பப்ஜியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

Last updated on January 26th, 2024 at 11:45 pm

பப்ஜி போன்ற Battle Royale கேம்களை நீங்கள் விளையாடியிருப்பீர்கள். விளையாடியிருக்காவிட்டாலும் கூட இன்றைய தலைமுறையினர் எல்லோருமே பப்ஜி போன்ற Battle Royale கேம்கள் பற்றி நிச்சயமாகத் தெரியும்.

பப்ஜி போன்ற கேம்கள் விளையாடுகிற ஒருவரால் அந்த வீடியோ கேமையும் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும் தெரியுமா? நான் அதிகமாக FreeFire விளையாடிக்கொண்டிருந்த நாட்கள் இருக்கின்றன. அதனைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த போது இந்த மாதிரியான சுவாரஷ்யமான எண்ணம் மனதில் தோன்றியது.

அதிகமாக Battle Royale விளையாடுகிறவராக நீங்கள் இருந்தால் அதிலிருந்து நமது வாழ்க்கைக்கு தேவையான நிறையப் பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். கேட்பதற்கு முட்டாள்தனமாக தெரிந்தாலும் அவற்றை நாம் யோசித்துப்பார்த்தால் புரிந்துகொண்டால் வாழ்வில் வெற்றியாளராக மாற முடியும்.

Battle Royale கேம்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைக்குத் தேவையான சில பாடங்களை பார்க்கலாம்.

விடாமுயற்சி வெற்றி தரும்

Effort

பொதுவாகவே வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கின்ற ஒருவர் தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டேயிருக்கின்ற காரணத்திற்காக விளையாடுவதை நிறுத்திவிட்டு விளையாடமால் இருக்க மாட்டார். திரும்பத் திரும்ப முயற்சி செய்து வெற்றியடையவே முயற்சி செய்துகொண்டிருப்பார்.

ஆனால், நிஜ வாழ்க்கையில் ஒரு செயலை செய்யும் போது தோற்றுவிட்டால் இடைநடுவில் நிறுத்திவிடுகிறார்கள். கேம்ஸ் போன்று அந்தளவிற்கு ஈடுபாட்டுடன் விடாமல் திரும்ப திரும்ப முயற்சி செய்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஏதோவொரு செயலை செய்யத்தொடங்கி ஒரிரு தடவைகளில் தோற்றுவிட்டால் அதனை கைவிட்டுவிட்டு வேறு வேலையை பார்க்கசென்று விடுவோம். வாழ்க்கையும் பப்ஜி என நினைத்துக்கொள்ளுங்கள். விடாமால் முயற்சி செய்து திரும்ப திரும்ப விளையாடி Conqueror போவதை போல என்று நினைத்துக்கொள்ளுங்கள். எந்த செயலையும் விடாமல் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது அவசியம்

Mistake

பப்ஜியில் நீங்கள் செய்த தவறினால் எதிரி உங்களை Kill செய்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். என்ன செய்திருந்தால் என்னை Enemy கொன்றிருக்க மாட்டார், இனிமேல் இதேமாதிரியான நிலைமை வந்தால் எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றி யோசிப்பீர்கள்.

அடுத்த தடவை விளையாடும் போது ஏற்கனவே அனுபவப்பட்டிருப்பதால் அந்த தவறுகளை சரி செய்து கொள்வீர்கள். நிறைய தவறுகள் செய்து அதிலிருந்து கற்றுக்கொள்பவர்கள்தான் பின்னர் நன்றாக விளையாடுவார்கள்.

இதே போன்றுதான் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும். ஏதோவொரு செயலை செய்யும் போது தவறுகள் ஏற்பட்டு தோல்வி ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து ஏன் இப்படி ஏற்பட்டது, எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

தவறுகளிலிருந்து கிடைக்கும் அனுபவத்தின் மூலமாக அதே செயலை திரும்பச் செய்யும் போது வினைதிறனாக செய்ய முடியும். அதனால், தவறுகள் வந்துவிட்டதே என்று வருத்தப்படாமல் அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அனுபவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

புதிதாக கற்றுக்கொள்வதால் வெற்றி அடைய முடியும்

Learn

பப்ஜியாக இருந்தாலும் சரி வாழ்க்கையாக இருந்தாலும் சரி புதிது புதிதாக கற்றுக்கொண்டால் மட்டும்தான் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்.

பப்ஜி விளையாடத் தொடங்குகிற நாட்களில் பப்ஜி எப்படி விளையாட வேண்டும் என்பதே தெரியாத ஒருவராக இருப்போம். பின்னர்தான் கேமில் உள்ள அடிப்படையான விடயங்களையும், நுணுக்கங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு பயிற்சி செய்து Pro வெலலுக்கு செல்வோம். பப்ஜியில் புதிது புதிதாக கற்றுக்கொண்டால்தான் ஆரம்ப நிலையிலிருந்து மேம்பட்ட நிலைக்குச் செல்ல முடியும்.

அதே போன்றுதான் வாழ்க்கையும். ஒரு துறையில் உயர்ந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமென்று விரும்பினால் அத்துறை சார்ந்து தினம் தினம் புதிது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருவரை குறைத்து மதிப்பீடு செய்யக்கூடாது

இந்த தவறை செய்யாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒருவரை பார்வையில் மதிப்பீடு செய்கின்ற தவறை பெரும்பாலானோர் செய்யலாம்.

பொதுவாக Battle Royale கேம்களில் பணம் கொடுத்து Skins, Costumes போன்றவற்றை வாங்கி விளையாட முடியும். அதனை வைத்தே ஒருவரை விளையாடத் தெரியாவிட்டாலும் பலர் Pro Player என நினைப்பதுண்டு. எதுவும் இல்லாமல் நன்றாக விளையாடுபவனையும் Noob என்றும் நினைப்பதுண்டு.

ஒருவருடைய Costumes-ஐ வைத்து அவன் எப்படி விளையாடுவான் என்பதை மதிப்பீடு செய்ய முடியாது. வீடியோ கேம்களில் எதிரிகளை பார்ப்பதற்கு Noob Player மாதிரி இருப்பதால் குறைத்து மதிப்பிட்டு தோற்றவர்கள் உண்டு. பார்ப்பதற்கு Pro Player மாதிரியே இருக்கின்ற விளையாடவே தெரியாதவர்களும் இருக்கின்றார்கள்.

வாழ்க்கையும் இப்படித்தான், Battle Royale கேம்களில் இருந்து இந்த விடயத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். வெளியே தெரிகின்ற விம்பத்தை வைத்துக்கொண்டு உங்களுடைய நண்பர்களையோ அல்லது எதிரிகளையோ மதிப்பீடு செய்துவிடக்கூடாது.

பொறுமை மிகவும் அவசியம்

எவ்வளவு பெரிய திறமையாளராக இருந்தாலும் பொறுமை இல்லாவிட்டால் எந்த பயனும் இல்லை. வீடியோ கேம்ஸ் ஆடுபவர்களிற்குத் தெரியும், பொறுமை எந்தளவிற்கு முக்கியம் என்பது. தீவில் இறங்கியதிலிருந்து கடைசி வரை ஒவ்வொரு படியையும் பொறுமையாக யோசித்து எடுத்துவைக்க வேண்டும்.

சில பேர் விளையாட்டின் கடைசி வரை சண்டையிடாமல் பொறுமையாக இருந்து இறுதியில் வெற்றியடைகின்றவர்களும் இருக்கின்றார்கள். ஒரு Enemy Team கண்ணில் பட்டுவிட்டால் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவர்களை கொன்றுவிடலாம் என்று முன்னோக்கி சென்றால் நீங்கள் கொல்லப்படுவதற்கான வாய்ப்புதான் அதிகம். இதுவே பொறுமையாக இருந்து திட்டமிட்டு செயற்பட்டால் வெற்றி உங்களுக்கே.

வாழ்க்கையிலும் பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் இன்று ஒரு செயலை செய்தால் அந்த செயலுக்கான பலன் பொறுமையாக இருந்தால் நாளை கூட கிடைக்கலாம்.

இன்றைய தலைமுறையினரிடம் இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை எதுவாக இருந்தாலும் உடனே கிடைத்துவிட வேண்டும் என்று யோசிப்பது. பொறுமையாக கிடைத்தாலும் பிரச்சினையில்லை என்ற எண்ணம் இல்லை.

புதிதாக ஏதாவது முயற்சி செய்துவிட்டு அதன்கான பலன் கிடைக்காவிட்டால் அப்படியே அதனை விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்கப்போய்விடுவார்கள். தொடர்ந்து வேலையை செய்வதற்கு கூட பொறுமை இருக்காது.

ஆகவே, எல்லோருமே பொறுமையை வளர்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக இருந்தால் நிச்சயமாக நினைத்ததை அடையமுடியும்.

நம்மிடம் உள்ள வளங்களை சரியாக பயன்படுத்த வேண்டும்

வாழ்க்கையில் ஒரு செயலை செய்யாதற்கு பல காரணங்கள் சொல்பவர்கள் அதிகம். அது இல்லை, இது இல்லை என்று எல்லாவற்றுக்கும் ஏதோவொரு காரணம் சொல்லிக்கொண்டு எதனையும் முயற்சிக்காமல் அப்படியே இருந்துவிடுகிறார்கள்.

பப்ஜியில் தீவில் இறங்கி விளையாட்டின் இறுதிக்கட்டத்திற்கு சென்றுவிட்டீர்கள். இப்போது உங்களிடம் மிகக்குறைந்தளவிலான Loots மட்டும்தான் இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

என்னிடம் இப்போது Loots எதுவும் இல்லை என்பதால் ஆட்டத்தை விட்டு வெளியே வந்துவிடுவீர்களா? நிச்சயமாக இல்லை. இருக்கின்ற குறைந்தளவான Loot-ஐ வைத்து எப்படி Chicken Dinner அடித்து வெற்றியடைய வேண்டும் என்றுதான் யோசிப்பீர்கள்.

நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான். நம்மிடம் இருக்கின்ற வளங்களை வைத்துக்கொண்டு நாம் செய்ய நினைக்கின்ற வேலைகளை செய்ய முயற்சி செய்ய வேண்டும். என்னிடம் அது இல்லை இது இல்லை என்று காரணங்கள் சொல்லக்கூடாது.

நான் Battle Royale கேம்ஸ் விளையாடியிருக்கின்றேன். அந்த நேரத்தில் கேம்-ஐ வாழ்கையுடன் ஒப்பீடு செய்கின்ற மாதிரியான சிந்தனைகள் எனக்கு தோன்றியது. இன்று என் சிந்தனையில் வந்த சில வாழ்க்கை பாடங்களை உங்களுடன் பகிர்ந்திருக்கின்றேன்.

வீடியோ கேம்ஸ் விளையாடுவது ஒன்றும் தவறான செயல் இல்லை. ஆனால் அதற்கு அடிமையாவதுதான் பிரச்சினை. யாரும் வீடியோ கேம்ஸிற்கு அடிமையாகிவிடாதீர்கள். 

மேலே சொன்ன விடயங்கள் சுவாரஷ்யமானதாக இருந்தாலும் உண்மையிலே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்தான். அவற்றை நாம் வாழ்க்கையில் பின்பற்றி முன்னேற வேண்டும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading