சுவோட் பகுப்பாய்வு

Last updated on January 22nd, 2024 at 04:38 pm

எல்லா காலகட்டத்திலும் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் ஏதாவது புதிய யோசனையை செயற்படுத்த பலரும் முயற்சிப்பார்கள். உதாரணமாக வணிகம் ஒன்றை உருவாக்குவதைச் சொல்லலாம். நிறைய நேரங்களில் நாம் கூட ஏதாவது புதிதாக செய்ய முயற்சித்திருப்போம். ஆனால் பல நேரங்களில் அவை தோல்வியில் முடிவடைந்துவிடும்.

புதிய வணிகம் ஒன்றை ஆரம்பிக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். அது தொடர்பாக முழுமையாக ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து அதற்கேற்றாற்போல செயற்பட வேண்டும். இதனை செய்வதற்கு SWOT Analysis உதவி செய்யும்.

SWOT Analysis என்பது ஒரு வணிகம் அல்லது நிறுவனம் ஒன்றினை பகுப்பாய்வு (Analyse) செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற நுட்பம் ஆகும்.

SWOT என்பது Strengths (பலம்), Weaknesses (பலவீனங்கள்), Opportunities (வாய்ப்புக்கள்), Threats (அச்சுறுத்தல்கள்) போன்ற நான்கினையும் சேர்த்து குறிக்கின்றது. நிறுவனம் அல்லது வணிகம் ஒன்றில் உள்ள பலம், பலவீனம், வாய்ப்புக்கள், அச்சுறுத்தல்களை பகுப்பாய்வு செய்வதனை SWOT Analysis என்று சொல்லலாம்.

SWOT Analysis ஆல்பர்ட் ஹம்பரே என்பவரால் உருவாக்கப்பட்டது. 500 நிறுவனங்களை ஆராய்ந்து அவற்றின் முடிவுகளை வைத்தே SWOT Analysis ஐ உருவாக்கினார்.

Strengths, Weaknesses, Opportunities, Threats ஆகிய நான்கினை பற்றியும் விளக்கமாக பார்க்கலாம்.

Strengths ( பலம் ), Weaknesses ( பலவீனம் ) இவை இரண்டும் Internal Factors ஆகும். இவை நிறுவனத்தின் உள்ளே இருந்து கொண்டு நிறுவனத்தில் தாக்கம் செலுத்துபவை. உதாரணமாக நிறுவனத்தின் சொத்துக்கள், ஊழியர்கள், கம்பெனி அமைந்துள்ள இடம் போன்றவற்றை சொல்லலாம். Internal Factors ஐ நம்மால் மாற்றியமைக்க முடியும்.

Opportunities ( வாய்ப்புக்கள் ), Threats ( அச்சுறுத்தல்கள் ) இவை இரண்டும் External Factors ஆகும். இவை நிறுவனத்திற்கு வெளியே இருந்து கொண்டு நிறுவனத்தில் தாக்கம் செலுத்துபவை. உதாரணமாக போட்டியாளர்கள், சந்தைவாய்ப்பு, மூலப்பொருட்களின் விலை, வாடிக்கையாளர்கள் போன்றவற்றை சொல்லலாம். External Factors ஐ நம்மால் முழுமையாக மாற்ற முடியாது. ஆனால் கட்டுப்படுத்த முடியும்.

யார் எதற்காக SWOT Analysis செய்வார்கள்?

நிறுவனங்கள் மற்றும் வணிக செயற்பாடுகளில் ஈடுபடுவோர் பிரதானமாக SWOT Analysis செய்தாலும் வேறு சிலரும் SWOT Analysis செய்கின்றனர். தொழில் முயற்சியாளர்கள், விளையாட்டுவீரர்கள், மார்க்கெட்டிங் செய்பவர்கள் போன்ற பலர் SWOT Analysis செய்கின்றனர். நீங்களும் உங்களை SWOT Analysis செய்து பார்க்கலாம்.

நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கும் போது, புதிதாக தொழில் ஒன்றை தொடங்கும் போது, புதிய செயற்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் போது, நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கு செல்லும் போது என பல நேரங்களில் SWOT Analysis செய்துகொள்ளலாம்.

நீங்கள் சிறிதாக வணிகம் ஒன்றை ஆரம்பிக்கின்றீர்கள் அல்லது ஆன்லைனில் வணிகம் ஒன்றை ஆரம்பிக்கின்றீர்கள் என்றாலும் SWOT Analysis செய்யலாம். இதன் மூலம் வெற்றிவாய்ப்புக்களை அதிகரித்துக்கொள்ள முடியும்.

SWOT Analysis செய்வதற்கான நோக்கங்கள் ?

SWOT Analysis செய்வதன் மூலமாக சரியான முடிவுகளை எடுக்கக்கூடியதாக இருக்கும். அந்த முடிவுகளை வைத்து நிறுவனத்தை வெற்றிகரமானதாக வழிநடத்திச்செல்ல முடியும். கம்பெனியில் உள்ள குறைகளை கண்டுபிடித்து அவற்றை சரி செய்துகொள்ள முடியும்.

SWOT Analysis செய்வதன் மூலமாக ஒரு சில கேள்விகளிற்கு பதில்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

 1. நம்முடைய கம்பெனி தற்போது எந்த நிலையில் இருக்கின்றது?
 2. எந்த விஷயங்களை Improve செய்ய வேண்டும்?
 3. நம்முடைய இலக்குகளை அடையவிடாமல் தடுக்கின்ற விஷயங்கள் எவை?

இது போன்ற நிறைய கேள்விகளிற்கு பதில்களை பெற்றுக்கொள்ள முடியும்.

SWOT Analysis எவ்வாறு செய்வது?

நிறுவன அளவில் SWOT Analysis செய்வதாக இருந்தால் அது பல பேர் சேர்ந்து செய்கின்ற பெரிய வேலையாக இருக்கும். நாம் செய்யப்போகின்ற சிறிய வியாபாரம் ஒன்றிற்கு அல்லது தனி நபர் ஒருவரிற்கு SWOT Analysis ஐ சிறிதாக செய்து பார்த்துக் கொள்ளமுடியும். 

எந்தவொரு வியாபாரம் தொடங்கினாலும் SWOT Analysis செய்து பார்ப்பது அவசியமானது.

உதாரணம் ஒன்றை பார்க்கலாம். 

நீங்கள் பேக்கரி உணவு பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வியாபார நிலையம் ஒன்றை உருவாக்க நினைக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இந்த வணிகத்தில் உள்ள எல்லா விதமான பலம், பலவீனம், வாய்ப்புக்கள், அச்சுறுத்தல்கள் பற்றியும் சரியாக தெரிந்துகொள்ள வேண்டும்.

பலங்கள்

 • இந்த வணிகம் பற்றிய அனுபவம் இருக்கின்றது.
 • மூலப்பொருட்களை இலகுவில் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
 • வியாபார நிலையம் மக்கள் அதிகமாக கூடுகின்ற இடத்தில் அமைந்திருக்கின்றது.
 • தினமும் விற்பனையாகின்ற உற்பத்திப்பொருளாக இருக்கின்றது.

பலவீனங்கள்

 • முதலீடு தேவைப்படுவதை விட குறைவாகவே உள்ளது.
 • வாகனங்கள் தேவைப்படின் வாடகைக்கு எடுக்க வேண்டும்.

வாய்ப்புக்கள்

 • அந்த பிரதேசத்தில் கிடைக்காத புதிய உணவு பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியும்.
 • நிறுவனத்தின் கிளைகளை அமைத்து விற்பனை செய்யக்கூடிய வசதி இருக்கின்றது.
 • இந்த மாதிரியான வணிகங்களிற்கு அரசினால் சில சலுகைகள் கிடைக்கின்றன.

அச்சுறுத்தல்கள்

 • அந்த பிரதேசத்தில் ஏற்கனவே பேக்கரி உணவு பொருட்கள் விற்பனை நிலையம் உள்ளது.
 • மூலப்பொருட்களின் விலைகளில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகின்றது.

நான் மேலே உதாரணமாக ஒன்று இரண்டை கூறியிருக்கின்றேன். உண்மையில் சரியாக ஆராய்ந்து பார்த்தால் உங்களால் நிறைய பலம், பலவீனம், வாய்ப்புக்கள், அச்சுறுத்தல்களை உங்களால் அடையாளப்படுத்த முடியும்.

அவற்றை வைத்து நீங்கள் ஆராய்ச்சி செய்து பார்க்கவேண்டும். அவற்றிலிருந்து உங்களால் நிறைய கேள்விகளிற்கான பதில்களையும் முடிவுகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

முக்கியமாக பலவீனங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பலவீனங்களை பலங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அச்சுறுத்தல்களை முழுமையாக இல்லாமல் செய்ய முடியாது. ஆனால் அவற்றையும் முடிந்தவரை குறைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.

6 மாதத்திற்கு ஒருமுறையாவது SWOT Analysis செய்து பார்க்க வேண்டும். இந்த தடவை இருக்கின்ற பலவீனங்கள் அடுத்த தடவை குறைந்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் முன்னேற்றத்தை காணமுடியும்.

புதிதாக ஒரு வேலையை தொடங்குகிறீர்கள் என்றால் அதற்கு SWOT Analysis செய்து பாருங்கள். செய்கின்ற வேலையில் வெற்றி வாய்ப்புகளை உறுதிப்படுத்த முடியும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading