மரங்களைப் பாதுகாப்போம்

Last updated on August 30th, 2023 at 12:36 pm

மரங்கள் பூமியின் உயிர்நாடி. பூமியில் உயிர்கள் நிலைத்திருப்பதற்கு மரங்கள் மிகவும் அவசியமானதொன்றாக இருக்கின்றது. பூமியில் வாழ்கின்ற உயிர்களால் உணவு, ஒட்சிசன் ஆகிய இரண்டும் இல்லாமல் உயிர் வாழமுடியாது. அந்த இரண்டையும் மரங்களால் மட்டுமே கொடுக்க முடியும். அப்படியானால் மரங்கள் பூமியில் வாழ்கின்ற உயிர்களுக்கு எந்த அளவுக்கு அவசியமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று பூமியில் உள்ள மரங்களின் நிலைமையைப் அவதானித்துப் பார்த்தால் அளவுக்கதிகமாக மரங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே ஆக வேண்டும். ஆனால் பூமியின் நிலைமையோ எதிர்மாறாக உள்ளது. மனிதர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மரங்களின் எண்ணிக்கையோ வேகமாக குறைவடைந்து வருகின்றது.

Tree

இன்று காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் வெட்டப்பட்டுக்கொண்டிருக்கின்ற வேகத்தில் போய்க்கொண்டிருந்தால் இன்னும் சில வருடங்களில் பூமியின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். அந்த நேரத்தில் மரங்களை திரும்பவும் வளர்த்து பூமியை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாமல் போய்விடும். ஏனெனில் மரத்தை வெட்டுவதற்கு சில நிமிடங்கள் போதும். ஆனால் மரம் ஒன்றை வளர்ப்பதற்கு பல வருடங்கள் தேவை. நூற்றாண்டுகளாக பூமியில் நிலைத்திருக்கும் மரங்களை மனிதன் அழிக்கின்றான். அவ்வாறான மரங்களையெல்லாம் திரும்ப உருவாக்குவது எவ்வளவு சாத்தியம்.

பூமியில் வாழ்கின்ற பெரும்பாலான உயிர்களின் நிலைத்திருப்பிற்கு மரங்கள் பல்வேறு காரணிகளால் அவசியமானதொன்றாக உள்ளது. உயிர்களுக்கு உணவு முக்கியமானது. இன்று நீங்கள் உணவு உட்கொள்கிறீர்கள் என்றால் அதற்கு நேரடியான அல்லது மறைமுகமான காரணியாக மரங்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக காட்டில் வாழும் உயிர்களிற்கான உணவு மரத்திலிருந்துதான் கிடைக்கின்றது. ஒருவேளை அந்த உயிரி மாமிச உண்ணி என்று வைத்துக்கொண்டாலும் இரையான உயிரினத்திற்கான உணவை மரங்கள்தான் வழங்கியிருக்கும். எப்படிப்பார்த்தாலும் ஒர் உயிரினத்திற்கான உணவை வழங்குவதில் மரங்கள் முக்கிய பங்காற்றுகின்றது என்று சொல்லலாம்.

உணவு கூட உயிர்களுக்கு இரண்டாம் பட்சமாகத்தான் தேவைப்படும். ஆனால் சுவாசிப்பதற்கான வளி இல்லாமல் உயிர்களால் சில நொடிகள் கூட உயிர்வாழ முடியாது. உயிர்கள் சுவாசிப்பதற்குத் தேவையான ஒட்சிசனும் மரங்களிலிருந்து கிடைக்கின்றது. மரங்கள் காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து ஒட்சிசனை வெளியிடுகின்றது. அது பூமியில் வாழ்கின்ற உயிர்களிற்கான ஆதாரமாக அமைந்திருக்கின்றது.

இன்று நாம் வாழ்கின்ற பூமி புவி வெப்பமடைதல் எனும் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. மனிதனுடைய செயற்பாடுகளின் விளைவாக அளவுக்கதிகமான காபனீரொட்சைட் வளிமண்டத்தில் விடுவிக்கப்படுவது புவி வெப்பமடைதற்கான பிரதான காரணமாகவுள்ளது. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட புவி வெப்பமடைதலை தவிர்ப்பதற்கு மரங்கள் உதவி செய்கின்றன.

Trees

மரங்கள் காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து ஒட்சிசனை வெளிவிடுகின்றது. அதிமாக மரங்கள் வளர்த்தால் அதிகமாக காபனீரொட்சைட் மரங்களால் உறிஞ்சப்பட்டு புவி வெப்பமடைதல் வீதம் குறையும். அதற்கு மாறாக மரங்களை அழித்துக்கொண்டே போனால் காபனீரொட்சைட்டை உறிஞ்சி புவி வெப்பமடைவதைக் குறைப்பதற்கு போதுமான மரங்கள் இருக்காது. தற்போதுகூட அந்த நிலையில்தான் நாம் இருக்கின்றோம். புவி வெப்பமடைவதைத் தடுத்து பூமியை பசுமையாகப் பேணுவதற்குப் போதுமான மரங்கள் பூமியில் இல்லை. சொல்லப்போனால் இந்த நிமிடத்தில் கூட காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பூமியைக் காப்பதற்கு மரங்கள் அவசியம். மரங்களின் முக்கியத்துவத்தை உணராதவனாக மனிதன் இருப்பது வருத்தப்பட வேண்டிய விடயம். மரங்கள் பூமியில் வாழ்கின்ற உயிர்களிற்கு அவசியமானது என்பதற்கு மேலான தேவை மரங்களை வெட்டுவதில் உள்ளதா? என்றால் அவ்வாறு கூற முடியாது. இன்றைக்கு வளர்ந்துள்ள தொழினுட்பத்தை வைத்து வேற்றுக்கிரகங்களை ஆராயும் அளவுக்கு வளர்ந்துள்ள மனிதனால் வெட்டப்படும் மரங்களின் தேவையை வேறு வழிகளில் நிறைவேற்றிக்கொள்ள முடியாதா?

மரங்கள் வெட்டப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மரங்கள் ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றது. கட்டடங்கள், அறைகலன்கள், கலைப்பொருட்கள், அலங்காரப்பொருட்கள் என பலவற்றிற்கும் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில வேளைகளில் சில விடயங்களில் பயன்பாட்டிற்கு மரங்கள் மட்டுமே பொருத்தமானவையாக இருக்கின்றன. ஆனால் அவை மிக சொற்ப அளவே. பெரும்பாலும் மனிதனின் தேவைகளிற்கு மரங்கள் இலாபகரமானதாகவும், இலகுவானதாகவும் அமைந்துவிடுவதால் அதிகமாக மரங்களை மனிதன் வெட்டுகின்றான். உதாரணமாக இரும்பு பயன்படுத்த வேண்டிய இடத்தில் மரத்தை பயன்படுத்துவது மனிதனுக்கு இலகுவாக அமைந்துவிடுகின்றது. தயாரிப்புக்களை மேற்கொள்வதற்கு மாற்றுவழிகள் இருந்தாலும் மனிதன் மரங்களைத்தான் பயன்படுத்துகின்றான்.

ஒரு பக்கம் மரத்திலிருந்து முடிவுப்பொருட்களை உற்பத்தி செய்வதற்காக மனிதன் மரங்களை வெட்டினால் இன்னொரு பக்கம் மரம் தேவைப்படாவிட்டாலும் மரங்கள் அமைந்திருக்கின்ற நிலம் மனிதனுக்கு தேவைப்படுகிறது என்றாலும் மரங்கள் வெட்டப்படுகின்றன. நிலம் மனிதனுக்கு பல தேவைகளுக்கும் அவசியம். கட்டங்கள் அமைப்பதற்கு, விவசாய நடவடிக்கைகள் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இவற்றை விட கனிமவளங்கள் எடுப்பதற்கான நிலம் என்றால் பாரியளவில் மரங்கள் அழிக்கப்படும். இவ்வாறு நிலம் மனிதனுக்கு தேவைப்படுகின்ற சந்தரப்பங்களிலெல்லாம் மரங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

எப்போதும் மனிதன் தன்னுடைய தேவைகளைப் பற்றி மட்டுமே சிந்திப்பான். அதனால்தான் மரங்களை வெட்டுவது தவிர்க்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களிலும் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயலாற்றுக்கின்றான்.

மனிதன் ஆறறிவு கொண்ட உயிரினமாகையால் பகுத்தறிந்து செயற்படும் தன்மை மனிதனுக்கு உண்டு என்பதால் மரங்களை வெட்டுவதற்கு முன்பு மரங்களை வெட்டுவதால் நாளை ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

அதே போல மரங்களை பாதுகாப்பதற்கும், புதிதாக மரங்களை நட்டு வளர்ப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பூமியின் சக்தி வாய்ந்த உயிரியான மனிதனால் முடியாததென்று எதுவுமில்லை. காடுகளைப் பாதுகாப்பதும், மரங்களை வளர்ப்பதும் அவ்வளவு பெரிய விடயமாக மனிதனுக்கு இருக்காது. ஆனால் பெரும்பாலான மனிதர்கள் மரங்கள் அழிக்கப்படுவதைப் பற்றி கவனத்திற் கொள்வதில்லை. இவற்றை ஒர் பொருட்டாக எடுப்பதில்லை. நிறையப்பேர் மரங்கள் அழிக்கப்படுவதால் நாளை ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றி ஏதும் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்றும் சொல்லலாம்.

இப்படி சிந்தித்துப்பாருங்கள், பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒரு மரம் நடுவானாக இருந்தாலே அது ஒர் மிகப்பெரிய விடயம்தான். ஆனால் அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை.

பூமியின் பொக்கிஷங்களான மரங்களை பாதுகாக்க நிறைய வழிகள் இருக்கின்றன. முதலில் புதிதாக மரம் வளர்ப்பதை விட ஏற்கனவே உள்ள மரங்களை பாதுகாப்பது அவசியம். புதிதாக மரங்களை நட்டு வளர்ப்பது எல்லோராலும் இலகுவாக செய்துவிடக்கூடிய காரியம். ஆனால் பல வருடங்களாக, பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்றுகொண்டிருக்கின்ற மரத்தை வெட்டிவிட்டு அதற்குப்பதிலாக மரக்கன்றுகளை நடுவது ஈடுசெய்யமுடியாத ஒப்பீடு, வேடிக்கையான விடயமும் கூட. புதிதாக மரங்களை நட்டு காடுகளை உருவாக்கிவிட்டு நன்றாக வளர்ந்து நிற்கின்ற மரங்களை அழித்துக்கொண்டிருப்பது எதற்கும் பயனற்ற செயலாகவே இருக்கும்.

அதனால்தான், புதிதாக மரங்கள் வளர்ப்பதற்கு முன்பு ஏற்கனவே நிலைத்து நிற்கின்ற மரங்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். மரங்கள் வெட்டப்படுவதற்கான நோக்கங்களில் கவனம் செலுத்தினாலே நம்மால் மரங்களை காப்பாற்றிவிட முடியும். உதாரணமாக மரம் மூலப்பொருளாக பயன்படுத்தும் நோக்கத்திற்காக  வெட்டப்பட்டால் அதற்கு மாற்றாக வேறு மூலப்பொருட்களை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். அதே போன்று என்ன நோக்கத்திற்காக மரம் வெட்டப்படுகின்றதோ அதற்கான சரியான மாற்றுவழிகளை தேடினால் மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்கலாம்.

தற்போதெல்லாம் யாராவது ஒருவர் மரம் நடுவதை காண்பதே ஆச்சரியம்தான். ஏனெனில் மக்களுக்கு மரம் நடுவது ஒர் பழக்கமாக இல்லையென்பதால் யாரும் அதைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். நீங்களே சிந்தித்துப் பாருங்கள் ஒரு விடயம் சிறு வயதிலிருந்தே தெரிந்திருந்தால், நம்மை சுற்றியிருப்பவர்கள் அந்த விடயத்தை பேசினால், ஒர் விடயம் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டால், பிரச்சாரம் செய்யப்பட்டால் அந்த விடயத்தைப் பற்றி நாம் கவனத்திற்கொள்வோம், அதைப் பற்றி சிந்திப்போம், அது ஏதோவொரு வகையில் நம் மீது தாக்கம் செலுத்தும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடழிப்பு, மரம் வளர்ப்பது, இயற்கையை நேசிப்பது பற்றியெல்லாம் பெரிதாக யாரும் பேசிக்கொள்வதில்லை, இவை சாதரணமாக பேசிக்கொள்ளும் தலைப்புக்களாகவும் இருப்பதில்லை. அதே போல மற்றைய பிரச்சினைகளுக்கு மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் போன்று இவற்றுக்கெல்லாம் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் இவ்வாறான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளும் எதிர்காலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது என்பதை எல்லோரும் உணர வேண்டிய தேவை இருக்கின்றது.

நம்முடைய பூமியை காப்பாற்ற வேண்டும் என்றால் சூப்பர் ஹீரோவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது பூமியை காப்பாற்ற மரங்களை பாதுகாப்பதே பெரிய விடயம் என்றுதான் நான் நினைக்கின்றேன். தனிமனிதனாக உலகத்திற்காக ஏதாவது செய்ய நினைத்தால் நம்மால் முடிந்தவரை மரங்களை நட்டு மரங்களை பாதுகாக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளலாம்.

மனிதனின் துணையின்றி மரங்களால் வாழமுடியும். ஆனால் மரங்களின் துணையின்றி மனிதர்களால் வாழமுடியாது என்ற நிதர்சன உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading