ஆமை பற்றிய தகவல்கள்

Last updated on November 12th, 2023 at 10:20 pm

ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினம். சிறுவயதிலேயே நீங்கள் ஆமையைப் பற்றி தெரிந்துகொண்டிருக்கலாம். காரணம் சிறுவயதில் ஆமையும் முயலும் கதையை உங்களிடம் சொல்லியிருப்பார்கள்.

ஆமை மிகவும் மெதுவாக நகர்ந்து செல்கின்ற வித்தியாசமான உயிரினம். ஆமை பற்றிச் சொல்வதற்கு ஏராளமான விடயங்கள் உள்ளன. இந்தப் பதிவில் ஆமை பற்றிய சில சுவாரஷ்யமான விடயங்களைப் பார்க்கலாம்.

01. ஆதிகால உயிரினம்

பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற பழமையான உயிரினங்களுள் ஆமையும் ஒன்றாகும். ஆமைகள் 200 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

அதாவது பூமியில் வாழ்ந்ததாக கருதப்படுகின்ற டைனசோர் இனத்தின் காலகட்டத்திலிருந்தே ஆமைகள் இருக்கின்றன.

02. ஆமையின் வகைகள்

ஆமைகள் ஊர்வன வகையைச் சார்ந்தன. ஆமைகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. ஆமை என்று சொன்னவுடன் இரண்டு விதமான ஆமைகளை உடனடியாக வகைப்படுத்திவிடலாம்.

  • கடலாமை.
  • தரையில் வாழும் ஆமை.

தரையில் வாழும் ஆமைகள் ஊர்ந்து செல்வதற்கு ஏற்ற வகையில் கால், பாதம், உடலமைப்பு தகவமைந்திருக்கும். அதே போல் கடலாமைகள் நீரில் நீந்திச் செல்வதற்கு ஏற்றாற்போல் உடலமைப்பு தகவமைந்திருக்கும்.

ஆமை மாறும் உடல் வெப்பநிலை கொண்ட விலங்கு. தன்னுடைய சூழலைப் பொறுத்து உடலின் குருதியின் வெப்பநிலையை மாற்றிக்கொண்டேயிருக்கும்.

03. ஆமைகளின் ஆயுட்காலம்

தரைவாழ் விலங்குகளில் நீண்ட ஆயுட்காலம் கொண்ட உயிரினங்களுள் ஆமைகளும் ஒன்று. நிறைய ஆமை இனங்கள் 100 வருடங்களிலிருந்து 150 வருடங்கள் வாழுமளவிற்கு ஆயுட்காலத்தை கொண்டிருக்கின்றன.

தற்போது வாழ்ந்துகொண்டிருக்கின்ற வயதான ஆமையின் பெயர் ஜோனத்தான் (Jonathan) என்பதாகும். ஜோனத்தான் 190 வருடங்கள் வயதுடையது.

இதுவரை வாழ்ந்ததில் அதிக வயது கொண்ட ஆமையின் பெயர் அட்வெயிட்ரா ஆகும். இந்த ஆமை 1750 இலிருந்து 2006 வரை 255 வருடங்கள் வாழ்ந்துள்ளது.

04. ஆமையின் வேகம்

ஆமை என்றவுடன் நிறையப்பேருக்கு முதலில் ஞாபகம் வருவது மெதுவாக ஊர்ந்து செல்லும் உயிரினம் என்பதாக இருக்கும். மற்றைய விலங்குகளை விட மிகவும் மெதுவான வேகத்தில் ஆமைகள் நகர்கின்றன.

ஆமையின் சராசரி வேகம் மணித்தியாலத்திற்கு 0.2 கிலோமீற்றலிலிருந்து 0.5 கிலோமீற்றர் ஆகவுள்ளது.

வேகமாக நகர்ந்து சென்றமைக்கான கிண்ணஸ் சாதனை Bertie எனும் ஆமையிடம் உள்ளது.  இந்த ஆமை செக்கனுக்கு 0.28 மீற்றர் தூரம் நகர்ந்து சென்றது.

05. ஆபத்தில் ஆமை இனங்கள்

ஆமை இனங்களில் 300 இற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. அவற்றுள் பாதிக்கும் மேற்பட்ட இனங்கள் அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

சட்டவிரோதமாக வேட்டையாடப்படுதல், வாழ்விடங்கள் அழிவடைதல், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல்வேறுபட்ட காரணங்களினால் ஆமைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.

06. வாசனையை நுகரும் உறுப்பு

பெரும்பாலான விலங்குகள் வாசனையை நுகர்வதற்கு மூக்கினைப் பயன்படுத்துகின்றது. ஆனால் சில ஊர்வன, ஈரூடக வாழிகள் நுகர்வதற்கு வொமெறோனாசல் (Vomeronasal) எனும் உறுப்பைப் பயன்படுத்துகின்றது.

ஆமைகளும் வாசனையை நுகர்வதற்கு வொமெறோனாசல் உடலுறுப்பையே பயன்படுத்துகின்றது. இந்த உடலுறுப்பு வாயில் மேற்பக்கத்தில் நாசிலில் அமைந்துள்ளது.

07. ஆமையின் ஒடு

ஆமை என்று சொன்னவுடன் ஞாபகம் வரும் இன்னொரு விடயம் அதனுடைய ஒடுகள். மிகவும் கடினமான ஒடுகள் ஆமைகளை ஆபத்து வேளைகளில் தற்காத்துக்கொள்ள உதவுகின்றன.

பார்க்கும் போது ஆமையினுடைய ஒடு ஆமையின் முழுமையான தனியான பகுதி என்றுதான் தோன்றும். ஆனால் உண்மையில் ஆமையின் ஒடு நிறைய எலும்புகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள பகுதிதான்.

08. காலநிலையின் செல்வாக்கு

ஆமையின் பாலினத்தையும், ஒடுகளின் வர்ணத்தையும் தீர்மானிப்பதில் காலநிலையும் தாக்கம் செலுத்துகின்றது.

ஆமைகள் முட்டையில் இருக்கும் போது ஆரம்பத்தில் பாலினம் தீர்மானிக்கப்படுவதில்லை. குளிரான சூழலில் முட்டை இருந்தால் ஆணாகவும், வெப்பமான சூழலில் முட்டை இருந்தால் பெண்ணாகவும் ஆமை உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதே போன்றுதான், ஆமைகள் குளிரான சூழலில் வசித்தால் ஒடுகள் கருமையாகவும் வெப்பமான சூழலில் வசித்தால் ஒடுகள் வெண்மையாகவும் உருவாகின்றன.

09. புத்திக்கூர்மை மிக்க உயிரினம்

ஆமையின் தோற்றத்தையும் மெதுவான நகர்வையும் பார்க்கும் போது முட்டாள்தனமான விலங்கு என்ற தோற்றத்தை உருவாக்கலாம். ஆனால் ஆமைகள் நினைப்பதை விட புத்திக்கூர்மை உடையவை.

தமக்கான உணவைக் கண்டுபிடிப்பதில் வினைத்திறனாக செயற்படுகின்றன. ஏற்கனவே பார்த்த விடயங்களை, முகங்களை ஞாபகம் வைத்திருந்து அடையாளங்காண ஆமைகளால் முடியும்.

10. ஆயிரமாயிரம் கிலோமீற்றர் பயணம் செய்யும் கடலாமை

கடலாமைகள் ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து இடம்பெயர்ந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் தூரம் இடம்பெயர்ந்து சென்றாலும் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பிவரக்கூடிய திறன் அவற்றிக்கு உண்டு.

தரையில் வாழும் ஆமைகள் போல் அல்லாமல் மணித்தியாலத்திற்கு 35 கிலோமீற்றர் வேகம் வரை கடலாமைகளால் நீத்திச்செல்ல முடியும்.


இந்தப்பதிவில் ஆமைகள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்களை பார்த்திருந்தோம். உங்களுக்குத் தெரிந்த ஆமைகள் பற்றிய தகவல்களை, ஆமைகள் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை கூறுங்கள். இந்தப்பதிவு பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் நீங்கள் தெரிவிக்கலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments