பூமியை பாதுகாப்போம்

Last updated on August 30th, 2023 at 12:36 pm

பூமி உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற உறைவிடம். இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களில் உயிர்கள் வாழ்வது உறிதிப்படுத்தப்பட்ட கிரகம் பூமி மட்டுமே. நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாதளவு மிகப் பரந்தளவான பிரபஞ்சத்தில் உயிர்கள் உருவாவதற்கான சூழ்நிலை அமைந்து பரிணாம வளர்ச்சியால் மனிதனாக பரிணமித்து நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பது எவ்வளவு பெரிய விடயம். நாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படைக் காரணமாகவும் நமது உயிர்வாழ்க்கைக்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் வழங்கியுள்ள பூமியை பாதுகாக்க வேண்டியது பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனினுமுடைய கடமையாகும்.

பூமி உருவாகி பூமியில் தோன்றிய உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்தது இறுதிக் காலகட்டத்தில்தான். ஆனால் மனிதனைத்தவிர எந்தவொரு உயிரினமும் பூமியை சேதப்படுத்தி அழிவிற்கு உட்படுத்துவதாகத் தெரியவில்லை. மனிதன் அறிவார்ந்த உயிரினமாக வளர்ந்து அறிவியலால் முன்னேற்றங்களைக் கண்டாலும் பூமியின் அழிவிற்குக் காரணமாகும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றான். உயிர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற கிரகமாக பூமியை மாற்றிக்கொண்டிருக்கின்றான் மனிதன்.

பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல பூமியில் வாழ்கின்ற அனைத்து உயிர்களிற்குமானதே. முக்கியமாக எதிர்கால சந்ததியினருக்குமானது. எதிர்காலத்தில் மனித இனம் பூமியில் நிலைத்திருந்து நமது சந்ததியினர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பூமியை பாதுகாப்பாக அவர்களிடம் வழங்க வேண்டியது அவசியம்.

சிந்தித்துப்பாருங்கள். பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது, காடுகள் அழிக்கப்பட்டு பல பிரதேசங்கள் பயனற்ற நிலங்களாக மாறிப்போகின்றன,வறட்சி ஏற்படுகின்றது, உணவுப்பற்றாக்குறை ஏற்படுகின்றது, நீர் மாசுபாட்டால் பெருமளவான மக்களால் சுத்தமான நீரை பருகமுடியாமல் போகின்றது, வளி மாசுபாட்டால் மனிதர்களால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை, பூமியில் வாழ்ந்த உயிரினங்கள் பலவும் அழிவடைகின்றன, பூமியில் உயிர்கள் வாழமுடியாத நிலை இப்படியானதொரு காலம் உருவாகினால் எப்படியிருக்கும். தற்போதே இந்த மாதிரியான நிலை உலகில் வெவ்வேறு பிரதேசங்களில் அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இவ்வாறானதொரு நிலை உலகளவில் உருவாகினால் ஆச்சரியமாக பார்க்ககூடாது. ஏனெனில் மனிதனின் பல செயற்பாடுகள் அவ்வாறானதொரு நிலைக்கே நம்மை கூட்டிச்செல்கின்றன. நமது எதிர்கால தலைமுறையினர் அவ்வாறானதொரு நிலைமையில் வாழ்ந்தால் எப்படியிருக்கும். நேற்று வாழ்ந்த மனிதர்கள் செய்த செயற்பாடுகள் இன்று பூமியில் உள்ள மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அதே போன்றுதான் இன்றைய மனிதர்களின் செயற்பாடுகள் நாளைய தலைமுறையினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். பூமிக்கு நாம் எதைச் செய்தாலும் அதன் விளைவுகள் உடனே தெரியாவிட்டாலும் காலங்கள் கடந்து செல்லும் போது விளைவுகளை மனிதன் சந்திக்க வேண்டும்.

அதனால்தான் நாம் செய்கின்ற செயற்பாடுகள் பூமிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவையாக இருக்கக்கூடாது. மாறாக ஆபத்தை எதிர்நோக்கி செல்கின்ற பூமியை பாதுகாக்கின்ற செயற்பாடுகளாக இருக்க வேண்டும். அதனை நாம் கருத்திற்கொள்ளாவிட்டால் ஆரம்பத்தில் கூறியது போலவே நாளை பூமி என்ற கிரகத்தில் உயிர்களே வாழமுடியாத நிலை உருவாகும்.

பூமியினுடைய வளங்கள் அள்ள அள்ள குறையாமல் தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டே இருக்காது. பூமியினுடைய வளங்களுக்கு எல்லை உண்டு. ஆனால் மனிதன் பூமியின் பொக்கிஷமாக உள்ள வளங்களை அழித்துக் கொண்டிருக்கின்றான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

மிகச்சிறந்த உதாரணம் கூறவேண்டுமானால் பூமியின் பொக்கிஷங்களான மரங்களை அளவுக்கதிகமாக மனிதன் அழித்துக்கொண்டிருப்பதை சொல்லலாம். மரங்கள் பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளதோடு பூமியை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் உதவுகின்றன. மரங்கள் அளவுக்கதிகமாக அழிக்கப்படுமானால் பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான அச்சுறுத்தலும் அதிகமாகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம் எல்லோருக்கும் தெரிந்த வளங்களில் மரங்கள் முக்கியமானவை. அதனால்தான் மரங்கள் அழிக்கப்படுவதை எடுத்துக்காட்டாக கூறினேன். இதனைத் தவிர பூமிக்கு அடியில் எவ்வளவோ வளங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் மனிதன் தோண்டி எடுத்துக்கொண்டேயிருக்கின்றான். பூமிக்கு கீழே உள்ள வளங்களை தோண்டி எடுப்பதால் வருகின்ற விளைவுகளும் பூமிக்கு ஆபத்தானவையாகவே இருக்கின்றன.

பூமியிலிருந்து இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு அதனால் பூமிக்கு சேதம் ஏற்படுவதோடு நின்றுவிடாமல் அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவரும்போதும் பயன்பாட்டின் பின்னரும் அவை புவி மாசடைவதற்கு காரணமாக அமைகின்றது. இவ்வாறுதான் பூமியை தோண்டி வளங்களை எடுக்கின்ற செயற்பாடுகள் நிறைய நேரங்களில் பூமிக்கு சேதத்தை ஏற்படுத்துகின்றன.

உதாரணமாக எண்ணெய்வளத்திற்காக ஏராளமான மரங்கள், காடுகள் அழிக்கப்படுகின்றன, நிலம் மாசுபடுத்தப்படுகின்றது. எண்ணெய் வளத்தை பூமியிலிருந்து எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பிறகு எரிபொருளை எரிப்பதால் வெளிவரும் வாயுக்கள் வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்றன. எரிபொருட்களை எரிப்பதால் வெளிவரும் காபனீரொட்சைட் போன்ற வெப்ப வாயுக்கள் புவி வெப்பமடைவதில் மிகப்பெரிய செல்வாக்குச் செலுத்துகின்றது.

அதே போன்று தற்போது சுற்றுச்சூழலுக்கு சவாலானதாக மாறியிருக்கின்ற பிளாஸ்டிக் பயன்பாட்டையும் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். மனிதன் தன்னுடைய பயன்பாட்டிற்காக உருவாக்கிய பிளாஸ்டிக் நீர்வளம், நிலம், வளி என எல்லாவற்றையும் மாசுபடுத்தி பூமிக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது. எரிபொருள் பயன்பாடு, பிளாஸ்டிக் பயன்பாடு போன்றவற்றைத் தாண்டி மனிதன் தனது தேவைக்காக உருவாக்குகின்ற நிறைய விடயங்கள் இறுதியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி பூமிக்கு அச்சுறுத்தலாக மாறுகின்றது.

பூமிக்கு பாதிப்பாக அமைபவற்றை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வினை உருவாக்கி பூமியை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

புவி மாசுபாட்டை தடுக்க முடியுமா? என்று கேட்டால் மனிதர்களால் முடியாதது எதுவுமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். மனிதர்கள் நினைத்தால் நமது பூமியை உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான கிரகமாக பேணமுடியும். ஆனால் பெரும்பாலும் தனிமனிதனோ, நிறுவனங்களோ, அரசாங்கங்களோ சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி அவ்வளவாக சிந்திப்பது கிடையாது. அதற்கு நிறைய காரணங்களும் உண்டு. இன்றைய சூழ்நிலையில் ஒரு நிறுவனம் சுற்றுச்சூழல் பற்றி மட்டுமே சிந்தித்து பூமிக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படாமல் வணிகம் ஒன்றை செயற்படுத்தி அதில் வெற்றிபெற முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நிறைய நேரங்களில் புவி மாசடைதல், புவி வெப்பமடைதல் போன்ற பிரச்சனைகளுக்கான மாற்றுவழிகளை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக, புவிவெப்பமடைதலுக்கு காரணமான எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக மீள்புதுப்பிக்ககூடிய வளங்களான நீர், சூரியஒளி, காற்று போன்றவற்றின் சக்தியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து எரிபொருளுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும். ஆனால் அவற்றைப் பயன்படுத்தி சக்தியை உற்பத்தி செய்வதில் ஏற்படும் செலவு, மின்சாரத்தில் இயங்குகின்ற இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை இயக்குவதில் ஏற்படும் சிக்கல், எரிபொருளுடன் ஒப்பிடும் போது இவற்றின் வினைத்திறன குறைவு போன்ற பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றன.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு காரணமானவற்றிற்கான மாற்றுவழிகள் ஆரம்பநிலையிலேயே இருக்கின்றது. உடனடியாக பிரச்சினைகளிற்கான தீர்வை கண்டுபிடித்து செயற்படுத்திவிட முடியாது. காலங்கள் செல்லும் போது கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் மாற்றுவழிகளை பயன்படுத்த ஆரம்பித்துவிடுவான்.

பூமிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள விடயங்களிற்கான மாற்றுவழிகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தாலும், இன்று சுற்றுச்சூழல் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது நிறைய சந்தர்ப்பங்களில் தடுக்கப்படக்கூடியதுதான். நம் எல்லோருக்கும் தெரிந்த உதாரணத்தை சொல்ல வேண்டுமானால் மரங்கள் வெட்டப்படுவது, காடழிப்பு போன்றவை மனிதன் நினைத்தாலும் தடுக்கப்படக் கூடியவைதான்.

ஒவ்வொரு மனிதனும் நினைத்தால் பூமியை பாதுகாப்பதற்கு தங்களால செயற்பாடுகளைச் செய்யலாம். மரங்கள் நடலாம், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம், எரிபொருளுக்கான மாற்றீடுகளை பயன்படுத்தலாம். இன்னும் நிறையவே செய்யலாம். ஒவ்வொரு மனிதர்களும் செய்யக்கூடியவை நிறையவே இருக்கின்றன.

ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட வேண்டும். நாம் வாழ்வதற்கு ஆதாரமான இருக்கின்ற பூமியை பாதுகாப்பது ஒவ்வொருவரும் தமது கடமையாக கருத வேண்டும். எல்லோரும் ஒன்றுபட்டால் நமது பூமியை பாதுகாத்து எதிர்கால தலைமுறையினரிடம் பாதுகாப்பாக கையளிக்கலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading