வானம் ஏன் நீல நிறமாக தோன்றுகிறது?

Last updated on January 28th, 2024 at 07:21 pm

நாம் வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்தால் வானம் நீல வண்ணத்தில் ஜொலித்துக்கொண்டிருக்கும். மஞ்சள், பச்சை, கறுப்பு, சிவப்பு, ஊதா என அத்தனை வண்ணங்கள் இருந்தாலும் வானம் எதனால் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த கேள்வி வானத்தைப் பார்க்கும் போது உங்களுக்குத் தோன்றலாம்.

ஒரு சிலர் தவறான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள். அதாவது கடல் மற்றும் சமுத்திரத்தின் பிரதிபலிப்பினால்தான் வானம் நீலநிறத்தில் உள்ளது என்ற தவறான புரிதல்.

வானத்தின் நீல வண்ணத்திற்கு கடல் மற்றும் சமுத்திரத்தின் பிரதிபலிப்புத்தான் காரணம் என்றால் எதனால் சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் வானம் நீல நிறத்தில் தோன்றாமல் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றது என்ற கேள்வி தோன்ற வேண்டும்.

வானம் ஏன் நீல நிறமாக உள்ளது? சூரிய உதயத்தின் போதும் மறைவின் போதும் வானம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றது? போன்ற கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவின் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் உள்ளன. ஏழு நிறங்களையும் ஒன்றாகச் சேர்த்தால் வெள்ளை நிறம் கிடைக்கும். அதனால்தான் சூரிய ஒளி வெள்ளை நிறமாக உள்ளது. சூரியனிலிருந்து வரும் ஒளியில் உள்ள ஏழு நிறங்களின் வெளிப்பாடுதான் வானில் தோன்றும் வானவில்.

சூரியனிலிருந்து வரும் ஒளி பூமியின் வளிமண்டலத்தினுள் நுழையும் போது ஏழு நிறங்களும் சிதறடிக்கப்படுகின்றது. வளிமண்டலத்தில் சிதறலடைகின்ற நிறங்களுள் அதிகளவாக சிதறடிக்கப்படுவது நீல வண்ணமாகும். இதன் விளைவாக வானம் நீலநிறத்தில் தோற்றமளிக்கிறது.

நீலம் அதிகளவில் சிதறடிக்கப்படுவதற்கு அலைநீளம் என்பது காரணமாக உள்ளது. ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அலை நீளம் இருக்கின்றது. அதிக அலைநீளம் கொண்ட நிறம் சிவப்பு. குறைந்த அலைநீளம் கொண்ட நிறம் நீலம்.

குறைந்த அலை நீளம் கொண்ட நிறம் வளிமண்டலத்தில் அதிகளவாக சிதறலடையும். அதிக அலைநீளம் கொண்ட நிறம் வளிமண்டலத்தில் சிதறலடைவது குறைவாக இருக்கும்.

நீல வண்ணம் குறைந்த அலைநீளத்தைக் கொண்டிருப்பதனால் வானில் அதிகளவாக சிதறலடைந்து வானம் நீல நிறமாக தோற்றமளிக்கின்றது.

வானம் நீலநிறத்தில் தோற்றமளிப்பதற்கு அலை நீளம் குறைவு என்பது காரணமாக உள்ளது. சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் வானம் ஏன் சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கிறது?

குறைந்த அலைநீளம் கொண்ட நிற ஒளி அதிகமாக சிதறடிக்கப்படுவதால் அது செல்லும் தூரம் குறைவாகவே இருக்கும். அதே நேரம் அதிக அலை நீளம் கொண்ட நிற ஒளி குறைவாக சிதறடிக்கப்படுவதால் செல்லும் தூரம் அதிகமாக இருக்கும்.

இதனால்தான் அதிக தூரம் செல்ல வேண்டிய சமிஞ்ஞைகளுக்கு சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சூரியன் மறையும் போது, உதிக்கும் போது வளிமண்டலத்தினூடாக சூரிய ஒளி நம்மை வந்தடைவதற்கான தூரம் அதிகமாக இருக்கின்றது.

நீல நிறத்தின் அலை நீளம் குறைவாக இருப்பதன் விளைவாக நீல நிறத்தால் வளிமண்டலத்தில் அதிக தூரம் பயணம் செய்து நம் கண்களை வந்தடைய முடியாது. இதுவே சிவப்பு நிறத்தின் அலைநீளம் அதிகம் என்பதால் வளிமண்டத்தில் சிதறலடையும் ஒளியில் சிவப்பானது அதிக தூரம் பயணித்து நம் கண்களை வந்தடைகின்றது.

இதன் காரணமாகவே சூரியன் மறையும் போதும் உதிக்கும் போதும் அடிவானம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றது.

இயற்கை நீலம், சிவப்பு போன்ற அழகிய வானத்தையும் வானவில், அரோரா போன்ற அழகிய இயற்கை நிகழ்வுகளையும் நமக்குத் தந்துள்ளது. அவற்றை நாம் இரசிக்க கற்றுக்கொள்வோம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading