ஜூலியாவும் சுதந்திரத்திற்காகவும், நீதிக்காகவும் அரசை எதிர்த்து செயற்பட முடிவெடுக்கின்றார்கள். பெரியண்ணாவின் கட்சிக்கு எதிராக இயங்குகின்ற கோல்ட்ஸ்டெயின் என்பவரின் கீழ் இயங்க நினைக்கின்றார்கள்.

பொதுவாக சிந்தனைக்குற்றங்களில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்படுவார்கள். பின்னர் காணாமல் ஆக்கப்படுவார்கள். அப்படிப் பார்க்கும் போது விஷ்டனும் ஜீலியாவும் செய்யும் செயற்பாடுகளிற்காக சிந்தனைப் பொலிஸால் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடைய நிலை என்ன? என்றவாறு நாவலுடைய பாதிக்கு மேற்பட்ட பகுதி நகர்கின்றது. நாவலை ஆரம்பிக்கும் போது இல்லாத விறுவிறுப்பும் திரும்பங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இறுதிவரை செல்கின்றது.

இந்நாவலின் மையக்கதை, அரசு, கட்சி, கதாப்பாத்திரங்கள் கற்பனையாக இருக்க முடியாது. நிஜ உலகில் இருந்த அரசு, ஆட்சி, கட்சி, கதாப்பாத்திரங்களை சித்தரிப்பவையாக இருப்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பெரியண்ணா போன்ற ஆட்சியாளர்களையும்,  கோல்ஸ்டெயின் போன்றவர்களையும், விஷ்டன் போன்றவர்களையும் காணலாம். அரசு நினைப்பதுதான் மக்களின் எண்ணமாக இருக்க வேண்டும் என்ற அடக்குமுறையான ஆட்சியையும் காணலாம்.

எனக்கு நாவலில் மிகவும் கவர்ந்த விடயம் தொலைத்திரை. நாவலில் தொலைத்திரை பற்றி கூறும் போது என்னுடைய மனதில் தோன்றயது இன்றைய நவீன காலம்தான். இன்றைய தொழினுட்பங்களை பயன்படுத்தி அரசால் மக்களை கண்காணிக்க முடிகின்றது. நாவலில் காட்டப்படுகின்ற தொலைத்திரைக்குப் பதிலாக இன்றைய தொழினுட்ப சாதனங்களினூடான கண்காணிப்பை எடுத்துக்கொள்ள முடியும்.

எல்லா இடங்களிலும் கண்காணிப்புக் கமெராக்கள், எல்லோருடைய கைகளிலும் மொபைல் சாதனங்கள். எங்கு சென்றாலும் ஏதேனுமொரு டிஜிற்றல் சாதனம் இருக்கும். இவையெல்லாம் ஒட்டுமொத்த மனிதர்களையும் கண்காணித்துக் கொண்டிருப்பதை நினைவுப்படுத்தியது.

இன்று தனியார் நிறுவனங்கள் அவர்களுடைய சேவைகள், செயலிகளைப் பயன்படுத்தி தனிமனிதனுடைய தரவுகளை எடுத்துக்கொள்கின்றன. ஒருவருடைய சாதனத்தில் ஊடுருவி முழுமையாக கண்காணிக்க முடிகிறது. அதே போன்று ஒரு மனிதனைப் பற்றிய தரவுகளை அரசு எடுக்க வேண்டுமென்றால் இணையத்துடனான தொழினுட்பம் மட்டுமே போதுமானது. இவ்வாறன நிலை இன்று இருக்கின்றது.

எதிர்காலத்தில் எங்கும் தொழினுட்பம் எதிலும் தொழினுட்பம் எனும் நிலை வரும்போது அரசு நினைத்தால் ஒரு மனிதனைக் கண்காணிப்பது அவ்வளவு பெரிய விடயமில்லை. ஒரு மனிதனின் அசைவுகளை வைத்தே அவனுடைய எண்ணங்களை செயற்கை நுண்ணறிவு மூலமாக கணிக்க முடியும். அவ்வாறான நிலையில் நாவலில் வரும் தொலைத்திரை ஒன்றுமேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எதிர்காலத்தில் யாரும் நம்மை கண்காணிக்கக் கூடாதென்றால் விஷ்டனும் ஜூலியாவும் தொலைத்திரை இல்லாத இடத்தைக் கண்டுபிடித்து இருவரும் சந்தித்துக்கொள்வதைப் போல நாமும் காட்டிற்குத்தான் செல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன்.

இன்று மொபைல் மூலமாக ஒவ்வொரு மனிதனும் கண்காணிக்கப்படுவதற்கு மனிதர்கள் பழக்கப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை. நீங்களே சொல்லுங்கள் உங்களுடைய தரவுகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்று தெரிந்துதானே பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம். அதே போன்றுதான் அரசு ஒட்டுமொத்த மக்களையும் கண்காணிக்க ஆரம்பித்தாலும் அது பழகிவிடும் என்றுதான் நினைக்கின்றேன். ஆனால் அவ்வாறு செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சிலர் நாவலைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்களை முன்வைப்பார்கள். ஆனால் நாவல் நிறையவே உண்மையான  விடயங்களையும் கருத்துக்களையும் கூறுகின்றது. அதனாலே நீங்களும் 1984 நாவலைப் படிக்கலாம். 1984 நாவலைப் படிப்பதன் மூலமாக புதிதாக நிறைய விடயங்களைத் தெரிந்துகொள்வதோடு விஷ்டனினதும் ஜூலியாவினதும் காதலையும் காணலாம்.

நீங்கள் 1984 நாவலைப் படித்திருக்கின்றீர்களா? 1984 நாவல் பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் இந்தப் பதிவு பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments