சிறந்த புத்தாண்டு தீர்மானங்கள்

Last updated on January 13th, 2024 at 12:47 pm

புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே இருக்கின்றன. நீங்களும் புதுவருடத்தை வரவேற்பதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருப்பீர்கள். புதிய ஆண்டு ஆரம்பிப்பது என்பது எல்லோருடைய மனதிலும் புத்துணர்வை கொண்டுவரக்கூடியது.

நிறையப்பேர் புதுவருடத்தில் புதிதாக ஏதேனுமொரு விடயத்தை செய்ய திட்டமிடுவார்கள். சிலர் இந்த வருடத்தில் செய்யத் தவறிய செயற்பாடுகளை புதிய வருடத்தில் செய்து முடிக்க திட்டமிடுவார்கள். பெரும்பாலான மனிதர்கள் செய்கிற பொதுவான விடயம் புதுவருடத் தீர்மானங்கள் (New Year Resolution) எடுப்பதாக இருக்கும்.

நீங்கள் கூட புதுவருடத்தில் தீர்மானங்கள் எடுத்திருக்கலாம். பெரும்பாலானோர் தாம் எடுத்த தீர்மானங்களை வருடத்தின் ஆரம்பித்திலேயே இடைநிறுத்திவிடுவார்கள் என்பதுதான் உண்மை. புதுவருடத்தில் எடுத்த தீர்மானங்கள் தோல்வியில் முடிவடைய நிறையக் காரணங்களை சொல்லலாம். ஒரு சிலர் மட்டும்தான் தான் எடுத்த தீர்மானத்தை வருடத்தின் இறுதிவரை கடைப்பிடிப்பார்கள்.

பொதுவாக எல்லோரும் எடுக்கும் புதுவருட தீர்மானங்களாக தினமும் உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் குறைப்பது, அதிகமாக சம்பாதிப்பது, அதிகாலையில் எழுதல் போன்றவையாக இருக்கும். இவற்றைத் தாண்டியும் நம்மால் வாழ்க்கைக்கு தேவையான பல தீர்மானங்களை மேற்கொள்ள முடியும். அவ்வாறான சில புதுவருடத்தில் எடுக்கக்கூடிய தீர்மானங்களை பார்க்கப்போகிறோம்.

புத்தகங்கள் வாசித்தல்

புத்தகம் வாசிப்பது மிகச்சிறந்த பழக்கமாகும். நமது வாழ்க்கையை மேம்படுத்துவற்காக வாசிக்கலாம். நிறையப் பேர் புத்தகத்திற்காக பணத்தையும் நேரத்தையும் செலவு செய்வதற்கு விரும்புவதில்லை. புத்தகத்திற்கு மாற்றாக இணையத்தை பயன்படுத்தலாம் என பலர் நினைக்கிறார்கள்.

நாம் நினைப்பதைப் போல புத்தகம் படிப்பதால் வருகின்ற பயன்கள் இணையத்தின் மூலமாக கிடைக்காது என்பதுதான் உண்மை. நல்ல நூல்களை படிப்பதற்காக செலவிடும் பணத்தையும் நேரத்தையும் செலவாக கருதக்கூடாது.

இன்று பெரும்பாலான மக்கள் தினமும் பல மணிநேரங்களை தேவையில்லாமல் மொபைல் மற்றும் சமூகவலைத்தளங்களில் செலவிடுகிறார்கள். இப்படி இருக்கும் போது தினமும் புத்தகத்தை எடுத்து சில பக்கங்களை படிப்பதால் நேரம் வீணாக போகப்போவதில்லை.

ஆகவே தினமும் சில நிமிடங்கள் சில பக்கங்களையாவது வாசிக்க வேண்டும் என தீர்மானம் எடுக்கலாம்.

மொபைல் பயன்பாட்டை குறைத்தல்

நமது வாழ்க்கையில் எங்களுடைய இலக்குகளை அடையவிடாமல் கவனச்சிதறலை ஏற்படுத்துவதில் மொபைலின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. தேவையில்லாமல் மொபைல் பயன்படுத்துவதை எப்போது தவிர்க்கின்றோமா அப்போதுதான் நம்முடைய இலக்குகளிற்காக உழைப்பதற்கு அதிகமான நேரத்தை ஒதுக்க முடியும்.

புதிய வருடத்தில் செய்ய வேண்டும் என்பதற்காக இலக்குகளை தீர்மானித்து வைத்திருப்போம். அவற்றை அடைய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் மொபைல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கலாம்.

ஒரு நாளில் சமூக வலைத்தளங்கள், மொபைல் பயன்படுத்துவதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். மற்ற நேரங்களில் குறிப்பாக உங்களுக்கான வேலைகளை செய்துகொண்டிக்கும் போது மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்தே ஆக வேண்டும்.

மொபைல் பயன்பாட்டை குறைத்து உங்களுக்கான நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள புதிய வருடத்திற்கான தீர்மானத்தை மேற்கொள்ளலாம்.

நாளிற்கான நேரத்திட்டம் தயாரித்தல்

பெரும்பாலான மனிதர்களிடம் இன்றைய நாளில் நீங்கள் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள் என்ற கேள்வியைக் கேட்டால் அதற்கான பதில் இருக்காது. நேரம் எப்படி அழைத்துச்செல்கிறதோ அதே போக்கில் எந்த திட்டமும் இல்லாமல் நாளை கடந்து செல்பவர்கள்தான் அதிகம்.

தனக்கான இலக்குகளை நோக்கி பயணிக்கும் ஒருவருக்கு ஒரு நாளில் என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான திட்டம் இருக்க வேண்டும். அப்படி நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் ஒரு நாளில் என்ன செய்ய நினைக்கிறோமோ அத்தனை வேலைகளையும் செய்து முடிக்கலாம். நேர விரயத்தை தவிர்க்கலாம். வேலைகளை பிற்போடுவதை தவிர்க்கலாம்.

ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்குவது போல நமக்கான அன்றைய நாளிற்கான நேரத்திட்டம் தயாரிப்பதற்காக சில நிமிடங்களை ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் ஒதுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக எடுக்கலாம்.

Journal எழுதுதல்

எங்களுடைய எண்ணங்களையும், சிந்தனைகளையும், உணர்வுகளையும் எழுதுதல் Journaling ஆகும். இன்றைய நாள் எப்படி சென்றது, இலக்குகள் பற்றி, திட்டங்கள் பற்றி, இலக்கை அடைவதற்கு நான் செய்தவற்றை பற்றி, தனிப்பட்ட கருத்துகள் என எதை வேண்டுமானாலும் Journal ஆக எழுதலாம்.

ஒரு நாளின் இறுதியில் Journal எழுதுவது சிறந்ததாக இருக்கும். இன்று நீங்கள் எழுதியவற்றை சில வருடங்கள் கழித்து எடுத்து வாசிக்கும் போது அந்த உணர்வே தனியானதாக இருக்கும். பல நேரங்களில் நீங்கள் எழுதிய Journal-ஐ அடிப்படையாக வைத்தே உங்களுடைய வளர்ச்சியை பகுப்பாய்வு செய்துகொள்ளலாம்.

புத்தகம் வாசிப்பதை போலவே Journal எழுதுவதும் வாழ்க்கையை மேம்படுத்துகிற பழக்கமாகும். தினமும் Journal எழுதுவதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதை புதுவருடத்தில் தீர்மானமாக எடுக்கலாம்.

தியானம் செய்தல்

தியானம் என்பது ஆன்மீகம் சார்ந்த செயற்பாடு என்று நிறைய மனிதர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் தியானம் செய்வதை ஆன்மீகம் சார்ந்த செயற்பாடாக கருதக்கூடாது.

நமது மனநிலையை ஒருநிலைப்படுத்தி சீர்ப்படுத்துவதற்கான சிறந்த பயிற்சி தியானம் ஆகும். தியானம் செய்வதன் மூலமாக நமது மன உணர்வுகளை சீராக வைத்திருக்க முடியும். ஒரு வேலையில் முழுமையான கவனத்தை செலுத்த முடியும்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உடற்பயிற்சி செய்வதைப் போல மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு தியானம் செய்யலாம்.

தியானம் செய்வதற்கான சிறந்த நேரம் காலை நேரம். தினமும் தியானம் செய்வதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் எனவும் நாம் தீர்மானம் எடுக்கலாம்.

திறன்களை வளர்த்துக்கொள்ள நேரம் ஒதுக்குதல்

வேலை, கல்வி, வாழ்க்கை எதுவாக இருந்தாலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு முக்கியமானது அது தொடர்பான திறன்களை வளர்க்கவேண்டியதாகும்.

ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய துறை சார்ந்து திறன்கள் இருக்கும் அவற்றை விட பொதுவாக எல்லோரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் நிறையவே உள்ளன.

இவற்றுக்கெல்லாம் யாரும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால் நாம் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக ஒரு நாளில் திறன்களை வளர்த்துக்கொள்வதற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொள்ளலாம்.

புதிதாக முயற்சித்தல்

பெரும்பான்மையான மக்களுக்கு வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக இருக்கும். அவர்களும் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு முயற்சி செய்ய மாட்டார்கள். வாழ்க்கையில் புதிது புதிதாக ஏதாவது முயற்சித்தால்தான் வாழ்க்கை சுவாரசியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

புதிதான இடங்களுக்கு பயணம் செய்யலாம், புதிய உணவுகளை சுவைக்கலாம், புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளலாம், தெரியாத மொழியில் உள்ள திரைப்படங்களை பார்க்கலாம், புதிய வேலைகளை செய்யலாம், புதிய பொழுதுபோக்குகளை செய்யலாம், புதிய நண்பர்களை உருவாக்கலாம்.

இப்படியாக தினமும் ஒரே மாதிரியாக இல்லாமல் ஏதாவது புதிது புதிதாக முயற்சித்துக்கொண்டே இருக்கலாம். இவ்வாறு செய்தால் வாழ்க்கை சுவாரசியமானதாக மாறும். புதிய வருடத்திலிருந்து புதிய விடயங்களை செய்யவும் உறுதிமொழி எடுக்கலாம்.

வரவு செலவை திட்டமிட்டு பணத்தை சேமித்தல்

சமூகத்தில் பெரும்பாலான மக்களது வாழ்க்கை மாதந்த ஊதியத்தை நம்பியே இருக்கிறது. மாதம் பணம் வரும்போது விரும்பியதை எல்லாம் வாங்கி செலவு செய்துவிடுவார்கள். இதில் கடன் கூட பலருக்கும் இருக்கலாம். எப்படி பணத்தை செலவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு நிறையப்பேரிடம் இருப்பதில்லை.

செல்வந்தராக வேண்டும் என்று விரும்பினால், நிதி சுதந்திரத்தை (Financial Freedom) அடைய விரும்பினால் முதலாவதாக வரவு செலவை திட்டமிட வேண்டும். வரவு செலவை திட்டமிட்டால் நம்மால் பணத்தை சேமிக்க முடியும். பணம் சேமித்தால் மட்டுமே அவற்றை முதலீடு செய்து செல்வந்தராக முடியும்.

இவ்வளவு நாட்கள் இதனை செய்யாவிட்டால் புதிய வருடத்திலிருந்து வரவு செலவை திட்டமிட்டு பணத்தை சேமிக்க வேண்டும் என தீர்மானம் எடுக்கலாம்.

சரியான உறக்கம் மற்றும் விழிப்பு

பொதுவாக புதுவருடத்தில் தீர்மானங்கள் எடுக்கும் போது அதிகாலையில் எழுகிற பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் எடுப்பார்கள். ஆனால் பலரும் அதில் தோற்று விடுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் பெரும்பாலானோர் அதிகாலை எழுவதை பற்றி மட்டுமே யோசிக்கிறார்களே தவிர எவ்வளவு நேரம் தூங்கினோம் என்பதை யாரும் எண்ணுவதில்லை.

அதிகாலையில் விழித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் எடுக்கலாம். அத்தோடு நம்முடைய உறக்கத்திலும் சரியான அக்கறை எடுக்க வேண்டும். சரியான தூக்கம் இருந்தால் நாம் நினைப்பதைப் போல அதிகாலையில் எழுந்துகொள்ளவும் முடியும்.

ஆகவே, ஒவ்வொரு நாளுக்குமான உறக்கத்தை சரியாக பின்பற்ற வேண்டும் என நாம் தீர்மானம் எடுக்கலாம்.

நமக்கான வாழ்க்கை

உங்களுடைய வாழ்க்கை யாருக்கானது என்றால் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய வாழ்க்கை அவர்களிற்கானது. ஆனால் தங்களுக்காகவா ஒவ்வொருவரும் வாழ்க்கிறோம் என்றால் நிறைய நேரங்களில் பெரும்பாலானோர் தமக்காக வாழ்வதை விட மற்றவர்களுக்காகவே வாழ்கிறார்கள்.

ஒரு செயற்பாடை செய்வதற்கு முன்னர் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைப்போம் அதே போல் மற்றவர்கள் நம்மை பராட்டவேண்டும், மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும், மற்றவர்கள் நம்மை பெரிதாக நினைக்க வேண்டும், நண்பர்களுக்கு பிடிக்கும் என்பதற்காகவே நமக்கு பிடித்தவற்றை விட்டுவிட்டு மற்றவர்களுக்காக செய்பவர்கள் பலர்.

இதே போல பல நேரங்களில் வாழ்க்கையை மற்றவர்களுக்காக வாழ்கிறார்கள் பல பேர். நூற்றுக்கு நூறு வீதம் நமக்கு பிடித்த மாதிரியாக வாழ்வது கடினம். ஆனால் முடிந்த வரை மற்றவர்களை பற்றி யோசிக்காமல் நமக்கு பிடித்தமாதிரியாக வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

நமக்கான வாழ்க்கையை நமக்கு பிடித்தது போல வாழ வேண்டும் என்பதை புதுவருடத்தில் எல்லோரும் தீர்மானமாக எடுக்க வேண்டும்.

இப்படியான நிறைய நல்ல நல்ல தீர்மானங்கள் எடுத்து அவற்றை பின்பற்றலாம். எப்போதும் ஒரு விடயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும். தீர்மானம் யார் வேண்டுமானலும் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். அவற்றை பின்பற்றுவதுதான் மிகவும் கடினம். ஆகவே நாம் நம்மால் பின்பற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ள தீர்மானங்களை எடுத்து அவற்றை உறுதியாக பின்பற்றி வாழ்வில் வெற்றிபெற வேண்டும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading