Black Friday என்றால் என்ன?

Last updated on August 20th, 2023 at 09:23 pm

கார்த்திகை (November) மாதம் வந்துவிட்டால் Black Friday Offers, Black Friday Deals போன்ற பெயர்களில் நிறைய விளம்பரங்களை இணையத்தில் காணக்கூடியதாக இருக்கும். நீங்கள் உங்களுடைய மின்னஞ்சலைத் திறந்து பாருங்கள். அங்கே நிச்சயமாக Black Friday Offer பற்றிய விளம்பர மின்னஞ்சல்கள் வந்திருக்கும்.

நமது நாடுகளிற்கு Black Friday என்ற ஒன்று புதிய விடயம்தான். இணையத்தின் பயன்பாடு பரவலாவதற்கு முன்பு Black Friday பற்றி நிறையப்பேருக்கு தெரிந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு. தற்போது இணையத்தின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் அதிகமாக Black Friday தொடர்பான விளம்பரங்களை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

நீங்கள் Black Friday பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இந்தப் பதிவின் ஊடாக உங்களால் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

Black Friday பற்றி ஒரே வரியில் சொன்னால் இது ஒரு Shopping Day என்று சொல்லலாம். அமெரிக்காவில் அதிகமாக பொருட்கள் விற்பனையாகின்ற பரபரப்பான நாட்களில் Black Friday முக்கியமானது என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

Black Friday பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன் Thanksgiving Day பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

Thanksgiving Day – நன்றி தெரிவிக்கும் தினம்

அமெரிக்கா போன்ற சில நாடுகளில் Thanksgiving Day என்று ஒரு பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இது ஒர் நன்றி செலுத்தும் பண்டிகை ஆகும். நமது நாட்டில் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகை போல அமெரிக்காவில் Thanksgiving கொண்டாடப்படுகின்றது என்று சொல்லலாம்.

இது கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன் கொண்டாடப்படுகின்ற பெரிய நிகழ்வாகும். அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் (November) இறுதி வியாழக்கிழமை (Thursday) Thanksgiving Day கொண்டாடப்படுகிறது. வேறு சில நாடுகளில் வேறு தினங்களில் வேறு பெயர்களில் இதே போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

Black Friday – கறுப்பு வெள்ளிக்கிழமை

Thanksgiving Day இற்கு அடுத்த தினம் Black Friday வருகின்றது. அதாவது ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் (November) இறுதி வெள்ளிக்கிழமை (Friday) Black Friday ஆகும்.

இந்த நாளின் சிறப்பு என்னவென்றால், எல்லாவிதமான பொருட்களையும் சலுகை விலையில் மக்களால் கொள்வனவு செய்ய முடியும். இந்த நாளில் வியாபாரம் அதிகமாக நடைபெறும். ஆரம்பத்தில் கூறியது போலவே இது ஒரு Shopping Day ஆகும்.

Black Friday என்ற பெயர் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாகியதாக சொல்லப்படுகின்றது. Black Friday உருவானதற்கு பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஆனால் உண்மையில் Black Friday எப்படி உருவானது என்பது எனக்குத் தெரியவில்லை.

Black Friday உருவான கதைகளில் ஒன்று, Thanksgiving தினத்திற்கு மறுதினம் வீதியில் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாத அளவு கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்தமையால் அந்த தினத்தை பொலிஸார் Black Friday என்று அழைத்தனர் என இணையத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

Thanksgiving தினத்திற்கு அடுத்த தினத்திலிருந்து Holiday Shopping ஆரம்பமாகி அதிகமாக வியாபாரம் நடைபெற்றது அதுதான் பின்னர் Black Friday ஆக மாறியது என்று கூறப்படுகின்றது.

Black Friday

Black Friday நாள் எப்படியிருக்கும் என்றால், கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். எல்லாவிதமான பொருட்களுக்கும் நிறைய சலுகைகள் கிடைக்கும்.

ஒரு சில கேள்வி (Demand) அதிகமாக உள்ள இலத்திரனியல் பொருட்களை அன்றைய தினம் மட்டும் அதிக சலுகை விலையில் பெற்றுக்கொள்ள முடியும். அவற்றை வாங்குவதற்காக முதல் நாள் மாலையிலிருந்தே வரிசைகளில் மக்கள் காத்திருப்பார்கள்.

ஆரம்பத்தில் Black Friday விற்பனை அமெரிக்காவின் கடைகளில் இருந்தது. ஆனால் தற்போது ஆன்லைன் விற்பனை தளங்கள் அதிகமாக இருப்பதால் Black Friday சலுகைகளை உலகளவில் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான Black Friday விளம்பரங்களை நம்மால் இணையம் முழுவதும் பார்க்க முடியும்.

சில நேரங்களில் Black Friday சலுகைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். ஆன்லைனில் டிஜிட்டல் பொருட்கள், மென்பொருட்கள் போன்றவை 50% மேல் சலுகை விலையில் கிடைக்கும். கடந்த வருடம் இவ்வாறான Black Friday சலுகைகள் எனக்கு உதவியிருக்கிறன.

நமது நாட்டில் கடைகளில் Black Friday தினத்திற்கு சலுகைகள் இல்லாவிட்டாலும் தீபாவளி சலுகை, ஆடித்தள்ளுபடி போன்ற தினங்களில் சலுகை விலையில் பொருட்களை கொள்வனவு செய்யலாம். கிட்டத்தட்ட Black Friday என்பது ஆடித்தள்ளுபடி மாதிரி என்றும் சொல்லலாம். சில வேளைகளில் Black Friday தினம் எதிர்வரும் காலங்களில் நமது நாடுகளில் பரவலாக வந்தாலும் வரலாம்.

Black Friday எனும் வணிகயுக்தி

Black Friday மூலமாக நிறையப் பொருட்களை சலுகை விலையில் கொள்வனவு செய்ய முடிந்தாலும் இன்னொரு பக்கமாக யோசித்துப் பார்த்தால் இது ஒரு வியாபார யுக்தியாக பயன்படுத்தப்படுவதை புரிந்துகொள்ளலாம்.

சில இடங்களில் Black Friday தினத்திற்கு ஒரு வாரம் முன்னர் விலையை இரு மடங்காக அதிகரித்துவிட்டு Black Friday தினத்தன்று 50% சலுகையில் அதே விலையில் பொருட்களை விற்பனை செய்வார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் ஆன்லைனில் அதிகமாக நடைபெறுகின்றன. மென்பொருள் விற்பனை செய்யும் இணையத்தளம் ஒன்றில் இப்படி ஒர் யுக்தி பயன்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

சில நிறுவனங்கள் விற்பனையாகாத தமது உற்பத்திகளை Black Friday அன்று சலுகை விலையில் விற்பனை செய்வார்கள். சில இடங்களில் முக்கியமான பொருட்களை சலுகை விலையில் கொடுப்பதால் அதனுடன் சேர்ந்து வேறு பொருட்களும் விற்பனையாகின்றன. சில நிறுவனங்கள் Black Friday அன்று விற்பனை செய்வதற்காகவே பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இவ்வாறான பல வணிக யுக்திகள் உள்ளன.

எந்தப் பொருளாக இருந்தாலும் சரியாகப் பார்த்து கொள்வனவு செய்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. எவ்வாறாயினும் ஒரு பொருள் வழமையாக கிடைக்கிற விலையை விட குறைந்த விலையில் கிடைக்கின்றது என்றால் நல்லதுதானே!

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading