தடங்கள் – Tracks in Tamil

Last updated on August 1st, 2023 at 10:41 pm

எழில்(-ற்-)பிரகாஷ்
Follow me
Latest posts by எழில்(-ற்-)பிரகாஷ் (see all)

அவுஸ்ரேலியாவின் பாலைவனப்பகுதிகளை ஒட்டகங்களுடன் பயணித்து கடந்த பெண்மணியின் பயண அனுபவங்களே “Tracks” என்ற நூல். Tracks நூல் தமிழில் “தடங்கள்” என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1977-இல் (27வயதில்) ராபின் டேவிட்சன் தன்னுடைய நான்கு ஒட்டகங்கள் மற்றும் ஒரு நாயுடன் ஒன்பது மாதங்கள் அவுஸ்ரேலியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிக்கு பயணம் செய்கின்றார்.

தன்னுடைய அவுஸ்ரேலியப் பாலைவன பயண அனுபவங்களைப் பற்றி Tracks என்ற பெயரில் 1980 இல் புத்தகமாக வெளியிடுகிறார். ராபின் டேவிட்சனின் இந்நூல் 2013-இல் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

இந்நூலை திறந்தவுடன் பாலைவனத்தில் ராபின் டேவிட்சன் பயணிக்கத் தொடங்கிவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் நூலின் ஆரம்பத்தில் பயணம் ஆரம்பிக்கவில்லை.

நூலின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருப்பது, ராபின் டேவிட்சன் அவுஸ்ரேலியாவின் ஆலிஸ் ஸ்பிரிங் நகரிற்கு செல்கிறார். அவரிடம் சொந்தமாக ஒட்டகங்களே கிடையாது. ஆரம்பத்தில் ராபினிற்கு ஒட்டங்கள் பற்றிய அனுபவமும் இல்லை.

ஒட்டங்களை பற்றிய பயிற்சியை பெற்றுக்கொள்வது பற்றியும், ஒட்டகங்களுடன் பண்ணையில் வேலை செய்வதை பற்றியும், பயணத்திற்கான ஒட்டகங்களை பெற்றுக்கொண்டு பயிற்சியளித்து தயார்செய்வது பற்றியும், பயணத்திற்கான ஏற்பாடுகள் பற்றியும், ஒட்டகப் பயிற்சி வழங்கிய நபர்களுடனான அனுபவங்கள் பற்றியும் நிறையவே சொல்லியிருக்கின்றார்.

இந்நூலை படிக்கத் தொடங்கியவுடனேயே ஒரு விடயத்தை புரிந்துகொள்ளலாம். நூலில் பயண அனுபவங்களைத் தாண்டி அந்த காலகட்டத்தில் அவுஸ்ரேலியா பற்றியும், பூர்வக்குடி மக்களைப் பற்றியும், அங்கே இருந்த இனவெறி கலாசாரம் பற்றியும் நிறையவே அனுபவத்துடன் சொல்லியிருக்கின்றார்.

ஒட்டகளுடனான பயிற்சியின் பின்னர் பயணம் ஆரம்பிப்பதற்கு பொருட்களை வாங்கி ஆயத்தங்கள் செய்வதற்கு அவரிடம் போதியளவு பணம் இல்லை. அதனால், ஜியாகிராபிக் பத்திரிகையிடம் தன்னுடைய பயணத்தை புகைப்படம் பிடிப்பதற்காக பணம் வாக்கிக்கொள்கிறார். அதனை வைத்து பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்.

ராபின் ஒட்டகங்களுடன் பாலைவத்தில் பயணம் செய்தாலும் ரிக் எனும் புகைப்படக்கலைஞன் பயணத்தின் இடையிடையே சந்திக்ககூடிய இடங்களில் வந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்வார்.

தான் ஜியாகிராபியிடம் பணம் வாங்கியதால் தன்னுடைய தனிமையையும், சுதந்திரத்தையும் இழந்துவிட்டதாக ராபின் டேவிட்சன் மிகவும் வருத்தப்பட்டிருக்கின்றார்.

பயணம் ஆரம்பித்த பின்னர் இடையிடையே ரிக் புகைப்படம் எடுக்கின்றார். ராபின் பல பூர்வக்குடியினரை சந்திக்கின்றார். அவர்களுடன் பல நாட்கள் தங்கியிருக்கின்றார். அவுஸ்ரேலியாவின் பூர்வக்குடியினரை பற்றி நூலின் இறுதிவரை நிறையவே சொல்லியிருக்கின்றார்.

பயணத்தில் ராபின் பல சவால்களையும் சந்திக்கின்றார். ஒட்டக்காளைகள் அவரை தாக்குவதற்காக வரும் வேளையில் அவருடைய துப்பாக்கியை வைத்து சமாளிக்கிறார், அதே போல பாலைவன வரைபடங்களில் சரியான குறிப்புக்கள் இல்லை, ஒட்டகங்கள் நோய்வாய்ப்படுகின்றன. அவற்றையெல்லாம் தாண்டி மேற்கு பகுதி இந்தியப்பெருங்கடலினை ராபின் அடைந்தார்.

பயணத்தின் இலக்கை அடைவதற்கு சில நாட்கள் இருக்கும் போதே அவருடைய நாய் இறந்துவிடுகிறது. அது அவரை மிகப்பெரும் சோகத்திற்குள்ளாக்குகிறது.

ராபினின் இந்தப் பயணத்தின் புகைப்படங்களை இணையத்தில் நிறையவே காணலாம். ரிக் எடுத்த புகைப்படங்கள் மட்டுமல்லாமல் இடையிடையே வரும் சுற்றுலாப் பயணிகளும் ராபினுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

ஆனால் புகைப்படங்கள் எடுப்பதை, பத்திரிகைகளில் வருவதை ராபின் விரும்பவில்லை. தனிமையில் பயணம் மேற்கொள்வதையே ராபின் விரும்பினார். பயணத்தின் இறுதிப் பகுதிகளில் பத்திரிகையாளர்கள் ராபினை புகைப்படம் எடுப்பதற்காக முயற்சி செய்கிறார்கள். அதிலிருந்து தப்பித்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கின்றார்.

பொதுவாகவே பயணநூல்கள் மிகவும் சுவாரஷ்யமானவையாக இருக்கும். இதுவும் ஒரு பெண்மணியின் ஒட்டகங்களுடன் பாலைவனத்தில் பயணம் செய்த அனுபவங்களைப் பற்றிய நூல். நீங்களும் வாசித்து ராபின் டேவிட்சனின் அனுபவங்களை பெற்றுக்கொள்ளலாம்.

Share
Subscribe
Notify of
guest

5 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
%d bloggers like this: