புத்தாண்டு தீர்மானங்களும் தோல்வியும்

Last updated on January 13th, 2024 at 01:06 pm

புதுவருடம் ஆரம்பிக்கும் போது பொதுவாக மக்களால் பின்பற்றப்படுபவற்றுள் முக்கியமானது புத்தாண்டு தீர்மானங்கள் (New Year Resolution) மேற்கொள்வது. நம்மால் நிறைய விதமாக வாழ்க்கையை மேம்படுத்தும் புத்தாண்டு தீர்மானங்கள் எடுக்க முடியும். ஆனால் அவற்றை பின்பற்றுவது சவாலானா விடயம் என்பதுதான் உண்மை.

நிறையப் பேரால் தாம் எடுத்த தீர்மானங்களை ஒரு மாதம் கூட பின்பற்ற முடிவதில்லை. ஒரு வாரத்தில், ஒரே நாளில் தம்முடைய தீர்மானங்களை கைவிடுபவர்களும் ஏராளமானோர் உள்ளார்கள். ஒரு சிலர் மட்டும்தான் தொடர்சியாக பல மாதங்களாக வருடம் முழுவதும் தான் எடுத்த தீர்மானத்தைப் பின்பற்றுவார்கள்.

ஏன் பலரால் தாம் எடுத்த தீர்மானங்களை ஒரு வாரம் கூட பின்பற்ற முடிவதில்லை? நாம் புத்தாண்டு தீர்மானத்தை எப்படி தொடர்ச்சியாக பின்பற்றுவது? என்ற கேள்விகள் உங்களுக்கு இருந்தால் இந்தப் பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வளவு காலமாக நம்மால் செய்ய முடியாத ஒரு காரியத்தை திடீரென ஒரு நாளிலிருந்து தொடர்ச்சியாக செய்ய முடியுமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். புதுவருட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் பல பேர் இப்படித்தான் செய்கிறார்கள்.

புதிய வருடத்திலிருந்து காலையில் 5 மணிக்கு விழித்துக்கொள்ள வேண்டும் என தீர்மானம் ஒன்றை ஒருவர் எடுத்திருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். இதுவரை நாட்களும் காலை 8 மணிக்கு நித்திரையிலிருந்த ஒருவரால் திடீரென ஒரு நாளிலிருந்து தொடர்ச்சியாக 5 மணிக்கு எழுந்துகொள்ள முடியுமா? என்றால் நடைமுறையில் சாத்தியமில்லை. பலருடைய புதுவருடத்தீர்மானங்கள் தோல்வியில் முடிவடைய இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

இந்த பிரச்சினை இல்லாமல் புதுவருடத்திலிருந்து ஒரு தீர்மானத்தை எடுத்து பின்பற்ற வேண்டும் என்றால் புத்தாண்டு ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே அதற்கு ஆயத்தமாக வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக புதுவருடத்தில் தீர்மானத்தை கடைப்பிடிக்க கூடிய சூழ்நிலையைை உருவாக்க வேண்டும்.

உதாரணமாக, காலை 5 மணிக்கு விழித்துக்கொள்ள நினைத்தால் புது வருடத்திற்கு சில நாட்கள் முன்பிருந்தே வழமையாக எழுந்துகொள்ளும் நேரத்திலிருந்து முன்னர் எழுந்து கொள்ள பழக்கப்படுத்திக்கொண்டு வந்தால் புதுவருடம் ஆரம்பிக்கும் போது 5 மணிக்கு எழுந்துகொள்ள இலகுவாக இருக்கும்.

அதே போல தினமும் 1 மணித்தியாலம் புத்தகம் வாசிக்க வேண்டும் என தீர்மானம் எடுத்தால் புதுவருடத்திற்கு முன்பிருந்தே சில நிமிடங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஆரம்பித்தால்தான் புதுவருடம் நெருங்கும் போது நிமிடங்களால் அதிகரித்து ஒரு மணித்தியலாம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கொண்டுவர முடியும்.

எந்தவொரு தீர்மானத்தையும் தீடீரென செயற்படுத்துவது கடினம். புத்தாண்டிற்கு முன்பிருந்தே நாம் செய்ய நினைக்கிற செயலை கொஞ்சம் கொஞ்சமாக செயற்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இப்படிச் செய்தால் புத்தாண்டில் நாம் எடுத்த தீர்மானங்களை இலகுவாகவே பின்பற்றலாம்.

New Year Resolution

புதுவருடத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவேன் அல்லது இதனை செய்து முடிப்பேன் என்று தீர்மானங்கள் எடுப்பது நல்லதுதான். ஆனால் நம்பமுடியாத அல்லது நடக்க முடியாத தீர்மானங்கள் எடுத்தால் அது தோல்வியில்தான் முடிவடையும்.

உதாரணமாக அடுத்த வருடத்தில் மிகப்பெரிய செல்வந்தராக மாறுவேன் என யார் வேண்டுமானாலும் தீர்மானம் எடுக்கலாம். ஆனால் இந்த தீர்மானம் சாத்தியமா? என்பதை யோசிக்க வேண்டும். என்னிடம் எந்த திட்டங்களும் இல்லை. எந்த முதலீடுகளும் இல்லை என்ற நிலையில் Motivational வீடியோ ஒன்றை பார்த்துவிட்டு தற்காலிகமாக கிடைக்கும் உத்வேகத்தில் நான் அடுத்த வருடத்தில் செல்வந்தர் ஆகுவேன் என தீர்மானம் எடுத்தால் நிச்சயமாக அது தோல்வியில்தான் முடிவடையும்.

ஆகவே, நமது தீர்மானங்கள் நம்மால் நிறைவேற்றக்கூடிய / செயற்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருப்பது மிக மிக அவசியம்.

சிலர் தீர்மானங்கள் எதற்காக எடுக்கிறார்கள் என்றால் மற்றவர்கள் தீர்மானம் எடுக்கிறார்கள் ஆகவே நானும் தீர்மானம் எடுக்கிறேன் என தீர்மானம் எடுக்கிறார்கள். அதிலும் என்ன தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதை தான் தீர்மானிக்காமல் அதனையும் மற்றவர்களிடம் கேட்டு தீர்மானிப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஒருவர் தமது இலக்குகளில் வெற்றியடைவதற்காகவும், தன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவுமே தீர்மானங்கள் எடுக்க வேண்டுமே தவிர எல்லோரும் எடுக்கிறார்கள் அதனால் நானும் தீர்மானம் எடுக்கிறேன் என்று தீர்மானம் எடுத்தால் அந்த தீர்மானம் பிரயோசனமற்றது. அந்த தீர்மானம் தோல்வியில் முடிவடையும்.

அதேபோல் தீர்மானம் எடுப்பது நமக்காக, நாம் எடுத்த தீர்மானங்களை நமக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும். நம்முடைய தீர்மானங்கள் பற்றி வெளியே சொல்வது தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நமக்குள் இருக்கும் உத்வேகத்தை குறைத்துவிடும்.

ஆகவே, நம்மால் செயற்படுத்துவதற்குச் சாத்தியமான சரியான தீர்மானங்களை எடுத்து சரியாகப் பின்பற்றி தீர்மானங்கள் தோல்வியடைவதை தவிர்த்து நமது இலக்குகளில் வெற்றியடைவோம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading