Sleep Paralysis என்றால் என்ன?

Last updated on January 29th, 2024 at 07:35 pm

தூக்கம் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது. தூங்குவது எல்லோருக்குமே பிடித்தமான ஒன்றுதான். தூக்கத்தைப் பற்றி சொல்லும் போது பேயை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தூக்கம், இரவு, பேய், இருள் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புபட்டிருப்பதால் தூக்கத்தில் பேயைப் பார்த்த அனுபவத்தை யாராவது சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அவர்கள் கூறும் கதைகளில் நிறையப் பேர் தூங்கும் போது பேய் நெஞ்சினை பிடித்து அமுக்கியது என்று சொல்வார்கள். பேய் பிடித்து அமுக்கியதால் என்னால் தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ளவே முடியவில்லை என்றும் சொல்வார்கள்.

சில வேளைகளில் உங்களுக்குக் கூட இந்த மாதிரியான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். தூக்கத்திலிருந்து விழிப்படைந்திருப்பீர்கள் ஆனால் உங்களால் கை, கால், உடலை சிறிதும் அசைக்க முடியாமல் இருந்திருக்கும். இந்த நேரத்தில் பயம் ஏற்படும். எனக்கும் இந்த மாதிரியான அனுபவம் ஏற்பட்டிருக்கின்றது. இது எதனால் ஏற்படுகின்றது. உண்மையில் இது பேய்தானா? இல்லையா?

இவ்வாறான நிகழ்வு உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் அது பேய், பிசாசு எதுவுமே கிடையாது. இது உங்கள் உடலில் ஏற்படுகின்ற நிகழ்வொன்றாகும். இதனை Sleep Paralysis என்று சொல்வார்கள்.

தூக்கத்திலிருந்து திடீரென விழிப்பு வருகின்ற போது உங்களால் விழித்துவிட்டீர்கள் என்பதை உணர முடிந்தாலும் கைகள், கால்கள், உடல் எதனையும் அசைக்க முடியாத நிலை ஏற்பட்டால் அதுவே Sleep Paralysis ஆகும்.

Sleep Paralysis எவ்வாறு ஏற்படுகிறது?

Sleep Paralysis பற்றி தெரிந்து கொள்ள மனிதனுடைய உறக்கம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். மனிதனினுடைய உறக்கத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று REM (Rapid Eye Movement) இன்னொன்று NREM (Non Rapid Eye Movement) என்கின்ற இரண்டு நிலைகள் ஆகும்.

Non Rapid Eye Movement என்கின்ற நிலை நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்ற நிலை ஆகும். Rapid Eye Movement என்கின்ற நிலை நமக்கு கனவுகள் வருகின்ற நிலை ஆகும். இந்த நேரத்தில் கண்களை அவதானித்தால் கண்கள் அசைந்து கொண்டே இருக்கும். ஒருவர் தூங்கிக்கொண்டிக்கும் போது அவரது கண்கள் வலப்பக்கமும் இடப்பக்கமும் மாறி மாறி அசைந்துகொண்டிருந்தால் அவர் தூக்கத்தில் REM நிலையில் இருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அதிகமாக கனவுகள் காணுகின்ற சந்தர்ப்பமான REM நிலையில் நமது உடல் தசைகள் தளர்ந்த நிலையில் காணப்படும். ஆனால் மூளை மட்டும் செயற்பட்டுக்கொண்டிருக்கும். இந்த நிலையில் திடீரென விழித்துவிட்டீர்கள் என்றால் மூளையினுடைய கட்டளைகளை உடலால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நேரத்தில் தான் உங்களால் விழித்திருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் உடலை அசைக்க முடியாது.

இந்த நேரத்தில் யாராக இருந்தாலும் ஒரு விதமான பயவுணர்வு ஏற்படும். என்ன செய்வது என்பது தெரியாமல் இருப்போம். Sleep Paralysis நிலையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றால் கண்களை மூடி தூங்கிவிடுங்கள். பின்னர் உங்களால் சாதாரணமாக எழுவது போல் எழுந்து கொள்ளலாம்.

தூங்காவிட்டாலும் கூட Sleep Paralysis நிலை அதிகபட்சமாக 2 நிமிடங்கள் வரைதான் இருக்கும். அதன் பின்னர் சாதாரணமான நிலைக்கு வந்துவிடுவீர்கள்.

Sleep Paralysis எல்லோருக்குமே ஏற்படுகின்ற சாதரணமான நிகழ்வுதான். ஆனால் அடிக்கடி ஒருவருக்கு இந்த மாதிரியாக ஏற்பட்டால் இதற்கு சரியான தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவை காரணமாக இருக்கலாம்.

நீங்கள் தூங்குவதற்கு செல்கின்றீர்கள் என்றால் எந்தவொரு தேவையற்ற சிந்தனைகளையும் மனதில் நினைக்காமல் நிம்மதியாக தூங்குங்கள். தூக்கம் என்பதே நிம்மதியாக இருப்பதற்குத்தான். ஆனால் பலர் தூங்க செல்லும் போதும் மன அழுத்தத்துடன் செல்கின்றார்கள். நீங்கள் அதனைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இந்த பதிவில் Sleep Paralysis பற்றி தெரிந்துகொண்டிருப்பீர்கள். உங்களுக்கும் இது போன்ற நிலைமை ஏற்பட்டால் பேய், பிசாசு என்று பயப்படாமல் உண்மையை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading