புத்தகம் வாசித்த முதல் அனுபவம்

Last updated on November 12th, 2023 at 11:10 pm

புத்தகம் வாசிப்பதை பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கடந்த வருடம் இறுதியில் முடிவெடுத்திருந்தேன். வாசிக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகவே சில புத்தகங்கள் வாங்கியிருந்தேன். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் நான் இதுவரை இரண்டே இரண்டு புத்தகங்களை மட்டுமே படித்து முடித்திருக்கின்றேன்.

நான் முதலில் வாசித்தது செல்வேந்திரன் அவர்கள் எழுதிய “வாசிப்பது எப்படி” என்ற புத்தகம். நான் புத்தகங்கள் வாசிக்க புதிதாக ஆரம்பிக்கின்றேன் என்பதால் எப்படி வாசிப்பது என்பதை தெரிந்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் புத்தகம் சிறிதாக இருந்ததால் இந்த புத்தகத்தை வாங்கி வாசித்தேன்.

நிறைய கட்டுரைகளின் தொகுப்பாக இருந்தது இந்தப்புத்தகம். இந்நூலில் புத்தகத்தை எப்படி வாசிக்க வேண்டும் என்பதைப் பற்றிய நுணுக்கங்களை சொல்லித்தரப்போகிறார் புத்தக ஆசிரியர் என்று நினைத்தேன். ஆனால் புத்தகத்தில் பெரும்பாலும் வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றியே சொல்லப்பட்டிருக்கின்றது.

மிகவும் சிறிய புத்தகம் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு நாளில் வாசித்தேன். இந்தப் புத்தக்தில் நான் தெரிந்துகொள்வதற்கு புதிதாக எதுவும் இருக்கவில்லை. நான் புத்தகங்களை முழுமையாக வாசிப்பதில்லையே தவிர சில பத்திரிகைகளின் பக்கங்கள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் போன்ற பலவற்றையும் வாசித்திருக்கிறேன். அவற்றில் வாசிப்பு, புத்தகங்கள் பற்றி வாசித்தவற்றை ஒரே புத்தகத்தில் தெரிந்துகொண்டது போலத்தான் இருந்தது.

அதன் பிறகு நான் வாசிக்க ஆரம்பித்த புத்தகம் “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற புத்தகம். இது ஜான் பெர்கின்ஸ் எழுதிய Confessions of Economic Hitman என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.

இந்நூல், அமெரிக்கா என்ற நாடு உலக நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் அடிமைப்படுத்துவதற்கும் எப்படியான செயற்பாடுகளில் ஈடுபட்டது என்பதைப்பற்றி சொல்கின்ற புத்தகம். கடந்த வருடமே இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று யோசித்தேன் ஆனால் புத்தகம் படிக்கும் பழக்கம் தற்போதுதானே வருகிறது.

இந்தப்புத்தகம் 300 பக்கங்களை கொண்டது. 300 பக்கங்கள் கொண்ட நூலை வாசிக்க வேண்டுமென்றால் ஆறு ஏழு நாட்களுக்குள்ளாகவே வாசித்து முடித்திருக்க முடியும். ஆனால் நான் இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டேன்.

என்னால் புத்தகத்தை தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. கிழமையில் சில நாட்கள் சில பக்கங்கள் வாசித்து வாசித்துத்தான் புத்தகத்தை முழுமையாக வாசித்து முடித்தேன்.

ஆரம்பத்தில் நான் புத்தகத்திலிருந்து குறிப்புக்கள் எதனையும் எடுக்கவில்லை. பின்புதான் ஒவ்வொரு பக்கமாக வாசிக்கும் போது சில விடயங்களை குறிப்புகளாக எடுத்துக்கொண்டேன். குறிப்புகள் எடுப்பதைப் பற்றிய தெளிவு என்னிடம் இல்லை.

300 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை முதல் தடவையாக வாசித்துமுடித்ததேன். இது அடுத்த புத்தகத்தை வாசிப்பதற்கு ஊக்கத்தை அளிக்கிறது.

நான் வெறும் 300 பக்கங்களை படிப்பதற்கு இரண்டு மாதங்கள் எடுத்துக்கொள்வது நகைச்சுவையான விடயமாக எனக்குத் தோன்றுகிறது. இரண்டு மாதமாக 300 பக்கங்களை படிக்கும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லையா? என்றால், நேரம் நிறையவே இருக்கிறது. பொதுவாகவே நான் நிறைய நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பவன்.

இதுவரை நான் எந்தவொரு நூலையும் முழுமையாக வாசித்ததில்லை. அப்படி இருக்கும் போது புதிதாக புத்தக வாசிப்பினை பழக்கமாக மாற்றும் போது இப்படித்தான் இருக்கும்.

என்னுடைய முதல் புத்தக வாசிப்பு அனுபவம் என்பது இப்படித்தான் இருந்தது. இந்த அனுபவம் இனிமேல் காலங்களில் நூல்கள் வாசிப்பதற்கு எனக்கு உதவிகரமாக இருக்கும்.

ஒரு மாதத்திற்கு குறைந்தது இரண்டு புத்தகங்களையாவது வாசிக்க வேண்டும் என யோசிக்கின்றேன். அதே போல எல்லா வகையான புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என யோசிக்கின்றேன். அப்போதுதான் பரந்துபட்ட வகையில் நிறையவே அறிந்துகொள்ள முடியும்.

நீங்கள் புத்தகங்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?, நீங்கள் வாசித்த முதல் புத்தகம் என்ன? அந்த அனுபவம் பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் தெரிவியுங்கள்

Share

You may also like...

Subscribe
Notify of
guest

4 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading