உணவின் முக்கியத்துவம்

Last updated on September 1st, 2023 at 02:11 am

ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழ்வதற்கு அவசியமான காரணிகளுள் உணவு முக்கியமானதொன்றாகும். மனிதன் சுவாசிப்பதற்குத் தேவையான ஒட்சிசன், குடிப்பதற்கு தேவையான நீர் ஆகிய இரண்டிற்கும் அடுத்ததாக மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டியது உணவு. உணவு இல்லாமல் மனிதனால் சில வாரங்கள் வரை வேண்டுமானால் உயிர்பிழைத்திருக்க முடியும். அதற்கு மேல் மனிதனால் உணவில்லாமல் உயிர்வாழ முடியாது.

மனிதனுடைய இயக்கத்திற்கு தேவையான சக்திகளை (புரதம், கொழுப்பு, காபோவைதரேற், விற்றமின், மினரல் போன்றவை) உணவிலிருந்தே மனிதன் பெற்றுக்கொள்கின்றான். மனிதனுடைய இயக்கத்திற்கு அவசியமான முழுமையான சக்திகளை நீரினாலும் ஒட்சிசனாலும் மட்டும் கொடுக்க முடியாது. அதனால்தான் நீரை மட்டும் உடலிற்கு எடுத்துக்கொண்டு மனிதனால் தொடர்ச்சியாக உயிர்வாழ முடிவதில்லை. மனிதனுக்கு உணவில் உள்ள சக்திகள் அவசியமாகையால் மனிதனுக்கு உணவு அவசியமாகின்றது.

இன்றைய உலகின் வேகமான வாழ்கை முறையில் மனிதனுடைய உயிர்வாழ்க்கைக்கு அவசியமான உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து உணவு எடுத்துக்கொள்வதில் நிறைய மனிதர்கள் கவனம் செலுத்துவதில்லை என்பதே உண்மை. அன்றாட செயற்பாடுகளிற்கு மனிதன் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விட உயிர்வாழ்க்கைக்கு அவசியமான உணவின் மீதான முக்கியத்துவம் குறைவானதாகவே இருக்கின்றது.

எல்லோருமே தினமும் உணவு எடுத்துக் கொண்டிருக்கும் போது உணவின் முக்கியத்துவத்தை உணர வேண்டும், உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், உணவின் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லும் போது பலருக்கும் உணவின் முக்கியத்துவம் என்ன? அதே போல் உணவிற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்வது என்ன? போன்றவை பொதுவாகவே பலருக்கும் எழுகின்ற கேள்விதான்.

பலருக்கு உணவு ஏன் உட்கொள்கின்றோம், உணவு உண்பதை தவிர்ப்பதால் எவ்வாறான விளைவுகளை நாம் எதிர்கொள்கின்றோம், சரியான உணவு முறைகளை பின்பற்றுவதில் உள்ள நன்மைகள் போன்ற விடயங்களை பற்றிய தெளிவு இல்லை. அவற்றை தெரிந்துகொண்டால் உணவின் முக்கியத்துவத்தை புரிந்து வைத்திருக்கின்றோம் என்று சொல்லலாம்.

எந்த மாதிரியான உணவை தெரிவு செய்கின்றோம், எவ்வகையான உணவு முறையை பின்பற்றுகின்றோம், நமது உடலுக்கு தேவையான சக்தி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்கின்றோமா?, தினசரி உணவு எடுத்துக்கொள்ளும் நேர ஒழுங்கமைப்பு போன்ற அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்தி உணவு எடுத்துக்கொண்டால்தான் நாம் உணவின் மீது முக்கியத்துவம் செலுத்துகின்றோம் என்று சொல்லலாம்.

நிறையப்பேர் உணவு எடுத்துக்கொள்வதற்கான தினசரி உணவு வேளைகளை பின்பற்றுவதில்லை, பொறுமையாக உணவு உண்பவர்களிலும் பல பேர் தமது உடலுக்குத் தேவையான உணவை தேவைப்படுகின்ற சத்துக்கள் கொண்ட உணவை எடுத்துக்கொள்ள மாட்டார்கள், உணவை ரசித்து உண்பதற்குப் பதிலாக மொபைல் போன் பயன்படுத்திக்கொண்டு உணவு உண்பார்கள். இவ்வாறு பலரும் பலவிதமாக உணவின் முக்கியத்துவம் உணராமல் உணவு எடுத்துக்கொள்கின்றார்கள்.

உணவிற்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறினால் ஏற்படுகின்ற விளைவுகளையும் மனிதன் எதிர்கொள்ள வேண்டும். மனிதனுக்கு உணவு உடலிற்கான இயக்கத்திற்கு அவசியமாக இருப்பதோடு உடலிற்கான எதிர்ப்பு சக்தியை வழங்கி நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு ஆரோக்கியமான உணவுகள் அவசியமாகின்றன. மனிதன் உணவிற்கான முக்கியத்துவத்தை அளிக்கத்தவறும் பட்சத்தில் உடலிற்கான இயற்கையான பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். நிறைய நேரங்களில் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற நோய்களை சரியான உணவுகள் மூலமாகவே தவிர்த்துக்கொள்ள முடியும். அதற்கு உணவு முறையை சரியாக பின்பற்றி அதற்கான முக்கியத்துவத்தை வழங்கினாலே போதும்.

உணவுப் பழக்கங்கள் நேரடியாக நமது அன்றாட வாழ்க்கை மீது தாக்கம் செலுத்தக்கூடியது. உணவுகளை சரியாக எடுத்துக்கொள்ளாத நேரத்தில் அன்றைய நாளில் சுறுசுறுப்பாக இயங்க முடியாத நிலையை நீங்கள் உணர்ந்திருக்கலாம். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் நம்மை நாமே புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கும் உணவின் மேல் கவனம் செலுத்துவது அவசியமாகும். ஆகவே உணவு நமது அன்றாட நடவடிக்கைகளில் நேரடியாக தாக்கம் செலுத்துவதை புரிந்துகொண்டு உணவிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

உணவு உடலையும் தாண்டி மனிதனுடைய உளவியல் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. சரியான உணவு முறையை கடைப்பிடிக்கின்ற ஒரு நாளுக்கும் சரியாக உணவினை எடுத்துக்கொள்ளாத ஒரு நாளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அவதானித்துப் பார்த்தால் இதனை உங்களால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். உணவு இல்லாவிட்டால் நமது உடல் முதலில் சோர்வு நிலையை அடையும். அந்தச் சோர்வு உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். உணவிற்கு முக்கியத்துவம் அளிப்பது உடலை மட்டுமல்லாது உள்ளத்தையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றது.

ஒரு மனிதனுக்கு அவசியமான உடல் ஆரோக்கியம், உள ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உணவு அத்தியாவசியமானது. வெறும் உணவு என்பதை விட ஆரோக்கியமான மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதோடு சிறந்த உணவு முறையையும் பின்பற்ற வேண்டும்.

சரியான முறையில் உணவினை எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதைப் போலவே உணவு தயாரிப்பின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். நமக்கான உணவை நாமே தயாரிப்பது சிறந்தது. நமக்கு என்ன தேவை? எவ்வளவு உணவு தேவை? என்பதைப் பொறுத்து ஆரோக்கியமான உணவினை தயார் செய்துகொள்ளலாம். உணவு தயாரிப்பில் மகிழ்ச்சி இருக்கின்றது. அதனால்தான் பண்டிகைகளும் உணவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கின்றன. உணவு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு என்பதை புரிந்துகொண்டு உணவு தயாரிப்பதையும் முக்கியமானதொன்றாக கருத வேண்டும்.

எல்லாவற்றையும் தாண்டி உணவுகள் கலாசாரத்தை, பாரம்பரியத்தை, பிரதேசங்களை, இன மக்களை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும், பாரம்பரியத்திற்கும், இனங்களிற்கும் தனித்துவமான உணவுகள் இருக்கின்றன. சில உணவுகள் சில பிரதேசங்களில்தான் பிரபல்யமானதாக இருக்கும். சில பிரதேசங்களை சொன்னால் அங்குள்ள உணவுகள் அப்பிரதேசத்தை அடையாளப்படுத்தும். பாரம்பரிய உணவுகள் என்று எடுத்துக்கொண்டால் அதற்கென நீண்ட பட்டியலை தயாரிக்கும் அளவிற்கு எல்லா பாரம்பரியங்களும் உணவுவகைகளை கொண்டுள்ளன.

அதே போன்றுதான் பண்டிகைகளையும் உணவையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. பண்டிகையென்றால் உணவு இல்லாமல் இருக்காது. எந்தவொரு நாடாக இருந்தாலும் சரி, சமயமாக இருந்தாலும் சரி, பண்டிகைகளாக இருந்தாலும் சரி உணவு தயாரிப்பதில் ஆரம்பித்து எல்லோருடனும் பகிர்ந்து உண்பது வரை மகிழ்ச்சியை பிரதிபலிக்கின்ற ஒர் அம்சம் உணவு ஆகும். இந்த விடயங்களிலிருந்து உணவு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதொன்றாகவும் இருப்பதை புரிந்துகொள்ள முடிகின்றது.

உணவு தயாரிப்பது, உணவினை விருப்பத்துடன் உண்பது, மற்றவர்களுடன் பகிர்ந்துண்பது, பண்டிகைகளை உணவுடன் கொண்டாடுவது என பல வகைகளிலும் உணவு மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற ஒர் அம்சமாக விளங்குகின்றது.

உணவு வெறுமனே சாப்பிடுகின்ற பொருள் என்பதை தாண்டி உணவுகளிற்கு தனிச் சிறப்பு இருக்கின்றது. மனிதர்களுக்கு உடல் ஆரோக்கியம், உள ஆரோக்கியம், மகிழ்ச்சி, சிறந்த பண்புகள், அடையாளம் என எல்லாவற்றையும் தருகின்ற உணவின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு உணவிற்கு முக்கியத்துவம் வழங்கி உணவிற்காக நேரத்தை ஒதுக்கினால் நமது வாழ்வு மேம்படும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

4 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading