தரவறிவியல் – Data Science

Data Science என்ற தலைப்பு தொழினுட்ப உலகில் இப்போதெல்லாம் அதிகம் பேசப்படக்கூடிய தலைப்பாக உள்ளது. Data Science தமிழில் தரவறிவியல் என்று அழைக்கப்படுகின்றது. தொழினுட்பம் வளரும் போது பல புதிய துறைகள் உருவாகி மக்களிடையே அறிமுகமாகும். அந்த மாதிரியே தரவறிவியல் என்ற துறையும் வேகமாக வளர்ந்து வருகின்ற துறையாக உள்ளது.

தரவறிவியல் வளர்ந்து வருகின்ற துறையாகையால் அது தொடர்பான வேலைகள், வணிகங்கள், வாய்ப்புக்கள், கற்கைநெறிகளும் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கின்றன. இவையெல்லாம் தற்போது நடந்துகொண்டிருப்பதால் தரவறிவியல் பற்றி முன்பை விட தற்போது அதிகம் பேசப்படுகின்றது.

தரவறிவியல் என்பது, தரவுகளை பகுப்பாய்வு செய்து முடிவுகள் எடுப்பதாகும். தரவுகளை பகுப்பாய்வு செய்து முடிவுகள் எடுப்பது புதியது கிடையாது. ஆனால் தரவறிவியலில் பெருந்தொகையான தரவுகளுடன் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக்கற்றல், நிரலாக்கம் போன்ற தொழினுட்பங்கள் இணைத்து பயன்படுத்தப்படும்.

இவ்வாறான புதிய தொழினுட்பங்களின் உதவியோடு தரவுகளைத் திரட்டி பகுப்பாய்வு செய்யும் போது மனிதனால் கையாளமுடியாத பெருந்தொகையான தரவுகளை அத்தொழினுட்பங்களால் கையாளமுடியும். தரவறிவியல் மூலமாக கிடைக்கப்பெறும் முடிவுகளும் வினைதிறன் கூடியதாக இருக்கும்.

தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய தேவை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கே தரவறிவியல் பயன்படுத்தப்படும். தரவறிவியல் மூலமாக குறிப்பிட்ட விடயத்தில் எதிர்காலத்தில் நடக்கலாம் என்பதைக் கணிப்பது, சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பது, மிகச்சரியான முடிவுகளை எடுப்பது போன்ற பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

தரவறிவியல் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணமாக தரவறிவியலைப் பயன்படுத்தி வணிகம் ஒன்றில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கலாம். கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட வணிகத்தின் தரவுகளை தரவறிவியல் மூலமாக பகுப்பாய்வு செய்வதன் மூலமாக எதிர்காலத்தில் வணிகத்தின் போக்கு எப்படியிருக்கும் என்று கணிக்கலாம்.

இதன் மூலமாக வணிகம் தோல்வியடைவதற்கான வாய்ப்புக்கள் குறைக்கப்படுகின்றன. அதேநேரம் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களை இலகுவாக கண்டறிய முடியும். அந்த வகையில் தரவறிவியல் வணிகமொன்றின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்வதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

நம் எல்லோருக்குமே பரீட்சயமான தரவறிவியல் பயன்படுத்தப்படுகின்ற எடுத்துக்காட்டாக சமூக வலைத்தளங்களைச் சொல்லலாம்.

சமூக வலைத்தள நிறுவனங்கள் மக்களிடமிருந்து எடுத்துக்கொள்கின்ற தரவுகள் மிகப்பெரிது. பெருந்தொகையான அத்தரவுகளை பகுப்பாய்வு செய்து தமது சேவைகளைப் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் என்ன தேவை என்பதை  துல்லியமாக அறிந்துகொண்டு செயற்படுவதற்கு தரவறிவியல் உதவியாக இருக்கின்றது.

நீங்கள் பயன்படுத்துகின்ற சமூகவலைத்தளத்தை திறந்த உடனேயே உங்களுக்குப் பிடித்தமாதிரியான பதிவுகள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்படும். அதே போன்று உங்களுக்குத் தேவைப்படுகின்ற விளம்பரங்களும் காட்சிப்படுத்தப்படும். இவையெல்லாம் செயற்கை நுண்ணறிவின் உதவியோடு துல்லியமாக நடைபெறுகின்றது. ஆனால் எல்லாமே உங்களுடைய தரவுகளின் அடிப்படையில் இயங்குவதால் தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கு தரவறிவியலுடன் இணைந்தே இயங்க வேண்டும்.

அப்படிப் பார்க்கும் போது நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக தரவறிவியல் தொழினுட்பத்தை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள்.

தரவறிவியல் பயன்படுத்தப்படும் துறைகள், சந்தர்ப்பங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மருத்துவத்துறை, நிதியியல் சார்ந்த விடயங்கள், வணிகம், இணைய வணிகம், தேடுபொறிகளை மேம்படுத்துதல், இணைய விளம்பரப்படுத்தல்களை மேற்கொள்ளுதல், போக்குவரத்து, கேமிங் போன்ற பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் தரவறிவியல் பயன்படுத்தப்படுகின்றது. எதிர்காலத்தில் எல்லாத்துறைகளிலும் தரவறிவியலின் பங்களிப்பு இருக்கும்.

தரவறிவியலின் வளர்ச்சியினால் நிறைய நன்மைகள் ஏற்படுகின்றன. அதே நேரம் சில எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது.

தரவறிவியல் மூலமாக ஏற்படும் அனுகூலங்கள் என்று பார்த்தால் துல்லியமான முடிவுகள் கிடைக்கின்றமையால் மிகச்சரியான தீர்மானங்களை எடுக்கக்கூடியதாக இருக்கும், தரவறிவியல் தொடர்பான வேலை வாய்ப்புக்கள் நிறையவே உருவாகும், வணிகச் செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிக்க முடியும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அறிந்துகொள்ளக்கூடியதாக இருப்பதால் சிறந்த சேவையை வழங்கக்கூடியதாக இருக்கும். இவ்வாறான நேரடியாக அவதானிக்கக்கூடிய அனுகூலங்கள் நிறையவே இருக்கின்றன. தரவறிவியலின் வளர்ச்சி எல்லாவிதமான துறைகளிலும் தொழினுட்பரீதியிலான வளர்ச்சியை ஏற்படுத்தும்.

தரவறிவியலில் எதிர்மறையான விடயங்களும் இருக்கின்றன. தரவறிவியல் என்பது தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை. அதனாலே மக்களின் தனிப்பட்ட தரவுகள் நிறுவனங்களால் சேமிக்கப்படுவதால் Data Privacy என்ற விடயம் இருக்காது, நீங்கள் வணிகம் ஒன்றை மேற்கொள்கிறீர்கள் என்றால் தரவறிவியல் தொடர்பாக உடனடியாகக் கற்றுக்கொள்ள விரும்பினால் கடினமாக இருக்கும், தரவறிவியல் தொழினுட்பத்தை வணிகத்துடன் இணைக்க விரும்பினாலும் செலவு அதிகமாகலாம். இதே போன்று தரவறிவியலில் எதிர்மறையான சில விடயங்களும் இருக்கின்றன.

காலஞ் செல்லச் செல்ல தரவுகள் அதிகரித்துக்கொண்டே செல்லும். அத்தரவுகளை முறைவழிப்படுத்திப் பயன்படுத்த தரவறிவியற் தொழினுட்பமும் மேம்பட்டுக்கொண்டே செல்லும். எதிர்காலத்தின் வெற்றிகரமான துறையாக தரவறிவியல் இருக்கும். ஆகவே தரவறிவியலை நமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

தரவறிவியல் தொடர்பான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் தரவறிவியலை கற்றுக்கொள்ளலாம், நமது வணிகத்தை மேம்படுத்த தரவறிவியலை பயன்படுத்துவது பற்றித் திட்டமிடலாம். பல்வேறுபட்ட விதங்களில் தரவறிவியலை நமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்மை, தீமைகளுக்கு அப்பால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொழினுட்பம் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். நாம்தான் அத்தொழினுட்பத்தை நமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆகவேதான் தரவறிவியலின் எதிர்காலத்தைத் தெரிந்துகொண்டு அதற்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading