Dropshipping Business என்றால் என்ன?

Last updated on January 27th, 2024 at 11:20 pm

இன்றைக்கு நிறைய வணிகங்கள் இணையத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. இணையத்தை அடிப்படையாக வைத்து இயங்குகின்ற வணிகங்களை நிகழ்நிலை வணிகம்/ஆன்லைன் வணிகம் (Online Business) என்று அழைக்கலாம். Dropshipping என்பதும் ஆன்லைன் வணிகத்தில் ஒன்றாகும்.

Dropshipping பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னர் Direct Shipping பற்றி தெரிந்துகொண்டால் Dropshipping வணிகத்தை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.

Direct shipping என்பது, நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை அல்லது பொருட்களை மொத்தமாக கொள்வனவு செய்து நமக்கென ஒரு Brand-ஐ உருவாக்கி அந்தப் பொருளை பொதி செய்து ஆன்லைன் ஊடாக பொருளை வாங்குபவர்களிற்கு நாம் நேரடியாக (Direct) அனுப்புவது (Shipping) ஆகும்.

Dropshipping என்பது இதிலிருந்து மாறுபடுகின்றது. நாம் பொருளை உற்பத்தி செய்யத் தேவையில்லை. பொருட்களை மொத்தமாக யாரிடமிருந்தும் கொள்வனவு செய்யத் தேவையில்லை. அவ்வளவு ஏன், நாம் பொருளை பொதி செய்து அனுப்பக்கூட தேவையில்லை.

Dropshipping என்றால், ஏற்கனவே இணையத்தில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும் பொருளை தெரிவு செய்து நமக்கான இலாபத்தை வைத்து கொஞ்சம் அதிகமான விலையில் திரும்பவும் இணையத்திலேயே விற்பனை செய்வது ஆகும்.

இங்கே நாம் பொருட்களை வாங்கத் தேவையில்லை. பொதி செய்வது (Packing) , அனுப்புவது (Shipping) போன்ற எல்லா வேலைகளையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

Dropshipping எப்படி வேலை செய்கிறது?

இலங்கையில் அதிகமான நபர்கள் Dropshipping செய்வதற்கு eBay மற்றும் AliExpress தளங்களை பயன்படுத்துகிறார்கள். ஆகவே இந்த இரண்டு தளங்களையும் வைத்து எப்படி Dropshipping செய்யப்படுகிறது என்பதை உதாரணமாகப் பார்க்கலாம்.

AliExpress தளத்தில் குறைந்த விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். முதலில் AliExpress தளத்தில் உள்ள பொருட்களில் தேவையானவற்றை தெரிவு செய்வார்கள். பின்னர் பொருளின் விபரங்களுடன் தமக்கான இலாபத்தை வைத்து அவற்றை eBay தளத்தில் விற்பனைக்காக வரிசைப்படுத்துவார்கள்.

eBay பயன்படுத்துபவர்கள் அந்தப் பொருளை வாங்க நினைத்தால் பணத்தை செலுத்துவார்கள். eBay-யில் பொருளை வாங்குபவரின் பெயர், முகவரி போன்ற விபரங்கள் Ebay-யில் பொருளை வரிசைப்படுத்திய Drop Shipper இடம் செல்லும்.

இப்போது அந்த Drop Shipping செய்பவர் AliExpress இல் பொருளை அனுப்ப வேண்டிய நபருடைய விபரங்களையும் பணத்தையும் கொடுத்து பொருளை Order செய்வார். இப்போது AliExpress இல் பொருளை விற்பனை செய்தவர்கள் பொருளை அனுப்பினால் அந்த பொருள் eBay-யில் பொருளை Order செய்தவரின் கைகளிற்கு செல்லும்.

இதன் மூலமாக Droshipping செய்தவருக்கு இலாபம் கிடைக்கும். Aliexpress, eBay மட்டும் இல்லை. உலகில் ஏராளமான பொருட்களை விற்பனை செய்யும் தளங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் பயன்படுத்தினால் வினைத்திறனாக Dropshipping செய்யலாம்.

கேட்பதற்கு இலகுவாக தெரிந்தாலும் Droshipping செய்வதற்கு சில விடயங்களை அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டால் மட்டுமே வெற்றியடைய முடியும்.

Dropshipping அனுகூலங்கள், பிரதிகூலங்கள்

ஆன்லைன் வணிகத்தில் Direct Shipping உடன் ஒப்பிடும் போது Dropshipping இல் சில நன்மைகள் இருக்கின்றன. அதே போல சில தீமைகளும் இருக்கின்றன.

Dropshipping ஐ பொறுத்தவரை நாம் எந்த பொருளையும் உற்பத்தி செய்யப் போவதில்லை, நாம் பொருளை பொதி (Packing) செய்து அனுப்பத் தேவையில்லை என்பதால் முதலீடு மிகக் குறைந்தளவாகவே இருக்கும். இதுவே Direct Shipping ஆக இருந்தால் முதலீடு நிறையவே தேவைப்படும்.

எல்லா வேலைகளையும் பொருளை விற்பனை செய்பவர்கள் பார்த்துகொள்வதால் நமக்கான வேலைகளும் மிக குறைவாகவே இருக்கும். இதனால் குறைந்த முதலீட்டில் குறைந்த நேரம் வேலை செய்து பணம் சம்பாதிக்ககூடிய வாய்ப்பாக இருக்கும்.

Dropshipping இல் அனுகூலங்கள் மட்டுமா இருக்கிறது என்று கேட்டால் இல்லை. சில பிரதி கூலங்களும் இருக்கின்றன. Dropshipping செய்கிற பொருளை நீங்கள் நேரடியாக வாங்கி பார்க்கபோவதில்லை என்பதால் பொருளின் நிலை பற்றி உங்களுக்குத் தெரியாது.

பொருளை பயனர் திருப்பி அனுப்பினாலும் நீங்கள் திரும்பவும் விற்பனையாளரிடமிருந்து வேறொரு பொருளை மாற்றி கொடுக்க வேண்டும். பணத்தை திரும்பி கொடுக்க வேண்டிய நிலையும் வரலாம். இப்படி Dropshipping இல் அனுகூலங்கள், பிரதி கூலங்கள் இரண்டும் இருக்கின்றன.

Dropshipping மூலமாக எவ்வளவு சம்பாதிக்க முடியும்

நாம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவே வேலைகள் செய்கின்றோம். ஆகவே Dropshipping மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என கேட்பதில் தவறில்லை. Dropshipping இல் உங்களால் ஒரு டொலரிலிருந்து நூறு டொலர், ஆயிரம் டொலர், பத்தாயிரம் டொலர் என எவ்வளவும் சம்பாதிக்கலாம்.

பத்தாயிரமா டொலர் என்றவுடன் இன்றே ஆரம்பித்து இன்றே பல லட்சங்களில் எல்லோராலும் சம்பாதிக்கலாம் என்று நினைத்து விடாதீர்கள். ஒரே நாளில் எல்லோராலும் நிறைய சம்பாதிக்கலாம் என்றால் நான் இப்போது பணக்காரனாக இருப்பேன்.

நிறைய சம்பாதிக்க வேண்டுமானால் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதிலே அனுபத்தையும், புதிய நுட்பங்களையும், யுக்திகளையும் பயன்படுத்தி உழைக்க வேண்டும். எல்லாவற்றையும் விட பொறுமை அவசியம்.

நிறைய பேர் Dropshipping மூலமாக பல ஆயிரம் டொலர்களில் சம்பாதிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் ஒரே நாளில் சம்பாதித்தவர்கள் இல்லை. படிப்படியாக தமது அனுபவத்தையும், திறமையையும் வைத்து அவ்வளவு உயரம் போயிருப்பார்கள். நாம் இன்று ஆரம்பித்தால் நினைப்பதைப் போல சம்பாதிக்க எப்படியும் சில காலம் எடுக்கலாம். முயற்சி செய்துகொண்டேயிருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

Dropshipping மட்டுமல்ல எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றியடைய வேண்டுமானால் முதலில் அது தொடர்பாக நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நிறையப்பேர் எதைப் பற்றியும் அறிந்துகொள்ளாமல் ஒரு விடயத்தை தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கு கடைசியில் தோல்விதான் கிடைக்கும்.

நிறைய கற்றுக்கொண்டு சிறிதாக ஆரம்பித்து அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு விடயத்தில் அனுபவப்பட ஆரம்பித்துவிட்டால் எப்படி வளர வேண்டும் என்பதை நாமாகவே புரிந்துகொள்வோம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading